நகை, எரிசிதை – கடிதங்கள்

நகை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நகை கதையை மிக அன்றாடத்தன்மை கொண்ட நிகழ்வுகள் வழியாக எழுதியிருக்கிறீர்கள். அதிலுள்ள முதல் யதார்த்தம் இன்று போர்ன் கலாச்சாரம் நம் வாழ்க்கையின் அன்றாடங்களில் ஒன்றாக ஆகிவிட்டது. அதிலும் ஜியோ வந்தபின் அது ஒரு சர்வசாதாரணமான விஷயம். இந்த அளவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நாடாக இந்தியா என்றைக்குமே இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பேச்சில் போர்ன் சார்ந்த உதாரணங்கள் வருவதும், குடும்பங்களிலேயே பேசிக்கொள்வதும்கூட சாதாரணமாக ஆகிவிட்டது. என் காலேஜ் படிக்கும் மகன் சொன்னான். ’அப்பா நம்ம வீட்டுமுன்னாடி ரெண்டு நாய்கள் டாகி பொஸிஷனிலே நின்னுண்டிருக்கு’ என்ன சொல்ல?

இந்த வாழ்க்கைச்சூழலில் பெண்ணின் இடம் என்னவாக ஆகிறது? இது பெண்ணை மேலும் மேலும் உடலாக சுருக்கி ஆபாசப்படுத்துகிறதா? இதுதான் கதை உருவாக்கும் கேள்வி. வலுவான வெற்றிகொள்ளும் பெண்ணுக்கு இதெல்லாம் விஷயமே அல்ல என்று சொல்லி முடிகிறது கதை. அந்த வலுவான கைகுலுக்கல் ஒரு பெரிய அடையாளம். அவன் அந்த பெண்ணை போர்ன் நடிகையாக பார்க்கிறான். ஆனால் அந்த கைகுலுக்கல் ஒரே கணத்தில் அவனை மாற்றிவிடுகிறது. அவள் அவனுக்கு ஒரு தலைவியாக தெரிய ஆரம்பிக்கிறாள். கதை சொல்லும் தீர்வு அல்ல இது. கதை சுட்டிக்காட்டும் நடைமுறை என்றே நினைக்கிறேன்

ஆனந்த்

 

அன்புள்ள ஜெ

நகை கதையின் தலைப்பிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. நகை எது? அவளுடைய நகைப்புதான். அவள் உடலை எப்படியெல்லாம் சுருக்கிச் சிறுமைப்படுத்திச் சதையாக ஆக்கினாலும் அவளுடைய வெற்றிச்சிரிப்பு அவளுடைய நகைதான்.

கதையில் அவளைச் சுற்றி பிற வெற்றிபெற்ற மனிதர்களின் மேட்டிமைபாவனை அலட்சியம் சில்லறைத்தனம் நிறைந்திருக்கிறது. அவள் அந்த சிறுமை தீண்டாதவளாக நிமிர்ந்து நிற்கிறாள். அவளுடைய சிரிப்பு அவர்களை ஏற்கனவே அவள் கடந்துவிட்டதற்கான ஆதாரம். பெருந்தன்மையும் அன்பும் கொண்டவளாக இருக்கிறாள். அவள் ஆணுக்கு எதிரி அல்ல. ஆணை ஜெயிப்பவளோ பழிவாங்குபவளோ அல்ல, அவள் ஆணுக்கு மேலே சென்றுவிட்ட பெண்

அவனுடைய சிறுமை ஒன்று அங்கே வெளிப்படுகிறது. அவளை போர்ன் நடிகையுடன் வேண்டுமென்றெ ஒப்பிடுகிறான். அவள் சீற்றமடைவாள் என நினைக்கிறான். அவள் அதற்கெல்லாம் அப்பால் என்று தெரிந்ததும் மண்டியிட்டுவிடுகிறான்

 

விஜயகுமார்

எரிசிதை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

எரிசிதை கதை வெவ்வேறுவகையில் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நா. பார்த்தசாரதி ராணி மங்கம்மாள் கதையில் எழுதியிருக்கிறார். ஆனால் அதிலெல்லாம் சின்னமுத்தம்மாள் காதலினால் உடன்கட்டை ஏறினதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக்கதை இன்னொரு சித்திரத்தை அளிக்கிறது. அன்றைய அரசியலில் பெண்ணுக்கு இருக்கும் இடம் என்பது சின்னமுத்தம்மாளுடையதுதான். ராணி மங்கம்மாள் விதிவிலக்கு. ஆனால் அவளும் கடைசியில் சின்னமுத்தம்மாளைப்போலவே சிறையில் அடைபட்டு பட்டினிபோடப்பட்டு கொல்லப்பட்டாள்.

சின்னமுத்தம்மாளின் சீற்றம் இக்கதையில் உள்ளது. தன் மகன் வந்து மங்கம்மாளை பழிவாங்கவேண்டும் என்று சொல்கிறாள். அதுவே நடந்தது. சின்னமுத்தம்மாளின் மகன், மங்கம்மாளின் பேரன் தான் மங்கம்மாளை சிறையிலடைத்துக் கொன்றவன். எங்கிருந்து எங்கே தொடுப்புகளை எடுத்து பின்னியிருக்கிறீர்கள் என்பதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன் இந்தக்கதையில்.

அரச. முத்துக்குமரன்

 

அன்புள்ள ஜெ,

 

எரிசிதை கதையின் நாயகன் சின்னமுத்தம்மாளின் மகன். அவன் வெளியே வர விரும்புகிறான். ஆகவே அவனே வந்து அம்மாவை இழுத்துச்சென்று சிதையில் ஏற்றுகிறான். அவன் வெளியே வருகிறான். கருக்குழந்தைக்கு தனக்குத்தேவையானதை அன்னை மனதில் தோன்றவைக்கும் சக்தி உண்டு. சிப்பியை பிளந்து முத்து வெளிவருகிறது. சிப்பி அழியவேண்டியதுதான். அது ஒரு பயாலஜிக்கல் மர்மம்

இந்த சின்னமுத்தம்மாளின் மகன்தான் கந்தர்வன் கதையில் வரும் நோயாளியான நாயக்க ராஜா என நினைக்கிறேன்

ஆர். குமாரவேல்

முந்தைய கட்டுரைஇருநோயாளிகள், விருந்து – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇமையம், திராவிட எழுத்து – கடிதம்