இருளில், ஆமென்பது- கடிதங்கள்

இருளில் [சிறுகதை]

அன்புள்ள ஜெபமோகன்,

துவக்கமும் முடிவும் அறியாத வாழ்க்கை எனும் நெடுஞ்சாலையில் முற்றிலும் தற்பெருக்காக நம்மைத்தீண்டும் பேறாற்றலின் பரம்மாண்டத்தை ஒரு முறை அனுபவித்த பின் மற்றவை எல்லாம் பொருள் இழந்து விடுகறது. அதை அனுபவித்ததால் தானோ நமது சித்தர்களும், ஞானிகளும், பாபாக்களும்  சாதாரண உலகற்கு திரும்ப மனமில்லாமல் அந்த பேரானந்த உணர்வு நிலையாக அமைய தேடி அலைகின்றனரோ ?

நெல்சன்

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன்,

இந்த கடிதத்தை என்னால் எழுத முடியுமா என தெரியவில்லை. காலையிலிருந்து தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு முயன்று பார்ப்போம் எனத் துவங்கி இருக்கிறேன்.

கதையைப் படித்த பிறகு 2 மணி நேரம் ஒரு செயலற்ற நிலையில் எண்ணங்கள் எல்லாம் ஓய்ந்து ஒடுங்கிக் கிடந்தேன்.

இந்த கதை இதோடு முடியவில்லை என்று என் அகம் சொல்கிறது. யாதேவி கதை மூன்று பகுதிகளாக வந்தது போல இதுவும் கூட தொடரும் என்றே நினைக்கிறேன். இது தொடரவேண்டும் என்றும் உள்ளூர விரும்புகிறேன்.

அப்துலுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நிகழ்ந்தது என்னவென்று என்னால் இன்னமும் கூட ஊகிக்க முடியவில்லை. ஆனால் அவனை ஆழமாக பாதித்த ஏதோ ஒன்று அந்த உறவில் இருந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவு. அப்துலுக்கு நிஜத்தில் நிகழ்ந்தது நிஜத்தையும் பாதித்து கனவையும் பாதித்தது. அதனால்தான் கனவில் கூட சோறு என உண்டு மண்ணை துப்பிக் கொண்டே இருக்கிறான். நனவிலும் கனவிலும் யாரோடும் அவனால் கூட முடியவில்லை.

தருணின் அனுபவம் வேறு தளங்களில் வேறு விதமாக ஆன்மிக பூர்வமாக எனக்கு நிகழ்ந்திருக்கிறது. அப்படி நிகழ்ந்த ஒன்றை கனவு என புத்தி வாதிடும் ஆனால் அது நிஜம்தான் என உணர்வு அடித்துச் சொல்லும். தருணைப் பொருத்தவரை அன்று இருளில் நிகழ்ந்த ஒன்று நிஜமாகவோ அல்லது கனவாகவோ எதுவாக இருந்த போதும் அவனின் நிஜவாழ்வை முற்றிலுமாக பாதித்திருக்கிறது.

ஆழ்மனம் குறித்தும் கனவுகள் குறித்தும் இளவயது முதலே நிறைய படித்தும் ஆராய்ச்சி செய்து கொண்டும் வந்திருக்கிறேன். எந்த ஒன்றை தீவிரமாக நம் ஆழ் மனம் விரும்புகிறதோ, எது நிகழ வேண்டும் என்று ஏங்கித் தவிக்கிறதோ, அப்படி ஒன்று நிகழ்வதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறும் இல்லாதபோது, நம் மனம் அதை கனவாக அல்லது உணர்வு காட்சிகளாக(visions) அல்லது ஆழ்மன வெளிப்பாடுகளாக (mental projections)நிகழ்த்திக் காட்டி விடுகிறது.

எனது இருபத்தோரு வயதிலேயே துறவியாக வேண்டும் என்று திடமாக முடிவு செய்திருந்த போதும் உடல் உணர்வுகளுக்கும் உள்ளுணர்வின் வழிகாட்டுதலுக்கும் இடையேயான ஊசலாட்டமாகவே 35 வயது வரையான எனது வாழ்க்கை காலகட்டம் இருந்தது. உடல் உணர்வுகள் உடையக் காத்திருக்கும் அணை போலவும் ஒழுக்க நெறிகளின் மீதான பிடிப்பு அதன் சுவர்கள் போலவும் முட்டிமோதி தவித்த அலைகழிவு பொழுதுகள் அவைகள்.

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை அத்தகைய அதீத கனவு உடலுறவு அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்திருக்கின்றன என்றால் நம்பக்கூட மாட்டீர்கள். இன்றைக்கும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் அவைகள் சாதாரண கனவுகளே அல்ல. அவைகள் அளித்த அனுபவங்கள் நிஜ அனுபவங்களை விட தெளிவானவை தீர்க்கமானவை மூர்க்கமான வை அதீதமானவை. பிரத்தியட்சம் என அந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட நபர்களையும் சூழலையும் என்மனமே கட்டமைத்த விதத்தை எண்ணி எண்ணி இன்று வரை வியந்து கொண்டுதான் இருக்கிறேன். அப்படி ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்தது அந்த மூன்று பெண்களுக்கும் தெரியவே தெரியாது அதை அவர்கள் ஊகித்து இருக்க கூட முடியாது. ஏனென்றால் நான் கூடியது அந்தப் பெண்களின் ஸ்தூல உடலோடு அல்ல. அவர்களாக நானே உருவாக்கிய அவர்களின் சூக்கும உடலோடு. ஜாக்ரத் அவஸ்தையில் அவர்களை தள்ளி நின்று ஒரு உத்தம நண்பனாக நான் அறிந்ததை விட அந்தக் கனவு அவஸ்தையில் மிகத் துல்லியமாக அணு அணுவாக அறிந்து அனுபவித்து இருக்கிறேன். உண்மைதான் கனவில் நிகழ்வனவற்றுக்கு பாவ புண்ணிய கணக்குகள் இல்லைதானே. அந்த வகையில் பார்த்தால் நான் பாவம் செய்யாதவன். ஆனால் கனவில் நிகழ்ந்தது என்ற போதிலும் அனுபவங்களின் தீவிரம் எல்லா வகையிலும் ஜாக்ரத் அனுபவத்திற்கு இணையானது தானே. இதன்படி பார்த்தால் முழுமையான பூரண உடலுறவு அனுபவத்தை கனவில் பெற்றதின் மூலம் நான் ஏதோ ஒரு வகையில் பேறு பெற்றவன் எனலாம் ஏனெனில் அந்த மூன்று பெண்களையும் ஜாக்ரத் அவஸ்தையில் துளி கூட தொடாமல் கனவு அவஸ்தையில் தொட்டு அனுபவித்து அறிந்தவன் தானே. கனவு அவஸ்தைக்கு பாவம் உண்டு என்றால் நானும் பாவியே. கனவு அவஸ்தைக்கு பாவம் இல்லை என்றால் நான் பாவி இல்லை.

அப்துலுக்கு நிஜத்தில் நிகழ்ந்தது கனவிலும் பாதிக்கிறது. தருணுக்கு கனவில் நிகழ்ந்தது நிஜத்திலும் பாதிக்கிறது. அந்த கிளீனர் பையனோ தொடர்ந்து தூக்க நிலையிலேயே இருக்கிறான். கதைசொல்லியையோ ஜாக்ரத் ஸ்வப்ன சுசூப்தி என்ற மூன்று நிலைகளையும் கடந்த துரிய நிலையில் இருப்பவனாக நான் காண்கிறேன். ஒருவன் நிஜத்தை கனவு என்கிறான். மற்றவன் கனவை நிஜம் என்கிறான். கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ஒரு கணம் இருக்கிறது. அந்த இடைப்பட்ட கணத்தில் நிகழ்கின்ற ஒன்றை அத்தனை சுலபமாக வரையறுத்துவிட முடிவதில்லை. கதைசொல்லி அந்த இடைப்பட்ட துரிய நிலையில் எப்போதோ ஒருமுறை வாழ்வில் நிச்சயமாக நின்றிருக்கிறான். அதனாலேயே அத்தனைத் தெளிவாக அவனால் அந்த இருளில் வந்த அவள் உயர்வான ஒரு ஆன்மீக நிலைக்கு சென்றிருக்க முடியும் என்று ஒரு பேச்சுக்கேனும் கூறமுடிகிறது. அந்தக் கதை சொல்லியில் நான் உங்களை கண்டேன் என்பதையும் இங்கே ஒத்துக்கொள்ளவேண்டும்.

தருணுக்கு நிகழ்ந்த அந்த அனுபவம் நிஜத்திலேயே நிகழ்ந்தது என வைத்துக்கொண்டாலும், அவனோடு உறவு கொண்ட அந்தப் பெண்ணின் மனநிலையை பலவாறாக வகுத்துக்கொள்ள முடியும்.

1.சட்டென்று கொண்ட உணர்வு எழுச்சியின் மூலமாக தனது ஆழ் மன ஏக்கத்தை அந்த சூழ்நிலையிலே தருணை பயன்படுத்தி தீர்த்துக்கொண்டாள். அதன் பிறகு முற்றாக அந்த நிகழ்வை கனவு என தன் அகத்தில் வளர்த்து தனது கணவனோடு முன்பைப் போலவே வாழ்ந்து வருகிறாள். வேறு யாரையும் அவள் தேடிப் போகவில்லை.

2. தருண் உடனான உறவிற்கு பிறகு தன் கணவன் உட்பட யாருடனும் கூட முடியாமல் தருணைப் போலவே தவித்து அலைகிறாள்.

3. தருண் உடனான உறவிற்கு பிறகு ஒருமுறை எல்லை கடந்ததால் கிடைத்த விடுதலை மற்றும் சுதந்திரத்தை கொண்டு, எல்லா ஆண்களிலும் தருணின் ஒரு அம்சத்தை தேடி நாளும் அலைந்து, காம நிறைவை நோக்கி தேடுதலோடு வேட்கை கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாள்.

4. தருணுடனான உறவிற்கு பிறகு, தன் கணவனையும் விட்டுப் பிரிந்து ஆன்மீக பூர்வமான தேடலோடு தன்னை விரித்து வேறுவிதமான உயர்நிலைக்கு நகர்ந்து விட்டாள். ஒரு காமம் கடந்த உன்னத நிலை. அனைத்தையும் ஒன்றே எனக் காணும் உயர்நிலை.

என்னிடம் அந்த நாலாவது நிலை குறித்து பகிர ஒன்று உண்டு.

எல்லோரோடும் ஒரு உயர்ந்த பரமானந்த பாவத்தில் தொடர்புகொண்டு தன்னை நாடி வந்தவரை மேல்நிலைக்கு உயர்த்தும் தகைமை கொண்டிருந்த ஒரு அம்மையாரை குறித்த பலர் அறிந்திராத ரகசிய தகவல் இது. நான் உத்தர காசியில் வாழ்ந்த பொழுதுகளில் கேள்விப்பட்டிருக்கிறேன். 1930 காலகட்டங்களில் இந்த அம்மையார் உத்தரகாசி பகுதியிலே ஒரு பத்து ஆண்டு காலம் வாழ்ந்ததாக கூறுகிறார்கள். தன்னுடைய 25 வயது காலகட்டத்தில் அவர் உத்தரகாசி வந்திருக்கிறார். பேரழகியாக இருந்திருக்கிறார். ஒரு பத்து ஆண்டுகள் உத்தரகாசியில் துறவுக் கோலத்தில் வாழ்ந்திருக்கிறார் எனக் கூறுகிறார்கள். காமத்தை வெல்ல முடியாமல் தவித்த அல்லது அதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளான தீவிர ஆன்மீக சாதகர்களுக்கு இவர் பேருதவி புரிந்திருக்கிறார் எனக் கூறுகிறார்கள். இவரை சந்தித்துவிட்டு வந்த பிறகு பல ஆன்மீக சாதகர்கள்மேம்பட்டு உன்னத நிலைக்கு போய் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. மிக உயரிய மாத்ரு பாவனையில் அந்த அம்மையார் அந்த சாதகர்களுக்கு முலையூட்டி அவர்களை குழவி ஆக்கி அவர்களின் ஆற்றலை மடை மாற்றி கனிவித்ததாக கூறப்படுகிறது. அந்த அம்மையாரின் ஸ்பரிசத்திற்கு பிறகு அந்த பாதிக்கப்பட்ட ஆன்ம சாதகர்கள் மிக உயரிய நிலைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதிலேயே தான் வந்த பணி முடிந்து விட்டது எனக் கூறி அவர் கங்கையில் பாய்ந்து விட்டாராம். இதைக் குறித்த மேலதிக குறிப்புக்கள் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு முதிய துறவியிடமிருந்து வாய்மொழி மூலமாகவே இந்த தகவலை நான் பெற்றேன்.

ஆம் மனித மனதுக்கு தான் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன. மரண அனுபவத்திற்குப் பிறகு ஞானியாக வெளிப்பட்டார் ரமணர்.  சில அனுபவங்களின் தீவிரத்தைத் தாங்க முடியாமல், இன்றைக்கும் எத்தனையோ பேர் பித்தர்களாக பைத்தியங்களாக வெளியுலக உணர்வின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் திருவண்ணாமலையில் கூட இன்றைக்கும் ஒரு ஆத்தா அப்படி சுற்றிக்கொண்டிருக்கிறார்.

ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் அந்த ஆன்மிக அனுபவம் அவருக்கு நிகழ்ந்த பொழுது அனைத்துமே அவராக மாறிவிட்டதாக. காண்பான் காட்சி காணப்படுவது என மூன்றுமே கடந்த ஒரு நிலைக்கு சென்றுவிட்டதாக.

பப்பா ராமதாஸ் திருவண்ணாமலையில் ஒரு குகையில் அத்தகையதொரு வாழ்நாள் அனுபவத்தை பெற்றதாகக் கூறுகிறார்.

தருண் சொன்னது போல “சிரிக்காதீர்கள்…. உங்களுக்குப் புரியாத விஷயங்கள் எல்லாம் சிரிக்க வேண்டியதல்ல” என்றுதான் இவற்றை நாம் ஏற்றும் கடந்தும் போக வேண்டியிருக்கிறது.

அதிதீவிர துக்கத்தில் உறைந்து போனவர்கள் எத்தனையோபேர். அதீத இன்பத்தால் அதன் அனுபவத்தால் உறைந்து போனவர்கள் எத்தனையோ பேர்.

இந்த மொத்த கதையுமே எதிர்பாராத ஒரு அனுபவம் என்ற குறியீட்டு தளத்திலேயே நிகழ்வதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு அனுபவம் ஜாக்ரத் ஸ்வப்ன சுசூப்தி என்ற மூன்று நிலைகளில் எதில் வேண்டுமானாலும் நிகழட்டுமே, அந்த அனுபவம் நம்மை எப்படி பாதிக்கிறது என்பதுதான் மிகப்பெரிய முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது.

நான் நினைவுகூர்கிறேன், முதல் முதலாக திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்குள் நான் சென்ற பொழுது ஆலயக் கருவறையில் அர்ச்சகர் உட்பட ஒருவருமே இல்லை. நானும் அகிலாண்டேஸ்வரியும் மட்டுமே, அன்று அங்கு அவள் இருந்ததும் அவள் முன்னிலையில் நான் இருந்ததும் பிரத்தியட்ச அனுபவம். அங்கு எரிந்த விளக்கின் ஒளியில் சுடர்ந்த அவளின் முகம், இன்னதென்று கூறமுடியாத ஒரு மலரின் மணம், என் உடலின் ஒவ்வொரு அணுவிலும் மயிர் கால்களிலும் நிகழ்ந்த ஒரு உணர்வு வெளிப்பாடு. அதை எத்தனை முயன்றாலும் என்னால் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது. அதன்பிறகு நூற்றுக்கணக்கான முறை அந்த அனுபவத்தை நாடி அது கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு அந்த ஆலயத்தை நாடி அகிலாண்டேஸ்வரியின் கருவறைக்கு நான் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் சென்று கொண்டே இருந்தேன். அந்த முதல் அனுபவம் மீண்டும் எனக்கு கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் சென்று வரும்பொழுது எரிச்சலும் விரக்தியும் மட்டுமே மிஞ்சின. இன்றைக்கு இருக்கின்ற அத்வைத புரிதல் இன்றி பக்தியில் உழன்ற எனது ஆரம்ப காலகட்டம் அது.

புத்தூருக்கும் திருப்பதிக்கும் இடைப்பட்ட இடத்தில் சதாசிவகோனே என்கின்ற ஒரு மலை உள்ளது. 2003-ஆம் ஆண்டு ஒரு டிசம்பர் மாதம் பௌர்ணமி நாளில் நான் அந்த மலைக்கு 14 கிலோமீட்டர் நடந்து தனியாகச் சென்றேன். அருவியில் குளித்து ஆனந்தித்த பிறகு அருவிக்கு மேலாக செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஓடையின் ஊடாகவே ஏதோ ஒரு வேகத்தில் மேலேறிக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர யாருமே அங்கு இல்லை. ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் மேலாக நடந்த பிறகு ஒரு இடம் மிகவும் ரம்யமாக இருந்தது. ஒரு பாறையின் மீது அமர்ந்து நான் தியானம் செய்யத் துவங்கினேன்.ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு உணர்வுமேலீட்டால் கண்களைத் திறந்து பார்த்தேன். என்னைச் சுற்றிலும் ஒரு 30க்கும் மேற்பட்ட குரங்குகள் அமர்ந்து என்னையே நோக்கிக்கொண்டிருந்தன. நான் ஒரு வித பய உணர்வுக்கு ஆளாகிவிட்டேன். என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. சரி நடப்பது நடக்கட்டும் என்று கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டேன். ஒரு குரங்கு என் தலையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. எனது இரண்டு தொடைகளிலும் இரண்டு குரங்குகள். என் முதுகின் மீது ஒரு குரங்கு. எனது இரண்டு கால் விரல்களையும் பற்றி இரண்டு குரங்குகள் இழுக்கத் துவங்கின. இரண்டு கைகளையும் பற்றி இரண்டு மூன்று குரங்குகள். என் உடல் முழுவதும் ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம். அதன் காரணம் உச்சகட்ட பயமா என்றுகூட எனக்கு தெரியாது. ஒரு கட்டத்திற்குப் பிறகு என் முழு உடலுமே அந்த அனுபவத்தில் துடிக்கத் துவங்கிவிட்டது. நான் கண்களை திறக்கவே இல்லை. ஒரு பத்து நிமிட நேரம் அவைகள் என்னை ஒரு பொம்மை எனக் கொண்டு வருடி விளையாடிக் கொண்டே இருந்தன. நானோ ஆனந்த அனுபவத்தில் திளைத்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு பேரமைதி.எனக்கு என்ன நிகழ்ந்தது என தெரியவில்லை. நான் தூங்கிவிட்டேனா என்றும் எனக்கு தெரியாது. திடீரென்று விழிப்பு வந்து பார்க்கிறேன் அந்தப் பாறையின் மீது நான் மட்டுமே இருந்தேன். எனது பையும் அப்படியே இருந்தது. அன்று எனக்கு நிகழ்ந்த அந்த அனுபவம் என் வாழ்வில் நிகழ்ந்த உன்னதமான அனுபவங்களில் ஒன்று. இன்று வரையில் அதை ஒரு மாபெரும் வரமாகவே நினைக்கிறேன்.

தருண் அப்படி ஒரு காம அனுபவம் தனக்கு நிகழும் என்று வாழ்க்கையில் என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை.அதனால் அவனுக்கு அன்று அந்த இரவில் நிகழ்ந்த அந்த ஒரு நிகழ்ச்சி பேரதிசயமாகவும் அவன் வாழ்வில் அவனுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குவதாகும் இருக்கிறது.

ஆனால் எனது 13 வயது முதல் 21 வயது வரை அப்படி ஒரு அனுபவம் திடீரென்று எனக்கு நிகழப்போகிறது என்று நம்பி ஏங்கி தவித்திருக்கிறேன். யார் என்றே தெரியாத ஏதோ ஒரு அழகான பெண் திடீரென்று வந்து என்னோடு கூடப் போகிறாள் என்று நான் பல ஆயிரம் முறை ஏங்கி தவித்து இருக்கிறேன். இதை எப்படி விளக்குவது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன. இதுபோல வேறு எவருக்கேனும் இப்படி தோன்றி இருக்கிறதா என்பதையும் நான் அறியேன். ஆரம்பகால அலைதல்கள் தேடல்கள் அறிதல்கள் காலகட்டத்தில், இதுகுறித்து சுவாமி கங்கானந்தர் என்கின்ற 86 வயது முதிய துறவியிடம் மனம் விட்டுப் பேசினேன். அவர் சொன்னார் உச்சகட்ட ஆனந்த அனுபவத்திற்கான, காமத்துக்கான தீவிர ஏக்கமே ஒருகட்டத்தில் தீவிர ஆன்மீக தேடலாக உருமாறுகிறது என்று. மேம்பட்ட ஏதோ ஒன்றிற்கான தேடல் தானே ஆன்மீகம். அவர் மிகச் சரியாக சொன்னதாகவே எனக்கும் தோன்றியது. ஆனால் இன்னொன்றையும் கூட அவர் சொன்னார். இப்படி காமத்திற்கான தேடல் திசைமாறி ஒரு மனிதனை சீரழிவு பாதையில் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகளும் மிக அதிகமாக உள்ளன என்று. ஏதோ ஒரு பெரும் கருணையினால், மாபெரும் இயற்கை சக்தியினால், இலக்கை நோக்கி கணம் கணம் என நகர்த்தப்பட்டதாகவே நான் நம்புகிறேன். இன்று காமம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல ஆனால் காமம் மட்டுமே எண்ணங்களாக மனம் முழுவதும் வியாபித்து இருந்த ஒரு காலமும் எனக்கு இருந்தது. எனது தீவிர ஆன்மீக தேடுதலுக்கு அது ஏதோ ஒரு வகையில் அடித்தளமாக இருந்தது என்பதை இன்று திரும்பிப் பார்க்கையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. ஆம் அது அவ் வண்ணம் இருந்தது அவ்வளவுதான்.இதில் வெட்கப்படவோ வேதனைப்படவோ ஒன்றுமில்லை.

துறவு மேற்கொண்டு 9 ஆண்டுகளாக எத்தனையோ முயன்று என்னென்ன விதமாகவோ ஆத்ம சாதனைகளை தொடர்ச்சியாக செய்தும் குறிப்பிடத்தக்க நிறைவு ஏற்படாமல் நான் தவித்துக் கொண்டிருந்த காலம். மணிக்கணக்கில் அமர்ந்து தியானம் செய்ய முயன்று கொண்டிருந்தேன். தினம் தினம் எல்லாம் வல்ல பரம்பொருளிடம் இரஞ்சி கதறி அழுதிருக்கிறேன். ஏன் இன்னும் எனக்கு ஆன்மீக நிறைவு ஏற்படவில்லை என்று மன அழுத்தத்தோடு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்பொழுது ஒரு நாள் எனக்கு ஒரு கனவு வந்தது. அதைக் கனவு என்று கூட குறிப்பிட முடியுமா என்று தெரியவில்லை. தூக்கத்திற்கும் கனவிற்கும் இடையேயான ஒருவிதமான ஆழ் நிலை அனுபவம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மிகச்சிறிய ஒரு ஒல்லியான நபர் மட்டுமே செல்லக்கூடிய ஒரு மலையிடை குகை போன்ற துவாரத்தின் முன்பாக

நின்று கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னாலிருந்து கோடிக்கணக்கான மக்கள் அந்த துவாரத்தின் வழியாக முட்டிக்கொண்டு செல்ல

அழுத்துகிறார்கள். எனக்கு முன்பாக அந்த துவாரத்தை கடக்க ஒரு மூன்று பேர் இருக்கிறார்கள். அந்த மலை துவாரத்திற்கு அடுத்த பக்கமாக என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எனக்குப் பின்னாலிருந்து அழுத்தியவர்களின் அழுத்தம் காரணமாக எனக்கு முன்னால் இருந்தவர்கள் துவாரத்தை கடந்து மறுபக்கம் செல்கிறார்கள். என்னுடைய முறை வந்து நான் துவாரத்தில் நுழைந்தவுடன் அதில் சிக்கிக் கொள்கிறேன். முன்பாகவோ பின்பாகவோ நகர முடியவில்லை. எனக்கு முன்பாக மலையின் அடுத்த பக்கம் கோடிக்கணக்கான மக்கள் அழுந்தி குவிந்து என்னை துளி கூட முன்னகர விடாமல் அடைத்து கிடக்கிறார்கள். எனக்குப் பின்னாலிருந்து கோடிக்கணக்கான மக்கள் என்னை முன்னகர அழுத்துகிறார்கள். நான் பிதுங்கி நசுங்கி மூச்சுமுட்டி மரணத்தின் விளிம்பில் நிற்கிறேன். ஓ என்று கதறுகிறேன். எதுவுமே செய்ய முடியாத ஒரு பேரழுத்தத்தில் மாட்டி தவிக்கிறேன். கிட்டத்தட்ட மரணம். இறைவா என்னை காப்பாற்று என்று கதறுகிறேன். எங்கிருந்தோ ஒரு குரல்,”எழுந்திருடா இது கனவுதான் பார்”என்றது. சட்டென விழித்துக் கொண்டேன். உடல் முழுவதும் வியர்த்து நனைந்து இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், படுக்கை சிறுநீரால் நனைந்து சிறிது சுக்கில வாடையோடு பிசுபிசுப்பாகவும் ஆகிவிட்டிருந்தது. படுக்கையில் சற்று மலம் கூட கழிந்திருந்தது. அந்த கணத்தில் ஒரு மாபெரும் விடுதலை உணர்வை அனுபவித்தேன். அந்தக் கனவு அல்லது மனக்காட்சி அனுபவத்திற்கு பிறகுஎனது ஆன்மிக வாழ்க்கையே முற்றாக மாறிவிட்டது. நிகழ்வுகளை இலகுவாக எதிர்கொள்ள முடிந்தது. தியானம் என்பது ஒரு முயன்று செய்கின்ற செயல்பாடாக இல்லாமல் இனிய மனதுக்கு உகந்த செயலாக மாறிவிட்டது. அந்த அனுபவத்திற்கு பிறகான கடந்த 4 ஆண்டு வாழ்தல் என்பது கொண்டாட்டமாக தான் சென்று கொண்டிருக்கிறது. அன்று அந்த கனவில் அல்லது காட்சியில் நிகழ்ந்தது என்ன என்பதைக் குறித்து நான் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை ஆனால் அது என்னை மிகவும் இலகுவாக்கி விட்டது என்பது மட்டும் சத்தியம்.

எத்தனை பெரிய எத்தனை உன்னதமான ஆன்மீக அனுபவமாக இருந்தாலும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற உயரிய புரிதலுக்கு இன்று நான் வந்துவிட்டேன். இப்படி நிகழ வேண்டும் அப்படி நிகழ வேண்டும் இந்த அனுபவம் வேண்டும் அந்த அனுபவம் வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளே எல்லா துயரங்களுக்கும் காரணம் என்ற தெளிவு வந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் தியானத்திற்கு அமரும் பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எந்தவித இலக்கும் இல்லாமல் வெறுமனே சும்மா என்னால் அமர முடிகிறது. எது நிகழ்கிறதோ எது வருகிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இந்த மனநிலைதான் நீடித்த அமைதியை அளிக்கிறது. இது போதும் எனக்கு. இதுவே நான் தேடியது என்ற புரிதலுக்கும் வந்துவிட்டேன். தியானத்தை தியானத்தின் பொருட்டே வெறுமனே செய்கிறேன். அறிவதற்கும் அடைவதற்கும் அனுபவங்கள் வேண்டும் என ஏங்கி மனம் எதையும் நாடுவதில்லை.  புதுப்புது மற்றும் உன்னத ஆன்மீக அனுபவங்களுக்கான ஏக்கம் எப்பொழுதும் தியானத்திற்கு தடையாகவே அமைகிறது என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.

நேற்று காலை எழுதத் துவங்கி இன்று மாலை இந்த கணம் வரை எனக்கு தோன்றிய எதையெதையோ கொஞ்சம் கொஞ்சமாக எழுதிவிட்டேன். இத்தனை நினைவுகளை உங்கள் இருளில் கதை என்னுள் எழுப்பி விட்டது. மற்றவர்களுக்கு எப்படி புரிபடுகிறதோ இந்த கதை நான் அறியேன் ஆனால் எனக்கு இது ஒரு சூட்சுமமான ஆன்மிக கதையாகவே படுகிறது. ஏனோ இவற்றையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள எனக்கு தோன்றியதால் பகிர்ந்து கொண்டேன். ஒரு கதைக்கான கடிதமாக இவற்றையெல்லாம் எழுதலாமா எழுதக்கூடாதா என்பது எனக்கு இன்னமும் குழப்பமாகவே உள்ளது. ஆனால் இவைகள் எவ்வகையிலேனும் ஆன்மீகத் தேடல் உள்ள யாருக்கேனும் பயன்படக்கூடும் என்கின்ற ஒரு எண்ணமும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனது உள்ளத்தை உங்களோடு பகிர்ந்து கொண்ட மன‌நிறைவோடு இந்த கடிதத்தை முடிக்கிறேன்.

இப்படி ஒரு உன்னத கதை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். உங்களைத் தவிர வேறு யார் இன்று தமிழில் இப்படி ஒரு சூட்சுமமான கதையை எழுத முடியும்! உங்களின் குரு நித்ய சைதன்ய யதியின் அளப்பறிய ஆசிகளும் கருணையும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதை, நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் முற்றாக வெளிப்பட அளப்பரிய ஆற்றலை அளிப்பதை என்னால் மிக நன்றாக உணர முடிகிறது.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

ஆமென்பது[ சிறுகதை]

 

அன்புள்ள ஜெ

ஆமென்பது ஒரு முழு வாழ்க்கைச் சித்திரம். இது உண்மைக்கதை என்று தோன்றுவதனாலேயே ஆழமான படபடப்பை உருவாக்குகிறது. எதற்காக இந்தப் பரிதவிப்பு? அரசியலில் சமூகவியலில் எதையெதையோ கண்டு போரிட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் போரிடவேண்டியது அவருக்குள் இருந்த அந்த ஏக்கத்திடம். அதற்கு மறுமுனையாக எடுத்துக்கொண்ட வஞ்சத்திடம். அதைச் செய்யவில்லை. அதை அப்படியே மூடிவைத்துவிட்டார். அரசியல் எல்லாம் தீயின்மேல் வைக்கோலை கொட்டுவதுபோலத்தான். தன்னை அறிவது என்பது உண்மையில் தன்னுடைய ஆசை என்ன ஏக்கம் என்ன பகைமை என்ன என்று அறிந்துகொள்வதுதான்

 

ராஜேஷ் எஸ்

அன்புள்ள ஜெ,

தங்களின் “ஆமென்பது…” சிறுகதை வாசித்தேன். முதல் வாக்கியத்திலேயே ஆவலோடு உள்நுழைந்துவிட்டேன். “எண்ணங்கள், சொற்கள், எழுத்துக்கள்”. ஆம், நாம் “எண்ணுவது” கோடி என்றால் , சொல்வது லட்சம், எழுதுவது வெறும் ஆயிரம் கூட இருக்காது.

நாம் எதை எழுத வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதை எழுதலாம் அல்லது எழுதாமல் இருக்கலாம். அதைப்போலவே சொல்வதையும். ஆனால் நாம் எதை நினைக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியுமா. ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் உள்ள பாலம் எது. அந்த பாலம் எதனால் ஆனது. யார் கட்டுப்படுத்துவது. எண்ணங்களுக்கு இடையில் தொடர்பு உண்டா? அல்லது அவை தனித்தனி உலகத்தில் உள்ளவையா. சில சமயம் நினைத்துபப்  பார்த்தால், நாம் காலமெனும் சட்டத்தில் மட்டுமே எண்ணங்களை ஏற்றுகிறோம் என்றே தோன்றுகிறது. காலம் என்பது இல்லை என்றால் எண்ணங்களுக்கு எந்த பொருளும் இல்லை.

கே.வி.ஜயானன் அவர்கள் தன் வாழ்க்கை பூராவும் ஒரு பிடிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். நோயுற்ற பிறப்பு, தாயின் இறப்பு, தந்தையின் புறக்கணிப்பு. இவை அனைத்தும் தனக்கு கிடைக்காததால், இவற்றை புறக்கணிக்கும் அனைத்து செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்க்கொள்கிறார். திருமணம் செய்து கொள்ளும்போது கூட, அதை வெறும் ஒப்பந்தமாகவே நினைத்தார். கதையில் அவரும் அவர் மனைவியும் பிரியும் தருணம் தான் உண்மையில் அவர் அனைத்தையும் தன் ஆழ் மனதில் இருத்திவைத்து அதற்கு நேர் எதிராகவே அனைத்து செயலையும்செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அப்படி செய்யவில்லை என்றால்  அவரால் எந்த ஒரு செயலையும் செய்திருக்க முடியாது.

அவரை வாழ வைத்தது எல்லாம் “இரு ஸ்டாலின்”கள் மட்டுமே. அதுவே அவரின் வாழ்க்கையின், சிந்தனையின், எழுத்தின் ஆணிவேர். அதனால் தான் சோவியத் ருஷ்ய உடைந்தபோது தானும் உடைந்து விட்டார். அந்த பிம்பம் நேர்மறையாக இருந்தாலும் , எதிர்மறையாக இருந்தாலும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அதுவே ஒருவரின் வேர். அப்பிம்பம் உடையும் போது, தானும் உடைந்து போகிறான்.

சிறு வயது முதலே கண்ட புறக்ககணிப்பு அவரை அனைத்தின் மீதும் ஒரு பகடிப் பார்வைக் கொள்ள வைக்கிறது. அதுவும் ஒரு இருத்தலியியலே. பிடிப்பு இருந்தால் தானே ஏமாற்றம் வரும். உறவுகளின் , உணர்வுகளின் மேல் மீது எழும் அவ நம்பிக்கை, வேறு ஒரு தூணைப் (பகடி) பற்றிக்கொண்டு தன் இருப்பை காட்டிக்கொள்கிறது. அது அவருடைய தடித்த கண்ணாடியின் உணர்வு. அந்த தடிமம் தன் இருப்பை காப்பாற்றிக் கொள்ள தேவையாக உள்ளது. ஆனால் ஆழ்மனதில் வெறும் சிறகாகவே அது உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏங்கிக்கொள்கிறது. தன் மகன் கையால் செய்யும் இறுதிச் சடங்கே அவரை அந்த ஏக்கத்திலிருந்து விடுபட வைக்கும்.

அவரின் மகனுக்கு அவர் மேல் பிடிப்பில்லை. தன் தந்தைக்கு செய்யும் சடங்கில் நம்பிக்கை இல்லை. தந்தையைப் போலவே அவனும். அவன் அப்படி ஆக இவரும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத தந்தையின் பாசத்தை (தன் இருத்தலியல் காரணமாக) தன் பிள்ளைக்கு இவர் கொடுக்கவில்லை. ஆனால் அதையே அவர் அவனிடம் கடைசியில் எதிர்பார்க்கிறார். இவரின் தந்தை கடைசியில் இவரை எண்ணி ஏங்கியது போல. ஏன் இவ்வாறு சக்கரமாக புறக்கணிப்புகளும் எதிர்பார்ப்புககும் நடந்து கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் “தான்” என்னும் எண்ணதிலிருந்தே தொடங்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி `தான்` என்ற எண்ணத்தை விடுத்து உலகியலில் ஒன்றி இருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. அனைத்தும் “பிரதிகிரகை” தலை அசைப்பில்தான் உள்ளதோ.

நம் செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே “நாம்” என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன் உள்ள “எண்ணங்களே” இவற்றுக்கு காரணம். அந்த எண்ணங்களை தீர்மானிப்பதும் நம் “செயல்கள், சொற்கள் , எழுத்துக்களே” ஆகும். இது ஒரு சக்கரம் போன்றது என்றே தோன்றுகிறது.

அன்புடன்,

பிரவின்,

தர்மபுரி

முந்தைய கட்டுரைநகை [சிறுகதை]
அடுத்த கட்டுரைகந்தர்வன், விருந்து- கடிதங்கள்