விருந்து, ஏழாம் கடல் – கடிதங்கள்

விருந்து [சிறுகதை]

அன்புள்ள ஜெ

விருந்து கதையை வாசிக்கும்போது ஒன்றை நினைத்துக்கொண்டேன். தன்னைக்கொன்று அனைவருக்கும் ஊட்டிவிட்டுச் செல்கிறான். அது எவ்வளவு குரூரமான செயல். ஏன் கடைசிவரை தாத்தா அவனை நினைத்துக்கொண்டிருக்கிறார்? ஏனென்றால் அவர் அவனை தின்றிருக்கிறார். அவன் உடல் அவர் உடலாக ஆகியிருக்கிறது. ஆப்ரிக்கர்கள் ஒருவர் இறந்துவிட்டால் அவர் உடலை உண்பார்கள். ஏனென்றால் அவர் அதன்பின் தன் உடலிலேயே நீடிப்பார். அதேபோல அவர்கள் அனைவருமே அவனுடைய உடலை உண்டுவிடுகிறார்கள் இல்லையா?

அன்றைக்கு அவன் தூக்கிலேறியபின் அவர்கள் என்ன நினைப்பார்கள்? எப்படித்தூங்குவார்கள்?

சந்திரசேகர்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

விருந்து ஒரு திகைப்பூட்டும் கதை. ஆனால் ஆசாரியின் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. அவன் மரபார்ந்த முறையிலேயே அதைச் செய்கிறான். ஒருவன் சாவதற்குமுன் உயிருடனிருக்கையில் அளிக்கும் பலிக்கு இரிக்கப்பிண்டம் என்று பெயர். அவன் அதை தனக்கே செய்துகொள்கிறான். 16 ஆவது நாள் விருந்தை போட்டுவிட்டு உயிர்துறக்கிறான்.

அவன் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக பார்க்கிறான். அவனுடைய நகைச்சுவை, அவனுடைய அந்த விளையாட்டுத்தன்மை எல்லாமே முக்கியமனாவை.அவனுக்கு வாரிசு இல்லை. ஆகவே அவனுக்கு எவரும் திதி அளிக்கப்போவதில்லை. அவனே தனக்கு திதி அளித்துவிட்டு செல்கிறான்

ஸ்ரீதர்

ஏழாம்கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஏழாம்கடல் சிறுகதை வாசித்தேன்.

உங்கள் இளைமையில் இங்மர் பெர்மனின் seventh seal பார்த்து விட்டு வியந்து அதை பற்றி சுந்தர ராமசாமியிடம் பேசியதை நினைவின் நதியில் சுரா விலோ வேறு பதிவிலோ படித்திருக்கிறேன். நூறுகதைகளில் கூட ஏழாம் முத்திரை என்று ஒரு கதை உண்டு.

கிருஸ்துவம் இந்து மதம் இரண்டிலுமே ஏழு என்னும் எண்ணிற்க்கு முக்கியமான இடம் உண்டு என்று தேடிப் பார்த்ததிலிருந்து தெரிகிறது. Seven sins, Seventh seal, Seven seas, ஏழாம் நாள் கடவுள் உலக்கதை படைத்து முடித்தார் போன்று கிருஸ்துவத்திலும். சப்பத ரிஷிகள், ஏழு கடல் போன்று இந்து மதத்திலும்.

இது இரண்டு மதங்களின் ஏழாம் கடல் பற்றிய கதை.

இத்தனை ஆண்டு தீவிர நட்பு இருந்தும் கூட ஏன் யாகப்பா சிப்பிகளை திறந்து பார்ப்பதில்லை. பயமா. தொடக்கூடாது என்று சொல்லிவிட்டதனாலேயே எடுத்து உண்ட ஆப்பிள் தரும் அச்சமா. முதலில் சரவணனை பார்த்ததும் அவருக்கு தான் செய்யாத குற்றத்துக்கு ஏன் இவ்வளவு குற்றவுணர்ச்சி, ஏன் இவ்வளவு அழுகை. எப்படி அதற்க்கு பொறுப்பேற்று கொள்கிறார். அனைத்திற்க்கும் நீயே காரணம் என்று சொல்லிவிட்டதனாலா. அல்லது ஊழ் என்றோ தெய்வத்தின் செயல் என்றோ யாகப்பனிடம் சொல்ல ஒன்று இல்லை என்பதாலா.

முதலில் யாகப்பனை சரவணனின் அம்மா வெறுத்திருந்தாலும் அவளுக்கு அவரை எவ்வளவு அனுக்கமாக தெரிந்திருக்கிறது. ஏன்னென்றால் அவள் பெண். தாய். அன்பாலும் உணர்ச்சியாலும் ஆனவள் என்பதானாலா.

ஆனால் மகனாகிய கதைசொல்லி சரவணன் ஏன் முழுக்க அன்பின் மீது அவநம்பிக்கை உடையவனாக இருக்கிறான். நாளாம் கிளாஸ் படிக்கும் குழந்தை ஒன்று அவன் மனதில் இல்லையா அல்லது அன்புக்கான மானுடர் மீதான நம்பிக்கைக்கான வாய்பு அவன் மரபிலும் மதத்திலும் இல்லையா. நாற்பது ஆண்டுகளாக அந்த நடப்பின் முன்னால் சென்று ‘கேஸ் வேண்டான்னு சொல்லியாச்சு’ என்கிறான் பெருந்தன்மை பாவனையுடன். துளி துக்கம் அவனக்கு  இருப்பதாக தெரியவில்லை ஆனால் முத்தை கொண்டுபோய் சோதனை செய்து ‘அசல் முத்து’ என்கிறான். எத்தனை சுயநலமானவன். அவனை பார்த்து என்ன பிறப்பு என்றே எண்ணத்தோன்றுகிறது.

அந்த இன்ஸ்பெக்டர் பென் ஜோசப் வெளிபடுத்துவது என்ன. ஒரு பாவியை  கண்டுபிடிப்பதன் மூலம் தன்னை பரிசுத்த ஆத்மாவாக ஆக்கிக்கொள்ள முயள்கிறாரா. அல்லது சாத்தான் உள்ளறையாத எதவும் இல்லை என்று சொல்ல வருகிறாரா..

சரவணனின் அப்பாவின் ஏழாம் கடலில் முத்து இருந்தது. ஏனென்றால் அது குறித்து அவருள் எந்த எதிர்பார்ப்பும்மில்லை அச்சமும்மில்லை. அதனால் தான் அவரின் ஏழாம் கடலில் வந்தது முத்து. ஆனால் யாகப்பாவின் ஏழாம் கடலில் வந்தது துளி விசம். காரணம் அவருக்கு இரண்டும் வருவதற்கான சாத்தியம் பற்றி முன்பே தெரியும். ஒன்றுக்கான எதிர்பார்ப்பும் மற்றொன்றுக்கான அச்சமும் அவரிடம் நாற்பத்தெட்டு ஆண்டுகளும் இருந்தது. மனதிர்களின் அக கடலில் உள்ளத்தைதான் அவர்கள் ஏழாம் கடலில் காண்கிறார்கள். அக கடல் அவர்களுடைய நம்பிக்கைகள், அகத்தில் உள்ளுரைந்த மதபடிமங்களால் உணர்வுகளால் ஆனது என்று இக்கதையை வாசிக்கலாமா.

ஏழாம்கடல் கதை புறவையமாக இரண்டு மதங்களின் மீதான விமர்சனத்தை, இடைவெளிகளை, போதாமைகளை சுட்டிகாட்டுகிறது. கதையின் அகம் தன் ஒரு கையில் பிள்ளைவாளையும் மறுகையில் யாகப்பாவையும் பிடித்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

இல்லை என்றால் இக்கதை முழுக்க முழுக்க சரவணன் மீதான  இன்ஸ்பெக்டர் பென் மீதான விமர்சனமா. ஆதாவது இத்தலைமுறையின் மதம் மீதான விமர்சனம்.

நாளம் கிளாஸ் பிள்ளைவாளும் யாகப்பாவும் சொர்கத்தில் விடிய விடிய பேசி கொண்டு அமர்ந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்கு துளி விசமும் ஒரு பொருட்டில்லை ஒரு முத்தும் ஒரு பொருட்டில்லை.

நன்றி

பிரதீப் கென்னடி

 

அன்புள்ள ஜெ,

யார்மேலும் எந்தப் பிராதும் இல்லாத இரு பெருசுகள். தங்கள் உலகத்தை பால்யத்திலேயே நிலைநிறுத்தி அவர்களின் ஒவ்வொரு சந்திப்பிலும் அவ்வாழ்க்கையில் நுழைந்து கழித்து வெளியேறுபவர்கள். மீண்டும் அடுத்தவாரம் அவ்வுலகிற்குள் ஒரு மீனைச் சாவியாகக் கொண்டு நுழைய எதிர்நோக்கிக் காத்திருக்கும் அதே சிறுவர்கள். எந்தக் கள்ளமும் இவர்கள் மனதில் தங்க வாய்ப்பில்லை. அப்படியே தோன்றும் பிணக்குகளும் ஒரு படீர் அடியிலோ, பரஸ்பர கெட்டவார்த்தைகளிலோ மறைந்து போய் அவ்வனுபவங்களை அழித்து அழித்து புதிதாய்த் தோன்றும் சிறுவர்களின் மனம் கொண்டவர்கள்.

முத்தை அடைந்து பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் பிள்ளை நஞ்சை அடைவதும் இயல்பான செயலே. உண்மையில் கடலுக்குச் செல்ல முடியாத, சிரமப்பட்டாவது சந்திக்க வரும் நட்பின் முடிவு அவ்வியற்கையிடம்தான் விடப்பட வேண்டும். சுற்றியுள்ளவர்களுக்கு ஏதுமற்ற சடங்காய்ப் போன இந்நட்பின் முடிவுக்கு பிள்ளை சிப்பியின் அந்நஞ்சை உள்ளூர எதிர்பார்த்தும் இருந்திருக்கலாம். இரவெல்லாம் கண்விழித்து சிரித்துக்கொண்டிருக்கும் பிள்ளை கண்ணயர வியாகப்பன் தன்னையறியாமல் தரும் ஓர் அடிதான் இந்த சிப்பியின் நஞ்சு.

அன்புடன்,

ராஜேஸ்.

 

 

முந்தைய கட்டுரைஉன்னிகிருஷ்ணன் வீட்டு ராஜகுமாரி
அடுத்த கட்டுரை’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்