ஓஷோ- உரை- கடிதம்

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் உங்களின் மூன்றாம் நாள் உரையைக் கேட்டு முடித்தேன்.பிரமாண்டமான ஒரு கேன்வாஸை நிறுத்தி, மிகச் செறிவான,  இயல்பாக ஓடும் வாசகங்களோடு  தத்துவத் தளத்தில் நிகழ்த்திய அதிமானுட முயற்சி..  உங்கள் குரலும், உச்சரிப்பும் கணீரென இருந்ததும், பேச்சுக்குப் பெரும் சக்தியைக் கொடுத்தது.

ஓஷோவை முன்னிறுத்தியதன் மூலம்,  இது போன்ற நிகழ்வுகளை, மதம்/வழிபாடு என்பதிலிருந்து, ஆன்மீகம், தத்துவம் என்னும் தளங்களுக்கு நகர்த்தி, அதை 6 மணி நேர மாரத்தான் உரையாக, செறிவாக அமைத்து வெற்றிகரமாக முடித்தல் அசாத்தியமான ஒன்று.  பல தளங்களில், நீங்கள் மானுட சாத்தியங்களின் புது எல்லைக் கற்களை நட்டுச் செல்கிறீர்கள்.  வரலாறுகள் நிகழும் போது, அவை வரலாறு என்பது தெரிவதில்லை.. 80களின் இளையராஜா இசை போல.

நீங்கள் உரையில் சொல்லியது போல் நான் ஓஷோவைப் பள்ளியிலோ / கல்லூரியிலோ அறிந்துகொள்ளவில்லை. கல்லூரியில் சில மேற்கோள்களாக அறிந்திருந்தேன்.. எனது 44 வயதில் தான் ஓஷோவை கொஞ்சம் தீவிரமாக அறிந்து கொள்ள நேர்ந்தது.  என் பணியின் ஒரு பகுதியாக, மும்பையில் ஒரு குஜராத்தி நிறுவனத்தை வாங்கி உட்செரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரண் பாய் ஷா என்னும் கச்சி (குஜராத்தி) சமணருடன் 3.5 ஆண்டுகள் ஒன்றாக இருக்க நேர்ந்தது. அவர் ஓஷோ பக்தர். அவருடன் பூனா சென்று சில முறை ஆசிரமத்தில் தங்கி வந்திருக்கிறேன்.

அதிர்ஷ்டவசமாக, எனக்கு ஓஷோவுக்கு முன்பு ரமணர் அறிமுகமாகியிருந்தார்.. அவரின், treatise ஆன, ‘நான் யார்’, என்னும் 7 பக்க புத்தகம், மிக அற்புதமான ஒரு assumption ல் துவங்குகிறது. ‘சகல ஜீவர்களும் எப்போதும் சுகமாக இருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன் மீதே ப்ரியம் இருப்பதாலும், ப்ரியத்துக்குச் சுகமே காரணம் என்பதாலும்,   தினமும் நித்திரையில் அனுபவிக்கும், இச்சுகத்தை அறிய, தன்னைத் தான் அறிதல் முக்கியம்’.

அது வரை நான் அறிந்திருந்த மதவாதிகள் எவருமே சுகத்தைத் தேடுவதை ஒரு முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கவில்லை.. சபரிமலைக்குப் போவதுக்குக் கூட, மது, மாது, சிகரெட், செருப்பு போன்றவற்றை ஒறுக்க வேண்டும் என்னும் கட்டளைகள் மீது ஒவ்வாமைதான் இருந்தது.

ரமணரை அறிவார்ந்தோ, பக்தியுடனோ அணுகுவதை விட, நீண்டகாலம், ஒரு காமிக்ஸ் புத்தகம் படிக்கும் சிறுவனைப் போல, அவர் தொடர்பான பலரின் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.. ரமணரை மிகத்தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையை அன்று பெற்றிருக்கவில்லை என்பதனாலும் கூட இருக்கலாம்..

ஒரு முறை உ.வே சா ரமணரைச் சந்திக்கிறார்.. ‘சிவப்பற்றையும், தமிழ்ப்பற்றையும் விடமுடியவில்லையே’, எனப் புலம்புகிறார்.. ‘சிவப்பற்றையும், தமிழ்ப்பற்றையும், யாரைய்யா விடச் சொன்னது;’, எனத் தேற்றி அனுப்புகிறார்.  ந. பிச்சமூர்த்தி ரமணரைச் சென்று சந்திக்கிறார்.. ‘காம எண்ணங்களை விட முடியவில்லை’, எனப் புலம்புகிறார்.. ரமணர், ‘பழம் பழுத்தால், தானே விழும்’, எனப் பதிலுரைக்கிறார்..

‘எனக்கு என் குடும்ப வாழ்க்கை வெறுத்து விட்டது; எனவே சந்நியாசம் வாங்கிட்டு, காசிக்குப் போறேன்னு’, ஒரு பிராமணர் வருகிறார்.. அவரிடம் ரமணர், ‘சந்நியாசி என்பவன் உலகிடம் அன்பு செலுத்துபவன்.. உன்னால் உன் குடும்பத்திடமே அன்பு செலுத்த முடியவில்லையெனில், நீ சந்நியாசியாகவே முடியாது..’,  ந்னு சொல்லி,அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

ஒரு பக்தர், ‘தியானம் செய்யும் போது தூக்கம் வருகிறது. என்ன செய்யலாம்?’, எனக் கேட்கிறார்.. ‘தூங்கி எழுந்து தியானம் செய்யவும்’, எனப் பதில் சொல்கிறார் ரமணர்.

இவை என் நெஞ்சில் மிகப் பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தன.. அதுவரை, லௌகீக வாழ்க்கை மீதான பெரும் ஒரு குற்ற உணர்வு இருந்தது. ரமணர் அதைத் தவறு எனச் சொல்லவில்லை.. லௌகீக வாழ்க்கை தரும் இன்பங்களை அவர் மறுதலிக்க வில்லை.. மாறாக, அவற்றின் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

மனிதன் இன்பத்தை நாடுகின்றான்..  நானும் நாடுகிறேன்.. சரி.. அது நீடித்து நிலைத்திருக்கிறதா? தக்காளி குருமாவுடன் 4 இட்லி சாப்பிடலாம்.. கொஞ்சம் முயன்றால் 8 இட்லி சாப்பிடலாம்.. ஆனால், 40 இட்லி?  உடல் இன்பம் சில முறை துய்க்கலாம்.. சில நூறு முறை?  இன்பம் குறிக்கோள் எனில், அது நீடித்து நிலைக்க என்ன செய்ய வேண்டும்?

’இன்பம்’, என்பதை மிகச் சரியாக வரையறுக்க வேண்டும்..  நமது குறுகிய வரையறைகளால், இன்பம் இட்லிகளிலும், காமத்திலும் இருக்கிறது என மயங்குகிறோம்.. ரமணர், குறுகிய உடல்/புலன் இன்பங்களைத் தாண்டிய  நீடித்து நிலைக்கும் இன்பம் என்னும் வரையறையை நம் முன்பு காட்டுகிறார்.

ரமணரின் வழி ஞான வழி என்பதால், மிகவும் அறிவியற்பூர்வமான ஒன்றாக இருந்தது..  முழுமையான அறிதல் வரவில்லையெனினும், அது சரியெனத் தெரிந்தது.

ரமணரின் அத்யந்த பெண் சீடர்கள் பலர்..  அவர்களுக்கும், ரமணாசிரமத்தை நிர்வகித்து வந்த ரமணரின் தம்பி சின்ன ஸ்வாமிக்கும் ஏழாம் பொருத்தம்.. (விஸ்வாமித்திரர் மேனகை கதை அவருக்கும் தெரிந்திருக்குமல்லவா) சூரி நாகம்மா, கனகம்மா என்னும் அந்த வரிசையில்  மிக முக்கியமானவர்,  மும்பையின் மிகப் பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்த பார்ஸிப் பெண்மணி,  தலையர்கான். இவர்தான், ரமணர் திர்ணாமலை வந்து, ஆதியில் தங்கியிருந்த ஆயிரங்கால் மண்டபத்தை புதுப்பித்தவர்…  பின்னால், பக்வான் ரஜ்னீஷ் என அறியப்பட்டவர் சில காலம் தன்னுடன் திருவண்ணாமலையில் தங்கியிருந்திருக்கிறார் என தலயார்கான் குறிப்பிட்டுள்ளார்..

எனவே, வாழ்க்கையில் மனிதன் தேடுவது மகிழ்ச்சியை என ஓஷோ சொல்லியது எனக்கு மிகவும் இயல்பாகத் தோன்றியது. அதை அவர் ரமணரிடம் இருந்து பெற்றுக் கொண்டாரா எனத் தெரியாது. ஆனால், ரமணரின் வார்த்தைகளை முதலில் அறிந்து கொண்டு, பின்னர் ஓஷோவை அறிந்து கொண்ட எனக்கு அது மிகச் சரி என்றே தோன்றியது.

ரஜ்னீஷின் பலமுகங்களில், நான் அறிந்து கொண்ட இரண்டு முகங்கள் – அவரது ஆளுமை /புத்தக அறிமுகங்கள்.  அந்தப் புத்தகங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் உயர் கவித்துவம் கொண்டவை. எடுத்துக் காட்டாக, பஜகோவிந்தம் பாடல்கள் பற்றிய புத்தகத்துக்கு அவர் வைத்த பெயர் – Songs of ecstasy – அந்தத் தலைப்பே, பஜகோவிந்தம் பாடல்களை நான் உணர வேண்டிய தளம் எதுவெனச் சொல்லியது.  அதுவரை நான் கேட்டிருந்தது, மயில் வண்னப் பட்டுப்புடவை (எம்.எஸ்.ப்ளூ) கட்டிக் கொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு பாந்தமாய் மேடையில் அமர்ந்து எம்.எஸ் அம்மா பாடும் பக்திப் பாடல். அதில் பக்தி இருந்தது. பரவசம் இல்லை. அதில் தவறேதும் இல்லை.. ஆனால், ஒரு செவ்வியல் இசை மரபு அந்தப் பாடலை சுவீகரித்துக் கொள்வதன் எல்லை அது என உணர முடிந்தது. அதே போல சுஃபி ஞானிகள் பற்றிய புத்தகத்துக்கு அவர் வைத்த பெயர் – wisdom of the Sands

உலகத்தின் ஞானிகளை அவர் ஒரு பரவசத்தோடு, காதலோடு அறிமுகம் செய்கிறார்.. கிருஷ்ணரோ, மகாவீரரோ – அந்த அறிமுக உரைகளைக் கேட்கும் எவரும், தத்தம் குறுகிய அடையாளங்கள் தரும் கிட்டப்பார்வையை விடுத்து, ஒரு உலகப்பார்வையில், அந்த ஞானிகளை உணர்ந்து கொள்வார்கள் என்பது நிச்சயம்.. அந்த வகையில், உலகின் பன்மைத்துவத்தை ஒரு சுஃபி ஞானியின் காதலோடு எடுத்துச் சொன்ன பேராசான்.. கவிஞன்.

அவரின் இன்னொரு பரிமாணமாக, நீங்கள் சொன்ன dynamic meditation – நான் பூனா ஆசிரமம் சென்ற போதெல்லாம், அதில் பங்கு பெற்றிருக்கிறேன்..  அது போக இன்னும் சில முறைகளும் உண்டு..  நான் பெரிய சாதகன் இல்லை என்பதால், அதைப் பற்றி எழுத என்னிடம் எதுவும் இல்லை. ஆனால், இது பெருமளவில் ஏற்கப்பட்ட ஒன்றா என்பது சந்தேகமாகவே உள்ளது.

சில விலகல்களையும் சொல்லிவிடுகிறேன்.. ஜேகே பற்றி நீங்கள் சொல்லியதில் ஒரு தகவல் பிழை இருந்தது.  ஜேகே ஒரு நிறுவனத்தை உருவாக்க முயன்றார்.. ப்யூபல் ஜெயகர் போன்றவர்களை வைத்து எனச் சொல்லியிருந்தீர்கள் (அல்லது அப்படி நான் புரிந்து கொண்டேனா எனக் குழப்பம்). துவக்கத்தில் தியோசோபிகல் சொசைட்டியின் உலக வழிகாட்டியாக நிறுத்தப்பட்ட அவர்,  அந்த நிறுவன அமைப்பையே கலைத்தார்.  தியோசபிகல் நிறுவன அமைப்புகளை விட்டு வெளியேறினார்.. அவர்  உருவாக்க விரும்பிய ஒரே அமைப்பு, குழந்தைகளுக்கான பள்ளிகள் தாம்.  வழமையான நெருக்கடி தரும் ரெஜிமெண்டட் பள்ளிமுறைகளுக்கு மாற்றாக ஓரளவு சுதந்திரமான கல்வி பயிலும் சூழலை உருவாக்கும் பள்ளி அமைப்புகளை ஏற்படுத்தினார்.. இந்தியாவில் மாற்றுக்கல்வி முறையை முன்னிறுத்திய மிக முன்னோடி முயற்சி அது.

இன்று ஜேகே ஃபவுண்டேஷன், ரமணாசிரமம், ஓஷோ கம்யூன் – இவை மூன்றும், அவர்களின் படைப்பை, நினைவைச் சேமித்து வைத்திருக்கும் களஞ்சியங்களாக மட்டுமே உள்ளன.. அவற்றிலிருந்து இன்னொரு ஜேகே, ரமணர், ஓஷோ வரமாட்டார்.. ஆனால், அவர்களின் தாக்கத்தில்,  அடுத்த தலைமுறை ஞானிகள் வருவார்கள் என நம்புகிறேன்.

ஓஷோ பற்றிய மிக முழுமையான ஒரு அறிமுகம் என்னும் வகையில், இந்த வழியின் மிகப் பெரும் அடையாளமாக, இந்த ஆறுமணி நேர உரை இருக்கப்போகிறது.  உங்களுக்கு என் வணக்கங்களும் நன்றியும்

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

முந்தைய கட்டுரைஏழாம் கடல், மலைபூத்தபோது – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறமென்ப…  [சிறுகதை]