அன்புள்ள ஜெ
உங்கள் கதைகளில் தகவல்பிழைகள் உள்ளன என்று சொல்லப்படும் கூற்றுக்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அடிக்கடி இவை கண்ணில் படுகின்றன. சாதாரண வாசகர்கள் இவற்றை அப்படியே நம்பிவிட வாய்ப்புள்ளது. நீங்கள் விளக்கம் அளிக்கவில்லை என்பதையே ஒரு சாதக அம்சமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
எஸ்.சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்,
விஷ்ணுபுரம் வெளிவந்தகாலம் முதலே இந்த போக்கு தொடங்கிவிட்டது. நான் அனைத்துக்கும் புனைவு சார்ந்த விளக்கமும், நூலாதாரமும் அளித்தேன். ஆனால் அவற்றைச் சொன்ன எவரும் அவர்களின் பிழைகளை ஒப்புக்கொள்ளவில்லை, பிழையாகச் சொன்னதற்கு வருந்தவும் இல்லை. அப்படியே நழுவி அடுத்த பிழையைச் சொல்ல ஆரம்பித்தனர்.
சுந்தர ராமசாமி என்னிடம் ‘இந்த கும்பலுடன் நீங்கள் நூறாண்டுகள் சண்டையிட்டாலும் தீராது. அப்படியே விட்டுவிடுங்கள். அவர்களுடையது வேறு பிரச்சினை’ என்றார். நான் விளக்கம் அளிப்பதை நிறுத்திவிட்டேன். அந்நாவலின் இரண்டாம் பதிப்பில் இப்படி முன்னுரையில் எழுதிச்சேர்த்தேன். ‘இந்நாவலில் பிழைகளை கண்டுபிடித்து பலர் எழுதியிருந்தனர். இந்த இரண்டாம் பதிப்பில் திருத்தும் அளவுக்கு உண்மையான பிழை ஏதும் சுட்டிக்காட்டப்படவில்லை’. அதன்பின் அது அடங்கியது.
என் நிலைபாடு இதுவே. இந்த பிழைகண்டுபிடிப்பவர்கள் மிகப்பெரும்பாலும் அரைகுறை அறிவுடையவர்கள், நடைமுறையோ புனைவின் சாத்தியங்களோ தெரியாதவர்கள். இவர்களுடன் போராடவே முடியாது. அதைப்போல அபத்தமான சக்தி விரயம் வேறில்லை.
என் கதைகளை வெவ்வேறு கதைக்களத்தைச் சார்ந்தே எழுதுகிறேன். அக்கதைக்களத்தில் எனக்கு ஒரு குறைந்தபட்ச அனுபவம், அறிமுகம் இருக்கும்.அதற்குமேல், ஒருதுறையை எழுதினால் அத்துறையின் முதன்மை நிபுணர் என்று சொல்லத்தக்க சிலரிடம் அனுப்பி பரிசீலனை, ஒப்புதல் பெற்றே வெளியிடுகிறேன். சட்ட நடைமுறைகள், அறிவியல் கருத்துக்கள், வரலாறு, தொன்மம் எதுவானாலும்.
ஆகவே அவற்றில் பிழைகள் இருந்தால் இன்னொரு நிபுணர் கண்டுபிடிக்கும் அளவுக்கே இருக்குமே ஒழிய முகநூலில் உலவும் எளிய உள்ளங்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கெல்லாம் இருக்காது.
பொதுவாக இந்த இலக்கிய அரசியல்சூழலில் உலவும் கூட்டம் தங்கள் துறைகளில் எந்த மதிப்பும் இல்லாதவர்களாக, எந்த அடிப்படை அறிதலும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். துறையில் பொருட்படுத்தத் தக்கவர்கள் முகநூலில் வெட்டிவேலை செய்வதில்லை. இவர்களின் தாழ்வுணர்ச்சியும் அதன் விளைவான அசட்டு ஆணவமுமே இப்படி எதிர்வினைகளை உருவாக்குகிறது. அவர்களை நானல்ல, எவரும் பொருட்படுத்தமுடியாது.
இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன். நான் எழுதிய ஒரு நக்சலைட் கதையில் நக்சலைட்டின் பெயர் கோனார் என்று இருக்கிறது. ஓர் அரைவேக்காடு ‘எந்த நக்சலைட்டுக்கு கோனார் என்று பெயர் இருக்கும்? அவர்கள் புரட்சிப்பெயர்கள் தான் வைத்துக்கொள்வார்கள். அவர்கள் சாதிகடந்தவர்கள்’ என பத்துபக்க கட்டுரை எழுதியிருக்கிறது.
இடதுசாரி இயக்கங்களில் சாதாரணமாக மூன்றுபெயர் இருக்கும். அவர்களின் இயக்கத்துக்காக வைத்திருக்கும் பெயர் ஒன்று. அது பெரும்பாலும் பாவெல், நிகிதா போன்று ஏதாவது புனைபெயராக இருக்கும். அவருடைய அசல்பெயர் அரிதாகவே பேசப்படும்.
மூன்றாவது, சம்பந்தப்பட்டவரின் தலைமறைவுப்பெயர். அது எவரும் அடையாளம் காணமுடியாத இயல்பான பெயராகவே இருக்கும். அதைத்தான் பெரும்பாலும் போலீஸ் அவர் பெயராகக் கொண்டிருக்கும்.
உண்மையில் கோனார் என்றபெயரிலேயே ஒரு நக்சலைட் தலைவர் அறியப்பட்டிருந்தார். அவர் சாதியால் கோனார் அல்ல, அது அவருடைய தலைமறைவுப்பெயர். அவர் தலைமறைவாக இருந்த இடம் கோனார்கள் வாழும் இடம். ஒரு புரட்சிக்காரர் தலைமறைவு வாழ்க்கையில் புரட்சிப்பெயருடன்தான் வாழ்வார் என வாதிடும் ஒருவரிடம் என்ன பேசமுடியும்?
ஒருவர் கொஞ்சம பயிற்சி அறிவு குறைவானவர், கொஞ்சம் பாமரத்தனமானவர் அல்லது எளியவர் என்று காட்ட ஒரு பிழையான தகவலை அவர் சொல்வதுபோல எழுதுகிறோம். உடனே ஆசிரியரின் அறிவுக்குறைவை அது காட்டுகிறது என ஒருவர் கிளம்பினால் என்ன செய்யமுடியும்?
இத்தனை விளக்கத்தையும் நான் அந்த அரைவேக்காட்டுக்கு நான் அளிக்கிறேன் என்று கொள்வோம். ஏற்றுக்கொள்வாரா என்ன? ஈகோ சீண்டப்பட்டு இன்னொன்றை தொடங்குவார். அது இன்னொரு வெட்டிவேலை.
சமீபத்தில் ஓஷோ உரையில் ஓஷோவின் மேல் இளைஞர்களுக்கு ஆர்வம் வருவதற்கான காரணங்களில் ஒன்று அவர் ஒருவகையான ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்று சொன்னேன். அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் அல்ல, கல்லூரி ஆசிரியர், இதுகூட தெரியாதா நாயே என்ற வகையில் ஏகப்பட்ட கடிதங்கள். என்ன சொல்ல?
ஆகவே, என் கதைகளில் தவறுகள் மெய்யாகவே சுட்டிக்காட்டப்படும் என்றால் நானே அதை குறிப்பிட்டு அப்பிழையை திருத்திக்கொள்வேன். அப்படி நான் வெளிப்படையாகச் சொல்லித் திருத்திக்கொள்ளாவிட்டால் அது பிழையெல்லாம் ஒன்றும் அல்ல, சுட்டிக்காட்டுபவரின் அறியாமையின் வெளிப்பாடாக மட்டுமே அதை கொள்கிறேன் என்று பொருள்.
அப்படி சமீபத்தில் பொருட்படுத்தும்படி எந்தப்பிழையும் சுட்டிக்காட்டப்படவில்லை.
ஜெ