விருதுகள், அடையாளங்கள்

அன்புள்ள ஜெ

நேரடியாகவே இதை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். முகநூலில் நான் வாசித்த இந்தப்பதிவே இதை எழுதக் காரணம்

முகநூல் பதிவு

பாசிச பாஜக அரசு தனது அசுர பலத்தை அனைத்துத் துறைகளிலும் மூக்கை நுழைத்து செயல்படுத்துகிறது என்று சொன்ன எந்த திராவிட இலக்கிய ஆர்வலரும் , மனமுவந்து சாகித்ய அகாடமி விருதை இமையம் மற்றும் பூமணி அவர்களுக்குக் கொடுத்த போது , பாஜகவின் ஆட்சியில் இலக்கியத்தில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றோ, திரைத்துறைக்காக வெற்றி மாறனின் படம், விஜய் சேதுபதிக்கு , தனுஷுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகிற போதும் மனமுவந்து பாராட்டுகிற மனமில்லை. நீ என்ன வேணா நடுநிலையோடு செயல்பட்டுக்கோ, நாங்க பாஜகவிற்கு எதிராக ஒரு அஜெண்டா வச்சிருக்கோம், அதுபடி தான் மனச்சாட்சி இல்லாமல் செயல்படுவோம்னு திராவிட ஆதரவாளர்கள் இலக்கியவாதிகள் போர்வையில் செயல்படுவது அப்பட்டம். இந்த கும்பல்கள் பத்திரிக்கையாளர்களாக , இலக்கியவாதிகளாக , சினிமா நடிகர்களாக ,இயக்குனர்களாக கல்வித் துறை அதிகாரிகள் என தன் கால்களை தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் விரித்து வைத்துக் கொண்டு பாரபட்சமாக செயல்பட்டுக் கொண்டே மோடியை வெட்கமே இல்லாமல் விமர்சித்துத் திரிகிறார்கள். வெற்றி மாறனோ, விஜய் சேதுபதியோ, இமையமோ விருது வேண்டாம்னு சொல்ல மாட்டார்கள்… ஆனால் இந்த நாடகம் தெரியாமல் தன்னை இந்துத்துவாதி, ஆளைப் பிடித்து விருதை வாங்கிக் கொண்டோம்னு சொல்லிருவார்கள்னு முட்டாள்த்தனமாக ஜெயமோகன் பத்ம ஸ்ரீ விருது வேண்டாம்னு வீராப்பு விட்டது தான் மிச்சம்.

லக்ஷ்மணப் பெருமாள்

*
இன்று இமையம் சாகித்ய அக்காதமி வாங்கும்போது அவரைச் சார்ந்த திமுக காரர்கள் அத்தனைபேரும் ‘ஆகா திராவிட எழுத்தாளருக்கு சாகித்ய அக்காதமி’ என்று கூச்சலிட்டு குதூகலிக்கிறார்கள். இவர்களே சில ஆண்டுகளுக்கு முன் சாகித்ய அக்காதமியை திருப்பி அளிக்காத இலக்கிய எழுத்தாளர்களை வசைபாடி இழிவு செய்தார்கள்.

இந்தக்கும்பலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு நீங்கள் சாகித்ய அக்காதமியை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பதும் பத்மஸ்ரீ விருதை மறுத்ததும் அசட்டுத்தனம் என்றுதான் நினைக்கிறேன். இதை அப்போதே பலமுறை எழுதிவிட்டேன். அந்த விருதால் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள் பல உண்டு. நீங்கள் அயல்மொழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகளைக்கூட அதன் மூலம் அடைந்திருக்கலாம்

ஆர். பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

சில முடிவுகளை நாம் முற்றிலும் புறவயமாக எடுக்க முடியாது. அகவயமான ஒரு தெளிவால் , ஒரு கணத்தில் அம்முடிவை எடுப்போம். ஆனால் பின்னர் மெல்லமெல்ல அதற்கான அறிவார்ந்த விளக்கங்களையும் தர்க்கங்களையும் நாம் கண்டடைவோம். இதெல்லாம் அத்தகையதே. இந்த பதிலை என்னை அறியாத ஒருவரிடம் சொல்லமுடியாது. நீங்கள் ஓரளவு என்னை அறிந்தவர் என்பதனால் இதை எழுதுகிறேன்.

நான் வெண்முரசு எழுதும்போது, குறிப்பாக நீலம் வழியாக, அடைந்த நகர்வு ஒன்று உண்டு. அதை மேலும் மேலும் தெளிவாக இன்று உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் 21 வயதுமுதல் அகவயமான தேடல்கள் கொண்டவனாகவே இருந்திருக்கிறேன். பல ஆசிரியர்கள், பல வழிமுறைகள், பல பாதைகள், பல திசையழிதல்கள், பல தோல்விகள்.

நான் அடைந்ததை நானே அறியவே 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. மற்றவர்களுக்கு எளிதான பாதையாக இருக்கலாம். நான் எழுத்தாளன், அந்த அகங்காரம் கொண்டவன், காமகுரோத மோகங்களில் ஆழ்ந்தவன். ஆகவே எனக்கு மிகக்கடினமான பாதையாக இருந்திருக்கிறது என நினைக்கிறேன். 25 ஆண்டுகள், கால்நூற்றாண்டு!  நித்ய சைதன்ய யதியைப் பொறுத்தவரை நான் அவருக்கு ஒரு மாபெரும் வீணடிப்புதான்.

ஒரு மெல்லிய நகர்வுதான். படிப்படியாக நடந்தது. நடப்பதே நடந்ததன் பின்னர்தான் அறிய முடிந்தது. ஆனால் அதன்பின் நான் என்னை வேறொருவராக உணரத் தொடங்கினேன். அதிலொன்று ஓர் உயர்வெண்ணமும் ஒரு வகையான துளியுணர்வும் ஒருங்கே வரும் ஒரு நிலை.

அதை இப்படி விளக்குகிறேன். ஒருபக்கம் ’நாமார்க்கும் குடியல்லோம்’ என்னும் நிலை. இனி உலகியலின்பொருட்டு எவர் முன்னிலும் ஒரு படி குறைவென நிற்க என்னால் முடியாது. கூடாது என்றோ மாட்டேன் என்றோ அல்ல, இயலாது என்று சொல்கிறேன். என் தலைக்குமேல் அரசோ மதமோ ஏதும் இருக்கமுடியாது. எந்த அடையாளத்தையும் அறுதியாக நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்தகைய நிலையை எங்கோ அகத்தில் உணர்பவர்கள் அதற்கான அடையாளங்களை வெளியே சூடிக்கொள்கிறார்கள். அது ஒரு அறிவிப்பு. அத்தகைய அறிவிப்புகள் தேவையா என நான் எண்ணியதுண்டு. எழுத்தாளனுக்கு அவை தேவையில்லை என்றே உணர்கிறேன். ஆனால் அவை இன்றி இங்கே வாழ்வதும் கடினம். அகத்தே பெண்ணாக மாறியவன் உடனே பெண்களுக்குரிய உடைக்கு மாறுவதுபோலத்தான் இதுவும் என்று கொள்ளுங்கள்.

1991ல் இந்திய ஜனாதிபதியிடமிருந்து சம்ஸ்கிருதி சம்மான் விருதைப் பெற்றதை பெரும் கௌரவமாக நினைத்தவன்தான் நான். இப்போது அப்படி ஒரு மேடையில் சென்று வணங்கி அத்தகைய ஒன்றை பெறமுடியாது. ஒரு வரிசையில் நிற்பதே முடியாது. அந்நினைப்பே ஒவ்வாமையை உருவாக்குகிறது. இது அந்த விருது, அந்த அமைப்பு மீதான விலக்கமோ அவமதிப்போ அல்ல. என்னை நான் உணரும்விதம் வேறு, அவ்வளவுதான். அதை இதற்கு மேல் விளக்க முடியாது.

ஒரு விருதை பெற்றுக்கொள்வேனா? தெரியவில்லை. ஆனால் மேலே நின்று அளிக்கப்படும் ஒன்றை கீழே நின்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆகவே அரசுசார் அமைப்புகளுடன் இயைந்துபோகவே முடியாது. என் குருநாதர்கள் அன்றி எவர் முன்னாலும் நான் இன்று பணியக்கூடாது. அதனால் இழப்புகள் என்றால் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

அதேசமயம் இது ஆணவமும் அல்ல. நான் இங்கே செய்வன எதையும் நான் பொருட்டாக நினைக்கவில்லை. இவை வெறும் குமிழிகள். நான் வெறும் குமிழி. எனக்குரியதை ஆற்றி கடந்துசெல்வேன். எனக்குரியதை ஆற்றுவதன் நிறைவுக்கு அப்பால் இவற்றில் பொருளென ஏதுமில்லை. இருந்தால் அது நான் முழுதறியக்கூடிய பொருளும் அல்ல. ஆகவே அது என் ஆர்வமும் அல்ல.

பத்மஸ்ரீயை அல்ல, நான் பஞ்சாயத்தில் பிறப்புச்சான்றிதழ் பெற்றாலே அதற்கு எனக்குத் தகுதியில்லை என்று சொல்லும் பெருங்கூட்டம் உண்டு. அவர்களுக்குப் புன்னகையன்றி ஏதும் எதிர்வினை இல்லை.

இமையம் சாகித்ய அக்காதமி பெறுவதில் மகிழ்ச்சி. தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்.  நாளை ஒருவேளை அரசியலின் பொருட்டு அவர் துறக்கவும் கூடும். அதுவும் இயல்பே. அதில் முரண்பாடு ஏதுமில்லை. அதெல்லாம் அவர்களின் சொந்தத் தெரிவுகள். இங்கே பொதுவாக இன்றுவரை இத்தகைய விருதுகள் கல்வித்துறையாலும், இலக்கியவாதிகளாலுமே அளிக்கப்படுகின்றன. அரசியல்தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைதிரை, நிறைவிலி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிழைப்பொறுக்கிகள் – கடிதம்