எரிசிதை,சிற்றெறும்பு- கடிதங்கள்

எரிசிதை கதையை படித்ததும் எனக்கு எழுந்த எண்ணம் பெண்ணுக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்பதுதான். நேராக சிதையில் போய் இறங்கிவிடுவதுதான் வழி. வரலாற்றிலும் அப்படித்தான். வேறு வழி உண்டா என்றால் உண்டு. ஆனால் அந்த வழி ஒரு கற்பனைதான். உடல்சார்ந்தே அவள் அம்மாவாகத்தான் இருக்கிறாள். வயிற்றில் வளரும் குழந்தையை கொன்றுவிட்டு அவள் உயிர்வாழ்ந்தால் நிம்மதியாக வாழமுடியுமா? அந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
இரண்டாவதாகச் சுற்றம். அவளுடைய உறவினர்களே அவளை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவளை மதிப்பார்களா? அவள் வாழவிடுவார்களா? இல்லை. அன்றுமில்லை , இன்றும் இல்லை. அவளை அந்தக்குழந்தையே வந்து சிதையில் ஏற்றுகிறது. அவளை மட்டுமல்லாமல் எல்லா பெண்களையும் அப்படித்தான் கருப்பையே சிதையில் ஏற்றுகிறது
அவள் காத்திருப்பது பயமூட்டும் காட்சி. சிதையின் தீயைத்தான் துளியாக தன் அகல்விளக்கிலே அவள் வைத்திருக்கிறாள்
எம்
அன்புள்ள ஜெ
எரிசிதை. நமக்கு ஒரு வழி மட்டுமே இருக்கும் பொழுது அதை தினிக்கபட்டதாக நினைத்து நம் மனம் அதை ஏற்பதில்லை. பல வழிகளுக்கான வாய்ப்பு வரும் பொழுது கற்பனையால் அனைத்தையும் வாழ்ந்து பார்த்து நம் இயல்புக்கு ஒத்த ஆத்மார்த்தமான வழியை தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.
சின்ன முத்தம்மாள் சிதையேறும் வழியை தேர்ந்தெடுத்து தம் மகனின் மூலம் பெரிய மகாராணி மங்கம்மாளை  வெல்ல முயல்கிறாள்.
தாசியான நாகலட்சுமியை எந்த வழிகளும் வாய்க்காத அடிமை என்று நினைப்போம். ஆனால் அப்படி இல்லை அரண்மனையில் வாழ்பவர்கள் தான் அடிமை இவள் எங்காவது  கிளம்பி செல்லும் சுதந்திரம் கொண்டவள் என்று கதையையின் இறுதியை வாசிக்கலாம் என்று தோன்றுகிறது.
நன்றி
பிரதீப் கென்னடி
வெவ்வேறு கதைச்சூழல்களில் வெவ்வேறு மனிதர்களைச் சந்திப்பதுதான் இந்தக் கதைகள் அளிக்கும் இன்பமாக இருக்கிறது. இந்த மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள். சரித்திரம் இவர்கள் வழியாகவும் நடந்தது. ஆனால் இவர்கள் சரித்திரத்திலே இல்லை. எறும்புகள். ஆனால் எறும்புகளும் சரித்திரம்தான்.
சிற்றெறும்பு யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்? அந்தச் சிற்றெறும்பு அதைச் செய்யப்போகிறது. அந்த துரைச்சானி ஏன் அந்த சீற்றம் அடைந்தாள்? அதற்கு அடியில் ஈர்ப்பு இருக்கிறது. இல்லாவிட்டால் அவனை மறுபடியும் உள்ளே விட்டிருக்க மாட்டாள். ஆனால் அந்த ஈர்ப்பு ஏன்? அது அந்த துரையின் மீதான பழிவாங்குதலா?
அந்த துரையின் வீட்டில் இன்னொருவனின் மனைவி அடிமையாக வந்து அமர்ந்திருக்கிறாள். இவன் துரையின் மனைவியிடம் அடிமையை ஊடுருவ விடுகிறான். வரலாறு இப்படித்தான் கொடுத்தும் பெற்றும் நகர்ந்திருக்கிறது. துரை ஒரு எறும்பை நசுக்குகிறான். ஓர் எறும்பு திரும்ப கடிக்கிறது
ஆர். ராஜேஷ்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

’’சிற்றெறும்பு’’  இதுவரை வந்திருக்கும் இரண்டாம் தொடர் சிறுகதைகளில் மிக ஆனந்தமாக வாசித்த கதை.  அந்த தாம்பரம் காட்டோர துரையின் பண்ணை வீட்டை தூரத்திலிருந்தும், பின்னர் முகப்பில், பின் அறைக்குள் என விவரித்ததில் நானே அந்த சிவப்பு தரையோடு போட்ட அறையில் உடகர்ந்து கண்ணாடி மூடிய அலமாராவை துரை வரும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கேயே அழைத்துச்சென்று விட்டீர்கள்.

சமையலறையில் கரண்டியும் கையுமாக கதையை வாசித்தேன்,  கடைசிப்பத்தியை  வாசிக்கையில் முகம் மலர்ந்து நிறைவுடன் அலைபேசியை அணைத்து வைத்தேன். இதைப்போலவே நடந்த ஒன்றும் உடனே நினைவுக்கு வந்தது. என் நெருங்கின தோழி ராஜியின் கணவர் ஊட்டியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக இருந்தார். அப்போது என் PhD ஆய்வுகள் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் தானென்பதால்  எப்படியும்  வார இறுதியில்  அவர்களின் ஊட்டி வீட்டில் சென்று தங்கிக்கொள்ளுவேன்.  அவர் மாலை வீடுதிரும்பி சொல்லும் ஹோட்டல் கதைகளை நானும் ராஜியும் வாய்பிளந்து  கேட்போம்  ஊட்டிக்கு ‌ஷூட்டிங்கிற்கு வந்து அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகர், நடிகைகள் கதைகள் தான் பெரும்பாலும்.

 ஒரு நாள் ஒரு பிரபல நடிகையின் அறைக்கதவுக்கு வெளியே பழரசம் கொண்டு வந்த பணி்யாளர் அழைப்புமணியை அடிக்கும் முன்னால் தட்டில் கொண்டு வந்த கண்ணாடி தம்ளரில் இருந்த பழரசத்தை ஒருமுறை சப்பிக் குடித்துவிட்டு விளிம்பை துடைத்து உள்ளே கொண்டு போனதை அவர், ராஜியின் கணவர் ராஜேஷ் பார்த்து விட்டார். மிக பாவப்பட்ட குடும்பத்தை சேர்ந்த அப்போதுதான் வேலையில் சேர்ந்திருந்த அந்த இளைஞனை மாலை வீட்டுக்கு வரச்சொல்லியனுப்பியபோது, அவன் அது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்னும் நம்பிக்கையில் மிகச்சாதாரணமாக வந்திருக்கிறான். விஷயத்தை சொல்லி கேட்டதும் இன்றைய கதையில் வந்ததைப்போலவே வெகுநேரம் என்ன என்னவொ மறுத்துச் சொல்லிகொண்டிருந்துவிட்டு பிறகு உண்மையை சொல்லி இருக்கிறான்.

அந்த நடிகை முந்தினநாள் காலை காபிகொண்டு போயிருக்கையில் தனது குதிகால் செருப்பின் பின்பக்க ஸ்ட்ராப்பை இவனை மாட்டிவிட சொல்லியிருக்கிறார் இவன் கொஞ்சம் தயங்கியதும் அவருக்கு கோபம் வந்து கன்னாபின்னவென்று ஏசியதால், இவன் மண்டியிட்டு அதை மாட்டித்தந்திருக்கிறான். அதன்பொருட்டே தனது எச்சில் பழரசத்தை அந்த பெண் அருந்தட்டுமென்று செய்ததாக  சொல்லி ஒப்புக்கொண்டிருக்கிறான்.  ராஜேஷ் அவனை தண்டிக்கவில்லை இனிமேற்கொண்டு இப்படி செய்ய கூடாது, அவரவருக்கான தொழில் தர்மத்தை மீறக்கூடாதென்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

 எங்களிடம் இதை சொல்லுகையில் ’’அவன் செஞ்சது தப்புன்னா , அந்தம்மா பன்ணினது அதைவிட பெரிய தப்பாச்சே! அவனுக்கும் இருக்கும் தானே’’ என்றார்

உண்மையில் இந்த சம்பவத்தை நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளுவதுண்டு இன்றும் நினைத்துக்கொண்டேன். பெரிதாக செய்யா முடியாவிட்டாலும் சின்னக்கடியாவது கடிக்கமுடியும் தானே!

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஅறமென்ப, எச்சம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிரை, நிறைவிலி- கடிதங்கள்