’ஆமென்பது’- அறிவும் உணர்வும் – கடிதம்

ஆமென்பது’- அறிவும் உணர்வும் ஒரு விவாதம்.

அன்புள்ள ஜெ,

உங்கள் மறுமொழியை ஒருவாரமாக அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன். சில இடங்கள் செரித்துக்கொள்ள முடியாத அளவுக்கு தகிப்பாக இருந்தன. குறிப்பாக ‘சரியான சொற்களில் சொல்லப்பட்டுவிட்டதனால் மட்டுமே ஒன்று உண்மையென்று நம்புவதைப்போல அறிவின்மை ஏதுமில்லை’ என்ற வரி. சாராம்சத்தில் இதை எப்படியோ நம்பிக்கொண்டுதான் செயல்படுகிறோம் என்று புரிந்தது. அதில் உள்ள பிழையும். வார்த்தைக்கச்சிதமான எத்தனை தர்க்கங்களை நாம் உள்ளூர பொய் என்று அறிகிறோம் என்று தட்டியதும் புரிந்தது. எலிப்பொறியே தான். உண்மையிலேயே புலி என்றால் அதில் சிக்கக்கூடாது தானே :)

அதேபோல் ஒரு திறப்பாக அமைந்த வரி ‘புனைவெழுத்து சரியான கலைத்தன்மையுடன் இருக்கும் என்றால் முழுமையை நோக்கியே சுட்டும்.முழுமையைச் சுட்டும் அறிவு மாயை அல்ல, துண்டுபட்ட உண்மையே மாயை.’ என்னிடம் இருந்த ஓர் அடிப்படையான பிழைப்புரிதலை கழற்ற மிக உதவிகரமாக இருந்த விவாதம் இது. புனைவை நிகழ்வாழ்க்கைக்குள் ‘செருகி வைக்கப்படும்’ கதை வாழ்க்கைகள் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஒரு மாபெரும் நூலகத்தில் புதிது புதிதாக புத்தகங்களை அடைத்து வைப்பது மாதிரி. அப்படி அல்ல. அது கனவுத்தளத்தில் வாழ்க்கைக்கு நிகரான ஒரு மறுவாழ்க்கை. வாழ்க்கைக்கு அடிநாதமாக சாரமாக எதுவுள்ளதோ அதுவே அதன் அடிநாதமும் சாரமும் கூட. அந்த முழுமையிலிருந்தே உதிக்குமாயின் அங்கும் சுட்டப்படுவது அதே முழுமையே. ஆக கலை என்பது ஒரு நொடி முழுமை தரிசனம். துண்டுபட்ட உண்மை, அரை உண்மை வாழ்க்கையின் சரியான பிரதிபிம்பம் இல்லை. அதன் சாரத்தை அது பிரதிபலிப்பதில்லை. ஆகவே மாயை. இந்தப் புரிதலை அடைந்தேன்

என் கேள்வியையும் உங்கள் பதிலையும் பலமுறை படித்துவிட்டேன். உண்மையில், இந்தக்கதை பற்றிய ஒரு கேள்வி என்ற தளத்தைத் தாண்டி, அறிவின் இடம் என்ன என்ற தர்க்கப்பூர்வமான கேள்வியையும் தாண்டி, இதிலிருந்து நான் சேகரித்துக்கொண்டது ஒரு முழுமையான அழகியல்-அறவியல் நோக்கு என்று சொல்ல முடியும்.

நீங்கள் சொன்னவற்றை மூன்று புள்ளிகளாக தொகுத்துக் கொள்கிறேன்

அ. அறிவார்ந்து மட்டும், அல்லது உணர்வுதளம் சார்ந்து மட்டும், வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைவதில்லை. ஆணவநிறைவுக்கான ஆசையே அவற்றுக்கு அடியில் நின்று அறிவாகவும் தூய உணர்வாகவும் செயல்படும். அறிவால் கட்டுப்படுத்தப்படும் உணர்வுகள், உணர்வுகளால் வழிநடத்தப்படும் அறிவு, இந்த சமநிலை முக்கியம். முழுமை நோக்கு இருக்கும் பட்சத்தில், அதில் உதிக்கும் உள்ளுணர்வே வழிகாட்டும்.

ஆ.வேதாந்தம் வாழ்க்கைசார் அறிவுகளுக்கு எதிரானது அல்ல. பாதி-உண்மைகளுக்கே எதிரானது. முழுமையுடன் நம்மை பொருத்திக்கொண்டு அடையும் அறிவு தன்னறிவு. அறிவாணவம் பிரிவுபட்ட அறிவு. தன் ஆணவத்தை நிறைவு செய்துகொள்வதே அதன் முதல் குறிக்கோள். வேதாந்தம் இதையே மாயை என்கிறது.

இ.ஆகவே முழுமையே முக்கியம். தன் அகங்காரத்தை ரத்து செய்து கொண்டு, அதற்கடியில் இருப்பதை உள்ளுணர்வால், நுண்ணுணர்வால் கண்காணித்துச் சென்று பெருவதே உண்மையான அறிவு. அங்கே உணர்வுக்கும் அறிவுக்கும் மோதல் இருக்காது, ஏனென்றால் பிளவில்லாத நிலை. அப்படி அறிந்துகொள்ளும் அந்த பயணமும் அதில் பெரும் அறிதல்களும் மொத்தமாக அறிவு தான். அந்த ஐக்கிய நிலையையே ‘தியானிக்கப்பட்ட அறிவு’, அதுவே முழுமையைச் சுட்டும்.

வாழ்க்கைத்தளத்தில் அறிவுக்கும் உணர்வுக்கும் என்ன இடம் என்ற கேள்வியைத் தாண்டி இப்போது உங்கள் பதிலை உள்வாங்க உள்வாங்க, தன்னளவில் ஒரு அழகியல் கொள்கையாகவே இவற்றுக்கு ஒரு ஆழம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அதாவது இலக்கிய உண்மை என்றால் என்ன என்ற கேள்விக்கு இதுதான் பதில். புனைவு ‘உண்மையாக’ இருக்கவேண்டுமென்றால் அதில் அறிவுக்கும் உணர்வுக்குமான சரியான சமநிலை இருக்கவேண்டும். உதாரணமாக, மெல்லுணர்ச்சிகள் (empty sentiment, cheap romanticism) ஓங்கிய படைப்புகளை நம்மை நிறைவுசெய்வதில்லை. அவற்றில் ஒரு போலித்தனத்தை நான் உணர்கிறோம். பெரும்பாலும் அவ்வகைப் படைப்புகள் அந்த உணர்ச்சியை மட்டும் தனியாக எடுத்து அதற்கான காண்டெக்ஸ்ட் இல்லாமல் நீட்டுகிறது. மாறாக நாம் உண்மையென்று கண்டுகொள்ளும் படைப்பில்  உணர்வுகள் உருவாவதற்கான சூழலை மறுக்கமுடியாத தர்க்கத்துடன் கட்டமைக்கிறது. அந்த அறிவுக்கட்டை மறுதட்டில் வைத்துத்தான் இந்த உணர்வுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது.

இதேபோல் இலக்கியத்தில் அறிவார்ந்த தன்மை எந்த அளவிற்கு தேவை, தர்க்கத்தின் பங்கு என்ன என்ற கேள்விக்கும் இதுதான் பதில். உண்மையான உணர்ச்சிகரம் இல்லாது ஒரு தர்க்கத்தை மட்டும் கொண்டு ஒரு படைப்பு அமையுமாயின் அது முழுமையாக அமையாது. பிரச்சார எழுத்துக்கும் சரி, தத்துவ, அறிவியல் அல்லது பிற துறை ‘உண்மைகளை’ மீண்டும் சொல்ல எழுதப்படும் படைப்புகளுக்கும் சரி, இது பொருந்தும். அவை அரை உண்மைகள்.

இதுதான் செவ்வியலின் அழகியல். சரிதானே? இவ்வாறு தொகுத்துக்கொண்டேன் – செவ்வியலை ஒரு பழமையான அழகியாலாக பாவிக்கும் பார்வையே பொதுவானது. ஆனால் இது முக்கியமான இடம். செவ்வியலின் செம்மை என்பது அதன் பழமையில் இல்லை, அதன் முழுமையில் உள்ளது. ஆகவே தான் செவ்வியல் காலத்தைத் தாண்டி நிற்கிறது.

இந்த சமநிலையே, இந்த முழுமையுணர்வே, வாழ்க்கைப்பாதைகளை தீர்மானிக்குமென்றால் அது அழகான, உண்மையான, நல்ல வாழ்க்கையாக அமையும். இதையே அறிவு-உணர்வு சமநிலை என்ற விவாதத்தில் சுட்டுகிறீர்கள். ஒருவேளை கனிந்த மனிதர்களுக்கு, ஞானியருக்கு அது பொருந்தலாமா? சாதாரண  மனிதன் சவாரிசெய்யும் தன்னாணவம் என்ற ஒற்றைக்குதிரை அதற்கு பல சமயங்களில் தடையாக இருக்கிறதே? மனிதனின் ஆதார சிக்கலே அதுதான் போலும்.

மனிதன் தன்னுடைய உள்ளுணர்வை, ஆழத்துடனான பிணைப்பை, முழுமைக்கான தேடலை தக்கவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையே இந்த புரிதல் எனக்கு முதன்மையாக உணர்த்துகிறது. இதற்கு மேல்  புறவயமாக பேசமுடியுமா என்று தெரியவில்லை. அடுத்தக்கட்டமாக உள்ளுணர்வின் இயங்குதலைச்சார்ந்து கேள்விகள் எழுகின்றன. வேறொரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்திக்கையில் வாய்ப்புக்கிடைத்தால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த விஷயங்களைச்சார்ந்து மேலும் உரையாட விரும்புகிறேன்.

இந்த பதில்களை நீங்கள் உங்கள் குருவின் மாணவர் என்ற நிலையிலிருந்து சொன்னதாக எழுதியிருந்தீர்கள். தொகுத்துக்கொள்கையில், தொடர்ந்து தியானத்து வரும் ஒரு மாபெரும் செவ்வியல் கலைஞரின் விடைகள் இவை என்பதும் எனக்கு அதே அளவு முக்கியமாகப் படுகிறது.

அன்புடன்’

ஆர்

பிகு – இந்தக் கேள்விபதில்களை அசைப்போட்டுக்கொண்டிருந்த அதே சமயம் உங்கள் ஓஷோ உரைகளையும் கேட்கப்பெற்றேன். ஓஷோவும் இந்தக்கதையின் நாயகர் இயங்கியதும் ஏறத்தாழ ஒரே காலகட்டம் என்பதால், அவர் ஓஷோவிடம் சென்றிருந்தால் என்ன பதில் பெற்றிருப்பார் என்ற கேள்வி இயல்பா எழுந்தது.

ஓஷோ அவரிடம் அவர் எடுத்த முடிவுகளோடு எப்படி சுமுகமாக வாழ்வது என்று சொல்லியிருக்கக்கூடும் – கடந்தகால ஏக்கங்களை கைவிட்டு, எதிர்பார்ப்புகள் இல்லாமல், நொடிக்கு நொடி பொருந்திப்போய் வாழச்சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படி உண்மையிலேயே வாழ்வது மானுடருக்குச் சாத்தியமா? அவருடைய ஆழம் அந்த விலக்கத்தை மேற்கொள்ள அனுமதிக்குமா? அதை நிகழ்த்த எத்தனைப்பெரிய பிரயத்தனங்களும் பயிற்சிகளும் தேவையாகும்? அந்தக் கருத்தைக் கேட்டதில் ஏற்படும் ஒரு நொடி ‘சுளீர்’ உடைவால் அது அத்தனை எளிதாக நடக்குமா என்ன?

இப்படி யோசிக்கையில் ஓஷோவின் தனிமனிதனை முன்னிறுத்திய – பௌதீகவாதத்தில் ஊரிய – தரிசனத்துக்கும் வேதாந்தம் போன்ற முழுமைக்கோட்பாட்டுக்குமான தூரம் ஓரளவு துலக்கம் பெருகிறது. முழுமைவாதத்தின் முக்கியத்துவமும். இன்று நாம் வாழும் பொருள்முதவாத-முதலாளித்துவ-தொழில்நுட்ப யுகத்துக்கு இந்த நுட்பத்தின் புரிதல் மிக முக்கியமெனப் பட்டது.

அன்புள்ள ஆர்,

செவ்வியல் என்பதைப் பற்றிச் சொல்கிறேன். செவ்வியல் தர்க்கம்- கற்பனை- உள்ளுணர்வு ஆகிய மூன்றும் சரியாகக் கலந்த ஒரு வெளி. மிகைபடச் சொல்லல்,குறைபடச் சொல்லுதல், விளையாட்டாகச் சொல்லுதல், அங்கதம், குழந்தைத்தனம் என எல்லாவகை கூறுமுறைகள் வழியாகவும் வாழ்க்கையை அள்ளிவிட முயலும் ஓர் அழகியல். ஏதேனும் ஒன்று குறைந்தால்கூட அது முழுமையான செவ்வியல் அல்ல.

இன்று சுரேஷ்குமார இந்திரஜித்திடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் முன்பு சுந்தர ராமசாமியிடம் பேசியதைச் சொன்னார். அவர் சுந்தர ராமசாமியிடம் நான் வரலாற்றை எழுதுவதாகச் சொன்னபோது சுந்தர ராமசாமி ‘அவர் எழுத நினைக்கிறது காவியம். அவரோட இடம் அதுதான்’ என்றார். நான் முழுமை என்ற ஒன்றையே இலக்காக்குகிறேன். அது காவியத்திலேயே இயல்வது.

ஜெ

முந்தைய கட்டுரைநிறைவிலி, விசை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுழங்கும் ஒரு நாள்