அறமென்ப, திரை – கடிதங்கள்

திரை [சிறுகதை]

அன்புநிறை ஜெ,

இன்றைய ‘திரை’ கதை சற்று அமைதியின்மையை ஏற்படுத்தியது.

வரலாற்றின் மடிப்புகளில் இருந்து விரிந்தெழும் கதை. அன்றைய வழக்கத்திலிருந்த எத்தனை விதமான அரசாங்கப் பதவிகள் காறுபாறு, ராயசம், சம்பிரதி, தளவாய் என. காலத்தில் நின்றவையும், உதிர்ந்தவையுமாய் எத்தனயோ வரலாற்றுப் பெயர்கள், மனிதர்கள், சம்பவங்கள், போர்கள். அன்றைய மொழி, விளிகள், வாழ்த்துக்கள் என அந்த காலகட்டம் கண் முன் விரிகிறது. ஒல்லாந்தன் அல்லது லந்தக்காரர்கள் என்பது (டச்சுக்கார்கள்) ஹாலந்துக்காரர்கள் என்பதன் பேச்சுவழக்கென நினைக்கிறேன்.

வரலாற்றின் அத்தனை சூறாவளிக்கு இடையே துடிதுடிக்கும் சுடரென ராணி மீனாட்சியின் மனமும் உணர்வுகளும். மகாராணியாக இருந்தாலும் பெண்ணென  இறைஞ்சி நிற்கும் அபலை. யாரிடமும் எதையும் பெறத் தேவையற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்கு எதையும் தருவேன் எனக் காத்திருக்கும் அப்பாவிப் பெண். அவரது முடிவு என்னவாயிருக்கும் எனத் தெரிந்தாலும் அவளுக்காக அவளது பிரேமைக்காக, பேதைமைக்காக  கண்ணீர் துளிர்த்தது. யாரும் அறியாது மனதில் வைத்து பூசை செய்தால் போதுமென்றால் அதற்கு ராமநாதபுரமோ சிராப்பள்ளியோ ஒரே தொலைவுதான். அது  மாயத்திரை கொடுக்கும் மயக்கு. இச்சொற்களை இறுதி வரை அவள் சொல்லாதிருந்தால் அப்போதும் அவள் மனதில் பிரேமை இருந்திருக்கும்தானே. எது அவளை வேறொரு மானுடன் அறிய அதைச் சொல்ல வைக்கிறது என எண்ணிக் கொண்டேன். மறுமொழி வராத தூது ஒன்றின் உறுபயன் என்ன, நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் எனும் நிறைவா?  எண்ணப்பட்டு சொல்லாக வெளிப்படாத ஒன்று இன்னும் எடை கொண்டு அழுத்தும் என்பதால் தாங்காது இறக்கி வைத்துவிட்டாள் என எண்ணுகிறேன். பெருமூச்சு வருகிறது.

இதைத் தவிரவும் இன்றைய கதையில் தனிப்பட்ட முறையில் பல நினைவுகள் எழுந்து வந்தன. ராமநாதபுரத்தில் நான் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் குடியிருந்த வெளிப்பட்டிணத்தில் இருந்து மிக அருகேதான் லட்சுமிபுரத்தில தாயுமானவர் சமாதி அமைந்திருந்த தபோவனம் இருந்தது. பல நாட்கள் மாலை நடையில் தாத்தாவுடன் சென்று அமர்ந்திருக்கும் இடம் அது. தாயுமானவரின் பல பாடல்கள் அங்குதான் அறிமுகமாயிற்று. அனைவரும் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்க அங்கிருக்கும் கரிய மெலிந்த தாயுமானவர் உருவச் சிலையை பலநாட்கள் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். ஏனோ அவர் அப்படி அமர்ந்திருப்பதைப் பார்ப்பதற்கு மனதுக்கு மிக உருக்கமாக இருக்கும்.  பல நாட்கள் நானும் தாத்தாவுடன் வந்து அவ்விதம் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஒரு முதியவர் என்னிடம் ஏதேனும் தாயுமானவர் பாடல் பாடு என்றார். அன்றுதான் பள்ளியில் ‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்’ நடத்தியிருந்தார்கள். அப்போது நான் படித்த சையது அம்மாள் பள்ளியில் வகுப்புக்கு நூறு மாணவர்கள், பெருங்கூட்டம், ஆசிரியர் நடத்துவது காதில் கூட சரியாக விழாது. ஒரே ஒரு முறை வாசித்து விட்டு அருஞ்சொற்பொருள் விளக்கம் எழுதிப்போடுவார் ஆசிரியர், அவ்வளவே தமிழ்ப்பாடம். அந்த பெரியவர் கேட்டதும் ஏதோ உந்துதலில் ‘அங்கிங்கெனாதபடி’ எனத் துவங்கிவிட்டேன். முழுப் பாடலும் நினைவிலிருந்தது, சொல்லிவிட்டேன். எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது, அதன் பிறகு அந்தப் பாடல் மட்டும் இன்று வரை மறக்கவேயில்லை. அப்பாடல் அந்த கருணை கொண்ட தாயுமானவர் முகத்தோடு இணைந்து மட்டுமே இப்போதும் மனதில் இருக்கிறது.

இன்றைய கதையில் மீனாட்சியின் செய்தி கேட்டு கண்களில் ஒரு கணம் நீரோட்டத்தோடு அந்த ஏழை மகாராணிமீது பரிவோடு நின்ற தாயுமானவரை எனக்கு நேரில் பிரத்யட்சமாகப் பார்த்தது போன்றே இருந்தது.

அங்கு முனகுவது போன்ற குரலில் ஒருவர் அடிக்கடி பாடும் “வரைராசனுக்கு இருகண்மணியாய் உதித்தமலைவளர் காதலிப் பெண் உமையே” என்று ஈற்றடிகள் கொண்டு முடியும் பாடலும் மனதில் ஒலிக்கிறது.  அதில் அம்மையை தாயுமானவர் ‘சுதந்தரி’ எனப் பாடியிருப்பார்.  “பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி”.  அவ்வரிகள் மந்திர உச்சாடனம் போல பெரும் உச்சத்தைக் கொடுக்கும் வரிகளாயிருந்தன. இன்று வாசித்ததும் ராணி மீனாட்சிக்கு சுதந்தரியாய் இருக்க நேரவில்லை என எண்ணிக் கொண்டேன்.

உத்தரகோசமங்கை கோவிலில் எனது முன்னோர்களில் ஒருவர் சமாதி அடைந்திருக்கிறார்.  அவர் அடங்கிய குறிப்பு கொண்ட இடமும் இருக்கிறது. ஆருத்திரா தரிசனத்தின் போது மட்டுமே கூட்டமிருக்கும்; பிற நாட்களில் அப்பெரும் கோவிலில் ஆட்களே இன்றி காற்றில் சருகுகள் ஓட அந்த மாபெரும் குளக்கரையில் அமர்ந்திருந்த நாட்களும் உண்டு. மேலும் ஒரு தனிப்பட்ட கண்ணி, சந்தா சாகிபிடம் பங்காரு திருமலை போரிட்டு தோற்கும் அம்மையநாயக்கனூர்தான் எனது சொந்த ஊர். இன்றைய கதையை வாசித்ததும் அனைத்து நினைவுகளும் கிளர்ந்தெழுந்து வந்தன.

பல கண்ணிகளில் சிக்க வைத்தது இக்கதை.

 

மிக்க அன்புடன்,

சுபா

 

அன்புள்ள ஜெ

திரை அறியப்பட்ட இரு வரலாற்றுத் தொன்மங்களுக்கு திரை என்ற சொல் வழியாக ஒரு நீண்ட தொடர்ச்சியைப் புனைந்து உருவாக்குகிறது. உண்மையில் ராணி மீனாட்சியின் கடைசிக்காலம் கொந்தளிப்பானது. அவருடைய சாவும் பரிதாபகரமானது. அந்தச் சாவின் மூலமே அவர் வரலாற்றில் இடம்பெற்றார். அவரை எப்படி வேண்டுமென்றாலும் பார்க்கலாம். அரசை கைவிட மறுத்த பிடிவாதக்காரர், தாயுமானவரை துரத்திய காமாந்தக்காரி என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இந்தக்கதை அவரை அபலையாகவும், தனிமைகொண்டவராகவும் காட்டுகிறது. எப்படியோ அவரை இப்படிப் பார்ப்பதே பிடித்திருக்கிறது. வரலாற்றின் கற்பாறைகளின் இடுக்கில் மலர்ந்த ஒரு மலர்

ராஜசேகர்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

‘அறமென்ப’பெரும்பாலானவர்கள் சந்தித்த ஒன்றின் கதை.விபத்தில் உதவுவதோ ஆபத்தில் உடனிருப்பதோ, கைகொடுப்பதோ ஏதேனும் செய்து பெரிய எதிர்பாரா கஷ்டங்களில் மாட்டிக்கொண்டதை குறித்து எல்லோருமே நினைத்துப் பார்த்துக் கொள்ளும் கதை. ‘வாயைமூடு’ என்று கடிந்து கொண்ட செல்வகுமார் பின்னர் பாமா எத்தனை சரியாக சொல்லுகிறாள் என்று நினைக்கிறான்.

என் அக்காவின் மாமியார் அடிக்கடி இதை சொல்லுவார்கள். “”யாருக்காவது பாவம்னு பார்த்தா அப்போவே நாம பாவமாயிருவோம்””என்று. ஒருக்கில் நான் இதற்கெதிராக ஏதோ சொல்லப்போக அவர் “நாம சாதாரணமாவே என்ன சொல்லறோம்? அவன் பாவம் நல்லவன்னுதானே? நல்லவனா இருக்கறதே பாவந்தான்.சும்மாவா இதெல்லாம்சொல்லிருக்கு” என்றார்கள். அமைதியாகிவிட்டேன்.

நன்றி

லோகமாதேவி

 

அன்புள்ள ஜெ

ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன் என் நெருக்கமான உறவினருக்கு நிகழ்ந்த அதே சம்பவம் அறமென்ப. மதுரை மேலூர் பக்கம் நடந்தது. இதில் அவர் லேசாக ஒரு வயோதிகரை முட்டிவிட்டார். அடியெல்லாம் பெரிதாக இல்லை. அடிபட்டவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அவர் மேல் கொலைமுயற்சி வரை புகார்கொடுத்தார்கள். அவர் பயந்துவிட்டார். அவர் பயப்படுகிறார் என்பதுதான் அவர்களின் பலமாக இருந்தது. பணமும் கொடுத்துவிட்டார். எதுவும் பதிவாகாமல் பார்க்கவேண்டும் என்று மட்டும்தான் அவர் நினைத்தார்.

ஆரம்பத்தில் இருந்தே நானும் கூட இருந்தேன். ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது.  பிறகு வக்கீல்களிடம் பேசியபோது அது ஒரு வழக்கே இல்லை, ஆனதை பார் என்று சொல்லியிருந்தால் ஒன்றுமே செய்திருக்க முடியாது என்று தெரிந்தது. அந்த தருணத்தில் பயம்தான் வேலைசெய்கிறது. என் உறவினரின் அதீதபயம்தான் அவர்களின் பலமாக இருந்தது. இன்றைக்கு எனக்கே கேவலமாகத்தான் இருக்கிறது.

கதையில் பீட்டர் வந்ததுமே எல்லாம் சரியாக முடிகிறது. வழக்கு பதிவுசெய், பார்த்துக்கொள்கிறேன் என்று செல்வா சொல்லியிருந்தால் ஒரு பைசா செலவு இருந்திருக்காது. ஆனால் அதைச் சொல்ல செல்வா போன்றவர்களால் முடியாது. அதில்தான் சிக்கல்கள் உள்ளன. முதலில் இன்ஷூரன்ஸ் எகிறும். அது உண்மையிலேயே ஒரு பிரச்சினை. பல ஆண்டுகளாக கணக்கிட்டால் அதுவே நாலைந்து லட்சமாக ஆகிவிடும். அதற்கு வழக்கு பதிவாகாமல் இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே வழி. தொழில்செய்பவர்களுக்கு அதிலும் பல சிக்கல்கள் உள்ளன. அதன்பின் தேவையில்லாமல் சிக்கல்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது.

இந்தக்கதையில் வரும் இரண்டு தரப்புகள்தான் முக்கியமானவர்கள். ஒன்று வக்கீல்கள். இதேபோல மிரட்டுவதற்காகவே கறுப்பு கோட் போட்டுக்கொண்டு வருவார்கள். இதேபோல இரண்டுபேர், ஒருவர் கறுப்பு கோட்டு போட்டிருப்பார். இன்னொருவர் சாதாரணமாக வருவார். அவரைக் காட்டி இவர் பயமுறுத்துவார். கூடவே சமாதானம் செய்ய முயல்பவர்போல நடிப்பார். பத்துலட்சம் இருபது லட்சத்தில் ஆரம்பிப்பார்கள். ஐம்பதாயிரம் இருபதாயிரத்தில் முடிப்பார்கள். இவர்கள் பணத்தில் விளையாடுபவர்கள். அடிபட்டதுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் கைப்பணத்தை கொடுப்பார்கள். அதுதான் இவர்களின் துருப்புச்சீட்டு. இன்னொருவர் அந்தச் சொந்தக்காரர். அவர்தான் உண்மையில் பிரச்சினை செய்பவர். எங்கள் கேஸில் நான்குபேர். நான்குபேருக்குமே ஆளுக்கு பத்தாயிரம் கொடுக்க நேர்ந்தது.

இந்தக்கதையிலுள்ளதுபோல டாக்டர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். என்ன பேசினாலும் போலீஸ் ஸ்டேஷனில் பேசிக்கொள், அவர்கள் சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம் என்றுதான் சொல்வார்கள். ரிப்போர்ட் எழுதாமல் ரிஜிஸ்டர் கூட எழுதாமல் வைத்திருப்பதே போலீஸ் சொன்னதுபோல பிறகு எழுதிக்கொள்வதற்காத்தான்.

கதையில் சொல்லப்படுவதுபோல இன்றைக்கு தனியார் மருத்துவமனைகள் விபத்துக்களில் சிக்கியவர்களை தவிர்ப்பதில்லை. அதில் பெரும்பணம் பார்க்கிறார்கள். ஆனால் அதுகூட ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே. பலர் மருத்துவமனைகள் சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. அது அவர்களுக்கு போலீஸிடம் இருக்கும் ராப்போர்ட் என்ன என்பதைப் பொறுத்தது.

அறமென்ப ஒரு அப்பட்டமான யதார்த்தம். எல்லா பிராக்டீஸிங் வக்கீலுக்கும் தெரிந்ததுதான். எது எழுத்திலிருக்கிறதோ அதைச் சொல்வது அல்ல கதை. எது உண்மையில் நடக்கிறதோ அதுதான் கதை. ஒரு டாக்டர் வந்து அப்படியெல்லாம் ரிஜிஸ்டரில் எழுதாமலிருக்க மாட்டார்கள் என்று வாதிட்டால் நாம் மறுக்கமுடியாது. ஆனால் அப்படித்தான் நடக்கிறது இங்கே.

ஆனால் அந்தக்கதை அந்த அப்பட்டத்தைச் சொல்லவில்லை. பார் ஏழை எப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லவில்லை. இந்தப்பக்கம் இவர்களும் ஒரு ஃபிராடுதான் செய்கிறார்கள். சிவா  ரிலீவ் ஆகி புன்னகைக்கும் இடம் என்ன, ஏன் என்பதுதான் கதை. அதை உணரமுடிபவர்களுக்குத்தான் அந்தக்கதை இலக்கியமாகிறது

ஆனந்த்குமார்

முந்தைய கட்டுரைநகை, சிற்றெறும்பு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓஷோ- கடிதங்கள்