இழை, மலை பூத்தபோது- கடிதங்கள்

இழை [சிறுகதை]

இழை மிக அற்புதமாக வந்திருக்க வேண்டிய கதை. ஆனால் கதையின் தலைப்பும் படமும் கதையின் முடிவை முன்கூட்டியே தெரிவித்து வாசிப்பின்பத்தை சிதைத்து விட்டது .

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்

இழை கதையின் கட்டமைப்பு துப்பறியும் பாணியிலானது. ஆனால் அது மர்மத்தை கண்டுபிடிப்பதை இலக்காகக் கொண்ட கதை அல்ல. அந்த தலைமுடியைப் பற்றி கதைக்குள் ஒன்றுமே சொல்லாமல் கடைசியில் சொல்லியிருந்தால் மர்மம் நின்றிருக்கும் என்று தெரியாமல் அது எழுதப்படவுமில்லை. அந்த கதையின் நோக்கமே வெவ்வேறு இடங்களை ஓர் இழையால் இணைப்பதுதான். இழை என கவித்துவக் குறியீடொன்றை உருவாக்குவதுதான்

ஜெ

அன்புநிறை ஜெ,

இழை என்ற கதை ஒரு வழக்கமான குற்றப் புலனாய்வுக் கதையாக எனக்குப் படவில்லை. பெயரில் துவங்கி, இதன் ஓவியம், காரை கூந்தலில் இழுக்கும் வித்தை,

ராப்புன்ஸா நாடகம் என அனைத்து குறிப்புகளும்  கதையின் போக்கில் தொடக்கத்திலேயே ஆயுதம் கூந்தலாக இருக்கலாம் என்ற எண்ணத்துக்கு நகர்த்திச் சென்று விடுகிறது.  கொலையை கதைசொல்லி பார்க்கும் முதல் பார்வையிலேயே “கருஞ்சிவப்பான ஒரு தலைமுடி இழை ஒட்டியிருப்பதாகவே தோன்றியது” என்ற வரியிலேயே அது அடிமனதில் தோன்றிவிடுகிறது. அதன் பின்னர் அது ஏன் என்பதற்கான இழைகளை நெய்வதொன்றே பிற அனைத்து விவரங்களும். எனவே இது கொலையை நடத்தியது யார் என்ற மர்மத்தை நோக்கிய கதை மட்டுமாக எனக்குத் தோன்றவில்லை.

“நாடகம் போல ஒன்று நடக்கும். அது பார்வையாளர்களை ஈர்த்து அவர்கள் செய்யும் ஏற்பாடுகளை கவனிக்கமுடியாமல் ஆக்கிவிடும்.” என்ற சர்க்கஸ் குறித்த வரி போல இக்கதையின் அத்தனை மேலொழுக்குகளுக்கு அடியில் வேறொன்று  மீண்டும் சொல்லப்படுகிறது. கதையின் மைய இழை, அநீதி இழைப்பவர்கள் தங்கள் மரண இச்சை போல தாங்கள் அழிக்கப்படுவதற்கான ஏதுவையும் அவர்களே காட்டிக் கொடுக்கும் இயல்பை, அந்த ஜான் கதாபாத்திரமே அவளது முடியின் பலத்தை காட்டிக் கொடுத்து விடுவது ஒரு நல்ல உச்சமாகப் பட்டது.

உண்மையில் அவள் கூந்தலைப் பற்றி அவளையே ஏறச் செய்பவன் ஜான். முதலில் சமநிலை இழந்து தரையில் விழுந்து சமையல் பணியில் இருப்பவளை அவளது கூந்தலை முதலாக்கி முன் நகர்த்துகிறான். பின் அதில் மோகித்து அலைகிறான். அதனாலேயே அவளை முடியைக் கட்டி வைத்துத் துன்புறுத்தவும் செய்கிறான். கூந்தலின் வலு என்ன என்று அவள் கழுத்தை நெரிப்பதன் மூலம் அவளுக்கு உணர்த்தி மீண்டும் அவள் கூந்தல் வழியாகவே அவள் மீட்புக்கு வழியாகிறான். அவளது  துன்பத்தையும் மீட்சியையும் கூந்தல் இழை இணைக்கிறது.  கூந்தல் எனும் படிமம் வெகு தூரம் செல்லக்கூடியது.

இதே போன்ற சர்க்கஸ் பின்னணி கொண்ட வேட்டு கதையும் நினைவில் வந்தது. அதில் மகிஷனைத் துண்டமிடும் மகிஷாசுரமர்த்தினி. இதில் கூந்தல் விரித்த கேசினி என எண்ணிக்கொண்டேன்.

மிக்க அன்புடன்,

சுபா

Seamless tropical pattern with tigers and bunch of hibiscus flowers and leaves

மலைபூத்தபோது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இந்த வரிசைக் கதைகளில் கொஞ்சம்கூட இணையாத முற்றிலும் புதிய கதை மலை பூத்தபோது. மலையின் பூ என்பவை புலி சிறுத்தை என்பது அழகான கற்பனை. பழங்குடித்தன்மையின் பண்படாத அழகும், அதை மொழியில் அடர்த்தியாகச் சொல்லியிருக்கும் விதத்தில் ஒரு கிளாசிசமும் உள்ள கதை.

அந்த மலையன் ஊருக்குள் வரும் பயணத்தின் ஒவ்வொரு வர்ணனையிலும் உள்ள கவித்துவம். ஊரின் பொன் நெல். மலைப்பொன் புலி. புலியும் நெல்லும் எப்படி ஒன்றோடொன்று இணைந்துள்ளன என்று அறிய தெய்வங்களை அறியவேண்டும். ஆனால் இங்கே மக்களுக்கு தெய்வங்களை தெரியாது. அவர்கள் தங்கள் புறவாசல்களையும் மூடிவிட்டார்கள்.

மலை முனிந்தால் மானுடர் என்ன செய்வார் என்ற வரியை வாசித்ததும் ஆழமான ஒரு அகநெகிழ்வு ஏற்பட்டது

சுகுமார்

 

 

வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன்,

மரபுக் கவிதையை கடந்து புதுக்கவிதையை கடந்து புதியதோர் உரைநடைக் கவிதை யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். நாளை உரைநடைக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நீங்கள் அறியப் படக்கூடும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கவிதையால் கதை சொல்லிய மரபு நமது. ஒரு நூறு ஆண்டுகளாகத் தான் உரைநடையால் கதை சொல்லத் தொடங்கினோம். இன்று இப்புது யுகத்தில் கதையால் கவிதையை சொல்லத் துவங்கி இருக்கிறோம். நேற்றும் இன்றும் வந்த கதைகளில் கவிதையின் ஒளிக்கீற்று மின்னல் என தெரிக்கிறது. இந்தக் கதையின் தலைப்பு கூட மலை பூத்து மலர்ந்த போது என்று அதுவே ஒரு கவிதையாய்…

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்” என்று வாழ்ந்த நாம் இன்று எல்லாவற்றையும் இழந்து சீரழிவின் பாதையில்….

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட

“இவையெல்லாம் இங்கே எப்போதுமிருக்கும். இப்படியே இருக்கும். இங்கே பிறந்து இறப்பவர்களும், வந்து செல்வனவும், முளைத்து மறைவனவும் கூட அந்த அழியாமையில் எஞ்சியிருக்கும்” என்ற நம்பிக்கையில்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

இன்று இந்த அறிவியல் யுகத்தில் அழிவின் பாதையில் அதிவேகமாக கண்மூடி பயணித்துக் கொண்டிருக்கிறோம்

“மழையில் முளைத்த புதுப்பூசணியின் கொடி போல புதர்களையும் பாறைகளையும் ஊடுருவிச்சென்றுகொண்டிருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில்” எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல்நடந்துகொண்டிருக்கிறோம்.

எத்தனை நம்பிக்கையோடு இருந்தார்கள் நமது முன்னோர் “இந்தப் பாதை மிகமிக தொன்மையானது. இந்தப்பாதையில் நடக்கும் என் கால்களிலிருக்கும் வழியுணர்வும் மிகமிகத் தொன்மையானது” என்று. நாமோ எத்தனை விரைவாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அந்தப் பாதைகளை வளர்ச்சியின் பெயரால் சிதைத்து விட்டு இன்று வழி தெரியாது முட்டி நிற்கிறோம்.

எத்தனை உயரப் பறந்தாலும் பறவையின் நிழல் மண்ணில் தான்.

“அவற்றின் நிழலும் அவையும் இரு சரிந்த கோடுகளாக வந்து சந்தித்துக்கொள்ள அவை இறங்குகின்றன. நிழல் விலகிச்செல்ல வானிலெழுகின்றன” விண்ணில் பறக்கலாம் உயர உயர போகலாம் ஆனாலும் என்ன வயிற்றுப் பசி தீர்க்க வந்து மண்ணில் இறங்கி தானே ஆக வேண்டும்.

“இலைப்புயல் போல வந்திறங்கும் கிளிக்கூட்டங்கள்” இன்னும் எத்தனை காலத்திற்கு காண வாய்க்குமோ நமக்கு. சிட்டுக் குருவிகளைப் போல அவற்றையும் இழந்துவிடுவோமோ என்ற பயமும் நிறைய இருக்கு.

“வயல்களுக்குமேல் கிளிக்கூட்டங்கள் காற்றில்பறக்கும் பச்சை சால்வை போல நெளிந்து அலைக்கழிந்தன” அன்று. இன்று கார்பன் டை ஆக்சைடும் கார்பன் மோனாக்சைடும் நமது வயல்களுக்கு மேல் கம்பளிப் போர்வையாய் அலை கழிகின்றன. அமில மழையால் அடிக்கடி கீழே இறங்கியும் வருகின்றன.

“அங்கே அவர்களின் கிணறுகளில் காட்டின் நீர்தான் ஊறுகிறது” என்று மலையனுக்கு புரிந்த இயற்கை சூத்திரம்

“விசும்பின் துளிவீழின் அல்லாற் மற்றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது”என்று பாடம் படித்த நாடனுக்கு புரியாமல் போனது விந்தைதான்.

விதையை வயலாக்கி வயலை விதையாக்கி சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதை மட்டும் செய்தாலாவது ஆசுவாசப் படலாம் ஆனால்  நஞ்சை யூரியாவாக்கி, யூரியாவை உணவாக்கி ஒட்டுமொத்த இயற்கையையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

பூத்தால்  மலை பொன்னென்றாகிறது. பூத்தால் மண்ணும் பொன்னே என்றாகிறது. மலை பூப்பதனாலேயே மண்ணும் பூக்கிறது. மலை பூக்க மறுத்தால் மண்ணும் பூக்க மறந்து போகும்.

“மலையாளும் தெய்வங்களே காத்தருள்க! மலைமேல் பூத்த பொன்னே காத்தருள்க! இங்கு மானுடருக்கு பசியாற்றும் இப்பொன்னை காத்தருள்க” என்று இறைஞ்சி நிற்பதைத் தவிரஇயன்றவரை அதற்காக முயன்று உழைப்பதை தவிர நாம் என்னதான் செய்துவிடமுடியும்.

“செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்” என்று சாதாரணன் முதல் உயர் அதிகாரி வரை எல்லோருக்கும் தெரிந்திருந்தும். மலையன்,

“இந்தவயல்களின் மேல் வண்டிகள் ஓடிய பெரிய சக்கரத்தடங்கள் சுழன்று சுழன்று தெரிகின்றன. சிறிய படிக்கட்டுகள் போல அவற்றில் வெட்டுமடிப்புகள் உள்ளன. அவை அறுத்து அள்ளிச்செல்லும் இயந்திர யானைகள். அவை நின்ற இடங்களிலெல்லாம் கசக்கப்பட்டு புழுதியென்றே ஆன கூளம் குவிந்திருக்கிறது” என்று வருந்தி சொன்னதைத் தானே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்

மலையனை மேலும் “வெறுங்கையுடன் வந்திருக்கிறேன் போனவர்களே, அங்கே தாழ்ந்த நிலம் ஒரு மணிநெல்லைக்கூட அளிக்கவில்லை” என்று கதர விட்டுக் கொண்டிருக்கிறோம். அவன் கதறிக் கதறிக் கடைசியில் தனக்கான மணி அரிசியை மலைமீது விளைவிக்க துவங்கினால் மண்ணில் மழை எப்படி பெய்யும். ஏற்கனவே தேயிலையும் காப்பியும் ரப்பரும் பாதி மழைக்காடுகளை மொட்டையடித்து விட்டது. இனியும் சுதாரித்துக் கொள்ள தயங்கினாள் மீதி மலைக் காடுகளும் அழிந்துபோகும்.

பொன்னென மலை முழுதும் பூத்துக் கிடக்கும் மலர்கள் தீயென மாறினால் என்னவாகும் நம் நிலைமை.

“நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர்: ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே   ”  என்று நல்லவராக இருந்த நாம் அல்லவர்கள் ஆகிவிட்டோம். மலையனை,

“காடு கொடுத்த நிலத்திலுள்ளோர் கையள்ளி தரவில்லை. வெறுங்கை கொண்டு வழியெல்லாம் நடந்து வந்தேன்” என்று புலம்பித் தவிக்க வைத்துள்ளோம். நிலத்தை மலையைக் காட்டை வாழ்த்த வணங்க காக்க மறந்து விட்டோம்.

“அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும்

மல்லல்மா ஞாலம் கரி” என்று நமக்குத் தெரியாமலா இருக்கிறது.

அடிபட்டு விழுந்து பதுங்கும் சிறுநாய்க்குட்டியின் முனகல் என இயற்கை அழுவது  ஏனோ நமக்குத் தெரிய மறுக்கிறது.

“பிழையெல்லாம் பொறுக்கவேண்டும். பெற்றவரென்றே கனியவேண்டும். மாரியும் மலையும் முனிந்தால் மானுடர் என்ன செய்வார்?” என்றும் “பொன்னுக்கு மண்ணுடன் ஏதுபகை உடையோரே? மூன்றுபொன்னும் முனிந்துவிட்டால் மிச்சம் ஏதுமுண்டோ?” என்றும் எப்பொழுதுதான் உணர்ந்து கதறி அழப்போகிறோமோ?

அப்படிக் கதறி அழுதால், நம் செயல்களை எல்லாம் இனிவரும் காலத்திலாவது உணர்ந்து மாற்றிக்கொண்டால், காடுகளையும் மலைகளையும் இயற்கையையும் போற்றி காக்கத் துவங்கினால்

“ஊருணி நீர்நிறைந்தற்றே உலக அவாம் பேரறி வாளன் திரு” என்று அருளாமலா போய்விடும் இயற்கை நமக்கு.

தலைமேல் கைகளைத் தூக்கி உங்களைப்போல்  “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்று தெய்வங்களிடம் இறைஞ்சுகிறோம் நாங்களும்.

உங்கள் மனம்பூத்தபோது, கதையே கவிதையாய் மட்டுமல்ல, அறிவை மறைக்கும் இருளைப் போக்கும் ஒளியாயும் வந்த கதைக்கவிதை இந்த மலைபூத்தபோது.

நன்றியுடனும் மிக்க அன்புடனும்

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

 

முந்தைய கட்டுரைகேளி,விசை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்