விசை, தீற்றல்- கடிதங்கள்

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை ஒர் அற்புதமான சிறுகதை. கூர்மையான ஒற்றைப்படிமம் மட்டுமே கொண்ட கதை. உங்கள் கதைகளில் இந்த இரண்டுவகை கதைகளும் உள்ளன. வலுவான நாடகீயமான சம்பவங்களும் பிளாட்டும் உள்ள கதைகள். இந்தவகையான ஒற்றைப்படிமம் மட்டுமே கொண்ட கதைகள். வலுவான பிளாட் உள்ள கதைகளில் விரிவான வாழ்க்கைச்சித்திரத்தையும் அமைத்துவிடுகிறீர்கள். வலிமையான கதாபாத்திரங்களும் உள்ளன. அவர்களை விரிவாகச் சொல்ல இடமும் உள்ளது

ஆனால் இந்தவகையான ஒற்றைப்படிமக் கதைகளில் அவ்வளவு விரித்துச் சொன்னால் கதை நீர்த்துவிடும். அந்த ஒற்றைப்படிமத்துக்கு மிகச்சீக்கிரமே வந்துசேர்ந்துவிடவேண்டும். அதற்காகத்தான் இத்தனை கூர்மையாக சுருக்கமாக கதைச் சொல்கிறீர்கள். பெரும்பாலும் வேறொருவரின் நினைவுவழியாக மையக்கதாபாத்திரத்தைச் சொல்லிவிடுகிறீர்கள். ஆகவே சுருக்கமாகச் சொல்லமுடிகிறது. ஓலைக்காரியின் வாழ்க்கையே ஓரிரு சொற்றொடர்களில் அவள் மகன் வழியாக உணர்ச்சிகரமான முறையில் சொல்லப்படுகிறது. அவளுடைய விசை, அவளுக்குள் இருக்கும் தீ எல்லாமே சொல்லப்பட்டுவிடுகிறது

அர்விந்த்

***

அன்புள்ள ஜெ.,

அன்றைக்கெல்லாம் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் இடையே மெல்லிசைப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். பாலமுரளிகிருஷ்ணாவின் ‘எந்தன் தாயை எண்ணிடும் போது இதயம் விம்மிடுதே..’ அடிக்கடி ஒளிபரப்பப்படும் பாடல். அன்னையின் நினைவு தரும் பூரிப்பினால் இதயம் விம்மிடுதலின் உண்மையான அர்த்தத்தினை, அந்த விம்மிடுதே என்ற வார்த்தையை பாலமுரளியின் கார்வையில் கேட்டபோது நான் உணர்ந்தேன். “கெடக்கட்டு டீக்கனாரே, நான் ஓலைக்காரிக்க மகன்லா?” என்ற நேசையனின் பூரிப்பு அதற்குச் சற்றும் குறைந்ததல்ல.

இப்போதும் கூட நான் இருக்கும் சென்னை நங்கநல்லூரில் பழுத்து உதிர்ந்த தென்னை மட்டைகளைச் சேகரித்து தெருவோரத்தில்  வயதானவர்கள் துடைப்பத்துக்காக ஓலை கீறிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ‘உதிராத மட்டைகள்’ என்று நினைத்துக்கொள்வேன். நேசையனின் அம்மைக்கு தென்னை ஓலையைப் பலகையாய் முடையும் விசை கூடியது எப்படி? அடிமையாய் இருந்து மீட்கப்பட்டவள், கணவனை இழந்து குழந்தையோடு நிர்கதியாய் நின்றவள் தனக்குத் தெரிந்த ஒரே வேலையான ஓலை முடைவதை கரை தெரியாத வாழ்க்கைக்கடலைக் கடக்கும் தோணியாகவே நினைத்திருப்பாள். இது போல முகம் இறுகி , அகம் தொலைத்த, தலைவன் இல்லாக்குடும்பத்தை தூக்கிநிறுத்திய, எத்தனை அன்னையர் குடும்பம் தோறும். நெகிழ்ச்சியான கதை.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தீற்றல் என்ற பெயரில் நான் ஒரு கவிதை முன்பு எழுதியிருந்தேன். கணையாழியில் பிரசுரமானது என நினைக்கிறேன். அதுவும் சுவரில் இருக்கும் ஒரு தீற்றல் பற்றியதுதான். பழைய ஞாபகம் ஒன்று சுவரில் ஒரு மெல்லிய தீற்றலாக எஞ்சியிருக்கிறது. அதாவது அழிந்த குங்குமம் போல. அழிந்த குங்குமத்தீற்றல் உருவாக்கும் மன எழுச்சியே அபாரமானது. வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும்போது அந்த அழிந்த குங்குமத்தீற்றல் போலத்தான் தோன்றுகிறது

கணபதி சுப்ரமணியம்

***

அன்பு ஜெ,

மரணத்தைப் பற்றி ஜிட்டு அவர்கள் சொல்லும் போது, ‘மரணம் என்பது எங்கோ ஒரு புள்ளியில், ஒரு நாளில், வருங்காலத்தில் நிகழக்கூடியது அல்ல. காலம் என்ற பரிமாணத்தையே மரணிக்கச் செய்வதன் மூலம் காலம் அர்த்தமற்றதாகிவிடுகிறது. இறப்பு என்பது மட்டுமே காலத்தின் இறுதி அல்ல. அந்த ஒரு கணத்தில் மட்டுமே காலம் தன் இறுதியை அடைவதில்லை. மாறாக அது ஒவ்வொரு நிகழ்வு, நாள், உணர்வு, காதல், காமம் ஆகியவற்றின் இறுதியிலும் நிகழ்கிறது. இதை உணர்ந்து கண கணமும் மரணத்தை நிகழச் செய்து அந்த நொடியில் வாழ்பவனால் காலத்தை நீட்டச் செய்ய முடியும்’ என்கிறார். இந்த வரிகளை ஜிட்டுவின் உரையிலிருந்து நானே மொழிபெயர்ப்பு செய்து கொண்டேன் அல்லது இப்படித்தான் புரிந்து கொண்டேன் ஜெ. உங்கள் கதைகளில் வரும் அந்த நுண் தருணங்கள் கூட இத்தகைய கூர்மையுடன் தான் இருக்கின்றன. இத்துனை நுணுக்கமாக உங்கள் வாழ்வின் தருணங்களை, மனிதர்களை எடுத்துரைக்கிறீர்களே என்று நான் சிந்திப்பதுண்டு. காலத்தை முன்னும் பின்னும் வெட்டிக் கொண்டு அதற்கு மரணத்தைப் பரிசளித்து காலமற்ற ஒரு பரிமாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அங்கு தான் ‘நான்’ என்ற ஒன்று இருக்காது அல்லது ’நான்’ கணகணமும் மரணித்து பிறந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு மிகப் பெரிய விடயங்களையும் வாழ்வுப் பயணத்தில் செய்து விட்டு ’அது நான் அல்ல’ என்று நீங்கள் சொல்வதும் ‘நானா எழுதினேன்’ என்பது போல இருப்பதும் அதனால் தான் என்று நினைக்கிறேன் ஜெ.

தீற்றல் கதையில் நீங்கள் சொல்லியிருப்பதும் அப்படியான ஒரு நுண்தருணம் தான்.

“சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி.

அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை கண்டேன்.

கண்ணில் மையிட்டபின் அப்படியே விரலைத் தீற்றிக்கொண்டது.

ஒரு சின்னஞ்சிறு குருவியின் சின்னஞ்சிறு இறகுபோல.

ஒரு மெல்லிய வளைவு.

ஓர் அலட்சியமான கீற்று.

ஒரு கணம்,

அந்த ஒருகணம், அது அங்கிருந்தது.

கண்கள் இல்லை,

மையிட்ட இமைகளும் இல்லை,

நீட்டிவரைந்த வால் மட்டும் எஞ்சியிருந்தது.”

-என்ற கவிதைத்தருணத்தைச் சொல்கிறீர்கள். அமுதாவின் தாத்தா காலத்தை வெட்டிக் கொண்டு ஒரு ஃப்ளாஷ் போல மனதில் பதித்திருந்த அந்த வால் தீற்றலை தரிசித்தேன். நெகிழ்வாக இருந்தது. தாத்தா சரோஜாதேவியின் அட்டைப்படத்தைக் கண்டு அந்த ஒரு தருணத்தை நினைவுகூர்ந்தது போலவே, மிகச் சிலரும் ஏதோ ஓர் இசையின் துணுக்கில், வாசனையில், நினைவுப் பொருளில், புகைப்படத்திலென தங்களின் ஒரு தருணத்தை ஃப்ளாஷ் செய்து வைத்திருக்கிறார்கள். அவைகளை மீட்டி எடுக்கும் ஒரு சிறுகதையாக கதை அமைந்தது. நானும் அந்த சில தருணங்களை மீட்டி சிலாகித்திருந்தேன். அருமையான கதை ஜெ. நன்றி

பிரேமையுடன்

இரம்யா.

முந்தைய கட்டுரைஇருளில், குமிழிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிறைவிலி [சிறுகதை]