விருந்து,கூர்- கடிதங்கள்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விருந்து ஓர் அழகிய சிறுகதை. நேற்றிரவே படித்துவிட்டேன். இன்றுகாலை கதையை மீண்டும் வாசித்துவிட்டு அம்மாவுக்கு கதையை முழுமையாகச் சொன்னேன். அம்மாவுக்கு கதை அவ்வளவு பிடித்திருந்தது. இந்தக்கதைகள் எல்லாவற்றையும் அப்படி கதைகளாக அழகாகச் சொல்லிவிடமுடிகிறது.

அந்த ஆட்டை அவன் ஊட்டுவதும், பெயர் போடுவதும், அதன் குடல் உருவப்படுவதை அவனே பார்த்துக்கொண்டிருப்பதும் பெரிய மனப்பாரத்தை உருவாக்கின. அவன் தன் சாவை தானே பார்த்துக்கொண்டிருக்கிறான். தன்னைத்தானே சிலுவையில் ஏற்றிக்கொள்கிறான்

அந்த அனுபவம் நமக்கே ஏற்பட்டிருக்கும். நாமே சிலசமயம் அப்படி நம்மை உரித்து தொங்கவிட்டிருப்போம் என்று நினைக்கிறேன். நிர்வாணம் என்கிறோம். ஆடையில்லாத நிர்வாணம் அல்ல. தோலே இல்லாத நிர்வாணம். அவன் அடைந்தது அதுதான்

கணேஷ்

அன்புள்ள ஜெ

விருந்து கதையை வாசித்தேன். அதன் டீடெயில்களை சும்மா சோதனை செய்துபார்த்தேன். அவன் தூக்கிலே போடப்பட்ட தேதி என்ன கிழமை என்று பார்த்தேன். திதி, நட்சத்திரம்கூட சரியாகப்போட்டிருக்கிறீர்கள். உண்மையில் அப்படி ஒரு ஆசாரி தூக்கிலே போடப்பட்டாரா என்ன?

தியாகராஜன் பொன்னம்பலம்

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

கூர் கதையை உடனே கடந்துவிடவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. உங்களுடைய பிறகதைகளில் வாழ்க்கைமேல் ஒரு நம்பிக்கையும் இந்த வாழ்க்கையைக் கொண்டாடும் தன்மையும் உண்டு. தீற்றல் போன்ற கதைகளிலுள்ள கொண்டாட்டமே கூட அத்தகையதுதான். ஆனால் கூர் அப்படி அல்ல. அது ஒரு கசப்பான கதை. நாம் காண மறுக்கும் கசப்பான உலகத்தைச் சுட்டிக்காட்டுவது.

மனிதர்களை கசக்கிக் குப்பைக்கூடையில் வீசும் ஓர் அமைப்பை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்த அமைப்பை நம்பி வாழ்கிறோம். மிக மிக வலிதரும் ஒரு கதை. நான் அமெரிக்கா செல்லும்போது அந்த மாபெரும் செல்வச்செழிப்புள்ள நாட்டிலேயே தெருக்களில் வாழ்பவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களில் சிறுவர்களும் உண்டு.

இருநூறாண்டுகளுக்கு முன்பு ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் டிக்கன்ஸ் ஓர் உலகத்தை காட்டினார். குற்றவாளிச் சிறுவர்களின் உலகம். அந்த கொடுமையான உலகம் அப்படியே நீடிப்பதையே கூர் காட்டுகிறது

 

அர்விந்த்

 

அன்புள்ள ஜெ,

கூர் கதையில் ஒரு சின்ன ஜாலம் உள்ளது. வழக்கமான நவீனச் சிறுகதை வாசிப்பவர்கள் ஒரு டிவிஸ்டை விரும்புவார்கள். உனக்கு ட்விஸ்ட்தானே வேண்டும் இந்தா என்று இன்னொரு அடியாளை முதல்குற்றவாளியாக ஆக்குவதைச் சொல்லியிருக்கிறீர்கள். சாதாரண நவீனக்கதை வாசகர்கள் அதுதான் கதை என்று நினைத்துவிடுவார்கள். நான் அந்தக்கதையை வாசித்ததும் அதுவாக இருக்கமுடியாதே கதை, அப்படி எழுதமாட்டாரே என்றுதான் நினைத்தேன். இன்னொருமுறை கதையை வாசித்ததும்தான் கதையின் மையம் எது என்று தெரிந்துகொண்டேன்

 

பாஸ்கர்

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவலம் இடம்,கொதி- கடிதங்கள்