எச்சம் [சிறுகதை]

“இந்த வெள்ளைக்காரன்லாம் எடுப்பான்லா, அது” என்றார் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார். அவர்தான் எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸ் புரவிஷனல் ஸ்டோர்ஸின் நிறுவனர், உரிமையாளர்.

“என்னது?” என்று நான் கேட்டேன்.

அவர் கையைச் சுழற்றி “வெள்ளைக்காரன் எடுப்பான்லா, அதான் லே, சோலிகளை எல்லாம் முடிச்சுப்போட்டு, அந்தாலே ஆத்தலா படுத்துக்கிட்டு…”

“ஆமா” என இழுத்தேன்.

“ஏலே, சொல்லிட்டே இருக்கேன்ல? வெள்ளைக்காரத் தொரை எடுக்கப்பட்டது… சட்டைகளை களட்டிப்போட்டு டவுசரை போட்டுக்கிட்டு வலையூஞ்சாலிலே படுத்துக்கிடுவான்லா? கையிலே கிளாஸிலே குடிக்கதுக்கு வைச்சிருப்பான். சிலபேரு பக்கத்திலே பிளேயரை வைச்சு பாட்டுகூட கேப்பான்.”

“ஆமா” என்றேன், ஒன்றுமே புரியவில்லை.

“அதான்லே, அதுக்கு பேரு என்ன?”

“என்ன பாட்டா கேக்குறியோ?”

“ஏலே, அவன் அந்தாலே எடுக்குதான்லா? அதுக்கு பேரு என்ன?”

எனக்கு அவர் சொல்வதென்ன என்று புரியவில்லை. ஆனால் உலகில் அவருக்கு தெரியாத எல்லாமே எனக்குத் தெரிந்திருக்கவேண்டும் என எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் நினைத்தார். நான் பிஎஸ்ஸி படித்திருந்தேன். ஆகவே எனக்கு அவரது மளிகை – ஸ்டேஷனரி கடையில் கணக்குப்பிள்ளை உத்தியோகம். மாதம் பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம். டீ காப்பி இலவசம். முந்திரி பாதாம் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம்.

மனம் வந்து அவர் அந்தச் சம்பளம் கொடுப்பது எனக்கு மட்டும்தான். ஏனென்றால் அவருடைய பார்வையில் நான் ‘பீயேக்காரன்’. நானும் பிஎஸ்எஸி என்று பலமுறை சொல்லிப்பார்த்தேன். அது ஒருவகை பீ.ஏ என பாட்டா புரிந்துகொண்டார். நான் கம்ப்யூட்டரில் கணக்குகளை ஏற்றுவேன்.

பாட்டா கடைக்கு அவருடைய நண்பர்கள் யார் வந்தாலும் சலிப்புடன் பேசும் பாவனையில் “பீயேக்காரனாக்கும். விவரமுண்டுண்ணு நினைச்சு வச்சுகிடுதது. இப்ப இந்த கம்பௌண்டரிலே கணக்குகளை ஏத்தணும்லா?” என்பார். அதையும் நான் திருத்தவேண்டும். “பாட்டா, கம்ப்யூட்டராக்கும்” என்பேன். “அதத்தானேலே சொன்னேன், செத்த சவமே” என்று சொல்லிவிடுவார்.

ஆனால் பாட்டா ஓய்ந்தவேளையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். அவர் அறிவியல் முதல் அரசியல்வரை அனைத்தையும் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்வார். கொடுக்கும் காசு முதலாகி வரவேண்டுமே?

“இவன் ஒரு கேணையன். இவங்கிட்டே சொன்னேன் பாரு… வெள்ளைக்காரன் எடுக்குதத பாக்காதவன் இல்ல. சினிமா புடிச்சு டிவியிலே போடுதான். அது என்னான்னு கேட்டா இவன் நம்மகிட்டே முளிக்கான்” என்றார் பாட்டா.

“அவன் என்ன பாட்டா எடுக்கான்?” என்றேன்.

“அதைத்தாம்லே உங்கிட்டே கேக்குதேன், செத்த மூதி.”

“செரி, எடுத்து என்ன செய்யுதான்?”

“என்ன செய்வானா? ஏலே, என்ன கேக்கே?”

“இல்ல எடுத்து எங்க வைப்பான்?”

“எடுபட்டச் சிறுக்கிபிள்ள மவனே, கிண்டல் பண்ணுதியோ? தமாசு பண்ணுதியோ? வெட்டி பொலிபோட்டிருவேன்…” பாட்டா டஸ்டரை எடுத்து என்மேல் எறிந்தார். அது அப்பால் விழுந்தது. செலவு சுருக்கும் நோக்குடன் அவர் மூக்குக்கண்ணாடியே போட்டுக்கொள்ளவில்லை.

நான் மேற்கொண்டு பேசவில்லை.

“ஒரு விசயம் கேட்டா சொல்லத் தெரியல்ல. சம்பளம் மட்டும் எண்ணி எண்ணி வாங்குதேல்லா? ரூவா நோட்ட கைதொட்டு கைதொட்டு நக்கி பாக்குதேல்லா?”

நான் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். அதில் எதையாவது தட்டினால் கிழம் ஒன்றும் சொல்வதில்லை. உச்சகட்ட கவனத்துடன் செய்யவேண்டிய வேலை அது என நினைத்திருக்கிறார். நான் அந்த நினைப்பை பேணியும் வந்தேன்.

“வெள்ளைக்காரன் எடுக்குதான்… நமக்கு அதுக்கு வளியிலே” என பாட்டா முனகிக்கொண்டார்.

வருகிற ஆனியில் அவருக்கு வயது எண்பது. எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸ் மளிகை வியாபாரம் நிறுவனத்தின் எட்டு கிளைகள் மாவட்டம் முழுக்க இருந்தன. பாட்டாவின் மகன்களும் பேரன்களும் நடத்தினர். என்னை அவருடைய இளைய மகன் கணேசலிங்கம் தான் இங்கே வேலைக்குச் சேர்த்துவிட்டார். கணக்குகள் பொதுவான அக்கவுண்டுக்கு நேரடியாகவே போகும்படி ஏற்பாடு.

இங்கே பழையகடைக்கு கணேசலிங்கம் வாரம் ஒருமுறைதான் வருவார். பாட்டா தான் அதிகாலை கடை திறப்பது முதல் நள்ளிரவில் பூட்டுவதுவரை எந்நேரமும், ஆண்டில் எல்லா நாளும் இருப்பார். எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆன்ட் சன்ஸ் மளிகையின் இந்த ஆதிக்கடைக்கு ஆண்டில் எல்லா நாளும் வேலைநாளே. தீபாவளி அன்றைக்குக் கூட.

“தீவாளிக்கு மத்தவன் கடைய மூடுவான், அப்ப நமக்கு ஏவாரம் ஆகும்லா?” என்று பாட்டா சொல்வார்.

“அப்ப தீவாளிக்கு முன்னாடி லீவு விடலாம்லா?” என்றேன் ஒருமுறை.

“எவம்லே அவன், வெங்கப்பய வெளங்காப்பயலா இருக்கான்? தீவாளிச்சாமான் வாங்க ஆளுக வருவாகள்லா?”

நான் விடாமல் “அப்ப தீவாளி களிஞ்சு லீவு விடலாமே” என்றேன்.

“நாசமத்துப் போவ. நினைச்சுத்தான் பேசுதியா? ஏலே, தீவாளிக்கு எல்லா சாமானும் செலவாயிரும்லா? அப்ப எங்க போயி மேக்கொண்டு சாமான் வாங்குவான்? ஏவாரம்னா கணக்கு வேணும்லே கணக்கு.”

டீக்கடை அற்புதமுத்து பட்டியலுடன் வந்தான். கடைப்பையன் காமராஜ் சாப்பிடப் போயிருந்தான். கொஞ்சம் மூத்தவரான கடையாள் இன்னாசி முத்து இரண்டு நாட்களாக வரவில்லை. காய்ச்சல் என்றார்கள். அவரைத்தான் காலையில் இருந்தே பாட்டா நினைத்து நினைத்து வசைபாடிக்கொண்டிருந்தார். “அவன் இங்க ஆனைக்க சுண்ணிய தூக்கி சொமந்தான்லா, அலுப்பிலே காய்ச்சல் வந்துபோட்டு. வெளங்காப்பய. வரட்டு, இருக்கு அவனுக்கு.”

“என்னவே, கடையிலே ஆளில்லியா?” என்றார் அற்புத முத்து.

“ஏன் இருக்கப்பட்டது ஆளா தெரியல்லியா? வே, இந்தக்கடையை உம்ம அப்பன் குருசந்தோணி காலம் முதல் ஒத்தைக்கு நடத்தினவனாக்கும் நான். இந்தக்கடைக்கு நான் ஒருத்தன் போரும். பின்னே ரெண்டு ஏழைப்பட்டவனுக சூடுசோறு திங்கட்டுமேன்னு வெலை குடுத்து சம்பளம் போடுதேன்… அவனுக நம்ம சூத்திலே நாட்டுமிளகாயை அரைக்கானுக… நீரு லிஸ்டை எடும்.”

பாட்டா சொன்னதுபோலவே சரசரவென எடுத்து அடுக்கினார். ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறதென்று யோசிக்காமல் தேடாமல் தெரிந்தாலொழிய மளிகை வியாபாரம் செய்ய முடியாது. பாட்டாவுக்கு அதெல்லாம் கையிலேயே இருந்தது. கண் அவருக்கு காகிதத்திலும் கல்லாப்பெட்டியிலும்தான் இருக்கும்.

“நல்ல வெயிலு” என்று அற்புத முத்து சாலையைப் பார்த்துக்கொண்டு சொன்னார். “எட்டடி நடந்தா நட்டந்தலை வெடிக்குது… ஆனா எல்லா சாமானும் இப்பதான் வாங்க முடியும். இந்தா இப்ப மறுக்கா சோலி தொடங்கிரும். வடைக்கு அரைக்கணும், பரோட்டா மாவு பிசையணும். இப்பல்லாம் மூணுமூணரைக்கே அந்திக்கூட்டம் வர தொடங்கிருது.”

“அப்ப எப்ப ரெஸ்ட் எடுக்கிறது?” என்றேன்.

“என்னத்த ரெஸ்டு…. ஓட்டல் வைக்கிறவனுக்கு ரெஸ்டுன்னு ஒண்ணு இல்ல.”

அவர் போனபிறகு பாட்டா என்னிடம் “ஏலே இப்ப சொன்னியே, அதென்ன சொல்லு?”

“என்னது?”

“லே, எந்திரிச்சு வந்து வெட்டிருவேன் பாத்துக்க”

“என்ன பாட்டா சொல்லுதீரு? மனுசனை போட்டு பாடாப்படுத்துதீரே?” என்று நான் பொறுமையிழந்து கூச்சலிட்டேன்.

பாட்டா தணிந்தார். “இப்ப சொன்னேல்லா? ஏலே, இப்ப நீ அற்புதம் பயகிட்டே கேட்டேல்லா? எப்ப எடுப்பேன்னு. அது என்னது? ஏலே, நீ என்ன எடுக்குததப் பத்தி கேட்டே?”

“அவரு என்ன எடுத்தாரு?” அவர் எதையும் எடுத்ததுபோல தெரியவில்லை. “சாமானை எடுத்தாரு… பத்துகிலோ நாட்டுவெல்லம்…”

“சீ அறுதலிமிண்டை மவனே… செருப்பாலே அடிப்பேன்… நீ இப்ப கேட்டேல்லா? மூணுமூணரைக்கு அந்திக்கூட்டம் வந்திரும்னு அவன் சொன்னப்ப?”

“அந்திக்கூட்டம் வந்தா என்ன எடுத்திட்டு வருவானுக? பாட்டா தண்ணி போடுததைச் சொல்லுதேளா?”

“என்னை கொலகாரன் ஆக்காதே கேட்டுக்கோ. ஏலே செறிக்கிமிண்டைமவனே, நீ அவன் என்ன எடுப்பான்னு கேட்டியே? தோசை மாதிரி ஒரு வார்த்தை ”

“தோசையா?”. சாதா தோசை, மசால் தோசை, பிளெயின் தோசை, நெய் ரோஸ்ட்….என் மண்டை மின்னியது. “ஆ! ரெஸ்டு, அவரு எப்ப ரெஸ்டு எடுப்பாருன்னு கேட்டேன்.”

“ஆ, அதுதான்… அதுதான் கேட்டேன். இப்ப மட்டும் நாக்குலே வருதுல்ல? அதைத்தான் வெள்ளைக்காரன் எடுப்பான்.”

“கொன்னு போட்டியளே… பாட்டா பாடாப்படுத்தி போட்டியளே. இதையா இவ்ளவு நேரம் வைச்சு ஊதினிக?”

“ஏலே அதை எடுக்குதது கஷ்டம்லா? அதுக்கு ஒரு ஐவேஜு வேணும்லா?”

“ரெஸ்டு எடுக்கவா? வெளங்கீரும். ஏன் பாட்டா, இந்தாலே துவர்த்தாலே திண்ணையை துடைச்சுக்கிட்டு படுத்தா ரெஸ்டு…”

“ஆமா நீ உலத்தினே, அது நடுவு நீட்டுகது. ஆடுமாடெல்லாம் செய்யுதது. மத்தது வெள்ளைக்காரன் எடுக்குத வித்தை. அதுவேற…”

“அப்ப சாயங்காலம் வீட்டுக்குப்போனா நீரு படுக்க மாட்டீராக்கும்?”

“வீட்டுலே போனா நூறுகூட்டம் சோலி கெடக்குல்லா? ஒண்ணொண்ணா முடிச்சுகிட்டு பத்து பன்னிரண்டு மணிக்கு அந்தாலே சாய்ஞ்சா காலம்பற முதல் பள்ளிமணி அடிக்குறப்ப எந்திருசிருவேன். அது எளுவது எம்பது வருசக்கணக்காக்கும். ஒண்ணாம் பள்ளிமணிக்கு பிறகு உறங்கினவனுக்கு பின்ன மூதேவிதான்லே கூட்டு.”

“அப்டி படுக்கப்பட்டதுதான் ரெஸ்டு.”

“போக்கத்த பேச்சு எங்கிட்ட வேண்டாம் கேட்டியா, அது உறக்கம். நான் சொல்லுதது வேறே.”

காலை நான்கு மணிக்கு அடிக்கும் மாதாகோயில் மணி. நான் அப்போதுதான் ஒன்றுக்கடிக்க எழுவேன். அந்நேரம் ஆறுமுகப்பெருமாள் பாட்டா குளிக்கச் செல்வார். நேராக வந்து அவரே நின்று கடையை திறக்கவைப்பார். சரியாக காலை ஐந்துமணிக்கு நெற்றியில் பட்டை விபூதி, காதில் துளசி இலையுடன் கல்லாப்பெட்டியில் அமர்ந்துவிடுவார். அவருடைய அணுக்கவேலையாள் இன்னாசிமுத்து நாலரைக்கே வந்து பீடி பிடித்தபடி காத்து நிற்பார். நானும் காமராஜும் எட்டு மணிக்குத்தான் வருவோம். அதற்கு ஒவ்வொருநாளும் கிழவர் பாட்டாகப் பாடுவார்.

“பாட்டா அப்ப ரெஸ்டுன்னா என்னான்னு நினைக்குதீக?”

“அதாம்லே, வெள்ளைக்காரன் எடுக்குதானே?”

“நானும் ரெஸ்டு எடுக்குதேன்லா?”

“நீ நொட்டினே… அதுக்கொரு ஐவேஜு வேணும். நீ கையிலே காசில்லாத வெட்டிமுட்டை… நீ என்ன எடுத்தே? தெருவுநாயி மாதிரி சுருண்டு கிடந்தா ஆச்சா?”

“பின்ன?”

“வெள்ளைக்காரன் எடுக்குதான்லா? அது, அதுமாதிரி எடுக்கணும்.”

“எப்டி?”

“அதாக்கும் சொன்னது, அந்த மாதிரி டவுசர் வேணும். குப்பியிலே தண்ணி இல்லேன்னா நுரை வரப்பட்ட சாராயம். வலையூஞ்சாலிலே ஒயிலாட்டு சரிஞ்சு கிடக்கணும். இல்லேன்னா சாய்வுநாக்காலியிலே. பாட்டு இருக்கணும்.”

“செரி, அதுக்கென்ன இப்ப? நாம நினைச்சா ஒரு டவுசர் கிட்டாதோ?”

“டவுசர் மட்டும் இருந்தா ஆச்சா? படுக்கப்பட்ட எடம் தோட்டமா இருக்கணுமே. பின்னாடி நல்ல பங்களா இருக்கணும். அதிலே சடைநாயி இருக்கணும். வேலைக்காரனுக இருக்கணும், துரைச்சானி இருக்கணும்…”

“பெட்டியிலே பூத்த பணம் இருக்கணும்.”

“ஆமா, பின்ன இல்லியா?” என்றார் எம்.ஏ.எம்.ஆறுமுகப்பெருமாள் நாடார் ஆண்ட் சன்ஸின் உரிமையாளரான எம்.ஏ.எம். ஆறுமுகப்பெருமாள் பாட்டா. “சும்மா நீயும் நானும் நினைச்சா முடியுமா? ஏலே, ஆனை சாணி போடுதுன்னு ஆடு முக்கினா நடக்குமா? இல்ல கேக்கேன்.”

நான் புன்னகைத்தபடி கணக்குகளை டைப் அடித்துக்கொண்டிருந்தேன்.

“ஏலே மூஞ்சியிலே என்ன சிரிப்பு? என்ன சிரிப்புங்கேன். உனக்கு என்ன தெரியும்? அந்தக் காலத்திலே நான் வெள்ளைக்காரனைப் பாத்தவன். எங்க வீட்டுக்கு நேர் பின்னாலே திரித்துவப் பொற்றை. அதுக்குமேலே துரையோட பங்களா. சடைநாயி வச்சிருக்கிற அசல் வெள்ளைக்காரன். நான் அவன் இந்த மாதிரி இதை எடுக்குததை பலநாள் பாத்ததுண்டு. அதுக்கு அந்தப்பக்கமாக்கும் பனைமடுவு. எங்க அப்பன் அங்க பனையேறப் போவாரு. நான் அக்கானி சுமந்துட்டு வருவேன். வாற வளியிலே ஒரு நிமிட்டு நின்னு பாப்பேன். என்னமா விளுந்து கெடப்பான்னு நினைக்கே? மகாவிஷ்ணு மாதிரி கெடப்பானே. எரையெடுத்த மலைப்பாம்பு மாதிரில்லா கண்ணு சொக்கிச் சொக்கி அடிக்கும். நீ என்ன வேணுமானாலும் சொல்லு, வெள்ளைக்காரன் எடுத்தாத்தான் அது… அது என்ன சொன்னே?”

“ரெஸ்டு.”

“ஆமா அது… வெள்ளைக்காரன் எடுக்கணும், அது ஒரு ஐசரியமாக்கும்…”

“ஆமா” என்றேன். எனக்கே பொறாமை வந்துவிட்டது. கோவளம் பீச்சில் வெள்ளைக்காரர்கள் தென்னைமர நிழலில் ஜமக்காளம் விரித்து பெரிய வண்ணக்குடையுடன் அரைநிர்வாணமாக படுத்திருப்பார்கள். உரித்த சீனிக்கிழங்கு மாதிரி உடல்கள். கைகளில் எலுமிச்சை வளையம் செருகப்பட்ட ஜின். கூலிங்கிளாஸ்கள், அருகே பெரிய பிளாஸ்கில் ஐஸ். அழகான வெள்ளைக்காரிகள். தொப்புளுக்கு மிகமிக கீழே ஜட்டி விளிம்பு படிந்திருப்பவர்கள்.

“நான் அப்ப நினைப்பேன் நாமளும் ஒருநாள் அதை எடுத்துப்போடணும்னு. அப்பல்லாம் என்ன, அப்பன் பனையேறி வந்தா பழங்கஞ்சிக்கே தட்டுப்பாடு. நாங்க எட்டு பிள்ளைக. எங்கன்னு கஞ்சி ஊத்த? ராத்திரி ஒருநேரம் கிளங்கும் கஞ்சியும் உண்டு. மத்தநேரம்லாம் கண்டதை தின்னுக்கிடணும். ஆனால் சோலி ஒருநேரம் ஒழியாது. ஓடிக்கிட்டே இருக்கணும். எங்கயாவது உக்காந்திருக்கிறத அப்பனோ அம்மையோ பாத்தா அந்தாலே அடிக்க வருவாங்க. ஒரு நேரம் இருந்து ஒருவாய் தண்ணி குடிக்க முடியாது. பனையோடு பனை ஓட்டம். பிறவு எரிக்கதுக்குச் சருகுதேடி ஓட்டம். பிறவு சந்தைக்கு ஓட்டம். திரும்பி வந்து பாத்திரங்களை களுவி வைச்சுகிட்டு அந்தாலே அப்டியே படுத்து உறக்கம்… காலம்பற ஒண்ணாம் மணி அடிக்கப்பட்ட நேரத்திலே எந்திரிச்சு அப்டியே பனங்காட்டுக்கு ஓடணும்…”

“கஷ்டம்தான்”என்றேன். அந்தக் கதைகளெல்லாம் பாட்டா நூறுமுறை சொன்னது

“ஆனா நான் மனசிலே கருதி வைச்சுக்கிட்டேன். ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் நாமளும் இந்தமாதிரி வெள்ளைக்காரன் எடுக்கப்பட்டதை எடுத்துப்போடணும்னு… அதுக்குத்தான் மளிகைக்கடையிலே சோலிக்குச் சேந்தது. ராப்பகல் ஓடினவனுக்கு ராப்பகல் நின்னுட்டிருக்கப்பட்ட வாழ்க்கை. வாங்காத பேச்சும் அடியும் இல்லை. மொள்ளமா சின்ன கடைவைச்சேன். இசக்கியம்மையை கெட்டினப்ப கிட்டின ஸ்ரீதனப் பணத்தை வைச்சு கடையை விருத்தி பண்ணினேன். பாவம் அவளும் மேல போயி இருபது வருசம் திகைஞ்சாச்சு… இந்தா இதுவரை கடை ஓடிட்டிருக்கு.”

“இப்ப எட்டு கடை இருக்குல்லா?”

“ஆமா இருக்கு. ஆனா அது எட்டுபேருக்குல்லா? மக்களும் பேரப்பயக்களும் இருக்கானுகளே…” என்றார் பாட்டா. “ஒருத்தனும் சொல்லுவளி நிக்குறதில்லை. அவனவன் பாடு. இந்தா இந்தக்கடையை நான் இப்பமும் ஒத்தையிலே நிண்ணு நடத்துதேன்.”

“மயிரேபோச்சுன்னு சொல்லிப்போட்டு பேசாம போயி வெள்ளைக்காரன் மாதிரி ரெஸ்டு எடுக்க வேண்டியதுதானே?”

“உனக்க அண்டியிலே ஆமணக்கெண்ணையை வைச்சு திரும்மணும்… ஏலே, கடைமேலே கடன் என்ன இருக்குன்னு நினைக்கே? ஒண்ணுரெண்டுல்ல, ஒம்பது லெச்சம். நாளொண்ணுக்கு அம்பதாயிரம் வித்தாலும் கட்டுமாலே?”

அந்தக் கணக்குக்குள் போனால் நாறக்கெட்டவார்த்தை கேட்கவேண்டியிருக்கும். நான் அடங்கிவிட்டேன். ஒருநாளுக்கு சராசரியாக நான்கு லட்சம் ரூபாய் வியாபாரம் ஆகும் இடம். முப்பதாயிரம் ரூபாய் லாபம் நிற்கும்.

காமராஜ் வந்தான். நாலைந்து பேர் சாமான் வாங்க வந்தனர். பாட்டா பரபரப்பாகிவிட்டார். மூன்றரை மணிக்கு டீ வந்தது.

நாலேகாலுக்கு சாந்தப்பன் சைக்கிளில் வந்து இறங்கி “பாட்டா சங்கதி தெரியுமா?” என்றான்.

“ஏவாரம் நடக்குதுல்லா? சங்கதிகளை நாளைக்குச் சொல்லு” என்றார் பாட்டா.

“பாட்டா, உங்க கடையாளு இன்னாசிமுத்து போய்ட்டான்.”

“ஏலே, எங்க போனான் அவன்? நான் இங்க தேடிட்டிருக்கேன்லா?”

“செத்துப்போயிட்டான். ரெண்டுநாள் காய்ச்சலு இருந்திருக்கு. நேத்து ஆஸ்பத்திரிக்கு போயிருக்கான். காலம்பற போய்ட்டான்.”

பாட்டா கையில் பென்சிலுடன் திகைத்து வாய் திறந்து அசைவிழந்தார்.

நான் “அவன் ஊரு இங்க பக்கமில்லா?” என்றேன்.

“மத்தியாஸ் நகரிலே… பெரிய பள்ளி பக்கத்திலே.”

பாட்டா சட்டென்று “ஏலே கடைய மூடு… நாம கெளம்புவோம்” என்றார்.

“எண்ணைக்காரன் வாற நேரம். காமராஜ் இங்க நிக்கட்டு” என்றேன்.

“எண்ணைக்காரனை வீட்டிலே கொண்டு வைக்கச்சொல்லு. இண்ணைக்கு ஒருநாள் கடையிலே பலகை திறந்திருக்கப்பிடாது” என்றார் பாட்டா “வித்தபணம் கையிலே எம்பிடுடே வரும்?”

“மூணுலெச்சம் பக்கத்திலே.”

“ஒரு அம்பதாயிரம் எடுத்துக்கோ…”

“அவ்ளவு தேவைப்படுமா?”

“எடுத்துக்கோ… அவனுக்க மகனும் பெஞ்சாதியும் உண்டு. அவனுக்க பய படிக்குதான். இன்னும் வேரு உறைக்கல்ல.”

பாட்டா ஐந்தே நிமிடத்தில் கிளம்பிவிட்டார் “எலே ஒரு ஆட்டொ பிடிலே. வாயப்பாத்துட்டு நிக்கான்.”

நான் ஆட்டோ பிடிக்க ஓடினேன். காமராஜ் கடையை மூடினான். பாட்டா வந்து ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.

“குடிகார நாயி… சொன்னா கேக்கமாட்டான். இங்க இருக்கப்பட்ட நேரம் மட்டும் பொத்திக்கிட்டு இருப்பான். ராத்திரியானா ஆளு வேற. இப்ப என்ன ஆச்சு? இல்ல கேக்கேன். இப்ப உனக்க குடும்பம் அந்தோன்னு நிக்குதா இல்லியா? சொல்லுறவன் வயசானவனானா அவன் சொல்லை கேக்கணும். உனக்கெல்லாம் மூத்தவன் சொன்னா ஒரு மாதிரி எளக்காரம்… இப்ப என்னலே ஆச்சு? செத்த மூதி… இப்ப உனக்கு ஆரு இருக்கா?”

ஆட்டோ முழுக்க செத்துப்போன இன்னாசிமுத்துவிடம் பேசிக்கொண்டே வந்தார் பாட்டா. “குடி, வேண்டாம்னு சொல்லல்ல. அப்பப்ப கொஞ்சம்போல மருந்துபோல குடிக்கலாம். ஏலே, கஞ்சியக்கூட ஒருவேளைக்கு நாலுவேளை குடிச்சா ரோகமாக்கும். பின்ன இந்த நாத்த தண்ணியை குடிச்சா குடலு வெளங்குமாலே? நாம சீவிக்குதது நமக்கா? நம்ம பிள்ளைக பூத்து தளிர்த்து வரவேண்டாமா? தங்கம்போலத்த பையன். பாத்தா வாளைக்கண்ணு மாதிரி இருப்பான். இப்பம் எல்லாம் போச்சுல்லா?”

நாங்கள் எளிதில் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டோம். பழைய இஞ்ஞாசியார் கோயிலுக்கு பின்பக்கம் சிறிய ஓட்டு வீடு. அங்கே கோயிலில் சாவுமணி ஒலித்துக் கொண்டிருந்தது. சிறிய கூட்டம்தான். அவர்களின் மொத்தச் சாதிசனமும் அங்கேயே கூடியிருந்தார்கள். அவர்கள் மீன்விற்பவர்கள். மொத்தமே நான்கே தெருக்கள்தான்.

பாட்டா என்னிடம் “அந்தப் பயலை பதமாக் கூப்பிட்டு இந்த பணத்தை அவன் கையிலே குடுத்திரு” என்றார்.

“ஆனா அவன் அளுதிட்டிருக்கானே?”

“ஆமா, உலகம்தெரியாத பய. ஆனால் இப்ப இங்க ஆரையும் நமக்குத் தெரியாது. அதோட அவன் இப்பதான் உலகத்தை தெரிஞ்சுகிடணும்… இதுதான் அதுக்குண்டான நேரம்… எங்க அப்பன் செத்தப்ப என் கையிலே இருந்தது நாப்பது ரூவா. வச்சு சமாளிச்சேன்லா?”

நான் இன்னாசிமுத்துவின் மகன் மைக்கேல்ராஜை தேடிப்போனேன். அவன் சடலம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அப்பால் தனியாக நின்றிருந்தான். இன்னாசி முகம் கறுத்து சுருங்கி பாயில் கிடந்தார். அவன் அருகே மனைவி தலைவிரிக்கோலமாக அமர்ந்து சன்னமாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்.

நான் மைக்கேல் அருகே சென்று நின்றேன். அவன் என்னை பார்த்தான்.

“பாட்டா வந்திருக்காரு” என்றேன்.

“பாத்தேன்” என்றான்..

“அம்பதாயிரம் ரூவா பணம் குடுத்தாரு… இந்தா இருக்கு.”

“அவ்ளவு பணம் வேண்டியிருக்காதே”

“குடுத்தாரு.”

“என்ன செய்யன்னு சொன்னாரா?”

“சொல்லல்ல. அது சொல்லமாட்டாரு. ஆனா நீ பக்குவமா செலவளிக்கியான்னு பைசா பைசாவா பிறவு கணக்கு கேப்பாரு… பாத்து செய்யி” என்றேன். “முடிஞ்சபிறகு பாட்டாவை வந்து பாரு. நமக்கு வேற ஆரு இருக்கா?”

அவன் கண்கள் கலங்கி வழிய தலைகுனிந்தான்.

“இந்தாலே.”

அவன் பணத்தை வாங்கிக்கொண்டான். நான் திரும்பிச் சென்றபோது பாட்டா இயல்பாக ஆகி, இன்னொரு கிழவருடன் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்.

“பரமண்டலத்திலே இருக்கப்பட்டது ஆருண்ணு இப்பம் நமக்கு தெரியாது. போனவன் பாத்துட்டு வந்து சொல்லப்போறதில்லை. அங்க நடுவிலே விஸ்ணு இந்தாலே சிவன். பக்கத்திலே முத்தாலம்மையும் மாதாவும். முருகனும் ஏசுவும் அருகிலே நிக்காங்க. அதாக்கும் நம்ம கணக்கு.”

முருகனும் ஏசுவும் இளைஞர்கள் என்று பாட்டா நினைப்பது தெரிந்தது. இளைஞர்கள் பெரியவர்களுக்குச் சமானமாக அமர்வது அவருக்குப் பிடிக்காது.

ஏழுமணிக்கு சர்ச்சில் மாஸ். ஆகவே ஐந்தரைக்கே எடுத்துவிட்டார்கள். இன்னாசியின் மனைவி மட்டும்தான் கொஞ்சம் ஓசையிட்டு அழுதாள். பையன் இறுகிய முகத்துடன் வந்தான்.

சர்ச்சுக்கு பின்னாலேயே செமித்தேரி. மிகப்பழைமையான செமித்தேரி. பெட்டியில் இன்னாசியை கொண்டுபோனார்கள். நாங்கள் பின்னால் சென்றோம். ஒரு ஃபாதர் அங்கியுடன் முன்னால் சென்றார்.

அங்கே பல வெள்ளைக்காரர்களுக்கு கல்லறை இருப்பதைப் பார்த்தேன். பாட்டாவிடம் சொல்லலாம், சந்தோஷப்படுவார் என நினைத்துக்கொண்டேன்.

கிறிஸ்தவச் சடங்குகள் சீக்கிரமாக முடிந்துவிடும். அவர்களுக்கு பேச்சு கொஞ்சம் கூடுதல் என்று பாட்டா சொல்வார். கல்யாணம் சாவு எல்லாவற்றுக்குமே பேச்சுதான். “நமக்கு நடிப்பு கூடுதல்” என்று நான் ஒருமுறை அவரிடம் சொன்னேன். பாட்டா சரியாக கவனிக்காமல் “ஆமா” என்று ஏற்றுக்கொண்டார். எனக்கு சினிமாக்களில் வசனம் பிடிக்காது, நடிப்பு தேவை. நான் ரஜினிகாந்த் ரசிகன்.

சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது பாட்டா அந்தப் பெட்டிமேல் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டினார். நான் அதை படித்துக்கொள்ளவேண்டும். பிறகு கேட்பார். அதன்பின் சிலுவைகளிலும் அதுவே எழுதப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

இன்னாசியின் குழியில் நானும் பாட்டாவும் ஆளுக்கொரு கைப்பிடி மண் போட்டோம். பாட்டா நிதானமாக இருந்தார். சாவு வீடுகளில் பொதுவாக அவர் கலங்குவதில்லை.

திரும்பும்போது பாட்டா ஞாபகமாக “அதென்னதுலே எளுதியிருந்தது?” என்றார்.

“ஆர்.ஐ.பி” என்றேன்.

“அப்டீன்னா?”

“ரெஸ்ட் இன் பீஸ்… அமைதியிலே ஓய்வுகொள்ளுங்கன்னு அர்த்தம்.”

“என்ன சொன்னே?” என்றார் பாட்டா, அவர் பதற்றமாகி விட்டது ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

“ரெஸ்ட் இன் பீஸ்… அமைதியிலே ஓய்வு…”

“ரெஸ்டா?” என்று அவர் உரக்கக் கேட்டார்.

“ஆமா.”

“ரெஸ்டுன்னா போட்டிருக்கான்?”

“ஆமா.”

“ஏலே அப்டீன்னா ரெஸ்டுன்னாக்க சாவுன்னா அர்த்தம்?”

“அப்டியும் உண்டு” என்றேன்.

சிலகணங்களுக்குப்பின் “ஆமா, அது உள்ளதாக்கும். அப்டித்தான்” என்றார் பாட்டா.

“ரெஸ்டுன்னா மிச்சம்னும் அர்த்தம் உண்டு.”

“அதுவும் செரிதான்” என்றார் பாட்டா. தனக்குத்தானே “ரெஸ்டு!” என்று சொல்லிக்கொண்டார்.

“ஆனா ரெஸ்டு எடுக்கதுன்னா சாவுன்னு அர்த்தமில்லை” என்றேன்.

“அதுக்கும் அதுதான் அர்த்தம்… கொஞ்சமாட்டு சாவுறது, அதாக்கும் ரெஸ்டு” என்றார் பாட்டா.

நான் பேசாமல் ஆட்டோவில் அமர்ந்திருந்தேன். பாட்டா மெல்ல தனக்குத்தானே “ரெஸ்டு!” என்றார். பிறகு என்னிடம் திரும்பி “அது நமக்கு செரியாவாது கேட்டியாலே” என்றார்.

***

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைபிழைசுட்டுபவர்கள்
அடுத்த கட்டுரைஇருபத்தைந்து கதைகள்