ஆமென்பது, விருந்து – கடிதங்கள்

ஆமென்பது… [சிறுகதை]

அன்புள்ள ஜெ

பலவகையான கதைகள். ஆனால் எனக்கு இந்த ஆமென்பது ஒரு பெரிய அனுபவமாக அமைந்த கதை. கற்பனையே இல்லை, உண்மையான வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது [யார் என்ன என்று விக்கிப்பீடியாவில் போய் அறிந்துகொண்டேன்]

ஒரு முழுவாழ்க்கையும் கூர்மையான விமர்சனம் கலந்து சொல்லப்படுகிறது. அந்த வாழ்க்கைக்கு மிக அணுக்கமாக இருந்து கவனித்துக்கொண்டே இருந்த ஒருவரால். [நிஜவாழ்க்கையில் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆகவே வேறெந்த கவனமும் இல்லை. அண்ணாவைப்பற்றி நிறையவே சொல்லமுடியும்]

நோயுற்றவராக இங்கே வருகிறார் ஆசிரியர். ஆகவே நேர் எதிர்த்திசையில் திரும்பிக்கொள்கிறது அவருடைய ஆற்றல். அவருடைய வாழ்க்கை முழுக்க முழுக்க எதிர்வினைதான். எதிர்வினையே வாழ்க்கையாக இருப்பது ஒரு நல்ல வாழ்க்கையாக ஆகுமா? கம்யூனிசம் இருத்தலியல் மீதெல்லாம் அவர்கொண்ட பற்று கூட எதிர்வினைதான். கடைசியில் ஆன்மிகமே கூட அந்தவகையான எதிர்வினைதான். அவரால் அதிலும் எதையும் அடையமுடியவில்லை.

அந்த எதிர்வினைகள் எல்லாம் அவருக்கு அடியிலிருந்த உண்மையான ஏக்கங்களை மறைப்பதற்காகத்தான். அவருடைய அந்தப்பாவனைகள்தான் இலக்கியமாக வெளிப்பட்டன.

ஆனால் இசகாக்கின் புராணம் அதைமீறி பாசிட்டிவானது. அதில் அவர் உண்மையாக வாழ்கிறார். அன்பில் திளைக்கிறார். அதுதான் அவர். மற்றதெல்லாம் அவருடைய துக்கம் மட்டும்தான்.

 

சிவக்குமார்

 

அன்புள்ள ஜெ

ஆமென்பது பலவகையான எண்ணங்களை உருவாக்கிய கதை. ‘தெய்வங்கள் போதும், புதிய தெய்வங்களை பிரதிஷ்டிக்காதீர்கள்’ என்ற வரிதான் மையம். ‘எழுத்தாளர்கள் அவர்களுக்கு என்ன என்றே தெரியாத தெய்வங்களை பிரதிஷ்டை செய்துவிடும் துரதிருஷ்டசாலிகள்’ என்ற வரி இன்னொரு திறப்பு. கே.வி.ஜயானனன் அதைத்தான் செய்தார். பெருந்துக்கம் என்ற தெய்வத்தை நிறுவி விட்டார். அது அவரையே பலிகேட்டது. அதை அவராலேயே கட்டுப்படுத்த முடியாது.

மிகவேகமாகச் சொல்லப்படுகிறது கதை. எதற்கென்றே தெரியாத முடிவில்லா காத்திருப்புகளாகிய மலைகள் நடுவே பிறந்து வளர்ந்தவர். வாழ்க்கையின் அலைகள் வழியாகச் செல்கிறார். ஒவ்வொரு தளத்திலும் வெறிகொண்டு எதிர்வினையாற்றுகிறார். தன்னை விதவிதமாகக் கற்பனைசெய்துகொள்கிறார். ஆனால் எஞ்சுவது அந்த ஏக்கமும் தனிமையும் மட்டும்தான்

 

ஆர்.

விருந்து [சிறுகதை]

அன்பிற்குரிய ஜெயமோகன்,

இசையில் உன்னதமானது கந்தர்வகாணம்  என்பார்கள். இலக்கியத்திலேயும் சிறந்தது கந்தர்வக்கதைகள் என வரும்தலைமுறை கூறுமளவிற்கு இலக்கிய கந்தர்வனாகவே மாறி அவர்களின் கதைகளை படைப்புகளாக்கிக்கொண்டு இருக்கிறீர்களோ என்ற ஐயம் எழுகிறது.இது எனது மிகக் கற்பனையாகக் கூட இருக்கலாம். அட இருந்து விட்டுத்தான் போகட்டுமே!

கந்தர்வன், யட்சன், படையல், விருந்து என வரிசையாக வந்து கொண்டிருக்கும் கதைகள் ஒருவகையில் சிறந்த கந்தர்வ இலக்கியமே தான்.

உலகிலே கொலைகள் இரண்டு வகை ஒன்று மற்றவர்களை மாய்க்கும் கொலை இன்னொன்று தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை. மாய்க்கும் கொலையிலேயும் இரண்டு உண்டு ஒன்று தன்னலத்தினாலே உணர்ச்சிவசப்பட்டு கொல்வது மற்றொன்று அறத்தைக் காக்க செய்யப்படும் தண்டனை கொலை. தற்கொலைகளும் இரண்டு வகை ஒன்று உணர்ச்சி மேலீட்டால் வாழ்க்கை தோல்விகளால் தன்னைத் தானே கொன்று கொள்வது மற்றொன்று அறத்தின் பொருட்டு தன்னையே அளிக்கும் தற்கொடை. இவைகளை சீர்தூக்கிப் பார்த்தால் அறத்தின் பொருட்டு செய்யப்படுகின்ற தண்டனை கொலைகளும் தற்கொலைகளும் என்றென்றும் வியந்து போற்றத்தக்கது.

சாமிநாத ஆசாரி செய்த தண்டனைக் கொலையை தாணப்பன் பிள்ளை வியந்து போற்றுவதாலேயே, மிகப்பெரிய அறச்செயலாக மதிப்பதாலேயே, சாமிநாதன் தூக்கிலிடப்பட்டதை ஒரு அறப் பிழை என வருந்துவதாலேயே, அவர் வாழும் வரை சாமிநாத ஆசாரியின் பெயரில் திருவட்டார் ஆதி கேசவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவன் இறந்த நாளிலே புஷ்பாஞ்சலி செய்து கொண்டிருந்தார்.

அம்மிணி தாயாலும் அவளை வற்புறுத்திக் கட்டாயமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான உறவுக்கு ஆட்படுத்தி வைத்திருந்த ஆனால் அதை வெளிப்படையாக முன்வைக்காத கரை நாயர் திவாகர குரூபாலும் ஒரு சந்தையிலே கைவிடப்பட்ட சிறுவன் போலவேதான் சாமிநாத ஆசாரி வளர்க்கப் பட்டிருக்கிறான்.அவனும் ஒரு பலி ஆடு தானே.

சாமிநாத ஆசாரியின் தந்தை அவனது பத்து வயதில் இறந்த பிறகு, அவனது இருபத்தாறு வயது வரை ஒரு ஆடு புல்லும் தழையும் போட்டு வளர்க்கப்படுவது போல சாமிநாத ஆசாரி கரைநாயரால் வளர்க்கப்பட்டான் என்பதையே பத்து வயது முதல் அவன் தொடர்ந்து போடும் வெற்றிலைக் குறியீடு காட்டுகிறது. அந்த வெற்றிலை போடுதல் மட்டுமே அவன் உள்ளக் கொதிப்புக்கு ஆறுதலாக மனதிற்கு விடுதலையை தருவதாக இருக்கிறது. வெற்றிலை போடுவதின் மூலம் அவனால் எல்லாவிதமான துயரங்களில் இருந்தும் விடுபட்டு ஒருவித தியானம் போன்ற அனுபவத்தில் திளைக்க முடிகிறது. மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆடு ரசித்து ருசித்து பச்சிலையை மெல்வது போல வெற்றிலை அவனை அவன் எல்லாத் துன்பங்களிலிருந்தும் மீட்கிறது. ஒருவகையில் தாணப்பன் பிள்ளைக்குக்கூட வெற்றிலை போடுவதே அவரை கடைசிவரை உணர்வு சிக்கல்களில் இருந்து மீட்கும் ஒரு செயல்பாடாக இருந்திருக்கிறது.

ஒரு ஜென் துறவி ஒவ்வொரு சிறிய செயலையும் எவ்விதம் தியானமாக யோகமாக செய்கிறாரோ அவ்விதம் சாமிநாத ஆசாரி வெற்றிலை போடுவது காட்டப்பட்டுள்ள விதம் வெகு அருமை.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சாமிநாத ஆசாரியிடம் அம்மிணி கரைநாயர் எவ்விதம் அவளை சீரழித்தார் என்பதை உணர்த்தி, அவனை வளர்க்க வேண்டிய தன்னுடைய கடமை முடிந்துவிட்டது காரணமாகவும் தற்கொலை செய்து தன் வாழ்வை முடித்துக் கொண்டு இருப்பார். அதனாலேயே சாமிநாத ஆசாரி அவளுடைய விதி முடிந்துவிட்டது என்று தாயின் மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.

தன் தாய் ஆதரவற்ற நிலையில் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டது, அவளைப் போலவே கரைநாயரால் வேறு சிலரும் சீரழிக்கப்பட்டதை அறிய நேர்ந்தது போன்றவற்றிற்காக தண்டிக்கும்  விதமாகவே கரையிநாயர் சாமிநாத ஆசாரியால் கழுத்தறுத்து கொலை செய்யப்படுகிறார். அவன் உண்மையில் அவருடைய தலையை அவனுடைய தாய்க்கு குழிமாடத்தில் படையல் விருந்தாக அளிக்கவே விரும்பினான். அது இயலாமல் போனதால் தலையை ஆற்றில் வீசுகிறான். சாமிநாத ஆசாரி கரைநாயரின் தலையை வெட்டும்பொழுது நிச்சயமாக வாய்நிறைய வெற்றிலையை போட்டுக்கொண்டுதான் போயிருப்பான். அந்த வெற்றிலைதான் அவனுக்கு கந்தர்வ வல்லமை தந்து ஒரே வீச்சில் தலையை எடுக்க வைத்தது. அந்த வெற்றிலையின் போதை இறங்கியவுடன் கந்தர்வத் தன்மை நீங்கி அந்தத் தலையை அவனால் சுமக்க முடியாமல் ஆகிவிட்டது.

அன்றைய நீதி நிர்வாகத்தில் இருந்த அனைவருக்குமே இந்த உண்மை தெரிந்திருந்த போதும் ஜாதிப்பற்றின் காரணமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து சாமிநாத ஆசாரியை தூக்கிலிட்டுவிடுகிறார்கள். அதே ஜாதிப் பற்று அவனுடைய கருணை மனுவை நிராகரிக்க வைக்கிறது. இந்த மோசமான நீதி நிர்வாகத்தை குறித்த விமர்சனமாகவே ஆடு ஜெயிலுக்குள் அவன் அறைக்குள் வருவதை சாப்பாடு உள்ளே வரலாம் தப்பில்லை என்கிறான்.

அன்றைய சமூக அமைப்பின் படி பார்த்தால், இது போல இன்னும் எத்தனையோ பேருடைய வாழ்க்கையை கரை நாயர் சீரழித்திருக்கக்கூடும். அவை அனைத்தையும் அறிந்து அதற்கான தண்டனையாகவே அவன் ஒருவகையில் தன்னை வளர்த்தவராகவே இருந்தபோதிலும் பலரின் வாழ்வை சீரழித்த கரைநாயரின் தலையை எடுக்கிறான். அவர் கொல்லப்பட வேண்டியவர் அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் சொல்கிறான். ஒருவேளை இது அவனது தாய் அவனுக்குக்கிட்ட அற ஆணையாகக் கூட இருக்கலாம். அதனாலேயே  மரணத்தை எதிர்நோக்கி இருந்த போதும் சாமிநாத ஆச்சாரி தன்னுடைய அறக் கடமை முடிந்து விட்ட நிறைவில்  இறப்பை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள தயாராகிறான்.

ஆடு போல உருமாற்றம் கொண்ட மகாபாரத கந்தர்வன் ஸ்தூலகர்ணனை நினைவூட்டிய நல்ல கதை. முதல் வாசிப்பில் எனக்கு அம்மிணி சாமிநாதனின் தாயெனப்பட்டது. சுக்கிரி இலக்கிய உரையாடல் குழுவில் சிங்கை சுபஸ்ரீ, அம்மிணி சாமிநாதனின் மனைவி என தந்த குறிப்பை கண்டு, மறுவாசிப்பு செய்கையில், கதை மேலும் விரிந்து, சைலெந்திரியின் பொருட்டு கந்தர்வனால் நிகழ்த்தப்பட்ட  கீசகவதம் நினைவுக்கு வந்தது. அம்மிணியை சாமிநாதனின் தாய் எனக் கொண்டாலும் அல்லது மனைவி எனக் கொண்டாலும் அவன் செய்தது அறத்தின் பொருட்டான கொலையே.

எங்கள் ஊரிலே ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நோஞ்சானான ஒருவன், தன்னுடைய மனைவியிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக, அவர் காலைக்கடன் கழிக்க வயல்வெளிக்கு சென்ற பொழுது அவருக்குப் பின்னாலிருந்து கடப்பாரையால் மண்டையை உடைத்துக் கொன்றான். அறத்தின் தேவனான எமன்

எவனைக் கொல்ல எவன் மீது ஏறி வருவான் என்று எவருக்கும் தெரியாது. 15 ஆண்டுகளாக அந்த சப் இன்ஸ்பெக்டரின் மண்டையை உடைத்தவன் இன்றுவரை பிடிபடவில்லை என்பதும்கூட அறத்தின் விளையாட்டே, மானுடனுக்கு மறைக்கப்பட்ட நாடகமே.

தன்னுடைய கடைசி ஆசையாக ஒரு ஆட்டை வாங்கி வரச்செய்து தனக்கு வந்த உணவையெல்லாம் அதற்குக் கொடுத்து, வெற்றிலையை அதன் காதில் வைத்து ஒரு சடங்காக தன் பெயரையே அதற்குச் சூட்டி, அந்த வெற்றிலையை அதற்கு உண்ணவும் கொடுத்து தன் கண்ணெதிரிலேயே அது கொல்லப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். அதன் தலையை அறுத்து அதன் முகம் அதன் கண்கள் தன்னை பார்க்குமாறும் வைக்கச்சொல்கிறான். ஒருவகையில் அந்த ஆடு அவனேதான். அந்த ஆடு கைதிகள் சிறை காவலர்கள் என அனைவருக்கும் விருந்தாவது போல அவன் அன்றைய ஜாதியால் சீரழிந்த ஒட்டுமொத்த நீதி நிர்வாக அமைப்பினால் உண்ணப்படுகிறான். தன் மரணத்தின் மூலம் அந்த அறம்கெட்ட சமூகத்திற்கு தன்னையே துட்டிச் சோராக்கி சாவு விருந்திடுகிறான்.

பல தளங்களிலான குறியீட்டு சொற்றொடர்களை உள்ளடக்கிய, விடுவிக்கப்பட வேண்டிய முடிச்சுக்களை உள்ளடக்கிய, துட்டி விருந்தாக வந்தபோதும் சுவையான பெருவிருந்தே இது. எப்படிப் பார்த்தாலும் சீரழிந்து கிடந்த அன்றைய சமூகத்திற்கு ஜாதி அமைப்புக்கு அளிக்கப்பட்ட சாவுச் சாப்பாடு ஆயிற்றே.

கரை நாயர்கள் அவன் உயிரை விருந்தாக உண்டனர். சிறைக்கு வந்த ஆட்டுக்கு களியும் இலையும் விருந்து. சிறைவாசிகள் மற்றும் அதிகாரிகள் அவனாகிவந்த ஆட்டை விருந்தாக உண்டனர். ஆனால் அவனுக்கோ வெற்றிலை மட்டுமே முழு விருந்து. வாசகர்களாகிய எங்களுக்கு விருந்து கதையே ஒரு நல்விருந்து.

மிக்க நன்றி ஜெயமோகன்

 

அன்புள்ள

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைதீற்றல், படையல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலைபூத்தபோது [சிறுகதை]