இமையம்- சாகித்ய அக்காதமி- கடிதம், பதில்

இமையத்திற்குச் சாகித்ய அக்காதமி

அன்புள்ள ஜெ

இமையம் அவர்களுக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வை அளிக்கிறது. அவருடைய கதைகளை தொடர்ந்து வாசிப்பவன் நான். 1997ல் என நினைக்கிறேன், காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமி அவருடைய கோவேறு கழுதைகள் என்னும் நாவல் பற்றி நீண்ட கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அந்நாவலை கிட்டத்தட்ட தலைமேல் வைத்துக் கொண்டாடி எழுதப்பட்ட கட்டுரை அது. அதற்கு அவரே ஒரு பாராட்டுக்கூட்டமும் மதுரையில் ஏற்பாடு செய்திருந்தார்.

அன்று அது உங்கள் எழுத்துக்களுக்கு எதிரான கட்டுரை என்று ஒரு கிசுகிசு சிற்றிதழ்ச்சூழலில் இருந்தது. அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமிக்கு அன்று நீங்கள் கோணங்கி முதலியோர் உருவாக்கிக்கொண்டிருந்த ஃபாண்டஸி எழுத்துக்கள் மேல் கடுமையான ஒவ்வாமை இருந்தது. இமையத்தின் நாச்சுரலிச எழுத்து வந்ததும் அதை அழுத்தமாக முன்வைத்து உங்களை மறுத்தார் என்றுதான் நினைக்கிறேன்.

அக்கட்டுரை வழியாக இமையத்தின் கோவேறுகழுதைகள் புகழ்பெற்றது. அத்துடன் அந்நாவலை க்ரியா பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருந்தது. தமிழ் நூல்களை பொதுவாக கண்டுகொள்ளாத தி ஹிந்து போன்ற நாளிதழ்களின் இலக்கியப் பக்கங்கள் அந்நாவலின் பிரசுரகர்த்தர் க்ரியா ஆனதனால் விரிவான மதிப்புரைகள் வெளியிட்டன. அந்நாவலை ஆங்கிலம் வழியாக உலகவாசிப்புக்கு கொண்டுசெல்லவும் க்ரியா பெரிய முயற்சி எடுத்துக்கொண்டது.

க்ரியா அந்நாவலை ஒரு பதிப்பகமாக நின்று மட்டும் முன்வைக்கவில்லை. க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் அவர் நண்பர் மதுரை சிவராமனுக்கும் புதியவகை எழுத்துக்கள் மேல் ஒவ்வாமை இருந்தது. குறிப்பாக அன்றைக்கு தலித் இலக்கியம் பற்றிய பேச்சுக்கள் எழுந்தன. நிறப்பிரிகை என்ற சிற்றிதழைச் சார்ந்து அந்த கருத்துக்கள் குவியம் கொண்டிருந்தன.

நிறப்பிரிகைக் குழுவினர் தலித் எழுத்து என்பது யதார்த்தவாதத்தை மறுக்கவேண்டும் என்றும், ஃபாண்டஸி போன்ற வடிவங்களை எழுதவேண்டும் என்றும், நான்லீனியர் எழுத்தும் கலக எழுத்தும்தான் தலித் எழுத்தாக இருக்கமுடியும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.அவற்றை முதன்மையாகச் சொல்லிக்கொண்டிருந்தவர் க்ரியா ராமகிருஷ்ணனின் நண்பரான ராஜ் கௌதமன்.

ஆகவே க்ரியா குழு இமையம் எழுத்துக்களை ஒரு ’ரியல் லிட்டரேச்சர்’ என்றவகையில் கடுமையாக பிரமோட் செய்தது. அதேபோன்ற வேறு கதைகளையும் வெளியிட்டனர். ஆனால் அவர்கள் வெளியிட்ட ’புகழ்’ போன்ற எழுத்தாளர்கள் கவனம் பெற முடியவில்லை. ஏனென்றால் சுந்தர ராமசாமி புகழ் எழுதியதை கண்டுகொள்ளவில்லை. சுந்தர ராமசாமியால்தான் இமையம் பெரும் கவனம் பெற்றார். சுந்தர ராமசாமி எல்லா மேடைகளிலும் இமையம் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

க்ரியா – சுந்தர ராமசாமி குழு நினைத்ததுபோலவே இமையம்தான் அன்றைக்கு உருவாகி வந்த தலித் எழுத்துக்களின் முன்னோடியாக இருந்தார். அவரைப்போலத்தான் சொ.தர்மன் போன்றவர்களும் தொடர்ச்சியாக எழுதினர். தலித் இலக்கியம் யதார்த்தவாத இலக்கியமாகவே உருவாகியது. நிறப்பிரிகையின் கருத்துக்களை எவரும் பொருட்படுத்தவில்லை. க்ரியா, சுந்தர ராமசாமி ஆகியோர் தலித்என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை. அதைப்போலவே இமையம் உட்பட தலித் எழுத்தாளர்கள் தலித் அடையாளத்தையே விரும்பாதவர்களாகவும் ஆனார்கள். படைப்பிலக்கியத்தில் சுந்தர ராமசாமி – க்ரியா அடைந்த வெற்றி இது

இதற்குக் காரணம் இமையத்தின் அரசியல் அல்ல. அவருடைய ஒரிஜினாலிட்டிதான். அவருடைய படைப்புக்களிலுள்ள க்ரியேட்டிவிட்டிதான். அதை அடையாளம் காண க்ரியா – சுந்தர ராமசாமியால் முடிந்தது. அதை அவர்கள் முன்வைத்தனர். ஆகவே சிற்றிதழ்ச்சூழலில் அவர் ஏற்கப்பட்டார். வெற்றுக் கோட்பாடுகளை பேசிக்கொண்டிருந்த நிற்ப்பிரிகை அணிக்கு கலை இலக்கியம் என்பதெல்லாம் என்னவென்றே தெரியாது, க்ரியேட்டிவிட்டியை அடையாளம் காணவும் தெரியாது.

இமையம் அன்றெல்லாம் தன்னை திராவிட இயக்க எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டதில்லை. அவர் எந்த அடையாளத்தையும் விரும்பவில்லை. அப்போதே அவர் தி.மு.கதான். கனிமொழிக்கும் காலச்சுவடுக்கும் முட்டிக்கொண்டபோதுதான் இமையம் திராவிட இயக்க அடையாளத்தை வெளிப்படையாகச் சூடிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இன்றைக்கு தன் இலக்கியத்துக்கு நன்றி சொல்பவர் க்ரியா, சுந்தர ராமசாமி பெயரையே சொல்வதில்லை.

இமையம் கோவேறு கழுதைகள் முதல் தொடர்ச்சியாக எழுதிவந்த நீண்ட கால்நூற்றாண்டில் எந்த திராவிட இயக்க இதழும் அவரை பொருட்படுத்தியதில்லை. எந்த திராவிட இயக்க மேடையிலும் பெரிதாக அவர் கௌரவிக்கப்பட்டதில்லை. மு.கருணாநிதி போன்றவர்களுக்கு அவர் பெயர் தெரிந்திருந்தாலே ஆச்சரியம்தான். அவர் க்ரியா – சுந்தர ராமசாமி அணியின் இலக்கிய அழகியலின் முகமாகவே வாசிக்கப்பட்டார்.

திராவிட இயக்க இலக்கியம் பற்றி இன்றைக்குப் பேசுபவர்கள் அன்றைக்குச் சுட்டிக்காட்டிய எழுத்தாளர்கள் எவரும் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல. அவர்கள் எவரும் எந்த பாதிப்பையும் உருவாக்கவுமில்லை. அவர்கள் அனைவருமே ஒரு ஐந்தாண்டுகள் முன்புவரைக்கும்கூட இமையத்தை ‘கோடாலிக்காம்பு’ என்று திட்டிக்கொண்டிருந்தார்கள்.

இமையம் தலித் – திராவிட அறிவுஜீவிகளால் சுந்தர ராமசாமியின் கொம்பு என்றுதான் வசைபாடப்பட்டார். தமிழ்ச்சூழலில் நெடுங்காலம் பிராமணர் தரப்பினர் இங்கே  தலித் இலக்கியம் உருவாகாமல் தடுக்கும்பொருட்டு கையிலெடுத்த கருவி என்று இமையம் குற்றம்சாட்டப்பட்டார்.ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

அன்றும் இன்றும் இமையம் அவருடைய கூர்மையான சமூகப்பார்வை, அழகியல் அணுகுமுறை ஆகியவற்றுக்காக சிற்றிதழ்த் தரப்பாலேயே கொண்டாடப்படுகிறார். எந்த அரசியல் தரப்பாலும் அவர் முன்வைக்கப்படவில்லை. நீங்களேகூட இருபத்தைந்தாண்டுகளாக அவரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவருகிறீர்கள்.

இனி ஒரு சாகித்ய அக்காதமி விருது ‘திராவிட இயக்க’ எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர்களுக்குக் கிடைக்குமென்றால் அது மனுஷ்யபுத்திரன், சல்மா இருவருக்கும்தான். இருவருமே சுந்தர ராமசாமி முகாமிலிருந்து வந்தவர்கள். சுந்தர ராமசாமியே இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இமையத்தின் இலக்கியத்தின் அழகு என்பது அவருடைய அரசியலில் இல்லை. அவர் சமூகத்தைச் சித்தரிக்கிறார் என்பதுகூட மேலோட்டமானதுதான். அவர் மனிதர்களின் உணர்ச்சிகளை மிகையில்லாமல் உண்மையாக எழுதிக்காட்டுகிறார். கோவேறு கழுதைகளில் ஆரோக்கியத்தின் ஒப்பாரிபோன்ற தன்னிலைப் புலம்பல்களில்தான் அவருடைய உச்சகட்ட க்ரியேட்டிவிட்டி உள்ளது. ஆறுமுகம் நாவலில் ஆறுமுகத்தின் அம்மா தன் விதவைத் துயரை தனக்குத்தானே பேசியபடியே ஒரு நீண்ட பாதையில் செல்லும் இடத்தில்தான் அவர் பெரிய கலைஞர் என்று தெரிகிறது.

இமையம் தன்னை திராவிட எழுத்தாளர் என்று இன்று சொல்லிக்கொள்கிறார். அது அவருடைய அரசியல். ஆனால் அந்தவகையான ஒரு மொட்டை அரசியல் வாசிப்பு உருவானால் அவருடைய படைப்புக்கள் இலக்கியவாசிப்பை இழந்துவிடும். அவர் மனிதமனதைச் சொல்லத்தெரிந்த கலைஞர். அதைச் சொல்லவிரும்புகிறேன்.

ஆர். சங்கரநாராயணன்   

அன்புள்ள சங்கர நாராயணன்,

இமையம் எழுதவருவதற்கு முன்னரே அவருடைய அழகியல் தமிழில் நிலைபெற்றுவிட்டிருந்தது. பூமணி அதன் முன்னோடி. முள்முனையால் கீறப்படும் இயல்புவாதம் என அதைச் சொல்லலாம். பூமணியின் பிறகு, வெக்கை ஆகிய நாவல்களும் ரீதி என்னும் தொகுதியும் அன்று சிற்றிதழ்ச்சூழலில் மிகப்புகழ்பெற்றவை. க்ரியா தொடங்கியதுமே பூமணியின் ரீதி என்னும் கதைத் தொகுதியை வெளியிட்டது. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களை மிகப்பெரிய அளவில் வரவேற்று முன்வைத்தவர் சுந்தர ராமசாமி மற்றும் வெங்கட் சாமிநாதன்.

சுந்தர ராமசாமி- வெங்கட் சாமிநாதன் கொண்டிருந்த யதார்த்தவாத – இயல்புவாத அழகியல் பார்வையில் சரியாகப் பொருந்துபவர் என்பதனால்தான் இமையம் அவர்களால் முன்வைக்கப்பட்டார். அவர்கள் காத்திருந்த அடுத்த தலைமுறைக் கலைப்படைப்பாளி அவர். அவர்கள் அன்றிருந்த எந்த குழுவுக்கும் எதிராக அவரை முன்வைக்கவில்லை. அவர்கள் பூமணியை கொண்டாட ஆரம்பித்தது அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்பு. ஆகவே அவர்களுடையது ஓர் அரசியல்நோக்கம் கொண்ட இலக்கியச் செயல்பாடு என நான் நினைக்கவில்லை. அவர்களின் கலைக்கோட்பாடு அது.இமையம் அதன் முகம்.

ஆனால் சுந்தர ராமசாமிக்கும் ஒரு தலைமுறை முன்னதாகவே தமிழ்  இலக்கியச் சூழலில் யதார்த்தவாதம்- இயல்புவாதம் ஆகியவற்றுக்கான குரல் வலுவாக எழுந்துவிட்டிருந்தது.க.நா.சு. அக்குரலை தொடர்ச்சியாக முன்வைத்துக்கொண்டே இருந்தார். இயல்புவாதத்தில் பூமணிக்கும் முன்னோடி என தமிழில் எவரைச் சொல்லமுடியும்? ஐயமில்லாமல் ஆர்.ஷண்முகசுந்தரத்தைத்தான். தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக ஆர்.ஷண்முகசுந்தரத்தை க.நா.சு சொல்லிக்கொண்டே இருந்தார். ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள், சட்டி சுட்டது ஆகிய இரு படைப்புக்களையும் முன்னுதாரணங்களாக முன்வைத்தார்.இன்று நாம் ஆர்.ஷண்முகசுந்தரம்- பூமணி – இமையம் என ஒரு கோட்ட்டை இழுத்துவிடமுடியும்.

என் தலைமுறையில் நாங்கள் யதார்த்தவாத அழகியலைக் கடக்க முயன்றபோது க.நா.சு முதல் அறுபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்வைத்து நிறுவப்பட்ட ஓர் இலக்கிய இயக்கத்தையே மறுத்தோம். அதற்காக விரிவாக எழுதினோம். ஆனால் அரசியல்நோக்குடன் செயற்கையாக முன்வைக்கப்பட்ட ‘கலக’ எழுத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரவருக்கான தேடல்கள் இருந்தன.

எங்கள் எழுத்துவகைக்கு நேர் மாறானவர் இமையம். அவர் க்ரியா- சுந்தர ராமசாமியால் வலுவாக முன்வைக்கப்பட்டபோது நாங்கள் அவரை நிராகரிக்கவில்லை. இமையம், சொ.தருமன் போன்றவர்களின் இயல்புவாத அழகியலை அங்கீகரித்து, அவர்களின் கலைச்சாதனைகளை தொடர்ச்சியாக அடையாளம் காட்டி வாழ்த்தி, கூடவே அது எங்கள் வழி அல்ல என்று தெளிவுறுத்திக்கொண்டும் இருந்தோம்.

இமையம் மீது மேலும் கூர்வாசிப்பு அடுத்த தலைமுறை வாசகர்களில் உருவாக வாழ்த்துகிறேன்.

ஜெ

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்

வல்லினம் இமையம் சிறப்பிதழ்

எட்டு நாவல்கள்

இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்

இமையத்திற்கு இயல் விருது – 2018

க்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்

முந்தைய கட்டுரைஇழை, மலை பூத்தபோது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇருளில் [சிறுகதை]