ஆமென்பது… [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஆமென்பது கதையைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த கொரோனாக்காலக் கதைகளை வாசிக்கும்போது அதை நினைத்துக்கொண்டிருந்தேன். அவை எல்லாமே ஆழமான கதைகள். ஆனால் வாழ்க்கைமேல் நம்பிக்கையையும் நேசத்தையும் உருவாக்குபவை. பொய்யான நெகிழ்ச்சிகள் இல்லை. ஆனால் உண்மையான தருணங்கள் இருந்தன. லீலை போன்ற கதையை எல்லாம் அப்படி மனம் விட்டு ரசித்துச் சிரித்துக்கொண்டுதான் வாசித்தேன்.
அப்போது யோசித்தேன், ஒரு தொற்றுநோய்க் காலகட்டத்தில், ஒரு பேரிடர்க்காலகட்டத்தில் ஏன் நம்மால் நவீன இலக்கியத்தை படிக்கமுடியவில்லை? நவீன சினிமாக்களைக்கூட பார்க்கமுடியவில்லை. ஹாலிவுட் படங்களில் பெரும்பகுதி கொலை கொள்ளை. இன்றைக்கு ஒரு அயல்கிரகவாசி வந்து ஹாலிவுட் படங்களைப்பார்த்தால் என்ன நினைப்பார்? மனிதர்கள் மாறி மாறி வெடிவைத்தும் சுட்டும் அழித்துக்கொள்வதைத்தானே? பிரம்மாண்டம் என்றாலே அழிவுக்காட்சிதான்
நவீன இலக்கியம் என்று நாம் சொல்வது இரண்டு உலகப்போர்களின்போது உருவானது. அதில் அடிப்படையிலேயே அழிவும் சோர்வும் உள்ளடங்கியிருக்கிறது. அதை வெள்ளைக்காரன் எழுதினான் என்றால் அவனுக்கு அதுதான் சொல்வதற்கிருந்தது. நம்மாட்கள் ஏன் எழுதுகிறார்கள் என்றால் அதைப்படித்து இங்கே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
எந்தக்கதையை எடுத்துப் பார்த்தாலும் வீழ்ச்சியின் கதையைச் சொல்கிறார், மனித மனத்தின் இருள்களுக்குள் ஊடுருவுகிறார்—இதேதான். மனிதனில் அன்பு என்ற ஒன்று இருக்கிறதே. அது இல்லாவிட்டால் இங்கே உலகமே இல்லை. அத்தனைபேரும் சொந்தப்பிள்ளைகளுக்காக முழு வாழ்க்கையையே வாழ்கிறார்களே. அது ஏன், அதன் ஊற்று என்ன என்று எவராவது எழுதியிருக்கிறார்களா?
இந்தவகையான சோர்வு உலகப்போருக்குப்பின்னால் வந்தது உண்மை. அதை இலக்கியம் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. இலக்கியம் அதையே சொல்லிக்கொண்டிருந்தது. அதை காலம் கேட்டு அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டது. அதுதான் இப்படி ஆகிவிட்டது வாழ்க்கை. இந்த எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள்மேலும் மனித வாழ்க்கைமேலும் மிகப்பெரிய சாபத்தை இறக்கி வைத்துவிட்டார்கள்
எம்.ராஜேந்திரன்
அன்புள்ள ஜெ,
பேரறிவாளன் ஒருவனின் அறிவுக்கு அடியில் இருந்த பேதமையைச் சுட்டும் அற்புதமான கதை ஆமென்பது. ஆம் என்று அவனிடம் சொல்லிக்கொண்டிருப்பது விதிதான்.
இந்தக்கதை இலக்கியம் பற்றி அறிய நினைப்பவர்களுக்கு இலக்கியத்திலுள்ள மிகமுக்கியமான ஒரு பிரச்சினையைப்பற்றி ஒரு தெளிவை உருவாக்குகிறது. இலக்கியவாதிகளில் 90 சதவீதம்பேர் இளமைக்காலத்தில் நோயாலும் தனிமையாலும் அவதிப்பட்டவர்கள். நார்மலானவர்கள் அல்ல. அப்பாவுடன் பிரச்சினை உடையவர்கள். இந்த அப்நார்மலான மனிதர்கள் அவர்கள் கண்ட வாழ்க்கையை முழுவாழ்க்கைக்கும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு இலக்கியம் எழுதுகிறார்கள். அதை நார்மலான வாசகர்கள் வாசித்து ததாஸ்து சொல்லிவிடுகிறார்கள்.
அதாவது ஃப்ராய்டு பற்றிச் சொல்லப்படுவதுதான். அவர் நோயாளிகளை ஆராய்ந்து அதை வைத்து மனிதனைப்பற்றி ஒரு சித்திரம் உருவாக்கினார். மனிதர்கள் எல்லாருமே நோயாளிகள் என்று சொல்லிவிட்டார். ஃப்ராய்டை வாசித்த அத்தனைபேருமே தலையை ஆட்டி ததாஸ்து என்றார்கள். அத்தனைபேருமே நோயாளிகளாக ஆகிவிட்டார்கள்.
ஓ.வி.விஜயன் என நினைக்கிறேன். அவருடைய ஏக்கமென்பது அடைக்கலம்கோரிய குழந்தை. கடைசியில் அவர் போத்தன்கோடு கருணாகர சாமிகளின் காலடியில் சென்று சேர்ந்தார். அதை ஓ.வி.உஷா சொல்வதுபோல கதை எழுதப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். இந்த அடிப்படை ஏக்கம் அப்படியே வெளிப்பட்டிருந்தால் அது உண்மை. ஆனால் அது எதிர்ப்பு கசப்பு ஆக இந்த உலகத்தை பார்த்திருந்தால் அதற்கு உண்மையின் மதிப்பு உண்டா?
அவரைமீறி வந்த உண்மைகள் உண்டு என்பது அதற்குப் பதிலாக இருக்கலாம். ஆனால் மனிதனுக்கு துன்பத்தில் திளைக்க வேண்டிய ஆன்மீகமான தேவை உண்டு என்பதனால் இலக்கியத்தை எழுதிக்கொள்கிறான் என்று தோன்றியது
எஸ்.ராஜசேகர்
ஏழாம்கடல் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
வழக்கம்போல ஏழாம் கடலும் விதவிதமாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான கோணத்தில் விவாதிப்பார்கள். அவரவர் அனுபவம், பக்குவமே அளவுகோல்.
இதில் என் நண்பர்களுடன் நான் விவாதித்தவகையில் ஒன்றைக் கண்டேன். ‘ஐடியல்’ என்ற வகையான ஒரு நட்பு பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. அப்படி ஒன்று இருக்கமுடியும் என்றே அவர்களால் நம்பமுடியவில்லை
ஏனென்றால் சென்ற நூறாண்டுகளாக நவீன இலக்கியம் என்பது ஐடியல் ஆன நட்பு இருக்கமுடியாது என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறது. நவீன இலக்கியத்தில் ஒரு சிறுகதை எல்லா ஐடியல்களையும் கடைசியில் தூக்கிப்போட்டு உடைப்பதாகவே முடியும். ஐடியல் என ஒன்றைச் சொல்லி அதிலுள்ள ஒரு திரிபையோ கசப்பையோ சொல்லி முத்தாய்ப்பு வைக்கும். கரவு, கள்ளம், நஞ்சு என்று கதைக்கு ஒரு தலைப்பும் இருக்கும்.
அதை நெடுங்காலமாக வாசித்துப் பழகியவர்கள் நம்மவர். ஆகவே ஏழாம் கடல் கதையையும் அப்படியே வாசிக்கிறார்கள். கடைசியில் பிள்ளைவாள், வியாகப்பன் இருவரில் ஒருவர் கெட்டவர் என்று ‘புரிந்து’ கொள்கிறார்கள். யார் தப்புசெய்தது என்றுதான் பார்க்கிறார்கள். அந்த நஞ்சு எவருடையது, ஏன் என்று கதையில் தேடுகிறார்கள்.
இது தேடுபவரைத்தான் காட்டுகிறது. அவருடைய நஞ்சைத்தான் காட்டுகிறது.உண்மையில் கதை ஒரு போலி லட்சிய உறவை காட்டவில்லை. உண்மையான லட்சிய உறவை காட்டுகிறது. இருபக்கமும் மாசுமருவற்ற அன்பைத்தான் சொல்கிறது. அப்பேற்பட்ட அன்பிலும்கூட ஒரு துளி நஞ்சு. அது ஏழாம் கடலில், கடவுள் மட்டுமே அறிந்த நஞ்சு. அப்படித்தான் கதை பேசுகிறது.
அது ஒரு சாதாரண உறவிலுள்ள நஞ்சு அல்ல. தெய்வீகமான உறவிலுள்ள தெய்வீகமான நஞ்சு. அந்த தளத்தில் வைத்து அதைப்புரிந்துகொண்டால் மட்டுமே கதை கைக்குச் சிக்கும். மற்றவர்களுக்கு இது ஒரு லௌகீகமான வம்பு, கிரைம் மட்டும்தான். கிரைமைக் கண்டுபிடிக்கத்தான் முயல்வார்கள்.
ஏன் அந்த நஞ்சு என்றால் அங்கே முத்து இருப்பதனால்தான். அமுதமும் நஞ்சும் சேர்ந்தெ இருக்கும் என்பதனால்தான். இந்தக்கதையில் அந்த நஞ்சை எந்த அளவுக்கு வாசகன் அப்ஸ்டிராக்ட் ஆக்கிக்கொள்கிறானோ அந்த அளவுக்கு நல்ல வாசிப்பு
ஸ்ரீனிவாஸ்
அன்புநிறை ஜெ,
கடல் என்பதைக் கண்டறிந்தவர் வியாகப்பன். அதன் அறியமுடியாமையை உணர்ந்தவர். வழிதவறச் செய்யும் ஏழாம் கடலின் மாயையை உணர்ந்தவர்.
அவரது வாக்குமூலம் போன்ற சொற்கள் கடல்குறித்து சொல்வதனைத்தும் மனித அகத்தையே. அதன் ஆழத்துக்கும் தொலைவுக்கும் முடிவே இல்லை. அந்தக் கடலாழத்தில் விஷமும் அருமுத்தும் உண்டென்று உணர்ந்தவர்.
வியாகப்பன் ஒரு விதத்தில் அந்தக் கடலேதான் என்றும் தோன்றுகிறது. கடற்புறத்துக் கிழவன் என்ற துவக்கமே ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் சான்டியகோவை நினைவுபடுத்துகிறது. அவர் நாற்பத்தொன்பது வருடமாக மீன் கொணர்ந்து தந்தவர். கடல் போல அளித்துக் கொண்டே இருந்தவர்.
கிழவனின் மீன் பிடிப்பு நின்ற போதும் ஏதேனும் கொண்டு வந்து தருவதில் முனைப்பாகவே இருக்கிறார். பிள்ளை அதன் சுவை அறிந்தவர், கடலின் கட்டற்ற அலைவை அதன் ஓயா அலை போன்ற உரத்த சிரிப்பை, வேறு யாரிடமும் பேசிடாத வாய்நாறும் பேச்சை என அனைத்தையும், கடலின் நாற்றத்தையும சுவையையும் உட்பட விரும்புபவர். அவருக்கு நல்முத்தும், துளிவிஷமும் கடல் தரும் கொடையே. ஒன்று கடல் விரும்பித் தந்தது, ஒன்று கடல் அறியாமல் தந்தது.
ஏதும் வேண்டுமென்றே செய்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அறுபது வருட நட்பில் ஏதேனும் நடந்திருக்கலாம், நாள்பட்டு நஞ்சாகியிருக்கலாம் என்கிறார் இன்ஸ்பெக்டர். முத்தென்பதும் சிப்பி எனும் மெல்லுடலியில் உட்புகும் நுண்துகள் ஒன்று ஏற்படுத்தும் உறுத்தலைக் குறைப்பதற்கு சிப்பி சுரக்கும் திரவம்தானே.
அத்தனை ஆண்டு அந்நியோன்னியத்தில் நண்பர்களின் மனதில் எத்தனையோ சிறு கீறல்கள் ஏற்பட்டிருக்கலாம். அரசு ஊழியமோ, பிற நண்பர்கள் நடத்தும் விதமோ, புகழோ, வகையாய் உணவிடும் மனைவியோ எத்தனை எத்தனையோ நுண்துகள் நுழையக்கூடிய வாய்ப்புகள்தான். தொடர்ந்து அவர் அளித்துக் கொண்டே இருப்பதன் வாயிலாக பிள்ளை அவருக்களிக்கும் வேறொன்றை நிகர் செய்கிறார். அந்த கண்ணறியாத் தட்டின் எடை குறைந்தாலும் கூடினாலும் ஒரு சிறு நுண்துகள் நுழைந்து விடலாம். ஆனால் அந்த ஆழமான நட்பு அதனால் ஏற்படும் உறுத்தலைக் குறைக்க அன்பும் அருளுமாய் கலந்தளித்து அரிய நட்பாய் விளைந்திருக்கிறது. கடல் தந்த முத்தை இருவரும் அகம் உணர்ந்தவர்களே என்பதால்தான் அந்த நட்பு அறுபதாண்டுகளாய் கனிந்து ஒன்றாகவே கரையேறியும் விடுகிறார்கள்.
அதே சமயம் உள்ளே நுழைவது நுண்கிருமியெனில் விஷமாகவும் வாய்ப்பிருக்கிறது, பல்லாயிரங்களில் ஒன்று.
முத்து கிடைத்ததை பிள்ளை வியாகப்பனிடம் சொல்லாத போது அகத்தில் ஒரு துளி விஷம் சுரந்திருக்கும். அது கடலில் கலந்திருக்கும். கடல் உள்ளே எடுத்துக் கொள்ளும் அனைத்தையும் மீண்டும் கரைக்கு திரும்பித் தரவும் கூடும். அது பிள்ளைக்கே மீண்டும் வருகிறது.
மிக்க அன்புடன்,
சுபா