கந்தர்வன், விருந்து- கடிதங்கள்

 கந்தர்வன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

வணக்கம். உங்களின் ஓஷோ உரையை நேற்றுக் கேட்டேன். நல்ல, துணிச்சலான முன்வைப்பு. இதுவே உங்களுடைய பலம். பல பரிமாணங்களுடைய விரிவான பார்வை. பல விதமான உள்ளடக்குகள் கொண்ட உரை. சிறப்பு.

தவிர, நீங்கள் எழுதி வரும் புதிய கதைத் தொடரில் கந்தர்வன் சமகாலப் பரப்பை நேரடியாக உள்ளெடுத்துப் பேசுகிறது. கதை நிகழும் காலம் வேறு என்று வெளியே தோன்றினாலும் அதன் உள்முகம் நம்முடைய காலமும் சூழலுமே. சமகால அரசியல் பரப்பையும் சமூக வெளியையும் அது உள்ளடக்குகிறது. அணஞ்சபெருமாள்கள் எதன்பொருட்டெல்லாம் மிக நுட்பமாக உருவழிப்புச் செய்யப்படுகிறார்கள். எப்படிப் பலியிடப்படுகிறார்கள்? பின் எப்படி வழிபாட்டு மகத்துவமாக ஏற்றப்படுகிறார்கள்? இதற்கமைய தமக்கேற்ற விதத்தில் இவர்களைப் பயன்படுத்தும் அதிகாரத் தரப்பின் உளவியல், அந்த உளவியலை வடிவமைக்கும் அதன் நலன்கள், அதற்கு அது பயன்படுத்திக் கொள்ளும் தந்திரங்கள் (அறிவு?!) இப்படியே அத்தனை நுட்பங்களையும் சொல்கிறது கதை. நான் இந்தச் சூழலுக்குள்  – இந்த வரலாற்றுக்குள் பயணித்து வந்தவன் என்பதால் இதன் தந்தர முடிச்சுகளை நன்றாக அறிவேன். இதையெல்லாம் நேரில் இருந்து பார்த்தைப் போல அத்தனை உண்மையாக – நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள். தமிழகத்தில் பூங்கொடி, முத்துக்குமார் தொடக்கம் ஈழத்தில் பலிகொடுக்கப்பட்ட பல நூறு கரும்புலிகள் மற்றும் போராளிகள் வரையில்  கண்முன்னே தோன்றுகிறார்கள். அதற்குப் பின்புலமாக இருந்த தரப்புகளையும் இழுத்து வரலாற்றின்  சந்தியில் நிறுத்தியுள்ளீர்கள்.

அணஞ்சபெருமாளின் அப்பாவித் தனத்தையும் ஒரு வகையில் அறியாமையையும் அதனடியாகவுள்ள துணிச்சலையும் பிள்ளைவாள்களின் சந்தேகப் பதற்றங்களையும் துணிவின்மையையும் அதன் அடியாக ஓடும் நபுஞ்சகத்தையும் கேலிப்படுத்துவது உச்சம். அதில் ஊடாடும் நகைச் சுவை அருமை. நன்றி.

வீட்டில் எல்லோருக்கும் எங்கள் அன்பைக் கூறுங்கள்.

மிக்க அன்புடன்,

கருணாகரன்

அன்புள்ள ஜெ

கந்தர்வன் கதையை வாசித்த பின்னர் அதைப்பற்றி சில மொண்ணைகள் அங்கிங்கே எழுதியதை வாசித்தேன். தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக திரும்பி வந்தேன். இத்தனை மொண்ணைத்தனம் நம் சூழலில் இருப்பதும், அதை அறிவு என ஒரு கூட்டம் முன்வைப்பதும் நினைத்தே பார்க்கமுடியவில்லை. நடுகல் கலாச்சாரத்தை அவமானம் பண்ணிவிட்டார் என்று ஒரு கூட்டம்.  பதினேழாம் நூற்றாண்டில் பலமுறை நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்தான் கதை என்றுகூட தெரியவில்லை. குறைந்தபட்சம் தன்னைச்சுற்றி இருக்கும் மக்களின் சாமிகள் எப்படியெல்லாம் உருவானார்கள் என்றுகூட தெரியவில்லை. பொதுவெளியில் ஒரு மடத்தனத்தைச் சொல்வதில் வெட்கமே இல்லை. ஆச்சரியம்தான்

ஆர். சிவக்குமார்

விருந்து [சிறுகதை]

அன்பு ஜெ,

நேற்று விருந்து சிறுகதையைப் படித்தபின் ஒரு வெறுமையை அடைந்தேன். ஆட்டின் அந்த மரணம், அதன் கண்கள் மற்றும் சாமிநாத ஆசாரியின் மரணம் என தாங்கவியலாத் தருணங்களைக் கொடுத்திருந்தீர்கள். ஏற்கனவே கடந்து வந்த சிறுகதைகளிலிருந்து எத்தனை மரணத்தைத் தாங்கிக் கொள்வது. ஃபாதர் ஞானப்பன், வலது மாடு, ஆரிஸ் கொலை செய்தவன், அணைஞ்சன் மற்றும் வள்ளியம்மை என மரணதத்தையே கடந்து வந்து கொணடிருக்கிறேன். மனசாட்சியே இல்லாமல் முன் சென்று கொண்டிருக்கிறீர்களே என்று நினைத்தேன். ஆசாரியின் மரணத்தைவிட அந்த ஆட்டின் மரணம் மிகவும் பாதித்தது. அடுத்த சிறுகதைக்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். மீண்டும் இன்று காலை விருந்து சிறுகதையை மீள்வாசிப்பு செய்ய எத்தனித்தபோது முகப்புப்படத்திலுள்ள அந்த ஆட்டுக்குட்டியின் கனிவான முகம் என்னை மீண்டும் தடுத்தது. அதை உருப்பெருக்கி பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென நேற்று நீங்கள் ஓஷோ உரையில் கிறுத்துவத்தின் அடிப்படைப் புரிதலைக் கூட வாசிப்பவர்கள் அடைவதில்லை என்று கூறியது நினைவிற்கு வந்தது. தன் இரத்தத்தையும் சதையையும் படைக்கும் கிறுத்து பற்றிய புரிதலை நீங்கள் சொன்னபோது கூட நான் வரிசையாக ஏழாவது, ஏழாம் கடல், லாசர் என சிறு பட்டியலைப் போட்டுப் பார்த்தேன். அப்போது கூட விருந்து கதையை கிறுத்துவோடு இணைக்கும் திறப்பை நான் அடையவில்லை. ஆட்டுக்குட்டியின் கனிவான அந்த முகத்தைக் கண்டு ஆட்டுக்குட்டியானவர் என்ற சொல் என்னுள் ஒலித்து. தன்னைத் தானே விருந்து படைத்துக் கொண்டவர் அவர் மட்டும் தான்.

ஆசாரி படைத்த அந்த விருந்துப் படையல் கத்தோலிக்கத் திருவழிபாட்டின் உச்சத் தருணமான திருவிருந்தில் நடக்கும் சடங்குச் செயல்களை இப்போது இணைத்துப் பார்க்க வைத்தது. திருப்பலியில் ஒப்புக் கொடுக்கப்படும் அந்த அப்பமும் இரசமும் கிறுத்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுவதுபோலவே இங்கு இந்த ஆட்டின் விருந்து ஆகிறது. ஆசாரியின் இறுதி விருந்து இங்கு கிறுத்துவின் இரவுணவுக்கு ஒப்பு நோக்கலாம். ”இது பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மானிட மகனுடைய சதையை உண்டு, இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” என்ற வரிகளும் உடன் நினைவிற்கு வந்தது. இறுதியில் அவன் ஆட்டிற்கு போட்ட அந்த பெயர் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை. இறுதியில் அவனே அந்த ஆட்டுக் குட்டியானவராக பாவ மன்னிப்பின் பலியாக தூக்கில் தொங்கினான் என்று தான் தோன்றியது. அந்த விருந்து பலியை உண்ட அனைவரின் உடலிலும் ஒரு பகுதியாக அவனே கரைந்து விட்டிருப்பதாக நினைத்துக் கொண்டேன். இன்னும் சில இருண்மைகள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் எழுத்துக்களை இன்னும் ஆழ அறியும் போது அது மேலும் எனக்குத் திறக்கலாம். அந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்

இரம்யா

அன்புள்ள ஜெ

விருந்து தன்னையே விருந்தாகக் கொடுத்த ஒருவனின் கதை. தன்னை முன்னால் நின்று அச்சுறுத்திய சாவை அவன் நேருக்குநேராகப் பார்த்துவிடுகிறான். உரித்து கண்முன்னால் தொங்கவிடுகிறான். அவ்வளவுதான் விடுதலை அடைந்துவிட்டான்

சில மோசமான தருணங்களில் நமக்கே இதேபோன்ற அனுபவம் அமைவதுண்டு. எனக்கே அமைந்தது உண்டு. நான் செத்து கிடப்பதை, லாரியில் அடிபட்டுக்கிடப்பதை நானே பார்ப்பேன். அந்த அனுபவம்தான் இந்தக்கதை

செந்தில்குமார்

முந்தைய கட்டுரைஇருளில், ஆமென்பது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎரிசிதை, இழை- கடிதங்கள்