எரிசிதை, இழை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எரிசிதை நீங்கள் இந்த வரிசையில் எழுதிய கந்தர்வன், யட்சன், படையல் கதைகளின் வரிசையில் வரும் அற்புதமான படைப்பு. பலமுறை அதை வாசித்தேன். ஒரேநாளில் ஐந்தாயிரம் வார்த்தைகொண்ட கதையை மூன்றுமுறைக்குமேல் வாசிப்பதென்பது ஒரு பெரிய அப்செஷன்தான். எனக்கு பதினேழாம்நூற்றாண்டு நாயக்கர் ஆட்சிக்காலம் பற்றிய ஓர் ஆர்வம் உண்டு. இந்தக் காலகட்டம் தமிழகத்தின் ‘வைல்ட் வெஸ்ட்’  காலகட்டம். தடியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் என்ற நிலை இருந்த காலம் இது. பாளையக்காரர்களின் அட்டகாசம். நடுவே இருந்த நாயக்கர் அரசுகள் வலுவிழந்த காலகட்டம்.

இந்தச் சிறுகதையில் அத்தனை விரிவாக பின்னணி அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது. ராணி மங்கம்மா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடக்கும் கதை. அவள் மகன் இறந்து மருமகள் கருவுற்றிருக்கிறாள். மருமகள் பெற்ற பிள்ளையை ராஜாவாக்கித்தான் அவள் ஆட்சியமைக்கப்போகிறாள். பதினேழு ஆண்டுகள் நல்லாட்சி தரவும்போகிறாள். ஆனால் அதற்கு அரசபதவியை கைப்பற்றவேண்டும். அதற்கு மக்கள் ஏற்பை அடையவேண்டும். அதற்கு சின்னமுத்தம்மாள் உடன்கட்டை ஏறவேண்டும். இதில் சின்னமுத்தம்மாள் சிக்கிக்கொண்டிருக்கிறாள்.

சரித்திரத்தில் குழந்தையைப் பெற்றதுமே சின்னமுத்தம்மாள் உடன்கட்டை ஏறினாள் என்றும் ஒரு குறிப்பு உண்டு. அவள் காய்ச்சலுக்கு வைத்திருந்த பன்னீர்மருந்தை நிறையக்குடித்து செத்தாள் என்றும் அதன்பின்னர்தான் உடன்கட்டை ஏற்றினார்கள் என்றும் குறிப்பு உண்டு. இரண்டு வாசிப்புக்கும் இடமளிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.

சின்னமுத்தம்மாளுக்கு இரண்டு சாய்ஸ்தான் உள்ளது. சாவது, மகனை ராஜாவாக ஆக்குவது. அல்லது விதவையாக திரும்பிச் செல்வது. அன்றைய பெண்கள் முதல்வழியைத்தான் தேர்வுசெய்வார்கள். உயிராசைப்பட்டு பிறந்தவீட்டுக்கு திரும்பிச் சென்றால் அங்கே இருப்பது ஒரு நரகவாழ்க்கை. நாயக்கர் காலத்தில் விதவை என்றால் தீண்டத்தாகதவளுக்கும் ஒரு படி கீழே. இப்போதிருக்கும் இந்தச் சிறைவாழ்க்கையை மேலும் முப்பதாண்டுகள் நீட்டித்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

எம். விஜயராகவன்

 

அன்புள்ள ஜெ

 

எரிசிதை கதையை வாசித்து வாசித்து முடிக்க முடியவில்லை. ஒரு குட்டி நாவல் போல எவ்வளவு விரிவான சித்திரங்கள். சின்னரங்கமகாலின் அமைப்பில் தொடங்கிவிடுகிறது கதை. அந்த மாளிகையே அன்றைய அதிகார அமைப்பின் அடையாளமாக தோன்றுகிறது. பல அடுக்குகள். கீழே வேலைக்காரர்கள், முன்பக்கம் காவலர்கள், கொல்லைப்பக்கம் அடிமைகள், மாடியில் அரசகுடும்பம். ஆனால் அரசகுடும்பத்தினர்தான் சிறையில் இருக்கிறார்கள்.

இந்தக்கதையில் அரசகுடும்பத்தினரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. ஆனால் கூடவே புழக்கடை வாழ்க்கை, தாசிகளின் வாழ்க்கையும் மிக விரிவாகச் சொல்லப்படுகிறது. விரைவான கதையோட்டம் இருக்கிறது. ஆனால் கூடவே வந்துகொண்டே இருக்கிறது அன்றைய வாழ்க்கையின் நுணுக்கமான செய்திகள். அன்றைய பேச்சுமொழிகூட உறுத்தாமல் வந்துகொண்டிருக்கிறது. தாசிகள் ஒருவனின் வைப்பாட்டியாக இருப்பதை விரும்பிய செய்தியுடன் வரும் அந்த உவமை ஒரு கிளாஸிக். அதேபோல மங்கம்மா பற்றி முதிய தாசி சொல்லும் சொலவடை

ஓர் இலக்கியம் வாழ்க்கையின் ஒட்டுமொத்த்ததையே ஒரு கதைக்குள் சொல்லிவிடும் என்பதற்கான சான்று இந்தக்கதை

 

ராஜசேகர்

இழை [சிறுகதை]

பேரன்பிற்குரிய ஜெயமோகன்,

முடியை பற்றியவனுக்கு, முடியை மோகித்தவனுக்கு முடியாலேயே முடிவில் முடிவு!எதைப் பற்றினாலும் துக்கம்!

இழையை பற்றினாலும் எழவு அதுவே இழவு ஆகித்தொலைகிறது! ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று சும்மாவா பாடினான் சித்தன்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், துணிந்தவளுக்கு முடியை கொண்டையாக்கி முடிந்தவளுக்கு முடியும் ஆயுதம்.

இது கொஞ்சம் போரிங் டெம்பிளேட் பாணி டைம் பாஸ் கதை என எனக்கு தோன்றியது. ஆமென்பது சென்ற உச்சத்தை சமன் செய்ய நீங்கள் வேண்டுமென்றே குதித்த ஆழப் பள்ளம். எனக்குத்தான் சரியா வாசிக்க தெரியலையோ என்னவோ!இந்த பாணி கதைகளை விரும்பிப் படிக்கும் அன்பர்கள் என்னை மன்னிப்பார்களாக!

ஒரு இலக்கிய வாசகன் தனது வாசிப்பின் மூலம் தனது முழுமையை கண்டு கொள்வதைப் பற்றி அதை நோக்கி தன்னை நகர்த்துவது பற்றி அதன் அவசியம் பற்றி நீங்களே பலமுறை குறிப்பிட்டுள்ளீர்கள்.

எனது நோக்கிலே முழுமை என்பது மன நிறைவான மகிழ்ச்சியான ஆனந்தமான உற்சாகமான உடல் நலத்தோடும் மன வளத்தோடும் கூடிய, எல்லா உயிர்களிடத்திலும் இணக்கத்தோடும் ஒழுக்கத்தோடும்

மன அமைதியோடும் அன்போடும் கருணையோடும் அருளோடும் கூடிய பூரணவாழ்வு. வாழ்வாங்கு வாழ்தல். ஒரு முழுமை பெற்ற நல்வாழ்வு வாழ்தல். மெய்யறிவு பெற்று இங்கேயே இப்போதே பேரானந்த வாழ்வு வாழ்தல். தன்னைப்போலவே மற்றவர்களும் ஒரு நல்ல வாழ்வை வாழ தன்னால் இயன்றதை செய்தல். ஒட்டுமொத்த சமூகமும் இயற்கையும் ஒரு முழுமையை நோக்கி அதன் உன்னதத்தை நோக்கி நகர்வதற்கு இங்கேயே இப்போதே இயன்றதைச் செய்தல்.

மேலே குறிப்பிட்டதை ஒருவன் செய்வானாயின் அல்லது குறைந்தபட்சம் அதை நோக்கிய நகர்தலாக தனது வாழ்வை அமைத்துக் கொள்வானாயின் அவன் முழுமையை நோக்கி நகர்ந்தவன் ஆவான்.

அவன் வாசிக்கின்ற ஒரு இலக்கியப் படைப்பு மேலே சொன்ன வகையில் அவனை முழுமையை நோக்கி நகர்த்துவதில் எவ்விதமேனும் பயன்பட்டால் அது அவனுக்கான ஒரு நல்ல படைப்பு.

இது ஆளுக்கு ஆள் மாறுபடும் எனினும் கூட ஒவ்வொரு மனிதனும் தனக்கான முழுமையை நோக்கியே எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கிறான் என்பதே எனது புரிதல். இதில் சிலருக்கு உடன்பாடு இருக்கலாம் சிலருக்கு மாறுபாடு இருக்கலாம். எந்த ஒரு படைப்பையும் அது முழுமையை நோக்கி என்னை நகர்த்துகிறதா என்பதை இதைக் கொண்டே நான் மதிப்பிடுவேன்.

இந்த அடிப்படையில் இழை கதை மற்ற கதைகளைப் போல என்னை முழுமையை நோக்கி அவ்வளவாக நகர்த்தவில்லை என்பதே எனது புரிதல்.

நான் இதை விவாதத்திற்காக உங்களிடம் கூறவில்லை உளப்பூர்வமாக கூறுகிறேன். இங்கே அறிவைவிட என் உணர்வுகளுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். உணர்வுபூர்வமாக இழை கதையோடு என்னால் பயணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

நமக்கு இங்கு இவ்வண்ணம் இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.  இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மிக மிக முக்கியமானது. நிறைவும் மகிழ்ச்சியும் உவகையும் தனக்கும் பிறருக்கும் அளிக்காத ஒன்றின் பொருட்டு வீணாக்க நேரமில்லை. ஒருவரி படித்தாலும் அதில் என்னை உன்னத படுத்த ஏதோ ஒன்றை தேடுபவன் நான். ஒரு வரி எழுதினாலும அது மற்றவர்கள் தங்களை ஏதோ ஒரு வகையில் உன்னத படுத்திக்கொள்ள உதவ வேண்டும் என நினைப்பவன். பெரும்பாலான நேரங்களில் இதையே உங்கள் எழுத்துக்களில் நிச்சயமாக நான் காண்கிறேன்.

இந்த பாணி கதைகளை எழுத எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஜெ போன்ற முதன்மை ஆளுமை இடம் நாங்கள் எதிர்பார்ப்பது மனிதனை மேம்படுத்தும் உன்னதப் படுத்தும் பயனுறு இலக்கியத்தை. இது ஒரு அன்பு கோரிக்கைதான்.உங்களை எவ்வகையிலும் வாசகர்களாகிய நாங்கள் கட்டுப்படுத்த முடியாது, அது கூடவும் கூடாது என்பதை நன்கு அறிந்திருக்கிறோம். இந்த எனது தனிப்பட்ட பார்வை தங்களுக்கு தவறாக தோன்றினால் தயவுசய்து

இதை ஒதுக்கி விடுங்கள். வெண்முரசு என்னும் உலகப் பெருங்காவியம் தந்து வியாச பீடத்தில் அமர்ந்தவருக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்.

நித்ய சைதன்ய யதி என்னும் ஞானகுருவின் பராமரிப்பில் வளர்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட காமதேனு நீங்கள். சீரழிந்து கிடக்கும் சமூகத்திற்கு அற விழுமியங்களை உணர்வுப்பூர்வமாக தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் உன்னதக்கலை எனும் ஞானப்பால் நிறைமடி உங்கள் வசம் உள்ளது.  அந்த அரிய காமதேனு பசுவின் அமிர்தப் பொழிவிற்காக காத்திருக்கின்றன அறத்துக்காகவும் ஞானத்துக்காகவும் பசித்த பல்லாயிரம் வயிறுகள் .

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ

’இழையோடியது’ என்ற சொல்லை அடிக்கடி பார்ப்பதுண்டு. இழை என்றால் என்ன என்று காட்டிய கதை இது. டெய்சிக்கும் ஜானுக்கும் நடுவே இழையோடுவது என்ன? வெறுப்பு, ஆனால் மிகமெல்லிய இழை. அந்த இழையே அவனைக் கொன்றுவிடுகிறது. கதை முழுக்க கூந்தல் பற்றி வரும் இடங்களை தொகுத்து வேறொரு கதையை வாசிக்க முடிகிறது. அவள் கூந்தலின் வலிமையை கண்டுபிடித்தவன் ஜான். அவள் மேல் அவனுக்கு இருக்கும் பித்தே அந்த கூந்தலினால்தான். அவன் கொண்ட மோகத்தாலேயே அவனை கொல்கிறாள். அந்தக்கூந்தலில் அவள் காதலன் பற்றி ஏற இடமிருக்கிறது. அந்தக்கூந்தலைக்கொண்டு அவளை கொல்ல ஜான் ஆசைப்படுகிறான். அல்லது அப்படி ஒரு வன்மமும்அவனிடம் உள்ளது. அப்படியென்றால் அந்த இழையோடும் உணர்வுதான் என்ன?

மகேஷ்

 

 

முந்தைய கட்டுரைகந்தர்வன், விருந்து- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏழாம் கடல், மலைபூத்தபோது – கடிதங்கள்