தனியார்மயம் ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ.,

பல்வேறு வகையிலும் வெங்கட்ராமனுக்கு நம் மாநிலமும் நாடும் கடன்பட்டிருக்கிறது என்பது உண்மை.

இந்த மின்னஞ்சல், உங்களின் மற்றும் பெரும்பாலோனோரின் பொதுத்துறை பற்றிய பார்வை குறித்தது.

“பொதுத்துறையின் உறுதிதான் இந்தியாவைக் காப்பாற்றியது என்னும் சூழலில்”…

மின்விளக்கு, மின்விசிறி, டிவி எதுவுமே இல்லாத வீட்டில், மின்வெட்டு ஏற்படுத்தும் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

அதன் பொருட்டு மின்சாதனங்களை உபயோகப்படுத்துவது தவறு என்று முடிவு செய்வது போன்ற கருத்து இது.

வணிகம் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல.  அதை ஒழுங்கு படுத்துவது மட்டுமே அரசாங்கம் செய்ய வேண்டியது.
(இது ஒன்றும் நவீன சிந்தனை அல்ல. வெள்ளைக்காரன் காலம் வரையில் நம் நாட்டில் கூட மிகத் தெளிவாகக் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைதான்)

தேக்கம் என்பது சந்தைப் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாதது…  தற்போது வந்துள்ள தேக்கம், வழக்கத்தை விட கடுமையான ஒன்று என்பது உண்மை… ஆனால் அதை வைத்து இந்திராவின் பொருளாதாரக் கொள்கைகள் நம் நாட்டிற்கு இழைத்த பின்னடைவை ஏற்றுக்கொள்ள முடியாது.

நன்றி
ரத்தன்

ஆர்.வெங்கடராமன் அஞ்சலி

காய்கறியும் அரசியலும்

 

அன்புள்ள ரத்தன்,

உங்கள் கடிதம்.

பொதுத்துறை-தனியார்த்துறை பற்றி கடந்த பத்துவருடங்களாக எங்கள் தொழிற்சங்கக் கருத்தரங்குககில் மீளமீளப்பேசிக் களைத்துவிட்டோம். பல வருடங்களாக நான் தனியார்த்துறையின் ஆதரவாளன். என்னுடைய நம்பிக்கையை ஆட்டம் காணவைத்த நிகழ்ச்சி ஹர்ஷத் மேதாவின் ‘எழுச்சி’. அதன்பின் இப்போது பன்னாட்டு நிதிச்சிக்கல், சத்யம் நிறுவனம் வரையிலான நிகழ்ச்சிகள்.

பொதுத்துறையின் பலவீனங்கள் பலங்கள் என்ன?

1 அது பெருமளவு நிதியை திரட்ட முடியாது. அதன் பங்குகளில் பாதிக்குமேல் அரசிடம் இருக்கவேண்டியிருப்பதனாலேயே அதன் நிதிச்சாத்தியங்கள் வரையறுக்கப்பட்டு விடுகின்றன

2 அதன் நிர்வாகத்தளத்தில் இருக்கும் நிதானம்.  அதற்குக் காரணம் அது எப்போதும் அரசாங்கத்தைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது என்பது. அதன் விரிவான சிவப்புநாடாத்தனம் எப்போதுமே சிக்கல்களை உருவாக்குகிறது. ஆகவே போட்டிகளைச் சந்திப்பதில் அதற்கு தயக்கம் இருக்கிறது

3 அது தனித்திறமையை நம்பி இயங்கமுடியாது பணிமூப்பு, இட ஒதுக்கீடு என்று பலவகையான சமுகக் கட்டுப்பாடுகள் அதற்கு உண்டு

ஆனால் அதன்பலங்கள் பல. முக்கியமானவை இரண்டு

1. அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே அது மிதமிஞ்சிய தாவல்களில் ஈடுபட இயலாது. மிதமிஞ்சிய அபாயங்களைச் சந்திக்காது. ஒருபோதும் சரிந்தழியாது

2 அதற்கு அரசாங்கத்தின் நலத்திட்டங்களில் பங்கெடுக்கும் பொறுப்பு இருக்கிறது. உதாரணமாக BSNL நிறுவனம் கிராமப்புற தொலைபேசிசேவையை பெரும் நஷ்டத்துடன் அளித்து வருகிறது. அளித்தாகவேண்டும். பிற தனியார் அதைக் கண்டுகொள்வதே இல்லை

பொதுத்துறையின் பல சிக்கல்கள் தனியாருக்கு இல்லை. தனியார்த்துறை அளவில்லாத மூலதனத்தை திரட்ட முடியும். அதிவேகமாகச் செயல்படமுடியும். தனிப்பட்ட திறமைகளுக்கு இடமளிக்கமுடியும். அது எதன் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஆகவே பெரும்போட்டிகளை சந்திக்க அதனால் முடியும்

ஆனால் அதன் மூலதனக் கட்டுமானம் நம்முடைய மூலதனச் சந்தையை சார்ந்து உள்ளது. நம் மூலதனச்சந்தை எந்த அளவுக்கு நிலையற்றது என்று நாம் கண்டுகொண்டிருக்கிறோம். அதில் ஊகவணிகத்தின் பங்கு மிக அதிகம். ஆகவே அதில் சூதுவாதுகளுக்கு முடிவில்லாத சாத்தியக்கூறு உள்ளது.

இன்று சர்வதேச நிதிச்சந்தையின் சூதாட்டம் காரணமாகவே உலகப்பொருளாதாரம் சரிந்துள்ளது. அதேதான் சத்யம் நிறுவனத்திலும் நடந்துள்ளது. பங்குவணிகச்சூதட்டமே அதன் வீழ்ச்சிக்குக் காரணம். அதன் அதிபரே செயற்கையாக அதன் பங்குவிலையை ஏற்றியிருக்கிறார். அதற்கு அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும் உதவியிருக்கின்றன.

மேலும் தனியார்த்துறையின் அடித்தளமாக இருக்கும் நிதிச்சந்தையில் மிகச்சில தனிநபர்கள் மிதமிஞ்சிய மேலாதிக்கம் கொள்ள முடியும். இன்று உலகப்பொருளாதாரத்தையே தள்ளாடச்செய்திருப்பவர்கள் மிகச்சில சூதாடிகளே. இந்த அம்சம் வெறும் ‘வரும் போகும்’ ஏற்றத்தாழ்வு அல்ல. அடிப்படையிலேயே உள்ள கோளாறைக் காட்டுகிறது இது.

கடைசியாக  உலகளாவல் நடந்து வரும் சூழலில் தனியார்த்துறை உலகளாவிய வலையில் சிக்கியுள்ளது. அதன் எல்லா விஷயங்களும் உலகப்பொருளியல் அலைகளால் தீர்மானமாகின்றன. ஒரு தேச எல்லைக்குள் திட்டமிடலே சாத்தியமில்லாமல் ஆகிறது.

ஆகவே ஒரு தேசத்தின் அடிப்படைக் கட்டுமானமாக இருக்கும் துறைகளை தனியார்மயமாக்குவது மிக அபாயகரமானது என்றே இப்போது எண்ணுகிறேன். அது தேசத்தையே வீழ்த்திவிடும். பத்துவருடங்களுக்கு முன்னர் தேசியமய வங்கிகளை முழுமையாக தனியார்மயமாக்கும் திடம் முன்வைக்கபப்ட்டபோது இடதுசாரிகளின் தீவிர எதிர்ப்பால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. வலதுசாரித்தரப்பில் குருமூர்த்தி மட்டுமே தனியார் மயத்தை எதிர்த்தார்.

அன்று அது அனுமதிக்கப்பட்டிருந்தால் இன்று நம் வங்கிகள் முதலீட்டை அமெரிக்க நிதி நிறுவனக்களுடன் சூதாடி திவாலாகி நின்றிருக்கும். அவை பொதுத்துறையாக இருந்த காரணத்தால் மட்டும்தான் தேசம் பிழைத்தது. இப்போதுகூட ஓரளவு பங்குகளை சத்யம் நிறுவனத்தில் முதலீடுசெய்த காப்பீட்டுத்துறையில் சிக்கல் இருக்கிறது.

இரும்பு உருக்கு, மின் உற்பத்தி, துறைமுகம், அடிப்படைச் சேவைகள் போன்றவற்றில் தனியார்மயம் கூடாது என்றும் பொருளாதாரத்தின் அடிப்படையான வல்லமையாக பொதுத்துறை இருந்தாகவேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். இல்லையேல் அது என்றுமே தேசத்துக்கு அழிவினை அளிக்கும்.

அதேசமயம் வணிகம் சார்ந்த துறைகளில் , உதாரணமாக சுற்றுலா, பொதுத்துறையை விலக்கிக் கொள்வதும் அந்த நிதியை அடிப்படைக் கட்டுமானங்களுக்குச் செலவிடுவதுமே நல்லது என்று நினைக்கிறேன்.

கருத்தரங்குகளில் பொருளியலாளர்கள் இரு தரப்புக்கும் நியாயங்களைச் சொல்லி விரிவாகப்பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நாளிதழ்களின் கட்டுரைகளுக்குள்ளும் புள்ளி விவரங்களுக்குள்ளும் சென்றால் முடிவே இல்லாமல் சென்றுகொண்டே இருக்கலாம். இது எளிய தொழிற்சங்க ஆர்வலனாக என் இன்றைய புரிதல்

ஜெ

அன்புள்ள ஜெ.,

பொருளாதாரத்திலும் தாங்கள் இவ்வளவு தூரம் ஈடுபாடு காட்டியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தனியார் மயத்தில் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் பிரச்னைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: பேராசை மற்றும் ஊழல (சட்டத்திற்கு உட்பட்ட/மீறிய பேராசை என்றும் வகை பிரிக்கலாம்)

தற்போதைய உலகளாவிய நிதி நெருக்கடி பேராசை மூலம் உருவானது. ஹர்ஷத் மேத்தாவும், சத்யம் நிறுவனமும் ஊழல் வகையை சார்ந்ததது. பொது நிறுவனங்களின் குறைகளைப் பட்டியலிட்ட தாங்கள், அவற்றின் ஊழல் பற்றிக் குறிப்பிடவேயில்லை.

ஊழல் என்பது தனியார் துறையிலும் உண்டு; பொதுத்துறையிலும் உண்டு. ஆனால் வித்தியாசம் மிக அதிகம்: சத்யம் நிறுவனத்தின் CEO கைது செய்யப்பட்ட போது கூனிக்குறுகிக் காட்சியளித்தார். பொதுத்துறையின் CEOக்களான நம் அரசியல்வாதிகள் கைது செய்யப்படும் போது எவ்வளவு தெனாவெட்டாகக் காட்சியளிக்கிறார்கள் என்பது நாம் அறியாததல்ல.

உங்கள் வார்த்தைகளின் சொல்வதென்றால்…  நம் நாட்டில், பொதுத்துறை என்பது பிரபுத்துவம்; தனியார் துறை என்பது முதலாளித்துவம்.

அன்புடன்
ரத்தன்

பி.கு: சில முக்கியத் துறைகளை அரசாங்கமே கையாள வேண்டும் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்…  ஆனால், வங்கிகளும், இரும்பு ஆலைகளும் என் பொதுத்துறைப் பட்டியலில் இடம்பெறவில்லை :)

 

அன்புள்ள ரதன்
சரிதான், கலப்புப் பொருளாதாரத்தின் அளவில் மட்டுமே நம்மிடையே கருத்து வேறுபாடு போலிருக்கிறது. ஊழலைப்பொறுத்தவரை அரசு ஊழலில் உள்ள கட்டுப்பாடுகள் கூட தனியார் நிதி சூதாட்டத்துக்கு இல்லை என்பதே என் ஊகம்
ஜெ

முந்தைய கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 5
அடுத்த கட்டுரைதமிழ்ப்பண்பாட்டைபேணுதல்:கடிதம்