திரை, நிறைவிலி- கடிதங்கள்

திரை [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

திரை வாசித்ததும் எப்போதும் தோன்றும் ஓருணர்வுதான் மீண்டும் தோன்றியது. உங்களை நீங்களே முறியடித்துக்கொள்ளுகிறீர்கள். ஒரு கதை உச்சமென்றால் மறுநாள் அதைக்காட்டிலும் உச்சம்தொடும் பிறிதொன்றை எழுதிவிடுகிறீர்கள். இப்போதெல்லாம் அக்கதை சொல்லுவதை, கதைக்களத்தை, கதை மாந்தர்களை பின்னர் மீள் வாசிப்பில் கவனிக்கிறேன், முதலில் நீங்கள் கதை சொல்லும் உத்தியை, மொழி வளத்தை, உரையாடல் கட்டமைப்புக்களை அதிகம் கவனித்து பிரமிக்கின்றேன். தனிமனிதனொருவனின் எழுத்துக்கான எல்லையை, அதிகபட்ச சாத்தியங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக எப்போதோ கடந்து சென்று விட்டிருக்கிறீர்கள் உங்களை வசைபாடுபவர்கள் எல்லாம் இக்கதைகள் அளிக்கும் பேரனுபவங்களை தவறவிடுகிறார்களே என்று திரை வாசிக்கையில் ஆதங்கமாக இருந்தது.

நேற்று மாலை கொஞ்சம் தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பொள்ளாச்சி பிரதான சாலையில் இருந்து எங்கள் கிராமத்துக்கு பிரியும் கிளை சாலையின் துவக்கத்தில், ஒரு  ATM  அறையின் முன்னால் அதன் காவலாளி கைகளை கட்டிக்கொண்டு சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  இறங்கி போய் அவருக்கு உங்களின் ஏதாவது ஒரு கதையை சொல்லலாம் என ஒரு கணம் தோன்றியது. அவர் அக்கதைக்குள் ஆழ்ந்து, அதை தொட்டு, தொடர்ந்து எங்கேனும் மானசீகமாக பயணிக்கலாம், அவரது சொந்த வாழ்வில் எதையாவது அவர் கதையுடன் தொடர்புபடுத்தி கொள்ளலாம், அதில் அவர் துயர்களை கவலைகளை, சலிப்புக்களை, பாரங்களை மறக்கலாம், அவர் வாழ்க்கையே புதிதாகலாம் என்றெல்லாம் தோன்றியது.

வாழ்க்கையை நிறைக்கும் கதைகள் உங்களுடையது. ’’தொடர் சிறுகதைகள்’’ என முன்பு வேறு யாரும் எழுதியிருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

திரை சொல்லப்பட்ட விதம் அபாரம்

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஒரு சிறு தகவலாக கண்ணில் பட்ட செங்கல்லை குர்ஆன் என பட்டுத் துணியால் மூடி பொய் சத்தியம் செய்து ஏமாற்றிய சதிச் செயலை இப்படி தொட்டுத்தொட்டு விரித்து பெரும் சித்திரமாக தீட்டியிருக்கிறீர்கள். சிக்கலான பல பாதைகளில் கதை பயணிக்கிறது எனினும் எங்கும் பிழையின்றி குழப்பமின்றி மிகச்சரியாக சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருப்பது டன் ஒவ்வொரு வரியையும் உணர்வெழுச்சியுடன் வாசிக்க வைக்கிறது.

இலைநரம்பமைப்பினை மாணவர்களுக்கு விளக்குகையில் வெளிப்படையாக தெரியும் ஒற்றை நடுநரம்பும் அதன் துணைநரம்புகள் சிலதுமாக இலை முதல் பார்வைக்கு சாதாரணமாகவே தெரியும் ஆனால் அதை நுண்ணோக்கினாலே அதிலிருந்து பிரியும் veinlets எனப்படும் எண்ணற்ற நுண்கிளைகள் அந்த இலை எங்கும் விரவி விளிம்பு வரை வலைப்பின்னலாக அமைந்திருப்பது தெரியும். எங்கும் ஒரு சிறு தடங்கலோ, சிக்கலோ, ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளுவதோ,  ஒன்றின் பாதையில் ஒன்று குறுக்கிடுவதோ இல்லை. ஆனால் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருந்து இலைப்பரப்பு முழுவதற்குமான உணவையும் நீரையும் தடையின்றி அளித்துக் கொண்டே இருக்கும். அவற்றின் துவக்கம் எங்கோ வெகுதூரத்தில் நீர்க்கரைசலில் முங்கி இருக்கும் வேர் நுனியில் இருக்கும்.  அங்கிருந்து  ஒரு நீர்த்துளிகளாலான ஒரு சரடு அறுபடாமல் தொடருவதைப்போல இந்த கதை சொல்லலும் இருந்தது.

இக்கதைகளுக்கெல்லாம் நன்றி என்று மட்டும் தான் சொல்ல வேண்டி இருப்பது இப்போதெல்லாம் நிறைவின்மையை அளிக்கிறது

நன்றி

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

திரை கதையின் தொடக்கம் தாயுமானவரின் அந்த ஒற்றை வரி என நினைக்கிறேன். மூன்று தெய்வங்களாகவும், நிர்குணப்பிரம்மமாகவும், ஞானமாகவும் எல்லாம் நின்றிருப்பதே மாயை என்கிறார். அதெல்லாம் திரை. அதற்கும் அப்பால் இருப்பதே உண்மை. அந்த திரையில் வாழ்வதுதான் உலகியல் வாழ்க்கை

அவரை காட்டு அந்தச் சித்திரத்தில் ஒருகணம் அவர் மீனாட்சியின் பிரேமைக்காக கண்கலங்கும் இடம் அற்புதமானது. அடுத்த கணமே அவர் திரையை கிழித்துக்கொண்டாலும் அந்த திரை பொன்னாலானது. அழகானது.

ஜெ.ராம்குமார்

நிறைவிலி [சிறுகதை]

இக்கதை சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை நோக்கிப் பேசுகிறது, அவர்கள் மேல் பரிதாபம் கொண்டல்ல, அக்கறையோடு. அவர்கள் தற்போது தாம் வந்து சேர்ந்துள்ள தூரத்தை எண்ணிப் பெருமைப்பட எதுவுமில்லை என்றும், அவர்களிடையே தமது சாதனைகள் குறித்த ஒருவித நிறைவின்மை அவசியம் என்கிறது. இந்த 30-40 ஆண்டுகால சிறு பயணத்திலேயே நிறைவடைந்துவிட்டால், அவர்கள் அடையக்கூடிய உயரங்களின் சாத்தியங்கள் இல்லாமல் போகக்கூடும். இவ்வகையில், நிச்சயம் இதை தலித் இலக்கிய வரிசையில் வைக்கமுடியும். மிக எளிமையான (minimalistic), அதே சமயம், மிக வலிமையான தன்னம்பிக்கை  ஊட்டக்கூடிய கதை.

ராம் நிச்சயமாக ஒரு சிறந்த ஆசிரியர் . அவர் பகாவிடம் காணப்படும் தன்னம்பிக்கையின் எல்லைகளை அறிந்துகொண்டு அதை மேலும் விஸ்தரிக்கிறார் . ராம் முதலில் பகாவிடம் உள்ள தன்னம்பிக்கையை உடைக்கிறார். அதனாலேயே அவள் தன் பெருமையைப் பேசவேண்டியிருக்கிறது. அத்தகைய பெருமை, பலமற்ற அடிமானத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறார்.  அவள் பெருமைப்படும் அப்படத்தைத் தான் மதிக்கவில்லை, அதை அவள் தன் படுக்கை அறையில் மாட்டிவைத்துக் கொண்டால் உபயோகமாக இருக்கும் என்றதும், பகா புண்படுகிறாள். பின்னர், அவளை மீளுருவாக்கம் செய்கிறார்.

பகா, அவர்கள் அமரும் இடத்தை மாற்றுவதற்கான காரணம், அப்பறவைகள் அவளது  துரதிர்ஷ்டமான பால்யகாலத்தை நினைவு படுத்தியதாலா? அல்லது அப்படத்தை உபயோகப்படுத்தும் தேவை வரக்கூடும் என அவள் கணித்ததாலா? அல்லது அதை உபயோகப்படுத்தும் வாய்ப்பை அவள் வலிய உருவாக்கிக் கொள்கிறாளா? உண்மையில் அப்படத்தில் உள்ளது அவள்தானா? அவள் முதலில் உள்ளே வந்து அமர்ந்ததும் சுற்றிப்பார்க்கிறாள்.  பின், இடம் மாறுகையில், தன் வாடிக்கையாளர் (Client) அமர்வதற்கு முன்னர் தான் அமர்கிறாள். இந்தக் கோணத்தில் பார்த்தால் கதை முற்றிலும் வேறாகத் தெரிகிறது.

பார்த்தா குரு

***

அன்புள்ள ஜெ

நிறைவிலி கதையை நான் ராமின் கோணத்தில்தான் வாசித்தேன். அது ராமின் ஒரு மனமாற்றம் அல்லது ஒரு கண்டுபிடிப்பு. ஆரம்பத்தில் தான் நியமிக்கும் ஒருவரின் உண்மையான எல்லை என்ன என்று கண்டுபிடிக்க முயல்கிறான். அந்த எல்லையின் முடிவின்மை என்று கண்டுபிடித்ததும் அவன் சரண் அடைந்துவிடுகிறான்

ராஜ்

முந்தைய கட்டுரைஎரிசிதை,சிற்றெறும்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிருதுகள், அடையாளங்கள்