எண்ணும்பொழுது, குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதை ஒவ்வாமையை உருவாக்குகிறது. இந்தவகையான கதைகளில் உள்ள அதீதக் கற்பனை பலவகையான நம்பிக்கையிழப்புகளை உருவாக்குகிறது. மனிதன் என்னதான் சூழ்ச்சி செய்தாலும் அவனால் அவனுடைய அடிப்படை ரசனை, பயாலஜிக்கல் தேவைகள் ஆகியவற்றைக் கடந்துசெல்ல முடியாது.

இந்த கதையில் வரும் இருவருமே இயல்பானவர்கள் அல்ல. உயர்குடிகள். அவர்கள் இருவருமே தங்கள் பெயர்களை ஏற்கனவே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மூக்கை அவள் மாற்றிக்கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு அவர்களின் திராவிட அடையாளம் தாழ்வுணர்ச்சியை அளிக்கிறது. இது மைக்கேல்ஜாக்ஸன் காம்ப்ளெக்சே ஒழிய மனிதர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படைப் பிரச்சினை இல்லை

குமார் அருணாச்சலம்

அன்புள்ள ஜெ..

குமிழி கதை சற்று பிசகினால் பெண்ணுரிமை பிரதியாக  அல்லது பெண்ணடிமையை வலியுறுத்தும்பிரதியாக வாசிக்கப்படும் அபாயம் உள்ளது

ஆனால் இரண்டு எக்ஸ்ட்ரீம்களையும் தவிர்த்துவிட்டு சவரக்கத்தி முனையில் நடைபயில்கிறது கதை.இது ஆண் vs பெண் கதை அல்ல  .வரலாற்றுப்போக்கு vs அதை எதிர்கொள்ளும் நடைமுறை ஞானம்

பெண் என்றால் ஆணின் இச்சையை தீர்ப்பதற்காக பிறந்தவள் என்ற நிலை ,   செக்ஸ் என்பது நடைபெற ஆண் மற்றும் பெண் என்பது மட்டுமே போதும் ,  தனிநபர் ரசனைகள் விருப்பங்கள் தேவையில்லை என்ற நிலையைக்கடந்து வெகு தூரம் பயணித்து விட்டோம் என நினைக்கிறோம்  ஆனால் துவங்கிய இடத்திலேயே இன்னும் நிற்கிறோம்.இரண்டுமே உண்மைதான் என்பதுதான் இதிலிருக்கும் சுவாரஸ்யம்.

இருபரும் எதிர்பாலரின் உடலைப் பார்த்து காமுறுவதுதான்  இயற்கை (!!!) டிசைன் ( ?). ஆனால் ஆடை , அணிகலன்கள் ,  படிப்பு, அந்தஸ்து என  பல விஷயங்கள் குறுக்கே வந்து விட்டன.

ஒரு கற்பனையான சூழல்  ஆடைகள் அணிவது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு  நிர்வாணமாக நடமாடுவது இயல்பாகிவிட்டது இயல்பாகிவிட்டால் ,  ஆண் பெண் உறவு சமன்பாடே மாறிவிடும் அல்லவா ? சாமான்யர்களின் உடல் ,  உடல்சார்ந்த உழைப்பாளர்கள் உடல் அதிகமாக விரும்பப்படும் ,  பணக்கார வீட்டு வாரிசுகளும் , உயர் அந்தஸ்தில் வாழ்வோரும் தமது சொங்கியான உடலால் இழிவாகப்பார்க்கப்படும்  .

ஆக , தற்போது நாம் காதல் என்று சொல்வது பரஸ்பர வெளித்தோற்ற செயற்கைப் பூச்சுகளையே.நாம் காதலிப்பது ஒருவரது புரொஜக்ஷன்களையே.அறிவியல் வளர்ச்சி என்பது உடலை நம் இஷ்டப்படி மாற்றிக்கொள்ள வழி செய்வதுபோல நமது அறிவையும் மனதையும்கூட மாற்றிக்கொள்ள வழி செய்யும்

உதாரணமாக , எனக்கு பல வருட ஓட்டுனர் அனுபவம் உண்டு ,தமிழக சாலைகள் அனைத்தும் அத்துபடி என்பதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்த கெத்து இன்றில்லை. கூகிள் மேப் உதவியுடன் இன்று யாரும் எங்கும் சுலபமாக கார் ஓட்டலாம்.இதன் அடுத்த கட்டமாக கூகிள் போன்ற app களை உடலிலேயே பொதித்து வைக்க முயல்கிறார்கள்.குழந்தைகள் காணாமல் போதல் , கடத்தல் , குற்றவாளிகள் தலைமறைவு போன்றவை நிகழ முடியாது.  யாரையும் எளிதாக டிராக் செய்ய முடியும்.

எளிய அரசியல் , செயற்கையான போராளி பாவனை , அரசியல் தொடர்புகளால் ஊடக வாய்ப்பு என வாழும் ஒரு இணைய மொண்ணை , ஒரே கணத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தையும் , நுனிப்புல் மேயந்து விட முடியும்.கடலுார் சீனு , காளிபிரசாத் , சுரேஷ்பாபு , ஜா ராஜகோபனுக்கு நிகராக ,  ஒரு மண்டூகம் கூட சுவையான உரையாடலை நிகழ்த்திவிட முடியும்

app களை உடலில் பொருத்துவது , உடலை செயற்கை கருவிகளால் செம்மையாக்குவது போன்றவை இனி optional  அல்ல  . தனிமனித தேர்வு அல்ல  சட்டப்பூர்வமாகவே அவற்றை செய்தாக வேண்டிய சூழல் வந்து விடும்

உடலழகால் இம்ப்ரஸ் ஆவது , அறிவால் இம்ப்ரஸ் ஆவது ஆகியவையெல்லாம் மெல்ல அர்த்தமற்றவை ஆவதை கதையின் ஒரு பகுதி காட்டுகிறது.அதை உலகம் எப்படி எதிர்கொள்ளும் என்ற யதார்த்தத்தை கதையின் அடுத்த பகுதி காட்டுகிறது

ஜெயகாந்தன் கதை ஒன்றில் கதை நாயகி , எம்ஜிஆரின் போஸ்டரை கிழித்து வந்து அதன்மீது படுத்துக்கொள்வாள்.ஆண் பெண் உரையாடல்  சாத்தியமற்றுப்போகும்போது மனம் அதற்கான  மாற்றுகளை கண்டடைகிறது

போஸ்டரில் படுப்பதுபோன்ற rawஆன முறைகள் வேண்டியதில்லை.  படித்தவர்களுக்கு பணக்காரர்களுக்கு என சோபிஸ்டிக்காக ,  கலைப்பூச்சுடன் பல்வேறு வழிகள் உருவாகி வருகின்றன.   இன்று ஆட்டோமொபைல் ,  டெக்ஸ்டைல் போன்றவற்றைவிட மிக அதிகமாக பயனர்கள் புழங்கும் தொழில்துறை அதுதான்

குமிழி கதையின் பிரதான பாத்திரங்கள் இரண்டுமே பிரமாண்ட வளர்ச்சியின் சமூக மாற்றத்தின் victimsதான்.  அது அவர்களுக்கே தெரியாது.உலக வளர்ச்சியும் அதற்காக உலகம் தரும் விலையும் என்றென்றும் தொடர்பவை  , தடுக்க முடியாதவை

ஒட்டுமொத்த மானுட வளர்ச்சியை அதனால் விளையும் ஆண்பெண் உறவு மாற்றத்தை ஒரு சிறிய குமிழில் அடக்கி வாசகன் முன் வைக்கிறது கதை

அன்புடன்

பிச்சைக்காரன்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது, குமிழிகள் இரண்டு கதைகளுமே ஒரு ரகசியப்புள்ளியில் சந்திக்கின்றன. கதையின் கட்டமைப்பு ஒன்றுபோல் உள்ளது. ஆனால் கதை பேசுவது இரண்டு வேறு வேறு விஷயங்களை. எண்ணும்பொழுது கதையின் விஷயம் ஆண்பெண்ணுக்கு இடையே உள்ள நம்பிக்கை என்ன என்பது. குமிழிகள் கதை ஆணும்பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கத்தான் வேண்டுமா என்று யோசிக்கிறது

ரவீந்திரன்

 

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது. முதலில் இக்கதை மட்டும் வாசிக்காமல் விட்டிருந்தேன். இப்பொழுது விருந்து கதைக்கு பின் இக்கதையை வாசித்தேன்.

எண்ணும்பொழுது கதையிலிருந்து ஏழாம்கடல் கதை வரை ஒரு பயணம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. எண்ண எண்ண குறைவதில் துவங்கியது நூறுகதைகள், இது எண்ண எண்ண பெருகுவதில் துவங்கியுள்ளது. ஒரு இந்து செல்ல நேரும் கிருஸ்துவ ஏழாம் கடலை பற்றியது இக்கதை.

பாம்பு கிருஸ்துவத்தில் சாத்தானின் உருவகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கிரேக்கத்தின் ஹெர்குலிஸ் தன் கையில் அடக்கியிருப்பது அந்த சாத்தானை தான். கடலுங்கரை கன்னி பாம்பாக சொல்லபடுகிறாள் தீயை போல் ஆழகானவள். போம்பாளரை வசப்படுத்த சாத்தானாகிய குறையுள்ளவனின் உதவியை நாடுகிறாள்.

கதையில் போம்பாளர்  பார்ப்பது நிஜமான தெக்குதிருவீட்டு கன்னியை அல்ல, அவளின் அடி பிம்பத்தையே காண்கிறார். அவள் என்று தான் அவளில் எதை காண்கிறாரோ அதுதான் போம்பாளரின் தெக்குதிருவிட்டு கன்னி. ஏன்னென்றால் அகத்தை யாரும் முழுவதும் திறந்து காட்டாமல் ஒரு போதும் ஒருவரை முழுமையாக பார்த்து விட முடியாது, அப்படி காட்டினால் அதை முழுவதும் நாம் நம்புவோம் என்பதுமில்லை.

ஏன் அவர்கள் எண்ண துவங்கினார்கள். ஏன் என்றால் அவர்கள் எண்ணுவதற்காக தங்க மோதிரம், முல்லை செடி என்னும் சாத்தியங்களை கையிலேயே வைத்திருந்தார்கள்.

கதையில் உள்ள தலைவானி குழி சொல்வது இதைதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்  அல்லது மானுட உறவுகளுக்கு மத்தியில் குழியை வைத்து கொண்டு பயணப்பட்டால் நாம் பள்ளத்தில் விழ தான் நேரும். அது நம் அகத்தில் எண்ணி எண்ணி நாம் உருவாக்கி கொண்ட குழி. எண்ண கூடாது, மூர்க்கமாக பற்றி அணைத்துக்கொள்ள வேண்டும்.

போம்பாளரும் திருவீட்டு கன்னியும் நரகத்துக்கு செல்விலலை. இருவரும் சாத்தானின் வலையில் சிக்கவில்லை. அவர்கள் துரோகத்திற்கு அஞ்சி உயிர் நீர்த்து சொர்க்கம் செல்கிறார்கள். ஆனால் வேறு வேறு சொர்க்கம், அங்கும் பிரிந்து தான் இருக்க வேண்டும். அதற்கு காரணம்  அவர்கள் எண்ணியது மட்டும் தான்.

இக்கதையில் இந்துகள் கிருஸ்துவ தொன்மமான ஏழாம் கடலுக்குள் செல்ல நேர்கிறது. அப்படி என்றால் அங்கு செல்வதற்கான சாத்தியம் அனைவருக்கும் உண்டா. அது மானுட இயல்பா. அந்த ஏழாம் கடலை கடக்க தான் இவர்கள் வேறு தென்மங்களை நம்பிக்கைகளை உருவாக்கி கொண்டார்களை.

ராமைய்யா சொட்டும் நீராக வந்து தூக்கத்தை கெடுப்பது என கதையின் மொத்த இறுதியும் எண்ணி பார்ப்பதற்கான சந்தேகிப்பதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளது. எண்ணுவதும் எண்ணாததும் வாசகர்களிடம் விடப்பட்டு விட்ட ஒன்று.

நன்றி

பிரதீப் கென்னடி

முந்தைய கட்டுரைபடையல்,தீற்றல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேளி,விசை – கடிதங்கள்