நகை, சிற்றெறும்பு- கடிதங்கள்

நகை [சிறுகதை]

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

மயிரிழை மீது நடந்து நெருப்பாற்றை கடந்து இருக்கிறீர்கள். கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தே நாளை குறித்து இன்றில் எழுதப்பட்ட கதை. இதற்குத்தான் இங்கே ஜெயமோகன்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்தக் கதை ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டால் அது புஸ்வானமாய் போன ஊசிப் பட்டாசு. பழைய பஞ்சாங்கம் என வசைபாட பட்டிருக்கக் கூடும். இன்னுமொரு புதிய பெயரையும் உங்களுக்கு தந்திருப்பார்கள்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக இப்படி ஒரு கதையை முதன்மைப் படைப்பாளி எவரேனும் எழுதி இருந்தால் கண்டிப்பாக வதைபட்டு இருப்பார். அல்லது குறைந்தபட்சம் கேவலப்படுத்த பட்டிருப்பார். பெண்ணியவாதிகளால் அவருடைய உருவ பொம்மை கொளுத்தப்பட்டு இருக்கும்.

ஒரு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக கூட பல நண்பர்கள் என்னிடம் வந்து ,”நான் போர்னோகிராபிக்கு அடிமையாக இருக்கிறேன்”, “எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது அதிலிருந்து விடுபடுவது எப்படி?”, என்று ஆலோசனை கேட்டு விடுபட முயன்று இருக்கிறார்கள்.

இன்று ஒருவர் கூட என்னிடம், “நான் போர்னோகிராபிக்கு அடிமையாக இருக்கிறேன் அதிலிருந்து விடுபடவேண்டும்” என்று கேட்பதே இல்லை.

நீங்களே கதையில் குறிப்பிட்டதுபோல போர்னோகிராபி என்பது இன்று இயல்பு வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டிருக்கிறது. நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள் இன்று வருகின்ற மேலை காட்சித்தொடர்கள் அத்தனையும் அதன் ஒரு அங்கமாக பாலுறவு காட்சிகளை அப்பட்டமாக கொண்டிருப்பதாக. மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.ஒட்டுமொத்த சமூகம் எதை விரும்புகிறதோ அதை நோக்கியே எப்பொழுதும் அது நகரும். யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

இந்தக் கதையில் நான் முக்கியமாக கூற விரும்புவது ஒன்றுதான். ஒரு பெண் தன்னை தானே காட்சிப் பொருளாக்கி விற்க விரும்பினால் அதற்கு அவளுக்கு முழு சுதந்திரமும் உள்ளது. அதை அவள் செய்யலாம் அதில் ஒரு குற்றமும் இல்லை. ஒரு எல்லைக்கு மேல் எந்த மதமும் அரசும் சமூக அமைப்பும் இதில் தலையிட முடியாது. அப்படியே தலையிட்டாலும் அதையும் மீறி திருட்டுத்தனமாக இது நடந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் ஆன நியதி இதுதான்.

ஆனால் எதன் பொருட்டேனும் இன்றும் என்றும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதையும், கட்டாயத்தின் பேரில் அவள் உடலுறவுக் காட்சியில் நிர்வாண காட்சியில் நடிக்க நிர்ப்பந்திக்கப் படுவதையும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவர் படம் பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதையும் ஏற்க முடியாது.

இதை நாம் ஏற்காவிட்டாலும் கூட ஒரு குற்றமாக இன்றளவும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது இதனால் பெண்கள் பெருமளவில் இன்றைக்கும் பாதிப்பிற்கு உள்ளாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு பாதிப்பு நம் மகளுக்கோ மனைவிக்கோ சகோதரிக்கோ அன்னைக்கோ ஏற்படுவதை நம்மால் சுலபமாக இன்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் நம் அன்னையிடம் அல்லது மகளிடம் போய் அவர்கள் ஒரு குறிப்பிட்ட போர்னோகிராபி நடிகையை போல் இருப்பதாக இன்றைக்கும் கூறமுடியாது.

இந்தக்கதையின் நாயகன் விஜய் செய்தது எப்படிப் பார்த்தாலும் கீழ்மை. அதனால்தான் அதை சொல்லும் பொழுது அவன் வாய் கோணி புன்னகையும் கோணல் ஆனது.

அந்த பிரபாவதி அத்தை அதை எதிர்கொண்ட விதம் நிச்சயம் பாராட்டத்தக்கது. இனி எதிர்காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் இது நேரலாம். கதை என்ற போதும் ஒரு முன்னுதாரணமான வலுவான பெண்ணை நீங்கள் கட்டமைத்து நாளைய பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து முன்னெழுதிச் செல்கிறீர்கள்.

நாளைய நம் பெண் குழந்தைகளுக்கு நாம் முக்கியமாக போடவேண்டிய நகை என்பது இந்த தைரியம் மற்றும் தன்னம்பிக்கை என்கின்ற விழுமியமே. நாளைய பெண்களுக்கு நீங்கள் அளித்த விழுமிய நகை ஆகவே இந்த நகை சிறுகதையை கொள்கிறேன்.

சில பல தேவையற்ற போர்ன் நடிகைகளின் பெயர்களை நீங்களே வலிந்து கதையில் குறிப்பிட்டதை தவிர்த்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் நஞ்சம் இருக்கின்ற ஒரு சில நல்ல பையன்களையும் நீங்களே ரூட்டு போட்டுக்கொடுத்து உள்ளே வரச்சொல்லி அழைப்பது போல் இருந்தது….. இது தேவையா என நிச்சயமாக எனக்கு தோன்றியது……ஒரு துறவியாக இதை நான்கூட சொல்லா விட்டால் வேறு யார் சொல்வார்கள்…. ஆகவே சொல்லிவிட்டேன். ஊதுற சங்கை ஊதி வைப்போம் என்று…..உங்களிடம் விவாதிக்கின்ற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது…..என்னால் இது குறித்து விரிவாக விவாதிக்கவும் முடியாது…. எனக்குத் தோன்றியது சொன்னேன் அவ்வளவுதான். மற்றபடி ஒரு புனைவை  புரிந்து கொள்வதும் அதை சரியானபடி விரித்து எடுத்துக் கொள்வதும் அதில் ஒரு நிகர் வாழ்வு வாழ்ந்து தனக்கானதை தேடி நிறைவடைவதுவும் தன்னை தனது வாழ்வை மேலும் உன்னத படுத்திக் கொள்வதுவும் மட்டுமே இங்கு மிக முக்கியம். கோட்பாட்டு விவாதங்களோ சரி தவறு அரசியல்களோ முக்கியமே அல்ல. அதெல்லாம் சும்மா ஒரு பாவ்லா தான். உண்மை பயன் அவற்றால் ஒருபொழுதும் விளைவதில்லை. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல சமூகம் தனக்கு வேண்டியவற்றை எல்லா முனைகளிலிருந்தும் எடுத்துக் கொண்டு தன்னை எவ்வகையிலேனும் நிலைநிறுத்திக் கொள்ளும். எது அதற்குத் தேவையோ அதை நோக்கி முன்நகர்ந்து செல்லும்.

குறையும் நிறையும் நிறைந்தது தானே வாழ்க்கை. மேன்மையும் கீழ்மையும் கலந்தது தானே மானுடம். நல்லதையே பேசிக்கொண்டிருந்தால் போரடித்துப் போகுமென்று

கெட்டதையும் கீழ்மையும் கூட தொட்டுத்தொட்டு போகிறது உங்கள் பேனா. கீழ்மையை கெட்டதை சற்றே தொடுவது கூட எப்பொழுதும் நல்லதையும் மேன்மையையும் அடைவதற்காகவே எனும்பொழுது ஏற்கப்படுகிறது. இந்தக்கதையில் நம் வருங்கால பெண் குழந்தைகளுக்காக தைரியம் என்னும் விழுமிய நகை வடிக்க நீங்கள் அதை கரி அடுப்பில் இட்டு உருக்கினாலும் அதன் இறுதிப் பயன் கருதி அதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.

பிரபாவதி போன்ற தைரியமான தன்னம்பிக்கை நிறைந்த பெண்களால் நிறையட்டும் நம் சமூகம். இனிவரும் காலங்களில் அவர்களுக்குத் தேவை இந்த நகைதான். பொன்நகை அல்ல.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

அன்புள்ள ஜெ

நகை கதையை வாசிப்பது ஒரு சோர்வூட்டும் அனுபவமாக இருந்தது. அது ஓர் நடைமுறை உண்மை. போர்ன் பார்ப்பது நம் அகம். நாம் ரகசியமாகச் செய்வது அது. ஆனால் என்னதான் அதை நாம் பூடகமாக வைத்திருந்தாலும் நாம் வாழும் புறவாழ்க்கையில் அது நம்மை மாற்றியமையாமல் இருக்குமா? நாம் பெண்களைப் பார்க்கும் பார்வையை அது மாற்றாமலிருக்குமா? வாய்ப்பே இல்லை.

அந்த மாற்றம் நம் கன்முன் நடந்துகொண்டிருக்கிறது. எல்லா பெண்களும் போர்ன் பார்வையால் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. போர்ன் பெண்களை வெறும் உடல்களாக காட்டுகிறது. வெறும் காமப்பண்டங்களாக காட்டுகிறது. பெண்கள் அந்த பார்வையை மீறி வெற்றிபெற்று எழுந்துகொண்டும் இருக்கிறார்கள். ஈஸியாக உதறி மேலே சென்றுகொண்டிருக்கிறார்கள்

 

அர்விந்த்குமார்

 

அன்புள்ள ஜெ,

நலம் தானே?

சிற்றெறும்பு கதையை வாசித்தேன். அந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலச் சூழல், அவர்களின் வாழ்க்கைமுறை, அதிலிருக்கும் அடிமைத்தனமும் ஆண்டைத்தனமும் ஒரு பெரிய திரைப்படக் காட்சி போல விரிந்தது. அந்த ஆட்சியில் பெண்கள் இருந்த அதிகாரநிலையையும் காணமுடிந்தது. அன்றெல்லாம் ஆண்கள் திருமண உறவுகள் வழியாகவே மேலே செல்லமுடிந்தது. ஆகவே துரைசானியை துரை ஒன்றுமே செய்யமுடியாது

துரைக்காக கொலை வரைச் செய்யும் ஒருவன். துரைச்சானியின் வேலைக்காரனாகிய ஒரு சிறிய எறும்பு. இந்தக்கதையின் சதுரங்கத்தில் சொல்லப்படாமல் விடப்பட்ட இடம் ஒன்றுதான். துரைச்சானி ஏன் வேலைக்காரனை அடிக்கிறாள். காலில் கை பட்டதனால் என்றால் அது அடிக்கடி நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது. வேறெதற்கு அடித்தாள்?

அடித்தபின் மறுநாள் எப்படி இருந்தான் என்று கேட்கிறான். வேலைக்காரன் மிகச்சாதாரணமாக இருந்தாள், கண்களில் ஒன்றுமே தெரியவில்லை என்கிறான். அப்போதுதான் சதிகாரனும் கொலைக்காரனுமாகிய கதைசொல்லிக்கு எல்லாம் புரிகிறது. துரைச்சானியால் வேலைக்காரனை விடமுடியாது. அவள் சிக்கிக்கொண்டிருக்கிறாள். அதைஅவளே அறிந்ததனால்தான் அடிக்கிறாள். வெறுக்க முயல்கிறாள். அருவருப்பை உருவாக்கிக்கொள்கிறாள்.

அவள் மறுநாளே வேலைக்காரனை துரத்திவிட்டிருந்தால் அவள் தப்பியிருப்பாள். அனுப்பவில்லை.மீண்டும் அவனை சாதாரணமாகச் சந்திக்கிறாள்.ஆகவே அவள் வீழ்வது உறுதி. அதனால்தான் அவன் வேலைக்காரனை போ, போய் வென்றுவா என்று அனுப்புகிறான். அது நடக்குமென நினைக்கிறான்.

ஏனென்றால் அவனும் இழிவுபடுத்தப்பட்டவன்தான். அவனுக்கும் பழிவாங்கும் வெறி இருக்கிறது. அவனுக்கும் ஒரு மறுபக்கம் இருக்கிறது

செந்தில்குமார்

 

அன்புள்ள ஜெ

சிற்றெறும்பு வாசித்தேன். இவ்வளவு காலம் விஸ்வாசத்துடன் இருந்து துரைச்சானி எட்டி உதைத்து முகத்தில் உமிழ்ந்த பின் ஏன் செவத்தானின் மனம் மாறுகிறது. அந்த நிகழ்வுக்கு முன்புவரை அவன் தூரைச்சானியால் மதிக்கப்பட்டு வந்தான். அவர்கள் இருவருக்கும் இடையில் அதுவரை இருந்தது ஒரு மானசீகமான உறவை போன்றது என்று நினைத்திருந்தான். அந்த நிகழ்வுக்கு பின் புறத்தில் மட்டும் நான் அடிமை அகத்தில் நீ பெண் நான் ஆண் என்பதற்க்கு அப்பால்  பேதமில்லை என்றாக்கிக் கொள்கிறான். உள்ளுக்குள் அவனும் சிவத்தவன்தான் அவனும் துரைதான். அந்த துறையிடமும் அந்த துரைசானியிடம் விஸ்வாசமாக இருப்பதில் பொருளில்லை அவர்கள் அதற்க்கு தகுதியானவர்களுமில்லை என்று அவனை அறியாமலே அவன் அகம் முடிவு செய்துவிட்டது போலும்.

கதைசொல்லி செய்வதும் அதைத்தான். முகத்தில் பாவனையில் மட்டும் தான் அவன் அடிமை. அந்த விஸ்வாச பாவனையும் அவன் பிழைப்புக்காக தன் நலனுக்காக மட்டுமே. அப்படியென்றால் அடிமை முறையே அப்படித்தானா. அடிமைகள் தங்கள் அகத்தில் தங்களுக்கு மேலாக யாரையும் நினைப்பதில்லை என்று இந்த கதையை விரித்துகொள்ளலாம்.

ஆனால் கதையில் உள்ள சூட்சமம் என்று நான் நினைப்பது. இத்தனை வருட நல் உறவுக்கு பின் ஏன் துரைச்சானி பார்ட்டி முடிந்து வந்து செவத்தானின்  முகத்தில் உமிழ்ந்தாள், அவனை ஏன் அடிமையாக உணர செய்தாள் என்பது. ஏன் என்றால் துரைச்சானி  செவத்தானை  அடிமையாக பார்க்கவில்லை  ஒரு ஆணாகத்தான் பார்க்கிறாள். தன்னை ஆண்டானாக அல்ல பெண்ணாகத்தான் உணர்கிறாள். அணைத்து ஆண்களை போல நீயும் என்மீது ஆசை படு என்னை அடைய நினை என்று செவத்தானை உணர செய்வதுதான் அந்த நிகழ்வு என்று வாசிக்கலாமா.  (இது over reading ஆக கூட போய் விட வாய்ப்புள்ளது)

நன்றி

பிரதீப் கென்னடி

 

 

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை 41 அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைஅறமென்ப, திரை – கடிதங்கள்