ஏழாம்கடல் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
ஏழாம் கடல் ஒரு சிக்கலான கதை. அந்தக்கதையை சமூகச்சூழல், அரசியல்சூழல், காலகட்டம் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துப்பார்த்தாலொழிய புரிந்துகொள்ள முடியாது. அந்தக்கதைக்கு ஃப்ராய்டிசம் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் விளக்கம் அளித்தாலும் கதை அப்படியே நழுவிச்சென்றுவிடும். அக்கதை மனித மனதின் நஞ்சும் முத்தும் எங்கிருக்கிறது என்று காட்டுகிறது
கதையைப் புரிந்துகொள்ள மிக எளிமையான வழிதான். நம் உறவில், எத்தனை நெருங்கிய உறவாக இருந்தாலும் ஒரு சொட்டு நஞ்சு நமக்கு ஊட்டப்பட்டதில்லையா? நாம் ஊட்டியதில்லையா? அதை கேட்டுக்கொண்டாலே போதும்
ராஜசேகர்
ஜெ,
முற்றும் தூய்மையான உறவென்பது மனிதர்களுக்கு சாத்தியமே இல்லாதது. கடலாழத்தில் உள்ள கோடி கோடி முத்துக்கள் நமது எண்ணங்களே தான். கோடி எண்ணங்களில் ஓன்று நஞ்சாக வல்லது. அந்த நஞ்சு யாரிடமிருந்து யாருக்கு சென்றது என்பதே கதை.
ஏழாம்கடல் துரியம் தான். பிள்ளையின் மனமோ வியாகப்பனின் மனமோ அல்ல, மானுடத்துக்குப் பொதுவான முழுமனம் அது. அந்த மனத்தில் இருந்துதான் அனைத்து நஞ்சும் அமுதும் வருகிறது. அதன் ஆழத்துக்கும் தொலைவுக்கும் முடிவே இல்லை. (மண்ணிலயும் விண்ணிலயும் இருக்கப்பட்ட அத்தனையையும் அறிஞ்ச பரிசுத்த ஆவிக்கு மட்டும்தான் அதிலே என்னென்ன எங்கெங்க இருக்குன்னு தெரியும். மத்தவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மனுசப்பயக்களுக்கு தெரியாது. பரமபிதாவுக்கும் மனுசகுமாரனுக்கும் மாதாவுக்கும்கூட தெரியாது… தெரிஞ்சுகிடவே முடியாது.)
வியாகப்பன், பிள்ளைக்கு கொடுக்க நினைத்தது ஆணிப்பொன் மணிமுத்து, ஆனால் சிக்கியது ஒரு துளி விஷம். வாழ்வின் இனிமையை மட்டுமே அடைய எண்ணி கடையும் பொழுது, கீழ்மைகளும் நஞ்சும் வெளிப்படுவதற்கிணையான மர்மம் இது. இந்த அறியமுடியாமை அல்லது அடையமுடியாமையே மனித குலத்தின் மாபெரும் மர்மங்களில் ஓன்று.
வியாகப்பன் ஒரு மணிமுத்தை பிள்ளைக்கு கொடுத்தும் இருக்கிறார். அந்த முத்தை பிள்ளை ஏன் வியாகப்பனுக்கு காட்டவில்லை? அதை வெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி வைத்திருப்பவர், மாதாவிடம் வியாகப்பன் மன்றாடியதை அறியாமலா இருந்திருப்பார்? வியாகப்பனுக்கு, மணிமுத்திற்கும் மேலான ஒன்றை திருப்பி அளிப்பதற்கான வாய்ப்பல்லவா அது?
அந்த நஞ்சும் ஏழாம்கடலிலிருந்து தோன்றியது என்பதாலேயே, அது வியாகப்பனின் நஞ்சும் ஆகும்.
ஒருவேளை வியாகப்பனுக்கு பின்னர் தெரிய வந்திருந்தால் கூட பிள்ளையை வெறுக்க மாட்டார், ‘அப்டி வெறுத்துப்போட்டா பின்ன மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா?’ என்றே சொல்லி இருப்பார்.
கதையைப் படித்ததும் துலங்கி வந்தது யின் யாங் குறியீடு தான். அமுதத்தில் ஒரு துளி நஞ்சு, நஞ்சில் ஒரு துளி அமுது. இரண்டும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பி எய்தும் முழுமை.
அன்புடன்,
கிருஷ்ணபிரபா
விருந்து [சிறுகதை]
அன்புள்ள ஜெ
விருந்து மீண்டும் ஒரு நெகிழ்வான கதை. எத்தனை கதைகள். எழுதி எழுதித்தீராத கதைகள் இங்கே உள்ளன. கதைகளை நோக்கித் திரும்பிக்கொண்டால்போதும்
ஏன் கதைகள் இப்படி வந்துகொண்டே இருக்கின்றன என்று யோசித்தேன். இதே போன்ற செய்திகளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டேதானே இருக்கின்றன. அவற்றை எல்லாரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்?
செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் திறக்கவேண்டியிருக்கிறது. ஆர்ட்டிஸ்டிக் எக்ஸ்டென்ஷன் என்பார்கள். அதை கலைரீதியாக நீட்டிக்கொள்ளவேண்டும். அதற்கு தத்துவப் பரிச்சயம், வரலாற்று வாசிப்பு, ஸ்பிரிச்சுவலான ஒரு தேடல் இருக்கவேண்டும். அதைத்தான் கதையை உருவாக்கும் மனநிலை என்று சொல்கிறோம்
இந்தக் கதையில் ஒரு தூக்குமேடைக் கைதி பிரியாணி சமைத்துப்போட்டான், அவ்வளவுதான் கதை என்று சொல்லிவிடலாம். ஆனால் ஆடு இங்கே ஒரு பலி. தன்னைத்தானே பலிகொடுக்கிறான். தன்னையே பிறருக்கு ஊட்டிவிட்டுப்போகிறான் என்று பார்க்க ஒரு தத்துவப்பார்வை வேண்டும்
ஆடு என்பது கிறிஸ்தவ மரபில் ஏசுவின் குறியீடு. திவ்யபலி என்று கிறிஸ்து மரபில் சொல்வார்கள். ஊருக்காக தன்னையே பலிகொடுத்தார். பலிநிறைவேற்றம் என்பார்கள்.அந்தச்சாயலை கதைக்கு கொண்டுவர வரலாற்றுவாசிப்பு வேண்டும். அதெல்லாம் இயல்பாக வந்து படியும்போதுதான் கதை ஆழமானதாக ஆகிறது
எஸ்.ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
விருந்து கதையில் ஆசாரியின் குணாதிசயம் ஆழமாக வெளிப்பட்டுள்ளது. ஆசாரியின் மென்மை, நகைச்சுவை உணர்வு எல்லாமே அழகானவை. அவனை மென்மையானவனாக, புனிதமான பலியாடாக, காட்டியிருக்கிறது கதை. அவன் செய்த கொலையை ஏன் எதற்காக என்று விளக்காமல் விட்டிருப்பதும் அழகு. ஏனென்றால் அதைச் சொல்லியிருந்தால் கதை அங்கே திரும்பிவிடும். அந்த கதை அல்ல முக்கியம், அவனுடைய பலி மட்டும்தான் என்று கதை சொல்கிறது. ஒவ்வொரு டீடெயிலும் மிகச்சரியாக அமைக்கப்பட்டிருக்கிறது
ஆனந்த்