விசை, ஏழாம் கடல் – கடிதங்கள்

ஏழாம்கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஏழாம் கடல் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஏழாம் வானம் ஏழாம் கடல் ஏழாம் உலகம் என்றெல்லாம் சொல்லப்படுவது எட்டமுடியாதது. அப்பாலிருப்பது. அங்கிருந்து வரும் ஓர் அன்பும் நஞ்சும். கதையின் வாசிப்பில் எஞ்சி நின்றிருப்பது அந்த முத்துதான். நஞ்சு வரும் போகும். சாவும் வரும் போகும். தலைமுறைக்குக் கையளித்துவிட்டுப் போவது அந்த முத்துதான். பிள்ளைவாளின் மகனிடம் அந்த முத்துதானே கடைசிவரை இருக்கும்

என்.கிருஷ்ணன்

***

அன்பு ஜெ,

ஏழுகடல் சிறுகதையின் வழி திருவெளிப்பாடு அதிகாரத்தை மீண்டும் நினைவுகூர்ந்தேன். ஏற்கனவே ஏழாவது சிறுகதையில் மோசஸின் வழி பிதாவானவர் வைச்ச ஏழு முத்திரைகளிலே ஏழாவது முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கிற எடம் பற்றியும் நியாயத்தீர்ப்புநாள் பற்றியும் சொல்லியிருப்பீர்கள்.

ஆனால் இந்தக் கதையில் நீங்கள் ஏழாவது முத்திரையை உடைத்ததும் நடக்கும் விடயத்தின் மேல் புனைவை ஏற்றியதாய் நினைத்தேன். “ஏழாம் வானதூதர் எக்காளம் முழக்கப்போகும் காலத்தில், கடவுளின் மறைவான திட்டம் நிறைவேறும். விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ‘கடலின் மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக் கொள்’ என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது” என்ற திருவெளிப்பாட்டின் வரிகளோடு பிள்ளைவாள் சாப்பிட்ட சிப்பியை இணைத்துப் பார்த்தேன். அதுவே வாயில் இனித்து வயிற்றில் கசந்து போயிருக்கிறது. ஏழு என்ற எண்ணின் புனைவு  அழிவின் உச்சமான திருவெளிப்பாட்டில் வந்து கொண்டேயிருக்கிறது. ஏழு எக்காலம், ஏழு வானதூதர் என முடிவில்லாது புனைவு சென்று கொண்டே இருக்கிறது. அப்படியே பிள்ளைவாளின் இறப்பின் மீதான ஏழாம் கடல் புனைவை வியாகப்பன் ஏற்றிவைப்பதாகப் பார்க்கிறேன். கோடிச்சிப்பியில் ஒரு சிப்பியில் இருக்கும் ஒரு துளிவிஷம் பிள்ளைவாளின் வயிற்றில் வந்து கசப்பதற்கான நிகழ்த்தகவு யாருமே ஊகித்திருக்க முடியாது தான். ஊகிக்க முடியாத ஒன்றின் மேல்தான் புனைவை ஏற்ற முடியும். அப்படித்தான் அது ஏழாம்கடலுக்கான அழிவின் சிப்பியாக நம் முன் புனைவுருக் கொண்டு நிற்கிறது. ஏழாவது கடலினின்று வெளிவந்த அந்த அரிய அருமுத்து, ஆணிப்பொன், மணிமுத்து மரணத்தின் முதல் பிரகடனமாகிறது. அதன்பின் வாயில் இனித்து வயிற்றில் நஞ்சாகும் சாவு நிகழ்கிறது. பிள்ளைவாளின் இறப்பின் புனைவைக் கடத்த வியாகப்பன் இருந்தார். ஆனால் வியாகப்பனின் இறப்பின் புனைவோ இருண்மையாக அல்லது நண்பனின் இறப்பிற்கு காரணமான சிப்பியை தன் கடலினின்று வந்ததாக நினைத்து மனமுடைந்து இறப்பவராக, பிள்ளைவாளின் ‘ஒப்பம் சேர்ந்து போவோம்’ என்ற வரிகளை நினைந்தே இறப்பவராக கதையில் அமைந்துவிடுகிறார். சொல்லப்படாத ஒரு அருமுத்து இருவருக்குமான திறக்கப்பட்ட சாவின் முத்திரையாக ஏழாம் கடலின் நினைவாக நெஞ்சில் நின்றுவிடுகிறது. மேலும் மேலும் புனைவை ஏற்றிக் கொள்ள ஏதுவான ஒரு இருண்மையின் கதை. நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

***

விசை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விசை உள்ளத்தை குமையவைக்கும் ஒரு கதை. நம்மால் திருப்பி அளிக்கவே முடியாத கொடை என்பது அன்னை அளிப்பதுதான். அன்னையின் மனதின் ஆன்மவிசையை ஒரு சின்ன கவித்துவக்குறியீடு வழியாகச் சொன்ன கதை இது.

ஆர்.பாலகிருஷ்ணன்

***

பேரன்பிற்குரிய ஜெயமோகன்,

அத்தனை விசையோடு அந்த ஓலைக்காரி யாரோடு சண்டைபோட்டுக் கொண்டிருந்தாள்? பிறக்கும்போதே அடிமையாக பிறக்கவைத்த பிதாவிடமா, ஒரு நான்கு ஆண்டுகளுக்கு விடுதலையை காட்டி, குருடன் கண் பெற்று மீண்டும் குருடான கதையாய் கண்ணான கணவனை பறித்த ஊழிடமா?.

பனையை பேரன்னை என்று சொல்வார்கள். அள்ளிக்கொடுக்கவும் அரவணைக்கவும் மட்டுமே அறிந்தவள் பனை அன்னை. எண்ணிறந்த முலை கொண்டு எளிய மானுடர் வாழ பதமான சாறு அளிக்கும் அதன்மூலம் ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் அவளே தன் கணவனை பறித்துச் சென்றால் அந்த ஓலைக்காரி என்னதான் செய்வாள்.

அவள் முழுதும் நம்பிய கர்த்தரே அவளை சிலுவையில் அறைந்தால் அந்த ஏழை விசுவாசி என்னதான் செய்வாள். சிலுவையில் அறையப்பட்ட அந்த இயேசு “பரலோகத்தில் இருக்கின்ற பரம பிதாவே ஏன் என்னைக்கைவிட்டீர்” என்று வாய் திறந்து அன்று கேட்டுவிட்டார். இந்த ஓலைக்காரியோ வாயைத் திறந்து ஒரு சொல் கேளாது, வாழ்நாள் முழுக்க தன் முழு விசையோடு உள்ளம் இறுக்கி, முகம் குறுக்கி, முஷ்டி மடக்கி அந்த வலிய ஊழோடு ஊடி நின்றாள்.

அலைக்குத் தெரியாதா என்ன? எத்தனை முட்டி மோதினாலும் கரையைக் கடக்க முடியாதென்று ஆனாலும் கரையோடு மோதும் முரட்டு விசையை அலை இன்றுவரை விட்டபாடில்லை. அலைக்கு எந்த வகையில் குறைந்துபோனாள் இந்த ஓலைக்கிழவி, அதனால்தானோ என்னவோ சாகும்வரை விசையோடு ஓலையை இழுத்துக் கிடந்தாள். அவள் விசையோடு முண்டிமுண்டி தினம்தினம் இழுத்தது தென்னை ஓலையை அல்ல, இஷ்டத்துக்கு படைத்து கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் கொடுத்துக்கொண்டிருக்கும் அந்தக் கண்ணில்லாத கபோதிக்கடவுளின் கைகளை. பாவப்பட்டு இரத்தம் சிந்தியவள் அவளுக்கு நமது மெய்யியல் விவாதங்களும் மேட்டிமை தரிசனங்களும் எதையாவது செய்து விட முடியுமா என்ன?.

எல்லாம் விதி என்றும், கர்ம வினை என்றும், ஊழ் என்றும், அனைத்தும் அவன் செயல் என்றும் நாம் சுடும் விடை வடைகள் அவளின் இழப்பின் வேதனையை, உயிரின் தவிப்பை நீக்குமா என்ன?

வலியும் வேதனையும் தனக்கு வராதவரை தத்துவம் பேசுவது சுலபம் அல்லவா? ஒருத்தி மட்டுமா உலகத்திலே ஓலைக்காரி,  துயர் கொண்டு தவிக்கும் விடை இன்றி வாடும் கோடான கோடி உயிர்கள் இந்தக் கணத்திலும் அந்த ஊழ் விசையோடு போராடிக் கொண்டுதானே இருக்கிறது….

மேம்போக்காகப் பார்ப்பதற்கு ஒரு துன்பியல் அழகு சித்திரம் போல இந்த கதை தோன்றினாலும் ஆழத்தில் அடிப்படையான ஒரு தீவிர கேள்வியை இந்தக்கதை முன்வைக்கிறது. பேராஇயற்கையின் படைப்பில் துன்பம் ஏன்? சிலரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே ஏன்

துயரமே வடிவானதாக அமைந்துள்ளது? இயற்கை அல்லது இறையாற்றல் அத்தனை கொடூரமானதா? துன்பத்தின் மூலம் என்ன?

எல்லாம் செயலுக்கேற்ற விளைவு என்ற பிரபஞ்ச இயக்க ஒழுங்குப்படி நடக்கும் என்கிறது கர்மவினை தத்துவம்.

முன் வினைகளே துன்பமாக மூள்கிறது என்றால் அப்படி மோசமான வினைகளை ஆதியில் ஒரு உயிரை செய்ய வைத்தது எது? இப்படி எண்ணிறந்த அடிப்படை கேள்விகளே பலரை துரத்தி தூக்கம் இழக்கச் செய்கிறது. விசை சிறுகதை இந்தக் கேள்விகளை பெருவிசையோடு தட்டி எழுப்புகிறது.

எங்கள் கிராமத்திலே நாங்கள் வாழ்ந்த தெருவிலே, குடலச்சி என்ற ஒரு கிழவி இருந்தாள். ஒரு நீண்ட குட்டிச் சுவரும் அதை ஒட்டிய ஒரு சிறு பக்கச்சாய்ப்பு குடிசையுமே அவள் இருப்பிடம். நாள் முழுவதும் ஊரைச்சுற்றி சானி பொறுக்குவதும் அதை அந்தக் குட்டிச் சுவற்றில் தப் தப் என்று வரட்டியாக அடித்துக் கொண்டிருப்பதுமே அவள் வாழ்க்கை. யாருமற்ற தனியள், கணவனையும் இருந்த ஒரே ஒரு குழந்தையையும் எப்போதோ இழந்து விட்டவள். வரட்டியை விற்று வந்த பணத்தில் எதையோ பொங்கிக் குடித்தாள். யார் எந்த உணவை கொடுத்தாலும் வாங்கி வேகவேகமாக உண்பாள். அதனாலேயே ஊரில் அவளுக்குப் பெயர் குடலச்சி. முகம் இறுகி கை கால்கள் குச்சி போல எப்பொழுதும் ஒருவித இறுக்கத்தோடு இருப்பாள். அவள் வரட்டியை தப் தப் என்று சுவற்றில் தட்டுகின்ற வேகம் அந்த வயதில் என்னை மிகவும் பயமுறுத்தும். ஓலைக்காரியும் குடலச்சியும் எதற்காக இந்த மண்ணில் வருகிறார்கள் எதன் பொருட்டு இத்தனை துயருறுகிறார்கள். யார்தான் இந்தக் கேள்விகளுக்கு திட்டவட்டமான, அறுதியான, நிரூபிக்க தக்க, உறுதியான, மாறாத, இறுதி விடையை அளித்து விட முடியும். அப்படியே ஞானிகள் விடையை அளித்தாலும் அவர்கள் அளிக்கின்ற விடையை எத்தனை பேரால் உண்மையாக உணர்ந்து உள்வாங்கிக்கொள்ள முடியும்.

நான் கங்கோத்ரியில் வாழ்ந்த காலங்களில் வேதாந்தானந்தா என்ற ஒரு இளம் துறவி கங்கோத்ரி கங்கை ஆலயத்தில் இருந்து கோமுக் நோக்கி செல்லும் பாதையில் கங்கைக் கரையோரமாக ஒரு குகையிலே வசித்து வந்தார். அவர் எப்பொழுதும் கங்கையின் கரையில் ஒரு பாறை மீது அமர்ந்துகொண்டு கூழாங்கற்களை கங்கையின் மீது வெகு வேகமாக திட்டிக் கொண்டும் கத்திக் கொண்டும் வீசிக்கொண்டிருப்பார். நாள் முழுவதும் இதேதான் வேலை. அவரை ஒரு சித்தர் என நினைத்து அவருக்கு இரண்டு வேளை உணவு கொண்டுபோய் கொடுக்கவும் கூட சிலர் இருந்தார்கள். நான் அங்கே வெகுநாட்களாக வாழ்ந்து வரும் ஒரு துறவியைக் கேட்டேன் அப்படி எதற்காக வேதாந்தானந்தா கத்தி கூச்சலிட்டு கங்கையை நோக்கி கல்லை எரிந்து கொண்டிருக்கிறார் என. அதற்கு அந்த வயோதிக துறவி சொன்னார் இளமையிலே வேதாந்தானந்தாவும் அவருடைய நெருங்கிய நண்பரான இன்னொரு துறவியும் பிரம்மச்சாரிகளாக கங்கோத்ரியில் கங்கைக் கரையிலே ஒரு குருவின் ஆசிரமத்தில் பாடம் படித்துக் கொண்டு ஒரே அறையில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருநாள் இருவரும் கங்கையில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கின்றபோது திடீரென்று வந்த காட்டு வெள்ளம் வேதாந்தானந்தாவின் நண்பரை அடித்துச் சென்று விட்டது. உடல் கூட கிடைக்கவில்லை. நண்பரின் இறப்பும் அவரை இழந்ததால் ஏற்பட்ட வேதனையும் வேதாந்தானந்தாவை கங்கையின் மீது தீரா வெறுப்புக்கு உட்படுத்திவிட்டது. அன்றுமுதற்கொண்டு கங்கையை திட்டியும் சபித்தும் கங்கையின் மீது கற்களை எறிந்தும் கொண்டிருக்கிறார். இதுவே அவருடைய வாழ்க்கையாக மாறிவிட்டது. எந்த கங்கையை தாய் என்றும் தெய்வம் என்றும் வழிபட்டாரோ அந்தக் கங்கையையே பேய் என்றும் பிசாசு என்றும் ஊழ் என்றும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வாழ்வின் மாயங்களை இதன் மயக்கும் வினோதங்களை இதன் தீராத் துயரங்களை எங்கு சென்று எவரிடம் வைப்பது…

தனக்கே தனக்கென புரியாதவரை, சொந்த அனுபவமாக இயற்கைப் பேருண்மைகள் விளங்காதவரை, எவருக்கும் முற்றாக விலகுவதில்லை மறையின் திரைகள். அந்தப் புரிதல் வரும் வரை, வல்லான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது, ஊழிற் பெருவலி யாவுள என்று அமைதி கொள்வதைத் தவிர வேறு என்னதான் வழி சாதாரண மனிதர்களுக்கு….

ஓலைக்காரிகளாகவும் குடலச்சிகளாகவும் வேதாந்தானந்தாக்களாகவும் மாறி, எல்லா இன்பங்களையும் முற்றாக விலக்கி தீவிர முரட்டு வைராக்கியத்தோடு ஊழின் வல்லமைமிக்க கைகளோடு விசை கொண்டு இழுத்து முட்டி நிற்க எல்லோருக்கும் இயலுமா என்ன?

விசை என்று கதைக்கு பெயர் வைத்த உங்கள் எழுத்து வித்தை கண்டு  வியந்து போகிறேன்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைகொதி, குமிழிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇருநோயாளிகள், விருந்து – கடிதங்கள்