எரிசிதை, நகை- கடிதங்கள்

எரிசிதை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

எரிசிதை கதையை வாசித்து முடித்தபோது ஒருவகையான நிறைவும் ஏக்கமும் வந்து நெஞ்சை அழுத்தியது. கடந்தகாலத்தில் வாழ்ந்த அனுபவம். அதேசமயம் மகிழ்ச்சியடைவதா நெகிழ்வதா கோபப்படுவதா? ஒரு பெண் சிதையேறுகிறாள். அது கொந்தளிக்கவைக்கிறது. ஆனால் அது அவள் ஓர் அன்னை என்பதன் வெற்றி. அது நெகிழ்ச்சியை அளிக்கிறது. எதுவுமே சொல்லமுடியவில்லை.

சென்றகாலத்தில் மிகமிக ஒடுக்கப்பட்ட மக்களில் அரசியரும் வருவார்கள் என நினைக்கிறேன். தாசிகளுக்காவது ஓர் அடிப்படை உரிமை உண்டு. இவர்களுக்கு அதுவும்கூட இல்லை. வெறும் அடையாளங்கள். அதற்காக கூண்டுக்குள் வளர்க்கப்படும் உயிர்கள்

சிவக்குமார் எம்

வணக்கம் ஜெ

‘எரிசிதை’ ஒருவித  நிலைகுலைவையும் நெகிழ்வையும் ஒருசேர அளித்த கதை. முக்கியமாக வரலாறு என்பது எவ்வளவு சிக்கலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது ? மேலும் வரலாறை இவ்வாறு புனைவாக எழுதும்போது கிட்டத்தட்ட ஒரு முழு சித்திரத்தை அளிக்கவே அது முயல்கிறது. வரலாறு குறித்தோ வழக்கை குறித்தோ நாம் எவ்வித தீர்மானத்துக்கும் வந்துவிட முடியாத தன்மைக்கு அது கொண்டு சென்றுவிடுகிறது. நாயக்க மன்னர்கள், ஆட்சிசூழல், மங்கம்மாள், தாசிகள் உலகம் என அது விரிக்கும் உலகம் ஒரு வரலாற்று நூலை வாசித்த நிறைவைத் தருகிறது.

குழந்தை இறந்து பிறந்தாலும் சின்ன ராணி சிதையேறவேண்டும் என்ற நாகலட்சுமியின் கனவு, குழந்தை பிறந்து ராஜாவாக ஆக தான் சிதையேறவேண்டும் என்ற ராணியின் கனவு, குழந்தையைக் கொன்று விட்டால் தன் நாட்டுக்குச் சென்று அமைதியாக வாழலாம் என்ற கணக்கு, இந்த மூன்று குறித்தும் ராணியின் மனப்போராட்டம். குழந்தையைக் கொன்றுவிட்டு பின்பு தான் இருந்தாலும் இறந்தாலும் அதன் பழிச்சொல் தன் மீது விழவே செய்யும். அதிலிருந்து தப்ப முடியாது. அதற்கு இறந்து புகழடைவதே மேல் என்ற முடிவுக்கு வருகிறாள். சிதையேறுவது எளிய விஷயமல்ல. அதற்கு வலுவான பெருமிதங்களோ, சீற்றமோ நியாயங்களாக அமைய வேண்டும். சின்ன ராணி அந்த நியாயங்களை அமைத்துக் கொண்டாள். என் மகன் பிறந்து பெரிய நாயக்கர் மாதிரி பெரிய ராஜாவாக வேண்டும்; கையில் செங்கோல் பிடித்து, திமிரு பிடித்த மங்கம்மாளுக்கு ஆம்பளைன்னா என்னன்னு காட்டுவான்… என்ற விசையை உருவாக்கிக்  கொண்டாள்.

சதிதேவியாகி ஏழுதலைமுறையை ஆழிப்பாள் அல்லது  ஏழுதலைமுறையை காப்பாள்.

விவேக் ராஜ்

நகை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நகை ஒரு விசித்திரமான கதை. சட்டென்று நாயக்கர் காலத்திலிருந்து நிகழ்காலத்தின் உச்சிக்கு தாவுவது ஒரு வகையான டிரெப்பீஸ் விளையாட்டு போலிருந்தது. இந்த யதார்த்தமும் நாம் காண்பதுதான். கிளாஸில் ஆசிரியர்கள் போர்ன் நடிகைகளைப்பற்றிச் சொல்கிறார்கள். மாணவிகள் சிரிக்கிறார்கள்.

அந்தச் சூழலில் உள்ள ஆபாசம்தான் இந்தக்கதை. திமிர் ஆணவம் ஏகத்தாளம். அதன்முன் காலில் விழச்செய்யும் கேவலம். அதைவிட போர்ன் ஒன்றும் ஆபாசமில்லை என்று தோன்றுகிறது. இந்த ஆபாசவாதிகள் உருவாக்கிய ஆபாச உலகில் சிக்கிக்கொண்டால் பெண் கீழ்மை அடைவாளா என்ன ?அவள் வென்று செல்லமுடியும். வெற்றிச்சிரிப்பு சிரிக்கமுடியும்

அர்விந்த்குமார்

அன்புள்ள ஜெ,

ஷீலா ஒர்டேகாவின் சிரிப்பை இந்தக்கதையுடன் இணைத்துப் பார்த்தேன். போர்ன் நடிகையின் சிரிப்பு என்று எடுத்துக்கொள்ளமுடியவில்லை. அது ஒருவகையான திராவிட முகம். கதையிலேயே ஆட்டோகிராஃப் மல்லிகாவுடன் ஒப்பீடு உள்ளது. அந்த வெற்றிச்சிரிப்பும் பலமான கைகுலுக்கலும் அந்த கல்யாணமண்டபத்தில் நிகழும் அற்பமான ஆணவவெளிப்பாட்டுக்கு நேர் எதிரானவை. நேர்கொண்ட பார்வையும் சிரிப்பும் கொண்ட கதாபாத்திரம்

ஆச்சரியமென்னவென்றால் குமிழிகள் கதையும் இந்தக்கதையும் ஒரே புள்ளியில் குவிகின்றன என்பதுதான். பெண்ணின் வெற்றி என்பது பெண்ணைப்பற்றி ஆண் உருவாக்கும் பிம்பங்களில் இருந்து முழுமையாக தாண்டிச்செல்வதில் உள்ளது என்று சொல்லும் கதை இது

எம்

முந்தைய கட்டுரைகேளி, குமிழிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇ.பா- ஓர் உரையாடல்