‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

ஓவியம்: ஷண்முகவேல்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஐந்தாவது நாவல் ‘பிரயாகை’. பிரயாகை’ என்றால், ‘ஆற்றுச்சந்தி’ என்று பொருள். இரண்டு ஆறுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆறுகள் ஒன்றையொன்று சந்தித்து, இணைந்து, சங்கமமாகும் இடத்தை ‘பிரயாகை’ என்பர்.

நதிகள் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் இடம் ‘பிரயாகை’. அவை ஒன்றின் வலிமையைப் பிறிதொன்று உணரும் புள்ளியே ‘பிரயாகை’ என்றும் கூறலாம். அதனாலேயே ஆறுகள் சங்கமமாகும் இடத்தைப் புனிதமாகக் கருதுவர். இந்த நாவலைப் பொறுத்தவரை ‘பிரயாகை’ என்பது, ஆறுகளின் சங்கமம் அல்ல; பேராற்றல்களின் சங்கமம். வலிமைகள் சங்கமமாகும் இடமும் புனிதமானதே!

இளைய யாதவன், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை எனப் பேராற்றல் மிக்கவர்கள் தம்மைத் தாமே வெளிப்படுத்திக்கொள்ளும் இடமாகவும் தம்மை ஒத்த பிறரின் வலிமையை உணர்ந்துகொள்ளும் இடமாகவும் இந்த ‘பிரயாகை’ நாவல் அமைந்துள்ளது.

தம்மையும் பேராற்றலுடையவர்களாக நிறுவிக்கொள்ள விழைபவர்கள், அதற்காக முயன்று, அது ஈடேறாமல், தோற்றுத் திரும்பும்போது, அவர்களுக்குள் ஏற்படும் தாழ்வுணர்ச்சியையும் இந்த நாவலில் காணமுடிகிறது. பேராற்றல்களின் சங்கமத்தில் தமக்கொரு இடம் கிடைக்காததால் மனத்தளவில் தத்தளிப்பவர்களாகச் சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் மாபெரும் மாட்டுவண்டியின் ஒரு மரச்சக்கரமாக உருவகித்துக்கொள்வோம். அதில் உள்ள ஒவ்வொரு ஆரக்காலும் பேராற்றல் மிக்கதாகத்தான் இருந்தாக வேண்டும். அதுமட்டுமல்ல, உருவத்திலும் உறுதியிலும் அது ஒவ்வொன்றும் பிறிதொன்றை நிகர்த்ததாகவே இருந்தாக வேண்டும். அந்தச் சக்கரம் ஒருமுறை முழுவதுமாகச் சுழலும்போது, வண்டியின் முழுச் சுமையையும் ஒவ்வொரு ஆரக்காலும் ஒரு தருணத்தில் அது மட்டுமே தாங்க நேரும். ஆரக்கால்களுள் ஒன்று வலுவற்றதாக அமைந்துவிட்டாலும் சக்கரம் உடைந்து நொறுங்கும்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் இந்த ‘பிரயாகை’ நாவலில் இளைய யாதவன், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை எனப் பேராற்றலுடைய ஆரக்கால்களை உருவாக்கியுள்ளார். இந்த ஆரக்கால்கள் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் வெவ்வேறு தருணத்தில் சுமக்க உள்ளது. அதற்குரிய வலிமை ‘இவர்களுக்கு உண்டு’ என்பதை ஆங்காங்கே குறிப்புணர்த்தியுள்ளார் எழுத்தாளர்.

 • துரோணர் கேட்கும் குருதட்சணையை வழங்குவதற்கான முதற்போரில் பாண்டவர்கள் வெல்வது துருபதனை அல்ல; கௌரவர்களையே! கௌரவர்களை முன்செல்ல வைத்து, அவர்கள் போரில் தேற்கும் நிலை ஏற்படும்போது, பாண்டவர்கள் சென்று, கௌரவர்களைக் காப்பாற்றுவதன் வழியாகவே அவர்கள் கௌரவர்களையும் துருபதனையும் வென்றுவிடுகின்றனர்.
 • போரில் துருபதனை வென்றவுடன் யார் சொல்லுக்கும் செவிமடுக்காமல், அவனைத் தன் தேர்ச்சக்கரத்தில் கட்டி இழுத்து வரும் அர்சுணன்.
 • பாண்டவர்கள் சௌவீரநாட்டு மன்னனை வென்று அவனுடைய மணிமுடியைத் (பறவை இறகுகளால் ஆனது) தன் தாய் குந்தியின் தலையில் சூட்டி மகிழ்தல்.
 • இளைய யாதவனுக்கும் குந்திக்கும் இடையே நிகழும் உரையாடல்கள்.
 • இளைய யாதவனுக்கும் விதுரருக்கும் இடையில் நிகழும் முதல் சொல்லுரசல்.
 • இளைய யாதவனின் படைவியூகத்திறமை. தொடர் திட்டங்களால் மிகத் திறமையாகவும் விரைவாகவும் மதுராவை வெற்றிகொள்தல்.
 • பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையே நடக்கும் கடும் தனிப்போர்.
 • கடோத்கஜனின் அதீத வளர்ச்சி கண்டு வியக்கும் பீமனின் மனநிலை.
 • கர்ணனின் முதற்போரைக் கண்டு அவனைத் தன் மனத்தளவில் போற்றும் அர்சுணன்.
 • ஏகலவ்யனின் வீரமும் ஆட்சியாளுமையும் குறிப்பிடத்தக்கவை. யாதவர்களை அவன் தொடர்ந்து விரட்டியடிக்கிறான்.
 • குந்தியிடம் குடிகொண்டுவிடும் பேரரசிக்குரிய தோரணை, திரௌபதையின் நிமிர்வு.
 • அம்பெய்து ஐந்து மரப்பறவைகளையும் வீழ்த்தி, திரௌபதையை அடையும் அர்சுணன்.

இப்படி, எண்ணற்ற அரிய தருணங்களைக் காட்டி, நம் மனத்தில் அவர்களின் பேராளுமையை நிறுவிவிடுகிறார் எழுத்தாளர்.

இங்கு இவர்கள் இவ்வாறு நிறுவப்படாவிட்டால், நாம் இவர்களின் உண்மைப் பேராளுமையை உய்த்தறியவும் பேராற்றலைக் கண்டுணரவும் இவர்களைச் சரியாக மதிப்பிடவும் தவறிவிடுவோம். இனிவரும் ‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசைகளின் மீது மகாபாரதச்சக்கரம் சுழன்று, மெல்ல மெல்ல ஏறிச் செல்லும்போது, நாம் இவர்களின் புறப் பேராற்றலையும் அகப் பேராளுமையையும் புரிந்துகொள்ள இயலாமல், திகைத்து நிற்போம்.

அப்போது, நம்மால் எழுத்தாளரின் எண்ணவோட்டத்தையும் கற்பனைத் திறத்தையும் கதையை நகர்த்திச் செல்லும் ஒழுக்கையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது. அப்போது நாம் நம்முடைய இயலாமையை உணர்ந்துகொள்வோம். அதை ஏற்றுக்கொள்ள இயலாமல், அதனை எழுத்தாளரின் மீதான நமது வெறுப்பாகவே வெளிப்படுத்துவோம். இது ஓர் இழிநிலைதான்.

இந்த இழிநிலையிலிருந்து வாசகரைக் காப்பாற்றுவதற்காகவும் வாசகருக்கு உதவுவதற்காகவும் எழுத்தாளர் இந்த நாவலில் இளைய யாதவன், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோரின் அக, புற வலிமைகளை மிகச் சரியாக நிறுவியுள்ளார். இது, ‘எழுத்தாளர் தன் வாசகருக்குச் செய்யும் பேருதவி’ என்றே நான் நினைக்கிறேன்.

இந்த உதவியைச் செய்யாத எந்த எழுத்தாளரும் ‘வாசகரின் புரிதல் திறன் சார்ந்து’ எந்தக் கேள்வியையும் எழுப்பவே இயலாது. ஒருவகையில் இது எழுத்தாளருக்குரிய ‘எழுத்தாற்றலின் தர்மம்’ என்றும் கூறலாம். அந்தத் தர்மத்தை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் மிகச் சரியாகப் பின்பற்றியுள்ளார்.

‘கதைமாந்தர் உருவாக்கம்’ மிகச் சரியாக அமையாத, அமைக்கப்படாத எந்தப் படைப்பும் குறைப் பிரதிதான். உலக அளவில் ‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசை உண்மையிலேயே மிகப் பெரிய ஆக்கம். இத்தகைய மாபெரும் ஆக்கத்தில் ‘கதைமாந்தர் உருவாக்கம்’ என்பது, துல்லியமாக இல்லையெனில், வலுவற்ற ஆரக்காலால் ஒட்டுமொத்த வண்டிச் சக்கரமும் நொறுங்குவது போல ஒட்டுமொத்த ‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசையும் சரிய நேரும்.

துரோணர், சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன் ஆகியோரிடம் பேராற்றல் குறைவாகவே உள்ளது என்பதைக் காட்டுவதற்காகவே நாடகீய அடிப்படையில், சில நிகழ்வுகளை உருவாக்கியுள்ளார் எழுத்தாளர்.

துரோணரின் காலடியில் துருபதனைப் பணிய வைக்கிறான் அர்சுணன். அப்போது துரோணரின் முகத்தில் ஏற்படும் புன்னகை அர்சுணனின் மனத்திற்குள் ஒரு நெருடலை உண்டாக்குகிறது. இதுநாள் வரை அர்சுணன் தன் குருவின் மீது கொண்ட தீராப் பற்றினை ஒரு கணப்பொழுதில் அது துடைத்தெடுத்துவிடுகிறது. அர்சுணனின் பார்வையில் துரோணர் பலபடிகள் கீழிறங்கிவிடுகிறார். தன் குருவின் ஆளுமையின் மீது அர்சுணன் கொண்டிருந்த பெருமயக்கம் தெளிவடைகிறது. அந்தத் திடீர்த் தெளிவை ஏற்றுக்கொள்ளாத அர்சுணனி மனம் அலையாடுகிறது. இதனை மிகச் சரியாகக் கண்டுகொள்கிறார் பீமன்.

அவர் அர்சுணனிடம், “”துரோணர் முன் துருபதனைக் கொண்டுசென்று போட்டபோது உன் கண்களையே நான் நோக்கினேன். நீ துரோணர் கண்களையே நோக்கினாய். அவர் புன்னகை செய்ததை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று நேரடியாகவே கூறிவிடுகிறார்.

துருபதனைப் பழிவாங்கும் பெருஞ்சினத்தின் வழியாகத் துரோணர் தன் பேராற்றலை நழுவவிட்டுவிட்டார் என்றே கருத முடிகிறது. ‘பேராற்றல்’ என்பது, வலிமை சார்ந்தது மட்டுமல்லவே! அது ஆளுமை சார்ந்ததும்தானே!. ஒருவகையில் அது சான்றாண்மையும் கூட. சான்றாண்மையற்ற பேராற்றல் அரக்கக் குலத்துக்குரியதே!

‘சகுனியின் ஆற்றல்’ என்பது, ஒருபோதும் பேராற்றலாக உருவெடுக்க முடியாதது என்பதனை நாம் அவன் அஸ்தினபுரியை விட்டுத் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் பயணத்தின் வழியாக அறிய முடிகிறது. போரில் தோற்றுத் திரும்பும் முதுவீரனின் மனநிலையோடுதான் சகுனி தன் நாட்டுக்குத் திரும்புகிறான்.

மாபெரும் கனவோடு அஸ்தினபுரியில் இத்தனை ஆண்டுகாலம் தங்கியிருந்த சகுனி, இனித் தன் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்ற மனநிலைக்கு வந்த பின்னரே தன் நாட்டுக்குத் திரும்புகிறான். சகுனியிடம் நிறைந்திருப்பது சூது நிறைந்த சொல்லாற்றல் மட்டும்தான். அது ஒருபோதும் பேராற்றலாக அமைவுகொள்ளாது. அறத்தைப் பற்றிக்கொண்டு சுழலும் சொல்லாற்றல் மட்டுமே பேராற்றலாக உருக்கொள்ளும்.

அவர் தன்னுடைய பாதிப் பயணத்தில் பயணத்தைக் கைவிட்டு, மீண்டும் அஸ்தினபுரிக்குத் திரும்ப நினைக்கிறார். அப்போது அவருக்குக் கிடைப்பவர் கணிகர். கணிகரின் உள்ளமே சூதால் ஆனதுதான். சூதால் பெருகிய சொல்லாற்றல் கொண்டவர் கணிகர். அவர் சகுனியின் ‘சிந்தனைத்துணை’யாக அமைவது, சகுனியின் சொல்லாற்றலுக்கு ஒரு ‘துணைச்சொல்’லாகவே அமைகிறது. அது ஒருபோதும் சகுனியின் சொல்லாற்றலைப் பேராற்றலாகப் பெருகச் செய்ய உதவப் போவதில்லை. அதைத்தான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள், மதுரா மீதான போரில் சகுனி முழுக்க முழுக்க கணிகரின் திட்டத்தை நம்பித் தோற்பதன் வழியாகக் காட்டியுள்ளார்.

இளைய யாதவனிடம் விதுரர், “என் ஆணையில்லாமல் அஸ்தினபுரியின் படை புறப்படாது” என்று கூறுகிறார். எந்த நாட்டிலும் அமைச்சரின் ஆணையை ஏற்று படைபுறப்படுவதில்லை. இதை உணராமல் தன் மீதும் தன் நாடு தனக்களித்திருக்கும் அதிகாரத்தின் மீதும் நம்பிக்கைகொண்டே, விதுரர் இவ்வாறு பேசிவிடுகிறார். அதனால்தான், இளைய யாதவன் தன்னிடம் யாதவ அரசி குந்தியின் முத்திரையிட்ட ஓலை இருப்பதாகக் கூறி, அஸ்தினபுரியின் படை புறப்பட உங்களின் அனுமதி தேவையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். விதுரர் நிலைகுலைந்து போவதும் இந்தத் தருணத்தில்தான். விதுரரின் பேராற்றலின்மை வெளிப்படும் புள்ளி இந்த இடம்தான். அதிலிருந்து அவரால் மீளவே முடிவதில்லை. இளையோரிடம் தோற்பதை எந்த முதியோராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லைதானே!

துரியோதனன் பலராமரிடம் செல்வதும் கர்ணன் பரசுராமரிடம் செல்வதும் தம்முடைய ஆற்றலைப் பேராற்றலாக வளர்த்துக்கொள்வதற்கே. அவர்களுக்கு லட்சியமே தம் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டே இருப்பதுதான். நிறைவுபெற்ற, முழுமையுற்ற பேராற்றலைப் பெறவே அவர்கள் விழைகிறார்கள்.

துரியோதனன் பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் உதவ அஸ்தினபுரியின் படையைக் கொண்டு வருவதாக உறுதியளிப்பதும் அது முடியாததால் தலைகுனிவதும் அவனின் பேராற்றலின்மையையே வெளிப்படுத்துகிறது. ‘தன்னால் எதைச் செய்ய முடியும், எதையெல்லாம் தன்னால் செய்யவே முடியாது’ என்பதைப் புரிந்துகொள்ளாமல், அறியாமல் இருப்பதும் ஒருவகையில் பேராற்றலின்மைதானே!.

கர்ணனின் மடியில் பரசுராமர் துயிலும் போது, கர்ணன் தன் தொடையைத் துளைக்கத் துணிந்த வண்டிடம் தன்னுடைய மன, உடல் உறுதிகளை முழுமையாக வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், அவன் பரசுராமரின் சினத்திற்கு ஆளாக நேர்ந்திருக்காதே! ‘தான் சத்திரியன் அல்லன்’ என்ற உறுதிமொழியை அளித்துத்தானே அவன் பரசுராமரிடம் அதிவில்பயிற்சியைப் பெற்றுவந்தான்?. அவன் தன்னை ஒவ்வொரு கணமும் சத்திரியன் என்றே நினைத்ததால்தான், அவனால், வண்டு ஏற்படுத்திய வலியைத் தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதுவே, அவனைச் ‘சத்திரியன்’ என்று நிறுவிவிட்டது. அதனால்தானே பரசுராமர் அவனைச் சபித்தார். தேவையற்ற தருணத்தில் தன்னுடைய பேராற்றலை வெளிப்படுத்துவது கூட ஒருவகையில் பேராற்றலின்மைதானே!

பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையிலான கொல்போரில் இறுதித் தருணத்தில் பீமன் தோற்கும் நிலை ஏற்படும்போது, அனுமனின் அருள் ஒரு குரங்கின் வழியாகப் பீமனுக்குக் கிடைக்கிறது. ‘வலுகுறைந்த மெல்லிய கிளைகளில் மட்டும் ஏறிச் செல்’ என்று அந்தக் குரங்கு தன்மொழியில் கூறுகிறது. அதனைச் செயல்படுத்துவதன் வழியாகவே பீமனால் இடும்பனைச் சரிக்க முடிகிறது. இடும்பனின் பேராற்றல் நிலைகொள்ள இயலாமல் போவது வலுகுறைந்த கிளைகளில்தான்.

மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தரும் கோட்டைக்காவல் அமைச்சருமான கைடபர், துரியோதனிடம் நானறிந்தவரை அத்தனை எளிதாக ஏகலவ்யனை வென்றுவிடமு டியாது இளவரசே!. பாரதத்தின் மூன்று பெரும் வில்லாளிகள் எனப் பரசுராமர், பீஷ்மர், துரோணர் பெயர் சொல்லப்பட்ட காலம் உண்டு. இன்று அர்ஜுணர், கர்ணர், ஏகலைவன் என்கிறார்கள்என்றார். பாரதவர்ஷத்தின் சிறந்த வில்லாளிகளுள் ஒருவனாகத் தன்னைத் தன் விற்திறத்தின் பேராற்றலாலேயே நிறுவிக் கொண்டுவிட்டான் ஏகலவ்யன். இளைய யாதவனால் மதுரா தாக்கப்படும்போதும்கூட யாராலும் ஏகலவ்யனைக் கொல்ல முடியவில்லை. ஏகலவ்யன் தப்பிவிடுகிறான்.

குந்தியின் பேராற்றலே தனக்கு எதிர்த்தரப்பில் உள்ளவர்களின் உளநிலை அறிந்து, அதற்கேற்ப சொல்தொடுத்து, தன் திட்டத்தைச் செயல்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. அனைவரும்கூடி, ‘துரியோதனனுக்குகே பட்டம் சூட்டலாம்’ என முடிவெடுக்கும் இறுதிக் கணத்தில்,

மாமன்னர் பாண்டுவுக்கு ஓர் மணிமுடி அளிக்கப்பட்டது. அது பதினெட்டு வருடங்களுக்கு மட்டுமே என்ற நெறி அவரிடம் சொல்லப்படவில்லை. அதை பிதாமகர் காந்தார இளவரசருக்கு அளித்ததை மாமன்னர் பாண்டு அறியவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்? தனக்கு அரசுப்பட்டம் அளிக்கப்பட்டது என்றும் மைந்தன் அரியணை ஏறுவான் என்றும் நம்பியவராக அவர் இவ்வுலகை நீத்தார் என்றால் நாம் இறந்தவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றை மீறுகிறோம் அல்லவா?”

எனக் கேட்டு, தன்னுடைய வாக்குத் திறமையால் திருதராஷ்டிரனின் ஆழ்மனத்தை அசைத்துவிடுகிறார் குந்தி.

அஸ்தினபுரியின் அரியணையைப் பாண்டுவுக்குப் பெற்றுத் தந்ததில் பெரும்பங்கு வகித்தது விதுரரின் வாக்குத் திறமை என்றால், பாண்டுவுக்கு உரிய அரியணையைத் தருமனுக்குப் பெற்றுத்தருவது குந்தியின் வாக்குத் திறமையே! விதுரரும் திருதராஷ்டிரனின் உளநிலையை அறிந்தே அவ்வாறு பேசி, பாண்டுவுக்கு அரியணையைப் பெற்றுத் தந்தார். குந்தியும் திருதராஷ்டிரனின் உளநிலையை அறிந்தே இவ்வாறு பேசி, தருமனுக்கு அரியணையைப் பெற்றுத் தருகிறார். தன் வாக்குத்திறத்தால் பேராற்றல் கொண்ட சக்கரவர்த்தினியாகக் குந்தி நிலைகொள்கிறார்.

மலர்ந்த முகத்துடன் கட்டளையிடுவதும் பிறரின் மனத்தை மயக்கி, பணியச் செய்வதும் தன் பேரன்பால் பிறரைத் தன் காலடியிலேயே கிடத்திக்கொள்வதும் இளைய யாதவனின் பேராற்றல்தானே!.

அதனால்தான், துரியோதனன் இளைய யாதவனைப் பற்றித் தன் தந்தையிடம், “அவனை நாம் மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். இனி, இப்பாரதவர்ஷத்தின் அரசியலாடலில் ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டாக வேண்டிய முதல் மனிதன் அவனே” என்கிறான்.

திரௌபதியின் தன்னேற்பு விழாவில் நிர்ணயிக்கப்பட்ட பந்தையத்தில் இளைய யாதவனும் கலந்துகொள்கிறான். அவனால் மட்டுமே இனி இந்தப் போட்டியில் வெல்ல முடியும் என்று அனைவரும் நினைத்திருக்கும் தருணத்தில், ஐந்தாவது மரப்பறவையின் மீது மட்டும் அம்பினை எய்யாமல், அழியா ஊழின் பெருவழியை உய்த்துணர்ந்து, தன்னுடைய வில்லைத் தாழ்த்திக்கொள்வது இளைய யாதவனின் உலகாளும் பேராற்றலன்றி வேறு என்ன?

திரௌபதியின் மனத்தைத் தன் பக்கம் ஈர்க்க பீமன்னுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. திரௌபதையின் அணித்தேரைத் தன் உடல் வலுவாலேயே பீமன் இழுத்துச் செல்கிறார். பீமன், திரௌபதியிடம், ‘தாங்கள் ஆணையிட்டால் என்னால் அணித்தேரைச் சுமந்துவரவும் முடியும்’ என்று இயல்பாகக் கூறுவது, பீமன் அடைந்திருக்கும் பேராற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது.

திரௌபதை பாஞ்சாலத்தின் தொல்குல வழக்கத்தின் அடிப்படையில், தானும் ஐந்து கணவர்களை அடையவே விரும்புகிறாள். அதைத் தன் தாயிடம் கூறவும் செய்கிறாள் திரௌபதை. ஐந்து விதமான தனித்திறன் கொண்டவர்களைக் கணவர்களாக அடைவதன் வழியாகத்தான் தான் பேராற்றல் மிக்கவளாகத் திகழ முடியும் என்று நம்புகிறாள்.

திரௌபதையின் இந்த முடிவுக்கு ஒத்த முறையில்தான் குந்தியின் பெருந்திட்டமும் இருப்பதால், அவளுக்கு இவ்வாறு ஐவரையும் தன் கணவர்களாக அடைவதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை.

திரௌபதை தன்னை நெருப்பாகவே ஒவ்வொரு கணமும் கருதுகிறாள். அந்த நெருப்பை அணையவிடாமல், அதற்குத் தொடர்ந்து தீனியிடும் பெரும்பொருட்களாகவே பாண்டவர் ஐவரையும் அவள் கருதுகிறாள். அவர்களின் பேராற்றலால்தான் தன்னுடைய பெருநெருப்பு தொடர்ந்து எரிய முடியும் என்று நினைக்கிறாள் போலும். தன்னுடைய பெருநெருப்பு எரிவதே தன்னுடைய ‘பேராற்றல்’ என்று அவள் கருதுகிறாள் எனலாம்.

பேராற்றல் நிறைந்தவர்களுக்கும் பேராற்றல் குறைந்தவர்களுக்கும் இடையில் நிகழும் உடல், மனப் போராட்டங்களாகவே இந்த ‘பிரயாகை’ நாவல் விரிந்துள்ளது. பேராற்றல் குறைந்தவர்கள் புதுவெள்ளத்தால் அடித்துச் சுருட்டி, நதிப் பாதையிலிருந்து விலக்கப்படும் சருகுகளாகவே மாறி, தோற்கிறார்கள். பேராற்றல் மிக்கவர்கள் தடையற்ற மலைச்சரிவில் விரைந்து இறங்கும் நதி போலவே வெற்றியை நோக்கி, இறங்கிச் செல்கின்றனர்.

முனைவர் . சரவணன், மதுரை

– – –

முந்தைய கட்டுரைஇரு நோயாளிகள் [சிறுகதை]
அடுத்த கட்டுரைபடையல்,தீற்றல் -கடிதங்கள்