இமையம், திராவிட எழுத்து – கடிதம்

இமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்

அன்புள்ள ஜெ

நான் இமையம் பற்றி எழுதியிருந்த கடிதத்தை ஒட்டிய சில விவாதங்களைக் கண்டேன். வழக்கம்போல எல்லாவற்றையும் வசதிப்படி திரித்து பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். எந்த நிலையிலும் உண்மையான பிரச்சினைகளை சந்திக்கவே மாட்டோம், உண்மையை பேசவே மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் கூட்டம் இது.

நான் எழுதியிருந்ததை ஒட்டிய சில விளக்கங்கள். நான் திராவிட இயக்கம் சார்ந்தோ அல்லது வேறு இயக்கங்கள் சார்ந்தோ எழுத்தாளர்கள் எழுதக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கலைஞர் மு.கருணாநிதி அவர்களே நல்ல எழுத்தாளர், ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச்சிங்கம் இரண்டும் நல்ல எழுத்துக்கள்தான் என்றுதான் நான் சொல்கிறேன்.

இமையம் தன் எழுத்துக்களை கலைஞருக்கோ அல்லது திராவிட இயக்க தலைவர்களுக்கோ சமர்ப்பித்திருப்பது தப்பு என்று சொல்லவில்லை. அது அவருடைய உரிமை, அதை எவரும் மறுக்கமுடியாது என்றுதான் சொல்கிறேன்.

இமையம் சுந்தர ராமசாமிக்குச் சமர்ப்பித்திருக்கவேண்டும் என்றோ அவர்பெயரைச் சொல்லவேண்டும் என்றோ சொல்லவில்லை. அதுவும் அவருடைய இன்றைய நிலைபாடு. அதில் நாம் என்ன சொல்லமுடியும்?

இப்படியெல்லாம் திரித்துத்தான் இந்த விவாதங்களை எதிர்கொள்ளவேண்டுமா என்று யோசிக்கிறேன். வேறு எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள் இதுவரை என்ற கேள்விதான் எழுகிறது.

நான் சொன்னது இதுதான். இமையம் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளவில்லை. தன் தனிப்பட்ட அரசியல் ஈடுபாடு திராவிட இயக்கம் சார்ந்தது என்றுதான் சொல்லிவந்தார். அதுவேறு இதுவேறு என்று அவரே மேடையில் சொன்னதை நானே கேட்டிருக்கிறேன்.இலக்கியத்திலே அரசியல் பார்க்கவேண்டாம் என்றே அவர் சொன்னார்.

அதேபோல அவரை விமர்சித்தவர்கள் அவரை திராவிட இயக்க எழுத்தாளர் என்று பார்க்கவில்லை. தலித் இயக்கத்தை பிளக்க நினைப்பவர், பிராமணிய சக்திகளின் எழுத்தாளர் என்றுதான் சொன்னார்கள். திராவிட இயக்க எழுத்தாளர்கள் விமர்சகர்கள் எல்லாம் அப்படித்தான் சொன்னார்கள்.

இன்றைக்கு எதுவுமே மாறவில்லை. அவர் திராவிட இயக்க எழுத்தாளர் ஆகிவிட்டார். அவர் என்றைக்குமே திராவிட இயக்க எழுத்தாளர்தான் என்கிறார்கள். அப்படியென்றால் நேற்று ஏன் அவரை அப்படிக் கடுமையாகத் திட்டினார்கள்?

இமையத்தின் எழுத்தில் க்ரியா ராமகிருஷ்ணன் மதுரை சிவராமன் ஆகியோர் செய்த பங்களிப்பை ஆரம்பகால எழுத்துக்களுடன் இன்றைய எழுத்துக்களை ஒப்பிட்டால் தெரியும். அவர்கள் இல்லையேல் இமையம் இந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கமுடியாது. அப்படியென்றால் திராவிட இயக்க எழுத்தை வளர்த்து சாகித்ய அக்காதமி விருதுவரை கொண்டுசென்ற க்ரியா ராமகிருஷ்ணன், மதுரை சிவராமன், சுந்தர ராமசாமி ஆகியோரை திராவிட இயக்க ஆதரவாளர்கள் பாராட்டவேண்டாமா? இமையத்தைக் கண்டுபிடிக்கவோ வளர்க்கவோ திராவிட இயக்கம் ஒன்றுமே செய்யவில்லை. அப்படியென்றால் க்ரியா குழு செய்தது எவ்வளவு பெரிய கொடை. அதை ஏன் மறுக்கிறீர்கள்?

இமையம் மக்களின் வாழ்க்கையை எழுதினார், ஆகவே அவர் திராவிட இயக்க எழுத்தாளர்தான் என ஒரு கோஷ்டி சுற்றுகிறது. தமிழில் எல்லா நவீன எழுத்தாளர்களும் மக்கள் வாழ்க்கையைத்தான் எழுதினார்கள். பூமணி எழுதவில்லையா? சொ.தர்மன் எழுதவில்லையா? இமையம் எழுதிய அந்த எழுத்தைத்தானே பிராமணர்களால் உருவாக்கப்பட்ட எழுத்து என்று தூற்றினீர்கள்? பிராமணர்கள் மக்களின் வாழ்க்கையை எழுதவைத்து, அச்சிட்டு, வெளியிட்டு உலகம் முழுக்க கொண்டுசென்றார்கள் என்று ஒத்துக்கொள்ளலாமே?

ஒருவர் ஓர் இயக்கத்தின் எழுத்தாளர் என்று எப்படிச் சொல்வது? அவர் அந்த இயக்கத்தின் கலாச்சார அமைப்புக்கள் வழியாக உருவாகி வந்திருக்கவேண்டும். அவர்களின் முகமாக நின்று பேசியிருக்கவேண்டும். அவருடைய எழுத்தில் அக்கொள்கைகள் நேரடியாகவோ உள்ளுறையாகவோ இருக்கவேண்டும். அந்த கோணத்திலே பார்த்தால் சு.வெங்கடேசன் மார்க்சிய எழுத்தாளர். பாரதிதாசன், கலைஞர், எஸ்.எஸ்.தென்னரசு போன்றவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள். ஒருவர் ஒரு கட்டத்தில் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர், மார்க்சிய எழுத்தாளர் என்று அறிவித்துக்கொண்டால் வாசகர்களும் வரலாற்றாசிரியர்களும் அப்படி எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.

இமையம் அப்படி வந்தவர் அல்ல. அவர் ஓர் எழுத்தாளராக வந்ததும் நீண்டகாலம் எழுதியதும் க்ரியா- சுரா குழுவின் ஒரு முகமாகத்தான். அவர்களின் பின்புலத்தில்தான் அவர் நின்றார். இன்றைக்கு அவருக்கு திமுக சார்பு இருக்கிறது என்று அவர் சொன்னதுமே அவர் திராவிட இயக்க எழுத்தாளர் ஆக மாறிவிடுவதில்லை. அப்படிப் பார்த்தால் கண்ணதாசன், சு.சமுத்திரம், வைரமுத்து, அப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன் எல்லாருமே கலைஞருக்கு நெருக்கமானவர்கள்தான். அவர்களை எல்லாம் திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிவிடலாமே.

திராவிட இயக்க எழுத்தாளர்களில் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் படைப்பாளி பாரதிதாசன். அவர்தான் தலைசிறந்தவர். அவருடன் ஒப்பிட்டாலே தெரியும் ஏன் இமையம் அப்படி சொல்லப்பட முடியாதவர் என்று. இது இலக்கியவாசகன் எழுத்தாளனின் எழுத்து செயல்பாடு ஆகியவற்றைக்கொண்டு முடிவெடுக்கவேண்டியதே ஒழிய ஒருநாள் காலையில் எழுத்தாளன் சொன்னான் என்றால் உடனே மாற்றிக்கொள்ள முடியாது. மாறவும் மாறாது.

ஆர். சங்கரநாராயணன்   

முந்தைய கட்டுரைநகை, எரிசிதை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிற்றெறும்பு [ சிறுகதை]