கதைகள்-கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு.
வணக்கம். தங்கள் அதர்வம் வாசித்தேன். காட்சிகளைக் கண்முன் நேரடியாக நிறுத்தியுள்ளீர்கள். யாகசாலை கண்முன் நிற்கிறது. அதர்வ வேதத்தினைப் பற்றிய செய்திகளும் அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். எனக்கு ஒரு சில சந்தேகங்கள் இதில் உள்ளன .
ஒன்று மஹா பாரதக்கதைப்படி துருபதன் குரு குலம் அழிய வரம் வேண்டினானா அல்லது அர்ஜுனனை மணக்க மகள் வேண்டினானா.
இரண்டு துருபதன் செய்வித்தது அபிசார வேள்வி என்பதற்கு மாபாரதத்தில் குறிப்புகள் உண்டா.

அன்புடன்
கனகராஜ்
மிசோரம்

அன்புள்ள கனகராஜ்

மகாபாரதத்தில் உள்ள குறிப்பின்படி துரோணரிடம் தோற்ற துருபதன் குருகுலத்தை அழித்து துரொணரை வெல்லும் குழந்தைகளுக்காக அபிசார வேள்வி ஒன்று செய்கிறான். அதில் திரௌபதியும் திட்டதுய்ம்னனும் பிறக்கிறார்கள். திட்டதுய்ம்னன் துரோணரின் கழுத்தைப் போரில் அறுக்கிறான். திரௌபதி குருகுலத்தை அழிக்கக் காரணமாக அமைகிறாள்

ஜெ

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சமீபத்தில் நீங்கள் எழுதிய சிறுகதைகள் மிகவும் சிறப்பு. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. உங்களது வீச்சான எழுத்தினைத் தொடரவும். இக்கடிதம் யானை டாக்டர் பற்றியது . மிகச்சிறந்த சிறுகதை. சந்தோசம், தத்துவம் , துக்கம், கோபம் , அருவெறுப்பு, அடக்கம், எதிர்பார்ப்பு,அன்பு என்று பலவகையான உணர்ச்சிகள் இக்கதையில் பல இடங்களில் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொன்றையும் உங்கள் வார்த்தைகளின் மூலம் அள்ளிப் பருகினேன் . மிக்க நன்றி.

சமீபத்தில் எனது நண்பர்களுடன் “அந்தமான்” சுற்றுலா சென்றிருந்தேன். மிகச் சிறந்த மறக்கமுடியாத ஒரு அனுபவமாக இருந்தது. அந்தமானுக்குச் செல்லும் முன் அங்குள்ள தீவுகள், கடற்கரைகள் , கப்பல்பயணங்கள், செல்லுலர் ஜெயில் , முதலியவையே மனதில் கனவாய் ஓடிக்கொண்டிருந்தது. பயணத்தின் 4 நாள் . ஆதிவாசிகளை இன்று காணலாம் என்பது திட்டம். மிகுந்த பாதுகாப்புடன் உள்ளே அனுப்பப்பட்டோம். அடர்ந்த காட்டின் உள்ளே செல்லும் போது சாலையின் இருபுறமும் ஆதிவாசிகள் நின்று தங்களின் ஆயுதங்களை (கோடாலி போன்றவை ) நீட்டி ஏதோ கேட்டவண்ணம் இருந்தார்கள். பின்னர் நான் அறிந்து கொண்டேன் அவர்கள் சிகரட் , பான் போன்றவைகளை கேட்கிறார்கள். இவை அனைத்தும் அங்கு செல்லும் ஓட்டுனர்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்பதை அறிந்து கொண்டேன். மேலும் இன்னும் அவர்கள் ஆடை கூட இல்லாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டது மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. நாம் பலகாலம் அவர்களை விட முன்னேறியவர்கள் என்றாலும் கூட அவர்களுக்கும் உள்ளே ஏதோ சில விஷயங்கள் ( எதை பற்றியும் கவலை கொள்ளாத நிலை ?) அவர்களிடம் இருப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டவாறே இருக்கிறேன். உங்களின் யானை டாக்டர் கதையின் பின்வரும் பத்திகள் ஏனோ அந்த அடர்ந்த காட்டினையும், அந்த ஆதிவாசிகளையும் நினைவு படுத்தியது .

/// மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொருநாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்கவேண்டும். அனேகமாக இங்கே சுற்றுப்பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே வறுத்த பொரித்த உணவுகளுடனும் மதுக்குப்பிகளுடனும்தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளின் மௌனவெளியை காரின் ஆரனை அடித்துக்கிழிப்பார்கள். முடிந்தவரை உச்சமாக கார் ஸ்டீரியோவை அலறவிட்டுக் குதித்து நடனமிடுவார்கள். ஓங்கிய மலைச்சரிவுகளை நோக்கி கெட்டவார்த்தைகளைக் கூவுவார்கள்.

ஒவ்வொரு காட்டுயிரையும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலைஓரத்துக் குரங்களுக்குக் கொய்யாப்பழத்தைப் பிளந்து உள்ளே மிளகாய்ப்பொடியை நிரப்பிக் கொடுப்பார்கள். மான்களை நோக்கிக்  கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஆரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்தித் துரத்துவார்கள். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலிமதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது. வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டு மதுக்குப்பியுடன் இருப்பவர்களை இறக்கி பெல்ட்டை கழற்றி வெறியுடன் ரத்தம் சிதற அடித்திருக்கிறேன். ஜட்டியுடன் கடும்குளிரில் அலுவலகம் முன்னால் அமரச்செய்திருக்கிறேன். ஆனாலும் காட்டுச்சாலையின் இருபக்கமும் குப்பிச்சில்லுகள் குவிவதைத் தடுக்கவே முடிவதில்லை.///

மிகச் சிறப்பான, உயர்ந்த மனிதர்களை பற்றி அறியவைத்த இப்படைப்புகளுக்கு மீண்டும் நன்றி.
இப்படிக்கு ,
பிரவின் சி
http://ninaivilnintravai.blogspot.com/

அன்புள்ள பிரவீன்குமார்

அந்தமானில் நடப்பதை நாம் இங்கே காடுகளில் சாதாரணமாகக்  காணலாம். ஒரு பிராந்திப்புட்டிக்காக லாரியில் ஏறிக்கொள்ளும் பழங்குடிப்பெண்களை

’நாகரீகத்’தை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

அதர்வம், படிப்பதற்கு சுலபமான வரிகளால் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன்.

யாஜர் உருவம் பற்றிய விளக்கமும், யாகத் தீயின் வருணனை, திரௌபதி அழகு பற்றிய விளக்கமும் (“ஒவ்வொரு மாற்றத்திலும் முன்னதை வெறுந்தோற்றமென காட்டுமளவுக்கு மேலும் அழகு கொண்டாள்”) உங்கள் மேம்பட்ட ரசனை சொற்களாய் மாறி வெளிப்படுகிறது.

மகாபாரதம் எளிய முறையில் இது போன்ற கதைகளால் (“நதிக்கரையில்” படித்தேன்) தற்போதைய தமிழ் வாசகர்களுக்கு கிடைக்கிறது. (மகாபாரதத்தை அப்படியே படிக்கக் கடினமாக இருக்கலாம், நான் முயன்றது இல்லை,ஆனால் தொலைக்காட்சியில் காட்சிகளாய் ரசிப்பதுண்டு)

அழகான சொற்களால் மீண்டும் படிக்கத்தூண்டும் படைப்பு

என்றும் அன்புடன்,
சி.கார்த்திக்.

அன்புள்ள கார்த்திக்

நன்றி

மகாபாரதத்தின் சாதகமான அம்சம் என்னவென்றால் அதன் எல்லா விவரணைகளும் கதாபாத்திரங்களும் நம் பண்பாட்டின் நெடுங்கால வரலாற்றால் படிமங்களாக ஆக்கப்பட்டுள்ளன என்பதே

ஜெ

கதைகளும் தூண்டல்களும்

அறம்: ‘அப்ப ஒரு பியூனுக்கே மாசம் நூறு ரூபா சம்பளம் இருக்கும்…நான் மாசம் முப்பது ரூபாவுக்கே தவுலடி படுவேன்…சரி…எழுதியிருக்கே’ என்று நெற்றியில் கோடிழுத்துக் காட்டினார்’.

இது மனதை நொறுக்கியது. ஒரு கலைஞனை நோக்கி, உன் உழைப்பும், படைப்பும், சாதாரண வேலையை விட ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என்று சொல்வதே அறியாமை; இவர் அதற்கும் கீழே தள்ளப்படுகிறார். கதையில் இந்த வரிகளைப் படித்தபின், மேற்கொண்டு செல்ல சிறிது நேரமாயிற்று. அந்த எழுத்தாளர் அடைந்திருக்கும் விரக்தியையே வெகு நேரம் நினைத்திருந்தேன்.

மத்துறு தயிர் ‘ராஜம் குரலை கேட்டப்பம் தெரிஞ்சுபோச்சு இந்தாளு மனசிலே மனுஷங்களுக்க அழுக்குகள் ஒண்ணுக்குமே இடமில்லைன்னு. அன்னைக்கும் இன்னைக்கும் கள்ளமில்லாத்த ஆளாக்கும். ஒருத்தர் மேலேயும் வெறுப்போ கோபமோ பொறாமையோ ஒண்ணும் கெடையாது’.

கள்ளமில்லாத ஒருவரைப் பார்ப்பதே, பழகுவதே எவ்வளவு சந்தோஷம்! ஆனால், அப்படியொருவர் இருந்தால், சமூகத்தால் மூர்க்கமாக வேட்டையாடப்படுகிறார். பிழைக்கத்தெரியாதவர் என்ற முத்திரையுடன். அவருக்கு மேலும் மேலும் நெருக்கடி தரப்படும். லஞ்சம் தாராளமாகப் புழங்கும் அலுவலகத்தில், லஞ்சம் வாங்காதவர் படும் பாட்டைப்போல.

உலகம் யாவையும்காரி டேவிஸ்: ‘எல்லா நல்ல சிந்தனைகளும் ஆரம்பத்தில் கிறுக்குத்தனமாகத்தான் தோன்றும். சில கிறுக்கர்களால்தான் முன்னெடுத்துச் செல்லப்படும்’.

சத்தியமான வார்த்தை!
தங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன்

ராஜன் சோமசுந்தரம்

 

உலகம் யாவையும்

கோட்டி

பெருவலி

மெல்லிய நூல்

ஓலைச்சிலுவை

நூறுநாற்காலிகள்

மயில்கழுத்து

 

யானைடாக்டர்

தாயார் பாதம்

வணங்கான்


மத்துறு தயிர்

சோற்றுக்கணக்கு

அறம்

 

முந்தைய கட்டுரைஇசை, வாசிப்பு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரவில் வாழ்தல் -கடிதம்