ஏழாம்கடல் [சிறுகதை]
வணக்கம் ஜெ,
ஏழாம் கடல் கதை சார்ந்து பதிவான பார்வையில் மிக நுட்பமான உளவியல் சார்ந்த ஒரு பார்வையை சுபா எழுதியிருந்தார்,/முத்து கிடைத்ததை பிள்ளை வியாகப்பனிடம் சொல்லாத போது அகத்தில் ஒரு துளி விஷம் சுரந்திருக்கும்./ இது ஒரு முக்கியமான கருத்தாக நான் கருதுகிறேன். ஆழமான நட்புக்குள் எந்த இடத்தில் நஞ்சேறியிருக்கலாம் என்று சுட்டிக் காட்டுகிறார் இதனைநான் ரசித்தேன்.
கோ.புண்ணியவான்
***
அன்புள்ள ஜெ
ஏழாம் கடல் போன்ற ஒரு கதையை எத்தனை சூட்சுமமாக வாசிக்கவேண்டும் என்பதை கடிதங்கள் வழியாகவே அறிந்தேன். ஆனால் ஓவர் ரீடிங்கும் ஆகிவிடக்கூடாது. இந்தவகையான படிமம் சார்ந்த கதைகள் அவரவர் அனுபவத்தில் சென்று தொடுபவை. முத்து, விஷம் இரண்டுமே சப்ஜெக்டிவானவை. அவவரவர் சொந்த அனுபவம் சார்ந்து நாம் விளங்கிக்கொள்கிறோம். அவற்றை அப்படி ஃப்ரீஸ் செய்ய முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்
அந்த முத்து முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதை அந்தரங்கமாகவே அவர்கள் இருவரும் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர் அதை மிகமிக உயர்வாக தன் மனதின் ஆழத்தில் வைத்திருக்கிறார். எவரிடமும் சொல்லவில்லை. மனைவி மக்களிடம் கூட. வியாகப்பனிடமும் சொல்லவில்லை. வியாகப்பன் அதன்பின் நஞ்சு கொடுத்தார். அதே முத்துச்சிப்பியில் லட்சத்தில் ஒன்றில் ஊறும் நஞ்சு. ஆனால் அதையும் முத்தையும் சம்பந்தப்படுத்த முடியுமா? சிப்பியில்தான் நஞ்சும் முத்தும் வருகின்றன என்று மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும்
சிவபாலன்
***
மலைபூத்தபோது [சிறுகதை]
சிறுகதை “மலை பூத்த போது” பற்றி. காடுகளில் வாழும் தொல்குடி மக்களையும் தொல் கடவுள்களையும் காலம் செல்ல செல்ல மறந்த வேளாண்குடி மக்களையும் காட்டுகிறது “மலை பூத்த போது”.
மாறாத ஒன்றை வைத்து இங்குள்ள் உலகை பார்த்தால், இவையும் அப்படியே மாறாமல் தான் உள்ளது. அதே முகம் கொண்ட மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள், வளர்க்கிறார்கள், இறந்து மண்ணாகிறார்கள்.
ஆனால் மனிதர்களின் அகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது.தொல்கடவுளை கொல்லைப்புற சாக்கடை வழியாக நடமாட விடுவதும், அவ்ர்களுக்கு நன்றி உணர்வோடு அளித்து வந்த படையலை படிப்படியாக குறைத்து இறுதியில் ஒரு கவளம் கூட படைகாமல் நிறுத்துவதும் என்பது காலமாற்றதை உணர்த்துகிறது.
நல்ல விளைச்சல் இருந்திருக்கிறது, அவர்கள் தோற்றுவித்த மையகடவுளுக்கு படையல் கொடுக்கபட்டிருக்கிறது. கைவிடப்பட்டது காடுகளில் இருக்கும் தொல்தெய்வங்கள் தான்.
முன்னகர தேவையானதை மட்டும் வைத்துகொண்டு முன்னகரும் வேட்கையுடன் சென்று கொண்டிருக்கும் மனித இனம் செய்வது சரி தவறுக்கு அப்பாற்பட்ட தாக படுகிறது.
ஆம் இந்த சுழற்சி தொடர்ந்து இங்கு நடைபெற்று கொண்டுதான் இருக்கும் என்று மாறிகொண்டிருக்கும் இதை சுட்டி மாறாமல் இருக்கும் ஒன்று சொல்கிறது ” ஆமாம் அதுதான் ஆகட்டும் தெய்வங்களே” என்று.
சதீஷ்குமார்
***
அன்புள்ள ஜெ
மலைபூத்தபோது பலவகையான எண்ணங்களை உருவாக்கிய கதை. நாம் இன்றைக்குச் செய்யும் விவசாயம் எப்படிப்பட்டது. பூச்சிமருந்துக்களைக்கொண்டு எல்லா உயிர்களையும் அழிக்கிறோம். பூச்சிகளை தின்னும் பறவைகளைக்கூட அழிக்கிறோம். இது நஞ்சுவிவசாயம். இதில் மலையிலிருந்து வருபவர்களுக்கு ஏது இடம்?
நான் சின்னப்பையனாக இருக்கும்போது அறுவடை முடிந்ததுமே குடுகுடுப்பைக்காரன், குறவன் என பலர் வந்து நெல்பெற்றுச் செல்வார்கள். அத்தனைபேருக்கும் வயல் ஊட்டியது. அன்றும் இதேவயல்தான். இதேபோல பம்ப்செட் கூட கிடையாது. ஆனால் வயலில் அவ்வளவு மிச்சமிருந்தது. இன்றைக்கு கடன்காரனுக்குத்தான் கொடுக்கவேண்டும்.
எப்படி இந்த மாற்றம் வந்தது? நம் விவசாயத்தின் 80 சதவீதம் பூச்சிமருந்து உரக்கம்பெனிக்காரனுக்கு விவசாயம் நடக்கும்போதே கொடுக்கப்படுகிறது. இதைத்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் மலைகளின் அருளை ஏற்கனவே இழந்துவிட்டோம். நம் நதிகளெல்லாம் வரண்டுவிட்டன
சரவணன் சுப்ரமணியம்