இருளில், குமிழிகள்- கடிதங்கள்

இருளில் [சிறுகதை]

இருளில் கதை ஒரு அற்புதம்.ஒவ்வொருவருக்கும் இப்படியான ஏதோ ஒரு அலைதல் இருக்கிறது.நான் அம்மாவை வெகுகாலம் இப்படி தேடிக் கொண்டே இருந்தேன் மீண்டு வருவாள் என.அதை நிறுத்திக் கொண்ட பின்னரே உலகம் சற்று புரிந்தது

லக்ஷ்மி மணிவண்ணன்

அன்புள்ள ஜெ

இருளில் கதையை ஒரு ஃபேண்டசியாகவே பார்க்க முடிந்தது. ஆனால் இதைப்போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நான் என் 13 வயதில் அப்பாவின் அடி தாங்கமுடியாமல் ஓடிப்போனேன். திருவனந்தபுரத்தில் ரயில்நிலையத்தில் அமர்ந்திருந்தேன். இரவுநேரம். பசி தாங்கமுடியாமல் பலமுறை குழாயில் நீர் குடித்தேன். பசிக்களைப்பில் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் என் சட்டைப்பையில் நாற்பது ரூபாய் இருந்தது. யார் வைத்தது என்றே தெரியாது. நான் அந்தப்பணத்தால் சாப்பிட்டேன். கொல்லத்தில் என் தாய்மாமா வீட்டுக்குப் போனேன். அங்கே அவருடைய ஓட்டலில் வேலைபார்த்தேன்

ஆனால் அந்த பணம் வைத்தது எவர் என்று இன்றைக்கு வரை தெரியாது. இந்த நாள் வரை அந்த முகத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன். பலவகைகளில் கற்பனைசெய்துகொள்வதுமுண்டு. வாழ்க்கையிலே முடிவில்லாத மர்மங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் தேடிப்போகவே முடியாது. அன்றைய அந்த நிகழ்ச்சி எனக்கு உலகத்தைப்பற்றிய பார்வையையே மாற்றிவிட்டது

கிருஷ்ணசந்திரன்

 

குமிழிகள் [சிறுகதை]

வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன்,

 

எங்களுடைய சுக்கிரி இலக்கிய உரையாடல் குழுவில் இந்த குமிழிகள் கதையை குறித்த விவாதம் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு நீண்டு கிடந்தது. இந்தக் கதை குறித்து எத்தனையோ கடிதங்கள் வெளியான பின்பும் கூட பேசுவதற்கு ஏதோ இன்னும் கொஞ்சம் என ஏதாவது இருந்து கொண்டுதான் இருக்கிறது. சுக்கிரி போன்ற காத்திரமான ஒரு இலக்கிய உரையாடல் குழுவில் இணைந்திருப்பது என்பதே தன்னளவில் வாசகனுக்கு பல வாசிப்பு தளங்களை திறப்பது. இந்தக் குழு பல எமகாதக, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்க்கும் இலக்கிய வாசகர்களை உறுப்பினர்களாக கொண்டு இலக்கிய விவாதத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

 

எங்கள் விவாதங்களில் போது என்னுடைய தரப்பாக சிலவற்றை முன்வைத்து இருந்தேன். அவற்றைத் தொகுத்துக் கொள்ள இந்த கடிதத்தில் முயன்றிருக்கிறேன்.

 

  1. ஜெயமோகன் அவர்கள் கடைசியில் எதிர்காலத்தில் எல்லாருக்கும் Album மற்றும் இணையவெளி நீலப் படங்கள் மற்றும் virtual augmentation மட்டுமே கதி என தீர்ப்பெழுதிவிட்டார். பாவம் மானுடம் என்ன செய்யப் போகிறதோ எதிர்காலத்தில்.

 

  1. லிலி யாருடைய அனுமதிக்கவும் காத்திருப்பதாக கதையில் தெரியவில்லை. எதைச் செய்தேனும் அவள் விரும்பியதை அடைபவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

கதையில் அவளுடைய பொருளாதார சுதந்திரமும். தான் விரும்பியதை அடைந்தே தீரும் தீவிர ஆளுமையும் தெளிவாகவே கட்டப்பட்டுள்ளது.

அவள் ஒன்றும் சுதந்திரத்திற்காக ஏங்கிக் கொண்டு இருப்பவள் அல்ல அதை எடுத்துக் கொள்பவள். ஏற்கனவே எடுத்தும் கொண்டவள். இந்தப் பின்புலத்தில்தான் கதை உண்மையில் என்ன சொல்ல வருகிறது என பார்க்க வேண்டும்.

 

  1. லிலி ஒன்றும் வெற்றி கதையின் நாயகி அல்ல

அதே போல இந்த கதையின் நாயகன் ஒரு கோப்பை காபி நாயகன் போன்றவனும் அல்ல. இரண்டு பேருமே ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான் இந்த கதையின் அழகு. ஆணியம் பெண்ணியம் என்பதைவிட நாம் எதிர்கொள்ளப் போகும் உணர்ச்சி சிக்கல்களை உணர்வு போராட்டங்களை முன் உரைப்பதாகவே இந்தக் கதையை நான் காண்கிறேன்.

 

  1. எந்த விதத்திலும் லிலியோடு சாமினால் கடைசிவரை தான் எண்ணியதை எண்ணியபடி தெளிவாக உரையாடவே முடியவில்லை. ஒருவனை ஆணாதிக்கவாதி என்று முடிவு கட்டி விட்ட பெண்ணிடம் அவன் என்ன சொன்னாலும் எடுபடுவதே இல்லை. பாவம் சாம் அவன் உண்மையில் ஆணாதிக்கவாதி அல்ல. உணர்வுப்பூர்வமனவன் அதனாலேயே பேசத்தினறுபவன். இதைப் போலவே ஒரு வகைப்பட்ட முன் நிலைப்பாட்டை எடுத்து விட்ட ஆண்களிடமும் பெண்களால் ஆக்கப்பூர்வ உரையாடலை நிகழ்த்த முடிவதே இல்லை.

 

  1. இயற்கையே எதிர் பாலினத்தை ஈர்க்கும் வண்ணம் தான் பரிணமித்திருக்கிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு இதை நேர்மையாக புரிந்துகொண்டு கடந்து இணைந்து வாழ முயல்வதே அறிவுப்பூர்வமானது. ஆணும் பெண்ணும் தன்னையும் தன் சிறப்பியல்புகளையும் தன் போதாமைகளையும் அறிந்திருப்பது அமைதியான வாழ்வுக்கு உதவும்.

 

  1. துறவியே ஆனாலும் தான் என்கின்ற அகந்தையும் உடல் உணர்வும் உள்ளவரை பிரகிருதியும் இயற்கையும் முக்குணங்களும் அவரை மாயையில் அழுத்தியே வைக்கும். மாயை கடந்தவர் தன்னை துறவி என்று கூட முன்வைப்பதில்லை. அவர் எல்லா அடையாளங்களையும் கடந்துவிட்ட வராகிறார். துறவு என்பது ஒரு பயிற்சி நிலைதான். ஞானமே அதன் உச்சம். ஞானம் எல்லா அடையாளங்களையும் கடந்தது.

 

மனிதனுக்கு தன் உணர்வும் உடல் உணர்வும் உள்ளவரை மனிதர்கள் தங்களுடைய பயாலஜிக்கல் இயற்கையை கடத்தல் சாத்தியமே இல்லை. அது அவர்களின் மீது உருவாக்கும் பாதிப்புகளை மிக லாவகமாக கடக்கின்ற கையாளுகின்ற தகைமையை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கடந்து விட்டார்கள் என்று ஒருபோதும் கூற முடியாது. இது எல்லாத் துறையிலும் உள்ள ஆண் பெண் இருபாலருக்கு

ம் பொதுவானது. பூரண ஞான நிலையை எழுதுவதற்கு முன்பாக தன்னுடைய உயிரியல் இயல்புகளை துறந்து விட்டோம் என்று யாராவது கூறினால் அதை ஏற்றுக் கொள்வது அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் எவருக்கும் மிகவும் கடினம்.

 

இந்தக் கதைகள் ஒருவிதமான அகவய நோக்கு கொண்டவைகளாக உள்ளதாக தோன்றுகிறது. மேலோட்டமாக படிக்தால், தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அடையாளப்படுத்திக் கொண்டு இந்தக் கதையை வாசித்தால், அகவய புரிதல்களை உள்முகத் திறப்புகளை நாம் தவற விட்டுவிடுகிறோம் என்பதே என் புரிதல்.

 

இந்த சிறுகதை தன்னளவில் ஒரு முழுமை தரிசனமாக, ஒரு காட்சி சிறப்பாக, வாழ்வின் ஒரு கணத்தை, நவீன வாழ்க்கைப் போக்கை  படம் பிடிப்பதாக இருந்தபோதும், ஒரு போதும் எளிதில் தீர்த்துவிட முடியாத கட்டற்ற விவாதங்களை உருவாக்குகிறது.

 

மிக்க நன்றி ஜெயமோகன்.

 

நெஞ்சம் நிறை அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

 

அன்புள்ள ஜெ.,

எத்தனை கதைகள்? எழுதித் தீராதவை. ஆச்சரியம் எனக்கு என்னவென்றால் கதாபாத்திரங்களுக்கு நீங்கள் போடும் பெயர்கள். இடம்,காலம்,சாதி என்று எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நீங்கள் போடும் பெயர்கள் ஒரு கதையில் கூட பொருத்தமில்லாமல் இல்லை, திரும்ப வருவதும் இல்லை. வெண்முரசில் கூட நூறு கௌரவர்கள் பெயர்களும், அவர்கள் மனைவிமார் பெயர்களும் கூடச் சொல்கிறீர்கள். குதிரைகள், புத்தகங்கள், மலைகள், மற்றும் எத்தனை ஆயிரம் உப கதாபாத்திரங்கள்? இத்தனை பெயர்களை எப்படி உண்டாக்குகிறீர்கள்?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 

 

 

முந்தைய கட்டுரைஆமென்பது, நகை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிசை, தீற்றல்- கடிதங்கள்