நிறைவிலி [சிறுகதை]

டாப்ஸ் ஆன் கபேயில் நான் என் நண்பர் பரிந்துரைத்த பெண்ணுக்காக காத்திருந்தேன். எங்கள் நிறுவனம் இந்த ஆண்டுடன் ஐம்பதாண்டு நிறைவுசெய்கிறது. அடுத்த ஆண்டு முழுக்க நாங்கள் நடத்தும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், அதையொட்டிய ஆடம்பர விருந்துகள், நான்கு மாநாடுகளை ஒருங்கிணைப்பதற்கான குத்தகையை எடுத்திருந்த கார்டியல் நிறுவனத்தின் மக்கள்தொடர்பாளர் அந்தப்பெண். பகா ராய் என்று பெயர். அந்தப்பெயரை நான் அதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை.

காலையில் ஒரு சந்திப்பு முடிந்துவிட்டது. இதையும் முடித்துவிட்டு நான் கிளம்பி மாதுங்காவில் ஒரு கருத்தரங்குக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஒருமுறை அழைத்துவிட்டார்கள். நான் அதன் மைய உரையாற்றுபவன். எங்கள் தலைமைநிர்வாகி சிறப்பு விருந்தினர்.

எட்டுநாட்களாக  நான் மும்பையில் அந்த நட்சத்திர விடுதியில்தான் தங்கியிருந்தேன். ஷெரட்டன் குழுமத்து விடுதி. அந்த குழுமவிடுதிகளின் எல்லா அறைகளும் ஒன்றுபோலவே இருக்கும். ஆகவே நிரந்தரமாக ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிறைவை அடையமுடியும். அரைத்தூக்கத்தில்கூட நடமாட முடியும். வேறுவேறு வகையான விடுதிகளில் தங்கி சலித்துப்போகும்போது நாம் செல்லுமிடங்களில் எல்லாம் நம் இல்லத்தை எதிர்பார்க்கிறோம். ஆகவே நான் ஷெரட்டனைத்தான் எப்போதும் தேர்ந்தெடுப்பேன்.

காலை பத்துமணியுடன் இங்கே காலையுணவு முடிந்துவிடும். அதன்பின் மாலை நான்கு மணிவரை பெரும்பாலும் எவருமே இருக்க மாட்டார்கள். ஒரு காபியுடன் எவரை வேண்டுமென்றாலும் இங்கே சந்திக்கலாம். கருஞ்சிவப்புச் செயற்கைத் தோலுறையிடப்பட்ட வசதியான பெரிய மெத்தை நாற்காலிகள். வெண்ணிறமான மேஜைப்பரப்புகள். பின்னணி ஓசை என்று மெல்லிய இசை மட்டும்தான் இருக்கும். கையை தூக்கினால் மட்டுமே வெயிட்டர் வந்து நிற்பார். ஓசையில்லாத நடமாட்டம் கொண்ட வெள்ளை ஆடை உருவங்கள்.

இதமான வெளிச்சம். மிகப்பெரிய கண்ணாடித்திரைக்கு அப்பால் புல்வெளியும் சீரமைக்கப்பட்ட பசும்புதர்களும் பூச்செடிகளும் குட்டை மரங்களுமாக தோட்டம் பகல்வெளிச்சம் பொழிந்து ஓவியம்போலத் தெரியும். அங்கே நூற்றுக்கணக்கான சிறிய மண்கலங்களை வரிசையாக கட்டியிருக்கிறார்கள். அவற்றில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டியிருக்கின்றன. கண்ணாடிக்கு இப்பால் அவற்றின் ஓசை கேட்பதில்லை, அவை ஒளியை சிறகுகளால் துழாவியபடி பறந்து சுழல்வதை மட்டும் பார்க்கலாம். வெறுமே இங்கே அமர்ந்து அந்த கண்ணாடிப்பரப்பை பார்த்துக்கொண்டிருப்பதுகூட எனக்குப் பிடிக்கும். மேலும் நான் ஒரு காஃபி அடிமை.

இங்கே கிடைக்கும் தரமான காபி அரிதானது. மென்துணியானால மெத்தை உறையால் மூடப்பட்டு அது கொண்டுவரப்படும். உறையை நீக்கியதும் எழும் புதிய காபிக்கொட்டையின் மணம் அளிக்கும் கிளர்ச்சி உடலெங்கும் பரவுவது. காபியை வேறெங்கோதான் வறுத்து அரைக்கவேண்டும். காபி அரைக்கப்பட்டு வடிகட்டப்படும் மணத்தை உணர்ந்தபின் அந்தக் காபியை குடிப்பது அனுபவம் தணியும் நிறைவின்மையை அளிப்பது. எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழ்வதுபோல மேஜையில் காபியின் மணம் எழவேண்டும். அந்த வெண்ணிறத் துணியுறை ஒரு முறுக்கிக்கொண்ட மலர். அதன் இதழ்கள் மொக்கவிழ எழுவது வானுலகத்து நறுமணம்.

என் செல்போன் சிணுங்கியது. “ராம்” என்றேன்.

“சாரி, இது பஹா ராய். ஸ்ரீ ராம்சந்த் ராய் என்னைப் பற்றிச் சொல்லியிருப்பார்”

“ஆமாம், உனக்காகத்தான் காத்திருக்கிறேன். உள்ளே வா. ரிசப்ஷனில் என் பெயரைச் சொல். நான் இங்கே முதல்நிலையில் பின்பக்கம் தோட்டத்திற்கு அருகில் டாப்ஸ் ஆன் கஃபேயில் இருக்கிறேன்…”

“பத்துநிமிடம் சார்”

“சார் வேண்டாம். என்னை ராம் என்று கூப்பிடு”

“ஷ்யூர் சார், ராம்” மெல்லிய சிரிப்பு.

நான் இடக்கையால் மேஜையில் தட்டிக்கொண்டு வலக்கையால் குறுஞ்செய்திகளையும் மின்னஞ்சல்களையும் பார்த்துவிட்டு செல்பேசியை ஒலியின்மை ஒழுங்கில் அமைத்து பையில் போட்டுக்கொண்டேன். கைகளை கட்டியபடி அமர்ந்திருந்தேன். அப்பால் நீண்ட இடைநாழி வழியாக பகா ராய் வருவது தெரிந்தது. சிறிய உருவம், சிறுமியைப்போலவே இருந்தாள். கையில் ஒரு பெரிய ஆடம்பரப் பை. குதிகால் கூர்ந்த செருப்பு அளிக்கும் கொக்கு நடை.

அவள் வருவதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்ப்பதை அவளும் பார்த்துவிட்டிருந்தாள். நான் எதிர்பார்த்திருந்ததுபோல மும்பையின் வழக்கமான பெண்ணுருவம் அல்ல. இங்கே பெரும்பாலான பெண்கள் கூர்மையான மூக்கும், சிறிய உதடுகளும், சிறுகுழிக்குள் அமைந்த கண்களும் அமைந்த சிறிய முகம் கொண்டவர்கள். சிறிய தோள்கள், சிறிய மார்புகள், சிறிய இடுப்பு என ஒரு செப்புப்பொம்மையின் தன்மை இருக்கும். கூந்தலை நீவி செஞ்சாயமிட்டு நீட்டி, கண்களில் மையிட்டு, ரத்தச்சிவப்பாக லிபஸ்டிக் பூசி, மெல்லிய விரல்களில் நகச்சாயங்களுடன் அந்த பொம்மைத்தன்மையை கூட்டிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் இவள் கருப்பாக வட்டமுகத்துடன் இருந்தாள். கூந்தலை நீட்டி தோளில் இட்டிருந்தாள். வெள்ளைநிறமான  காலர் வைத்த மேல்சட்டையும் நீலநிறமான ஜீன்ஸும் அணிந்திருந்தாள். நல்ல கருப்பு முகம், அதை பளபளப்பாக்கும் ஏதோ பூசியிருந்தாள். லிப்ஸ்டிக் நிறமற்றது. கண்களில் மை இல்லை. காதுகளில் பெரிய வெள்ளிவளையங்கள். கைகளில் பாசிமணிகளாலான எதையோ அணிந்திருந்தாள். ஒரு வெள்ளி மோதிரம்.

நான் எழுந்து “வெல்கம், ஐயம் ராம் சந்தீப்” என்றேன்.

அவள் அருகே வந்து “ஹாய், நான் பகா ராய்” என்று கையை நீட்டினாள்.

நான் அவளுடைய மென்மையான சிறிய கையை பிடித்து குலுக்கி “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்றேன்.

“தேங்க் யூ” என்று அவள் அமர்ந்துகொண்டாள்.

“நீங்கள் ஹிந்தி பேசுவீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

“பேசுவேனே, ஏன்?”

“இல்லை, தென்னிந்தியச் சாயல் இருந்தது.”

“இல்லை, நான் வடக்குதான்.”

“மன்னிக்கவும்” என்று நான் இந்திக்கு மாறிக்கொண்டேன். “என்ன சாப்பிடுகிறீர்கள்? இங்கே காஃபி கிளாசிக் சுவையுடன் இருக்கும்…”

“நான் காபி சாப்பிடுவதில்லை.”

“ஓ, எவ்வளவு பெரிய இழப்பு. பரவாயில்லை. வேறு என்ன? பழச்சாறு?”

“ஆமாம், எனக்கு ஒரு தர்பூசணிச் சாறு.”

“நல்லது” என்று கையை தூக்கினேன். வெயிட்டர் வந்து நின்றான். நான் எனக்கு ஒரு காஃபியும் அவளுக்கு பழச்சாறும் சொன்னேன்.

அவள் கண்களால் டாப்ஸ் ஆன் கஃபேயைச் சுற்றிப் பார்த்தாள். கண்ணாடிப்பரப்புக்கு அப்பால் பச்சை ஒளியுடன் இருந்த தோட்டத்தைப் பார்த்துவிட்டு “நைஸ் பிளேஸ்” என்றாள்.

“ஆமாம், இந்தவகையான அறைவடிவமைப்புதான் இன்றைக்கு புகழ்பெற்று வருகிறது. வீட்டுக்குள் இருக்கும் எல்லா வசதியும் வேண்டும். ஆனால் வெளியே தோட்டத்தில் அமர்ந்திருக்கும் உணர்வும் வரவேண்டும்… இங்கே உட்கார்ந்து அந்தச் சிட்டுக்குருவிகளை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்”

அவள் முகம் மலர்ந்தது. “நர்சரிக் குழந்தைகளைப் போல சண்டை போடுகின்றன” என்றாள்.

“ஆமாம், அருமையான உவமை” என்று நான் சொன்னேன்.

அவள் முகம் சட்டென்று இறுகியது.

“என்ன?” என்றேன்.

“ஒன்றுமில்லை” என எழுந்துகொண்டாள். “நாம், அங்கே அமர்ந்திருக்கலாமே”

“ஏன்?”

“இல்லை”

நான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு “சரி” என்றேன்.

அவள் எழுந்து சென்று இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள். ஏற்கனவே அவள் அமர்ந்திருந்த திசைக்கு முதுகைக் காட்டியபடி. நான் அவள் எதிரே அமர்ந்தேன். அவள் ஏன் திரும்பிக்கொண்டாள் என்று பார்த்தேன். அங்கே ஒன்றுமில்லை. வெற்றுச்சுவர், அதில் சில கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள், மூங்கிலால் ஆன அலங்காரங்கள் அவ்வளவுதான். வாசல்கூட இல்லை.

காபியும் பழச்சாறும் வந்தது. “எடுத்துக்கொள்” என்றேன்.

அவள் “நன்றி” என எடுத்துக்கொண்டாள். நிதானமடைந்துவிட்டிருந்தாள்.

“நீ இந்தவகையான ஓட்டல்களுக்கு வந்ததில்லையோ? உன்னை சிரமப்படுத்தவேண்டாம் என்றுதான் இந்த இடத்தைச் சொன்னேன்.”

”இல்லையில்லை, நான் எல்லா சந்திப்புகளையும் நட்சத்திரவிடுதியில்தான் செய்கிறேன்… ஷெரட்டனுக்கே பலமுறை வந்திருக்கிறேன். இந்த கஃபேக்கு இப்போதுதான் வருகிறேன்.”

“நல்லது” என்றேன்.

“நான் ஃபைல்களை கொண்டுவந்திருக்கிறேன். எங்கள் பிராஜக்ட் என்ன, எஸ்டிமேட் என்ன, பட்ஜெட் என்ன எல்லாமே இதில் உள்ளது..” என்று ஒரு ஃபைலை எடுத்து வைத்தாள். சிறிய ஃபைல்தான். ஆனால் அழகான சிவப்புப் பிளாஸ்டிக் உறையுடன் இருந்தது.

“அதை நான் பிறகு பார்த்துக்கொள்கிறேன். முதலில் எல்லாவற்றையும் நேரடியாகச் சொல். சொல்லும்போதுதான் உண்மையான அர்த்தம் தெரியவருகிறது.”

“சொல்கிறேன்” என்று அவள் புன்னகைத்தாள். முதல்முறையாக அவள் முகத்தில் ஒரு குழந்தைத்தன்மை வெளிப்பட்டது. அவள் சிரித்தபோது கன்னத்தில் விழுந்த குழியும், கண்கள் சற்றே இடுங்கியமையும்தான் அதற்குக் காரணம் என்று தெரிந்தது. நெற்றியில் விழுந்த முடியை நீவி ஒதுக்கிவிட்டு “எங்கள் நிறுவனம் இந்தியாவிலேயே சிறந்த வரவேற்பாளர்களை அளிக்கிறது என்று சொல்ல மாட்டேன். அது மிகை. ஆனால் அப்படி எங்கள் வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள்” என்றாள்.

நான் சிரித்துவிட்டேன். அவளும் சிரித்து “வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. மும்பையில் இந்த ஐடியாவுக்கே நாங்கள்தான் முன்னோடிகள். ஏழாண்டுகளுக்கு முன்பு சிறியதாக இது ஆரம்பிக்கப்பட்டது அப்போது இப்படி ஒரு தேவை இருப்பதே எவருக்கும் தெரியவில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு மாதம் நாற்பது நிகழ்ச்சிகளுக்குமேல் இருக்கின்றன. நிரந்தர ஊழியர்கள் ஐம்பதுபேர் இருக்கிறார்கள்.”

அவள் அதே புன்னகையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் “இப்போது எங்களிடம் ஐந்தாயிரம் முகங்கள் இருக்கின்றன. எல்லா வகையிலும் உள்ளவர்கள். இளம் ஆண்கள், அழகான இளம்பெண்கள். எல்லா சமூகநிலைகளிலும் எங்களிடம் முகங்கள் இருக்கின்றன. வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் கிழக்குப் பகுதி மக்கள் ஆங்கிலோ இந்தியர்கள்…. உங்கள் தேவைக்கு ஏற்ப ஆட்களை அனுப்புவோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதற்கேற்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.”

“கல்லூரி மாணவர்கள்தான் மிகுதியும். அவர்களுக்கு இது பகுதிநேர வேலை. நாங்கள் அழகு, தோரணை எல்லாம் பார்த்துத்தான் ஆளை எடுப்போம். அவர்களுக்கு இரண்டுமாதப் பயிற்சி கொடுப்போம். மொழிப்பயிற்சியும் நன்னடத்தைப் பயிற்சியும் இடர்சமாளிப்புப் பயிற்சியும் உண்டு. அதற்கே நிறைய முதலீடு செய்கிறோம். அவர்களுக்கு மாதம் மூன்று நிகழ்ச்சிகளுக்காவது அழைப்பு அனுப்புகிறோம். அது ஒரு நல்ல ஊதியம் அவர்களுக்கு. மாணவர்கள் படிப்பை முறிக்காமலேயே வேலைசெய்து பணமீட்டலாம். ஆகவே நடுத்தரவர்க்கப் பெண்கள் மட்டுமல்ல உயர்குடிப்பெண்களும்கூட வருகிறார்கள்.”

“சீருடை அணிந்திருப்பார்களா?”

“சீருடை வேண்டுமென்றால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே அதை வடிவமைத்து அளிக்கவேண்டும்…”

“எங்கள் செலவில்?”

“ஆமாம், அது ஒப்பந்தத்திலேயே உள்ளது” என்றாள். “ஆனால் இந்த சேவையே சீருடை அணியாமல் பணியாற்றுபவர்கள் தேவை என்பதனால்தான். பெரும்பாலும் யாரும் சீருடை வேண்டுமென்று சொல்வதில்லை. வீட்டு நிகழ்ச்சிகளிலேயே கூட விருந்தினர் போலவோ குடும்ப உறுப்பினர் போலவோ தோற்றமளிப்பவர்கள் வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்”

“ஆமாம், அது வேறொரு உணர்வை உருவாக்குகிறது…” என்றேன்.

“எங்கள் பணியாளர்கள் தங்களை ஊழியர்கள் என்று சொல்லமாட்டார்கள், தன்னார்வலர் என்று சொல்வார்கள். நல்ல உயர்தர உடைகளும் ஆபரணங்களும் அணிந்திருப்பார்கள். சீருடை அணிந்த ஊழியர்களிடம் தோன்றாத நெருக்கமும் மதிப்பும் இவர்களிடம் தோன்றும்… பலர் உயர்படிப்பு படித்தவர்கள், படித்துக்கொண்டிருப்பவர்கள். முனைவர் பட்ட ஆய்வுசெய்பவர்களே எழுபத்தேழுபேர் உள்ளனர்.”

“நல்லது” என்றேன் “உண்மையில் எங்களுக்கும் அப்படிப்பட்டவர்கள்தான் தேவை… எங்கள் நிறுவனம் பற்றியும் எங்கள் விருந்தினர்களைப்பற்றியும் ஓர் அறிமுகம் அவர்களுக்கு இருந்தால் நல்லது.”

“அது சிறப்புச் சேவை, ஆனால் அதற்கான ஆட்கள் நிறையபேர் இருக்கிறார்கள். உங்களுக்கு முழு நிறைவு ஏற்படும்.”

“இவர்கள் உங்கள் முழுநேர ஊழியர்களல்ல என்றால் இவர்களின் நடத்தைக்கு யார் பொறுப்பு?” என்றேன்.

“இவர்கள் அனைவரிடமிருந்தும் ஒரு பாதுகாப்புத்தொகையை வாங்கியிருக்கிறோம். ஏதாவது சிக்கலென்றால் அந்தப்பணம் இழப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தம். எங்கள் நிரந்தர ஊழியர்கள் இருந்து நேரடியாக கண்காணிக்கவும் செய்வார்கள்.”

“எங்கள் விருந்தினர்கள் பாதிக்குமேல் வெளிநாட்டவர்கள்…”

“சரியான உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவர்கள் எங்களிடம் உண்டு. பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபு, ஜப்பானிய மொழி பேசுபவர்கள்கூட இருக்கிறார்கள்.”

“கட்டணம்?” என்றேன்.

“மொத்த நிகழ்ச்சிக்கும் சேவைக்குத்தகை எடுப்பதுதான் எங்கள் வழக்கம்… அது பேரம்பேசத்தக்கது” அவள் மீண்டும் புன்னகைசெய்தாள்.

நான் நீண்ட மூச்சுடன் கைகளைக் கோத்துக்கொண்டேன். சூட்டிகையான பெண் சூட்டிகையானவள். ஆனால் எந்த எல்லைவரை பொறுமை தாங்கும் என பார்த்தாகவேண்டும்.

“ஆனால் நீ விருந்துகளில் வந்து நிற்க மாட்டாய் என நினைக்கிறேன்.”

“இல்லை, நான் மக்கள்தொடர்பு மட்டும்தான் செய்கிறேன்.”

“மக்கள் தொடர்புக்கு உன் தோற்றத்தில் ஒருவர் வருவது ஆச்சரியம்தான்… தென்னிந்தியாவில் உன்னை விரும்புவார்கள்” என்றேன்.

”ஆமாம் ராம், ஆனால் வட இந்தியாவிலும் விரும்புகிறார்கள். நான் இந்த நிறுவனத்தில் நுழைந்தபோது இருந்த வியாபாரத்தை என் முயற்சியால் இருபது மடங்காக ஆக்கியிருக்கிறேன்.”

”ஓ” என்றேன்  “உன் வழி என்ன?”

“பொழிவது, கொட்டி மூடுவது… இருபதுபேர் போனால் போதும் என்ற இடத்தில் நாற்பதுபேரை அனுப்புவேன்.”

“ஓ” என்றேன்.

“இந்த விழாக்களெல்லாமே கொண்டாட்டமானவையாக இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள். அதிகம்பேர் வந்து ஓடியாடினால் நிறைவடைகிறார்கள்… ஆனால் எங்கள் ஊழியர்களை மிகச்சிறப்பாக உடையணிந்து செல்லவைப்பேன். ஆகவே அவர்களை எடுபிடிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது.”

“ஆனால் நீ மக்கள் தொடர்புதான் செய்கிறாய்” என்றேன். “நீ வியாபாரம் பேசச்சென்றால் வருபவர்கள் உன்னைப்போன்ற தோற்றம் உடையவர்கள் என்று நினைப்பார்கள்.”

“ஆமாம், அதற்கு வாய்ப்பிருக்கிறது” என்று அவள் புன்னகைத்தாள். “அதற்குத்தான் இந்த ஃபைல். நீங்கள் அறைக்குச் செல்வதற்குள் நான் நூறு முகங்களை மின்னஞ்சலில் அனுப்பிவிடுவேன். இந்தி நடிகர்களைப் போல் இருப்பார்கள்.”

“அதிகமாக எப்படிப்பட்டவர்களை கேட்கிறார்கள்?”

“கோவாப்பகுதி ஆங்கிலோ இந்தியர்களை… அவர்களைப் பார்த்தால் வெள்ளையர் போலிருப்பார்கள்.”

“நீ எந்த பகுதி? தமிழ்நாடா?”

“இல்லை, நான் ஜார்கண்ட்…”

“உன் பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை.”

“பகா என்றால் எங்கள் இனத்துக்குரிய பெயர்”

“நீ?”

“நான் கோண்ட் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள்” என்றாள்.

“அப்படியா?” என்றேன். “ஆனால் இப்போது தெரிகிறது. உன் முகம் அப்படியே கோண்ட் முகம்தான்… எங்களுக்கு அங்கே ஒரு எஸ்டேட் இருக்கிறது. நிறைய கூலிகள் வேலைசெய்கிறார்கள்.”

“ஆம், கோண்டுகள் அஸாமில்கூட எஸ்டேட் வேலைசெய்கிறார்கள்.”

“நீ எப்படி இங்கே வந்தாய்? நீ என்ன படித்திருக்கிறாய்?”

“எம்.காம், அதன்பின் எம்.பி.ஏ. கூடவே ஃபேஷன் டிசைனிங்.”

“உன் குடும்பம்…?”

“அவர்கள் ஜார்கண்டில்தான் இருக்கிறார்கள். என்னை ஒரு மும்பைக்காரர் தத்தெடுத்து படிக்க உதவிசெய்தார்.”

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் எத்தனை தூரம் தாங்குவாள்? மேஜைமேல் நாஃப்கினில் சுற்றி வைக்கப்பட்டிருந்த கரண்டியையும் முள்ளையும் என் கைகள் நெருடிக்கொண்டிருந்தன.

”என்ன படித்தாலும் உன் முகம் உன் இடத்தை தீர்மானித்துவிடுகிறது இல்லையா?” என்றேன்.

“ஆம், அது ஒரு எல்லைதான். ஆனால் எந்த எல்லைகளையும் கடக்கமுடியும்… நீங்கள் எங்கள் சேவைக்குப்பின் என் முகம் மாறியிருப்பதை காண்பீர்கள்.”

நான் சிரித்துவிட்டேன். “உன்னால் நன்றாகப் பேசமுடிகிறது” என்றேன்.

அவள் புன்னகைத்து “கற்றுக்கொண்டேன்” என்றாள்.

”நான் இந்த ஒப்பந்தத்தைத் தரமுடியும், ஒரு நிபந்தனையின் பேரில். எக்காரணம் கொண்டும் நீ எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது”

“பொதுவாக நான் வருவதில்லை ராம், நீங்கள் கவலையே படவேண்டியதில்லை.”

“ஏன் சொல்கிறேன் என்றால் எங்கள் நிகழ்ச்சிகளில் எல்லாருமே உயர்வர்க்கம் உயர்குடிகள்… சட்டென்று அவர்கள் உன்னை அவமதித்துவிட வாய்ப்புண்டு…”

“அப்படி நான் நினைக்கவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் பரவாயில்லை, நான் வரமாட்டேன்.”

“இல்லை, வாய்ப்பிருக்கிறது. உன் தோற்றத்தைப் பார்த்தால் நீ ஏதோ சாப்பாட்டுக்காக வந்து நிற்கிறாய் என்று நினைத்துக்கொள்வார்கள்…”

அவள் சிரித்துவிட்டாள். “அந்த வாய்ப்பைக்கூட பயன்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.”

நான் என் கையிலிருந்த முள்கரண்டியை மேஜைமேல் வைத்தேன். அதை இறுகப்பற்றியிருந்தேன் என்று தெரிந்தது.

“ஸாரி நேகா.”

“பகா”

“எஸ் பகா ராய்… இந்த ராய் யார்?”

“என்னை படிக்க வைத்தவர்”

“ஓ” என்றேன். “மீண்டும் ஸாரி… இது கார்ப்பரேட் உலகம். எதிரியின் எந்தப் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது இங்கே எழுதாவிதி. எந்தப் பலவீனத்தையும் ஆற்றலாக எப்படி மாற்றிக்கொள்வது எப்படி என்பது அதன் இன்னொரு பக்கம். உன் தோற்றமும் பிறப்பும் உனக்கு பலவீனமா என்று சோதனைசெய்து பார்த்தேன்… தப்பாக நினைத்துக்கொள்ளாதே.”

“ராம், எனக்குப் பின்னால் அந்த படத்தை பார்த்தீர்களா?”

“எந்த படம்?”

“அந்த கறுப்புவெள்ளை படம்… உணவை வீணாக்கக்கூடாது என்று ஃபுட் ரெஸ்க்யூ நிறுவனம் வைத்திருக்கும் விளம்பரம்… அதில் ஒரு குழந்தை கையில் பெரிய பாத்திரத்துடன் நின்றிருக்கிறது.”

கரிய குழந்தை, கன்னத்துக் குழியுடன் அழகான வெள்ளைப் பற்களுடன் காமிராவைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. பரட்டைத்தலைமுடி. இடையில் ஒரு கந்தலாடை. கையிலிருந்த பெரிய அலுமினியத் தட்டில் கொஞ்சம் அரிசிச் சோறு. ’நீங்கள் ஒரு குழந்தைக்கு உணவூட்டவிரும்பினால் உணவு வீணாவதை குறைத்தாலே போதும்.’

“ஆமாம்” என்றேன்.

”அது நான்தான்… இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம்… எங்கள் மலைக்கிராமத்திற்கு வெள்ளைக்காரர்கள் வந்து எடுத்தது. நான் கல்லூரியில் படிக்கும்போது மும்பையில் ஓர் உணவகத்தில் இந்தப்படத்தை முதலில் பார்த்தேன்.”

“ஓ” என்றேன். அந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். சிரிக்கும்போது தோன்றும் பகாவின் உருவம்தான் அது. பழங்குடிக் குழந்தைகளுக்குத்தான் அந்த நட்பார்ந்த சிரிப்பு உண்டு. அவர்கள் குழந்தைகளை அதட்டுவதோ அடிப்பதோ இல்லை. கட்டாயப்படுத்தி எதையும் செய்யவைப்பதுமில்லை. அங்கே அத்தனைபேரும் குழந்தைக்கு பெற்றோர்தான்.

“முதலில் அந்தப்படத்தைப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுவிட்டேன். பார்த்ததுமே தெரிந்துவிட்டது. இன்றுவரை எவருக்குமே அது நான் என்று தெரியாது. அன்று எனக்கு தலைசுற்றியது. விழுந்துவிட்டேன். அதன்பிறகு அவ்வப்போது இதைப் பார்ப்பேன். என்னால் இதை நேருக்குநேர் பார்க்கமுடியாது” அவள் புன்னகைத்தாள். “முதலில் பார்த்தபோதிருந்தே தோன்றியது இந்த உலகத்திடமே பிச்சை எடுத்துக்கொண்டு நின்றிருக்கிறேன் என்று. நான் மட்டுமல்ல எங்கள் குலமே பிச்சைப்பாத்திரத்தை நீட்டி நின்றிருக்கிறது. பிறகு தோன்றியது, அங்கிருந்து மீண்டுவிட்டேனே என்று. மீளவேண்டும் மீளவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். எவ்வளவு மீண்டுவிட்டேன் என்று திரும்பிப்பார்க்கையில் பெருமிதம்தான். ஆகவே நீங்களோ உங்கள் விருந்தினரோ என்னை ஒன்றும் செய்யமுடியாது.”

நான் புன்னகையுடன் “பகா, நான் என்ன தொழில்செய்கிறேன் தெரியுமா?”

“நிர்வாகம்” என்றாள்.

“இல்லை, முக்கியமாக நிர்வாகிகளுக்கான ஆளுமைப் பயிற்சி” என்றேன்.  “அந்தப் படத்தை நீ வீட்டில் உன் படுக்கையறையில் ஒட்டிவைக்கலாம். நாள்தோறும் பார்க்கலாம். அது உனக்கு உதவும்.”

அவள் முகம் மாறியது. கண்கள் கூர்கொண்டன.

“நிர்வாகவியலில் ஒன்று உண்டு, வெற்றி வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் ஜெயிக்கமுடியும். ஆனால் எதன்பொருட்டு அந்த வெறி? வெறுமே ஆணவநிறைவுக்காகவோ புகழுக்காகவோ பணத்துக்காகவோ என்றால் சீக்கிரம் சலித்துவிடும். ஏதோ ஒரு புள்ளியில் தோல்வியை ஒப்புக்கொள்ள தோன்றும். நமது எல்லைகளை நாமே எங்கோ வகுத்து வைத்திருப்போம். ஞாபகம் வைத்துக்கொள் ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுவிடவேண்டியதுதான் என்று எண்ணியிருப்பவரை எந்தப்புள்ளியிலும் தோற்கடித்துவிட முடியும்.”

அவள் முகத்தை கூர்ந்து நோக்கிச் சொன்னேன் “ஆனால் உனக்கு தீர்க்கவே தீர்க்கமுடியாத காரணம் இருக்கிறது. நீ ஜெயித்துக்கொண்டே இருக்கமுடியும்” என்றேன். “நீ அந்த பாத்திரத்தை நிறையவே விடக்கூடாது.”

அவள் “ஆமாம் ராம்” என்றாள். மீண்டும் புன்னகைத்தாள்.

“வாழ்த்துக்கள்” என்று எழுந்து கைநீட்டினேன். ”சிலர் ஜெயிப்பதற்காகவே பிறக்கிறார்கள், அவர்களில் ஒருவரை இன்று சந்தித்திருக்கிறேன்.”

“நன்றி” என்று அவள் கைகுலுக்கினாள்.

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை

முந்தைய கட்டுரைவிசை, தீற்றல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை 41 அழைப்பிதழ்