மலைபூத்தபோது, கேளி – கடிதங்கள்

மலைபூத்தபோது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மலைபூத்தபோது ஒரு இரட்டைத்தன்மையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இரண்டு உலகங்கள். ஒன்று கீழே, இன்னொன்று மேலே. கீழே வயல்கள், மேலே காடு. மேலே இருப்பவர்கள் வானுக்குச் செல்பவர்கள், கீழே இருப்பவர்கள் புதைபவர்கள். இங்கே உள்ள தெய்வங்கள் கோயிலில் இருக்கின்றன. அங்குள்ளவை மரங்களில் இருக்கின்றன

மலையிலிருந்து வருபவன் கோயில் பகுதியிலேயே செல்வதில்லை. அவன் இருட்டுக்குள் இருட்டாகவே நடமாடுகிறான். அவன் வீடுகளின் கொல்லைப்பக்கம் வருகிறான். கழிப்பிடங்களுக்கு அருகே உள்ள நெல்லைத்தான் கொள்கிறான். ஆனால் அவர்கள் மலைக்கு அதையும் கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்

கொன்றையிலும் வேங்கையிலும் மலர்களில் தோன்றி உறுமி பின்னர் அப்படியே பின்னகர்ந்து மறையும் புலியும் சிறுத்தையும் அற்புதமான கவித்துவ உருவகங்கள். கண்களிலேயே அந்த அசைவைப் பார்க்கமுடிகிறது

ராஜசேகர்

***

அன்புநிறை ஜெ,

இன்றைய கதை முற்றிலும் வேறொரு அனுபவம். கதை என்றே சொல்லிவிட முடியாத கதை. ஆனால் அந்தப் பொன் பூத்த மலைக்காடும், பொன் விளைந்த வயல்வெளியும், கதிரறுத்த களமும், அந்த ஒடுக்கப்பட்டோருக்கான இருள்வழியும் அதிலேயே மலைவிட்டிறங்கி நடந்து வந்து வெறுங்கையோடு காட்டு தெய்வங்களிடம் திரும்பியது போன்ற உணர்வைத் தந்தது.

காட்சி விவரிப்புகள் வாழ்ந்தறியா நிலத்தில் சென்று நிறுத்துகின்றன. வார்த்தைக்கு வார்த்தை காட்சி  விரிந்து, அதிலிருந்து வேறொரு தளத்துக்கு சிறகு விரித்தெழும் அனுபவம். வீட்டில் நுழைந்து விட்ட சிட்டுக்குருவி போல அழகிய உவமைகள் கதையில் அங்கும் இங்கும் சிறகு கொள்கின்றன. “மழையில் முளைத்த புதுப்பூசணியின் கொடி போல புதர்களையும் பாறைகளையும் ஊடுருவிச்சென்றுகொண்டிருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில்”,  “இலைப்புயல் போல வந்திறங்கும் கிளிக்கூட்டங்களை”, ” கிளிக்கூட்டங்கள் காற்றில்பறக்கும் பச்சை சால்வை போல”, “அறுத்து அள்ளிச்செல்லும் இயந்திர யானைகள்”.

சில இடங்களில் மனது அருகில் ஓர் அறியா இருப்பை உணர்ந்த கணங்களை எண்ணி சிலிர்த்துக் கொண்டது.

//காலடியோசையாக, நிழலாக, நினைவுணர்வாக உடன்வருபவர்கள் என்னுடன் சேர்ந்துகொண்டனர்//

இயற்கையின் மாறா சுழற்சியும், பிறவிச்சுழற்சியும் வருகிறது. மனிதர்கள், வயல்கள் என அனைத்தும் மீண்டும் மீண்டும் நிகழ கரடிமலை அநாதி காலமாய் அகாலமாய் நின்றிருக்கிறது.  அதனாலேயே காணிக்கை கோரும் தெய்வமாய் அமர்ந்திருக்கிறது.

//இலைகள் உதிர்ந்து தளிர்களாகி வருகின்றன. எதுவும் எங்கும் இல்லாமலாவதில்லை. அனைத்தும் எப்போதும் நிலைகொள்கிறது.//

//விதையை வயலாக்கி வயலை விதையாக்கி சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.//

கதையில் மலையில் வாழ்பவர்கள், மண்ணில் வாழ்பவர்கள், மண்ணுக்கும் கீழே வாழ்பவர்கள் என்றொரு அடுக்கு வருகிறது. ஒன்றுடன் ஒன்று இணைந்த தொடர் கண்ணிகள்.  மலை எப்போதும் இருக்கும் ஒன்றாக, அழிவின்மையாக வருகிறது. நிலம் மலை தந்த கொடையாக வருகிறது //மலைகள் உருகி வழிந்து பரவிய ஊர்கள்//. அவற்றை இணைக்கும் பாதையும் தொன்மையானது. அதற்கும் கீழே வாழ்ந்தவர்கள் ஊர்களுக்கு வெளியே பள்ளங்களில் வாழ்ந்தவர்கள்,  எலிவளை சேர்த்த  நெல்லையும் அந்த எலிகளையும்  உணவெனக் கொள்பவர்கள்.

இதில் அந்தப் பள்ளங்களை நோக்கிய சரடு ஏற்கனவே அறுந்துவிட்டது. வயலில் பொன் அதற்கு முந்தைய மாதம் பொலிந்து நின்றிருக்கிறது. இயந்திரக் கரங்களால் அறுவடை செய்யப்பட்டு  எலிகள் உண்ணக்கூடிய அளவை விட பல மடங்கு நெல்லும் வயலில் உதிர்ந்திருக்கிறது. எலிகளும் இல்லை, அதைச் சார்ந்திருந்த மனிதர்களும் இல்லை.

மலை நோக்கிய சரடும் இற்றுப் போகத் தொடங்கிவிட்டது. இக்கதையின் காணிக்காரன் மலை தெய்வங்களை சாட்சியாக்கி மண் விளைந்த பொன்னை மலை விளைந்த பொன்னுக்குக் காணிக்கையாகப் பெற வருகையில் புறங்கடைகள் ஒளியற்று, கதவடைத்திருக்கின்றன. இரவுப்பூசையில் நாட்டு தெய்வங்களுக்கு படையல் இருந்திருக்கலாம். காட்டு தெய்வம் பசியோடிருக்கிறது.

இவற்றில் கடுத்தா, பிறுத்தா என்ற  காடுகாக்கும் தெய்வங்களும் தங்கள் முதலாமன் கதை வழியாகவே அறிமுகம். கொக்கறை என்ற சொல் இதற்கு முன் வாசித்ததும் கிளி சொன்ன கதையில்தான். “காணம் வாங்க வரும் காணிக்காரன் வாசிக்கும் கொக்கறை போல” என வரும். காணிக்காரர்கள் என்ற பழங்குடியினர் பெயருக்கு காணிக்கு உரியவர்கள், நிலத்துக்கு வழிவழி உரிமை கொண்டவர்கள் என்ற பொருள் என அப்போது வாசித்தறிந்தேன். இங்கே இக்கதையில் இம்மண்ணுக்குரிய காணிக்காரன் வெறும்கையோடு மீள்கிறான்.

“தாழ்ந்த நிலம் ஒரு மணிநெல்லைக்கூட அளிக்கவில்லை” என்ற வரியில் நிலம் தாழ்ந்தே இருக்கிறது. கதை முழுவதும் மலையின் பார்வையில் என்பதால் நிலம் தாழ்நிலமாகவே வருகிறது.

இக்கதை ஒரு மாபெரும் இயற்கை சுழற்சியின் கண்ணிகள் அறுபடுவதையும், அதன்பொருட்டு மானுடர் மேல் இயற்கை சீற்றம் கொள்ளாதிருக்க வேண்டிக்கொள்ளும் ஒரு பெருங்கருணையையும் சொல்கிறது.

இமைக்கணத்தில் வேள்வி எதன் பொருட்டு என்ற கேள்விக்கு ஒரு விடை வரும் “தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி அள்ளி அன்னைக்கு திரும்பி ஊட்டமுயலும் மைந்தர் அல்லவா நாம்?” என. வானவருக்கு அவி அந்த மைந்தரால் மறுக்கப் படும்போது மண்மீது முனியாதிருக்கும் படி தெய்வங்களை இறைஞ்சும் அந்த ஞானியரின் கருணையால் இப்புவி பிழைத்திருக்கிறது.

//மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்?//  – விசும்பின் துளிவீழின் அல்லால் போல இதுவே இக்கதை எழுப்பிக்கொள்ளும் கேள்வி.

எதன் காலடியோசையை , இயற்கையின் மொழிகளை கேட்டு விடக்கூடாதென நம் கதவுகளை இறுகப் பூட்டி கொல்லைப்புறங்களை இருள வைத்திருக்கிறோமோ அதன் காலடியோசை கணந்தோறும் பெருகும்.

மிக்க அன்புடன்,

சுபா

கேளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கேளி கதையை ஒரு ஆழ்ந்த மயக்கத்தில் வாசித்தேன். என் இளமையில் கிராமத்தில் காப்பு கட்டிவிட்டால் திருவிழாதான். ஊரிலிருந்து யாரும் எங்கேயும் போக முடியாது. பத்துநாளும் மேளம்தான். கொண்டாட்டம்தான். எங்கே படுப்போம் எங்கே சாப்பிடுவோம் என்றே தெரியாது

திருவிழா முடிந்தபின்பு உடலுக்குள் மேளம் இருக்கும். கொஞ்சம் தூங்கினால் கேட்க ஆரம்பித்துவிடும். கண்களுக்குள் வண்ணங்கள் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மறந்தாலும் சட்டென்று திரும்பிவந்துவிடும்

இதே அனுபவம் எனக்குண்டு. நான் திருவிழா முடிந்து பத்துநாளுக்குப்பின் அண்ணன் ஒரு கோயிலென்றால் என்ற பாட்டைக்கேட்டேன். அதிலுள்ள ஏதோ இசை அப்படியே மொத்த திருவிழா இசையையும் காதுக்குள் கொண்டுவந்துவிட்டது.

கொஞ்சம் தொட்டதுமே பொலபொலவென மழைத்துளி மரத்திலிருந்து உதிர்வதுபோல அந்த அனுபவம். அந்த நுட்பமான அனுபவத்தை எழுதிவிட்ட கதை கேளி

ஜெயராமன்

வணக்கத்திற்கும் அன்புக்குமுரிய ஜெயமோகன்,

கேளி ஒரு அழகான கதைக் கவிதை. கவிதைக் கதை. நெல்லிக்கனியை உண்டு நீர் அருந்திய பின் அடிநாக்கில் எழும் ஒரு இனிமையை அளித்த கதை.

கனவிலும் கேளி கொட்டு கேட்டு அதிர்ந்தது அனந்தனின் உடல் மட்டுமா?எழுத்தாலேயே செண்டைமேளம் வாசித்து எங்கள் நினைவுகளிலும் உடல் விதிர்த்து தோல் அதிர  தாம் தரிகிட தோம் தீம் என நசை நாடடிகளில் வார் பிடித்து விட்டீர்கள். ஓசைகள் வழியாக மட்டுமா கதைகள் வழியாகவும் தான் உலகம் முடிவிலாக் காலத்தில் ஒழுகிச் செல்கிறது.

//ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகிச்செல்கிறது//

விழாக்கால மேகம் எல்லாம் உலாப் போன காலங்கள் கனவாய் தான் போனதே. செண்டை மேளமும் இலைத் தாளமும், உடுக்கையும் பறையும், தவிலும் நாதஸ்வரமும் நினைவின் ஓரங்களில் கானல் நீராய்….

//கூழாங்கற்களின் அருகிலெல்லாம் கரிய மையை கையால் தீற்றியதுபோல அவற்றின் நிழல்கள் நீண்டிருந்தன//

கற்கள் மட்டுமா கரிய மையை நிழல் என தீற்றிக் கொண்டன…. மனித மனங்களும் தானே தங்கள் நிஜங்கள் மறந்து இருட்டில் ஒளிந்தன.

புதியன புகுதல் இயல்பே எனினும், கழிந்தன எண்ணி ஏங்கித் தவிப்பதைப் தவிர உன்னதக் கலைகளின் இனிமையை இழந்தவர்களுக்கு வேறு என்னதான் வழி. எங்கள் ஊர் திருவிழாக்களில் தெருக்கூத்து ரெக்கார்ட் டான்ஸ் ஆக மாறிவிட்டிருக்கிறது, கரகாட்டத்தை ஓரம்கட்டி குத்தாட்டம் கொலு வீற்றிருக்கிறது.ஏதோ கொஞ்சம் பெரிய கோயில்களில் கலைகள் போனால் போகட்டும் என்று பிழைத்துக் கிடக்கின்றன.

//நாக்கு நுனியில் இரும்பைத் தொட்டது போல அதன் இனிமை எஞ்சியிருந்தது//இன்னமும் எஞ்சிக் கிடக்கிறது…

பத்து நாள் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் பத்து நாள் இரவும் விடாமல் விழித்துக் கிடந்து தெருக்கூத்து பார்த்த அனுபவத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் இனி பெற முடியுமா? வில் வளைப்பும் அர்ஜுனன் தபசும் பகடை தூதும் கர்ண மோட்சமும் பதினெட்டாம் போரும் மீலாக் கனவாய் நெடுங்கால நினைவாய் எங்கோ நெஞ்சின் அடியில்.

வாயோரம் நீர் வழிய ஆடைகள் எங்கெங்கோ கிடக்க மூலைக்கு ஒருவராய் இரவெல்லாம் கண்விழித்து கூத்துப் பார்த்த அலுப்பில் தூங்கிக் கடக்கும் எங்களை மாலை 4 மணிக்கு தட்டி எழுப்பி பாட்டி கொடுக்கும் அந்த கொதிக்கும் டீக்கும் கொறித்த முறுக்குக்கும் இணையான சுகம் மண்ணில் வேறுண்டோ?

//டீ நன்றாக இருந்தது. தூக்கத்தில் இருந்து விழித்தெழும்போதுதான் டீ அத்தனை மணமும் சுவையும் அடைகிறது//

இமயக் குளிரில் குகைகளில் ஒடுங்கிக் கிடந்த பொழுதுகளில் ஏலமும் வெல்லமும் இஞ்சியும் தட்டிப் போட்ட ஒரு குவளை கொதிக்கும் கட்டன் சாயா கொடுக்த சுகம் தியானத்தின் உச்சத்தில் கூட கிடைப்பதில்லை. இதை எழுதுவதில் வெட்கப்படவும் ஒன்றும் இல்லை. உண்மை அதுதானே! சோர்ந்து கிடக்கும் சமயங்களில் எந்த தேவனை விடவும் தேநீர் தேவனே நெஞ்சுக்கு உகந்தவன்.

கங்கைக் கரையில் அமர்ந்து மனம் அசைவற்று நின்ற பொழுதுகளில் ஆறு மட்டுமே ஒழுகிக் கொண்டிருக்கும் அந்த அனுபவம் எனக்கும் உண்டு.

//ஊர் அசைவற்று நிற்க ஆறுமட்டும் ஒழுகிக்கொண்டிருப்பது//

ஒவ்வொரு சித்திரை தேர் திருவிழாவின் முடிவிலும் விழா காண வந்திருந்த பெரியம்மா சின்னம்மா அத்தை பிள்ளைகளும் பெண்களும் ஊர் போனபின்பு ஏற்படும் வெறுமை ஐயோ சொல்லிமாலுமா? கூடிக் களித்த சுற்றம் ஊர் போன சோகம் ஒரு புறம், பார்த்துக் களித்த கூத்துக்கள் கேட்டு ஆனந்தித்த கச்சேரிகள் முடிந்து போன சோகம் ஒரு புறம்.

//ஒரு கணம் கழித்து ஆழமான ஏமாற்றத்தை அடைந்தான். அவனுள் ஒலித்துக் கொண்டிருந்த செண்டையின் தாளம் முடிந்துவிட்டிருந்தது//

கேளிக்கையில் இருந்து வந்ததோ கேளி அல்லது கேளியில் இருந்து வந்ததோ கேளிக்கை. கேளிக்கை இல்லாத வாழ்க்கைக்கு பொருளென ஏதாகிலும் இருக்கிறதோ. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு என கேளிக்கை நாட்களையும் விழாக்களையும் கொண்டாட்டங்களையும் வகுத்தவன் வாழத் தெரிந்தவன்.

நாமும்தான் கசங்கி கைந்துணி போல ஆகிவிட்டிருந்த தினத்தந்தி என ஒவ்வொரு திருவிழாவிற்கு பிறகும் மனதால் நைந்து போகிறோம் அடுத்த திருவிழாவிற்காக எங்கித் தவித்திருக்கிறோம்.

//அவருக்கு எந்த மாறுதலும் தெரிந்திருக்காது. நேற்றுபோலவே இன்றும், அதே நேரம் அதே செயல்கள். நேற்று அத்தனை மக்கள் கொந்தளிப்பின் நடுவே எவர் உடலிலும் முட்டிக்கொள்ளாமல் கோயிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குச் சென்று வழக்கமான நேரத்தில் படுத்திருப்பார்//

இவர் போல எத்தனையோ Routine னே வாழ்க்கையாய், காசே குறியாய், கருமமே கண்ணாகிய, எந்த விழாக்களாலும் சற்றும் வெளுக்க முடியாத, நித்தியமாய் நிறம் மாறாத கருப்பு சிங்கங்கள்(!) நிறைய பார்த்திருக்கிறேன் எங்கள் ஊரில் நானும் கூட. என்ன செய்வது அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கை அவ்வளவுதான். பொன் மழை பொழிந்தாலும் உடலெங்கும் விளக்கெண்ணெயை தடவி வீதியில் உருண்டாலும் ஒட்டுவது தானே ஓட்டும். இவர்களுக்கெல்லாம் சொன்னால் புரியவா போகிறது.

சிவப்புக் கால்சட்டை மீது வேட்டி கட்டத் துவங்கிய போதே மாற்றங்கள் வரத் துவங்கிவிட்டன. இன்றோ வேட்டிகள் முழுதாக காணாமல்போய் கால் சட்டைகள் மட்டுமே போட்டு அலைகிறோம். விழாக்கள் மெல்லமல்ல தங்கள் விசால தன்மை இழந்து வெற்றுத் தளங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாற்றங்கள் நிச்சயம் தேவைதான் ஆனால் அவை மரபின் மேன்மையை மறுத்து அல்ல மரபின் மேன்மையை உண்டு செரித்து அதனினும் மேலாய் எழ வேண்டும். அத்தகைய மாற்றமே மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

//செம்பட தாளம் விரியும் விழியசைவுகள். விரிந்து மலர்ந்து குவிந்து சுழிக்கும் விரல்கள்//என வழக்கம் போல உன்னதம் நோக்கி மகிழ்ச்சி சிறகை விரிக்கும் கதை… அனந்தன் காட்டில் அன்றாடம் மழை…

மானிடர் வாழ்வெங்கும் விழாக்கள் தொடரட்டும். செண்டி மேளத்தீன் கேளி கொட்டு கொண்டாட்டம் நெஞ்சங்களில் என்றென்றும் தித்திக்கட்டும். உணர்வும் அறிவும் இணைந்ததுதானே வாழ்க்கை. கலையும் இலக்கியமும் இல்லாது போனால் வரண்டு போகாதோ மானுடம். உங்கள் திருக்கரங்களால் இலக்கிய வானில் இசைக்கு இன்னும் ஒரு மகுடம் என கேளி கதை.

தினம் ஒரு கதை கொண்டாட்டத்தில் தித்திக்க வைத்த இன்னுமொரு தினம். நெஞ்சம் நிறை நன்றிகளும் வாழ்த்துக்களும்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

முந்தைய கட்டுரைவிசை, கேளி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎரிசிதை [சிறுகதை]