ஓஷோ,கோவை, நான்குநாட்கள்

ஓஷோ பற்றிய ஓர் உரையை நான் நிகழ்த்த முடியுமா என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அவர்களின் சார்பில் நண்பர் நடராஜன் கேட்டுக்கொண்டிருந்தார். நான் ஒப்புக்கொண்டாலும் நாட்கள் தள்ளிச்சென்றன. நடுவே ஓராண்டு கொரோனாவால் வரலாற்றிலிருந்தே மறைவதுபோல இல்லாமலாகியது. இம்முறை நிகழ்த்திவிடலாமென்று முடிவுசெய்தோம். தேதி முடிவாகியது.

நான் ஒன்று முடிவுசெய்தேன், ஓஷோ பற்றி நான் புதியதாக வாசிக்கக்கூடாது. ஓஷோவின் மேற்கோள்களிலேயே கூட என் மண்டைக்குள் இருபத்தைந்து ஆண்டுகளில் எவை நீடிக்கின்றனவோ அவற்றைச் சொல்லவேண்டும். அது ஒருவகையான காலச் சல்லடை. என் மதிப்பீட்டை கேட்பவர் விரித்தெடுக்கும்படிச் சொல்லவேண்டும். அத்தனைக்கும் மேலாக நான் ஓஷோவை வாசித்த நாட்களில் இருந்த மனநிலைக்குச் சென்று பேசவேண்டும்

போஸ்டர்

11 ஆம் தேதி மாலை கிளம்பி 12 காலை கோவையைச் சென்றடைந்தேன். நண்பர் ’டைனமிக்’ நடராஜன் வந்து அழைத்துச் சென்றார். நண்பர்கள் சந்திப்பதற்கும் தங்குவதற்கும் பெரிய இடமாகப் போடும்படி கோரியிருந்தேன். விழா நிகழும் கிக்கானி பள்ளியின் அருகிலேயே சாய் வில்லா என்னும் பங்களா ஏற்பாடாகியிருந்தது. 25 பேர் தங்கும்படியாக.

நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். நான்குநாட்கள் நண்பர்கள் புடைசூழ இருந்தேன். விஷ்ணுபுரம் விருதுவிழாவின் களியாட்டம் இம்முறை இல்லாமலாகிவிட்டதோ என்ற உளக்குறை நீங்கியது. வழக்கம்போல கல்யாணக் கொண்டாட்டம். ஆனால் முழுக்க முழுக்க கிருஷ்ணா ஸ்வீட்ஸ் செலவு.

வரும்போதே பார்த்தேன். நகரெங்கும் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். மிகப்பெரிய போஸ்டரில் என்படமும் ஓஷோ படமும். கோவையில் நான் ஆற்றும் தொடர் உரைகளில் இது மூன்றாவது. ஏற்கனவே கீதை, குறள் பற்றிப் பேசியிருக்கிறேன்.

பகல் முழுக்க பேசாமல் தொண்டையை காத்துக்கொள்ளவேண்டும் என பழைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டிருந்தேன். ஆனாலும் பேசாமலும் இருக்க முடியவில்லை. தொடர்ச்சியாக நண்பர்கள் உடனிருந்தார்கள்.

அரங்கு

மாலையில் கூட்டம் சரியாக ஆறரைக்கு. ஆறரைக்குத்தான் திரளும் வந்தது. கிக்கானியின் பெரிய அரங்கு நிறைந்து வெளியிலும் அமர்ந்திருந்தனர். நான் பேசிய அரங்குகளிலேயே மிக அதிகமாக கூட்டம் வந்தது இங்குதான். என் உரையை தொடங்குவதற்குமுன் நிறைந்திருந்த திரளின் முகங்களைப் பார்த்தேன். ஒருவகையான காலத்தை கடந்து நின்ற உணர்வு ஏற்பட்டது

பேசுவது எனக்கு இயல்பானது அல்ல. பேசுவதற்குரிய மூச்சும் குரலும் இல்லை. பேசுவதற்குமுன் என்னை காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. பேசியபின் இருக்கும் உளநிலையை காத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே பேசுவதற்கு முன் மேடைக்கு வந்து பேசியதும் அப்படியே ‘தப்பிச்செல்வதே’ சரியானது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன்.

வெளியே இருந்தவர்கள்

நிறைய எழுதியிருக்கிறேன். ஆனால் பேச்சு படிப்படியாக ஓர் உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறது. கருத்துக்களால் மட்டுமேயான ஓர் உச்சம், தியானநிலைக்கு நிகரானது. அதிலிருந்து இறங்குவது கடினம். படபடப்பும் நிலையழிவும் உருவாகிறது.

கடைசிநாள் மதியம் கோவை நன்னெறிக் கழகம் சார்பில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துகொண்டேன். சிவராமன் தமிழகத்தின் தேர்ந்த பேச்சாளர்களில் ஒருவர்.

கொரோனா காலகட்டத்தின் நலப்பிரச்சினைகளைப்பற்றி, சித்தமருத்துவத்தின் சாத்தியங்களைப் பற்றி அழகாகப் பேசினார். நான் கேட்ட முதல் மருத்துவப்பேருரை- எனக்கு அதிலிருந்து இலக்கியக் கருக்களாக எழுந்து வந்துகொண்டிருந்தன. எல்லாமே இலக்கியத்தின் குறியீடுகளாகப் பட்டன.

15 ஆம் தேதியும் கோவையில் தங்கியிருந்தேன். அன்றுதான் கோவையின் புகழ்மிக்க அசைவ உணவை மதியம் இயக்காக்கோ சுப்ரமணியம் அழைப்பின்பேரில் சென்று உண்டேன். டி.பாலசுந்தரம் அவர்களை அன்று சந்தித்தேன். மாலை நாகர்கோயில். தூக்கமும் களைப்பும் கூடவே ஆழ்ந்த நிறைவும்.

இந்த மூன்றுநாள் உரைக்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் டைனமிக் நடராஜன் இருவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த உரை இல்லையேல் இத்தனை தீவிரமாக ஓஷோவைத் தொகுத்துக்கொண்டிருக்க மாட்டேன்

முதல்நாள் உரை

முந்தைய கட்டுரைஎரிசிதை [சிறுகதை]
அடுத்த கட்டுரைநற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021