அன்புள்ள ஜெ,
வணக்கம். தங்கள் நலனுக்கு என்றும் இறைவனை வேண்டுகிறேன். உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட நாட்களாகிறது. ஆனாலும் என்றும்போல் நான் உங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன். நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து நான் காலையில் கண் விழிப்பது உங்கள் எழுத்தில்தான். தினமும் இப்படி உரையாடலில் வேறு எவருடனும் நான் இருப்பதற்கான சாத்தியம் இல்லை. உங்கள் கட்டுரைகளில் நான் உங்கள் தோழமையை அறிகிறேன் என்றால் உங்கள் கதைகளைப் படிக்கையில் நீங்கள் அன்புடன் என்னை ஆரத் தழுவிக்கொள்வதாக உணர்கிறேன். இத்தகைய மகிழ்வை தினந்தோறும் தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு என் நேசத்தை காண்பிக்கக்கூட முடியாதவனாக இருக்கிறேன்.
இப்போது என்னைப் போலவே உணரும் பல வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதை காண்கையில் பெரிதும் மகிழ்கிறேன். காந்தியையும் அப்போதைய மக்கள் இப்படித்தான் உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு எழுதும் கடிதங்களில் அவர்கள் எழுத்தின் தரம் மிகச்சிறப்பாக இருக்கிறது. சமவய நோக்கும் அறிவுக்கூர்மையும் மிக்க தமிழர்கள் அனைவரும் உங்களை நோக்கி வந்தடைந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய அறிவியக்கத்தை தமிழகத்தில் தமிழில் முன்னெடுத்துச் செல்கிறீர்கள்.
இதெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல. இதை என் உளத்திருப்திக்காக மட்டுமே எழுதுகிறேன். இப்படி உங்கள் மீதான காதலை அவ்வப்போது தெரியப்படுத்தாவிட்டால் எனக்கு பெரிய மனக்குறையாக இருந்து கொண்டே இருக்கும். மற்றபடி இக்கடிதத்தின் நோக்கம் வேறெதுவுமில்லை.
அன்புடன்
த. துரைவேல்.
அன்புள்ள ஜெ,
அன்புள்ள ஜெ,
இந்த முறை வரும் எல்லா கதைகளையும் (ஏழாம் கடல் தவிர) படித்துவிட்டேன். சிறப்பான கதைகளாக வந்துக்கொண்டிருக்கிறது.
கொதி, வலம் இடம், கந்தர்வன், யட்சn இவை நான்கும் அற்புதம். கொதியில் ஞானய்யாவின் உரையாடல்கள் என்னை நெகிழ வைத்தன.
கந்தர்வன் கதையில் தான், எத்தனை கோணங்கள். தந்திரங்கள் ! அணைஞ்ச பெருமாளின் உறுதியில் அவனது தெளிவு தெரிகிறது. ஆண்களுக்கு தான் அவன் கொஞ்சம் மக்கு என்பது போன்ற பாவனைகள் ஊர் பெண்கள் அவனை சரியாகவே புரிந்திருக்கின்றனர்.
வள்ளியம்மை உள்ளுர நேசித்திருக்கிறாள். காற்றில் ஆடுவதல்ல. அவள் வேர் பிடித்தது கந்தர்வனிடம். எத்தனை நாட்கள் ஏங்கி நின்றது, திடீரென்று ஒரு நாள் கண் முன் நிகழ்கிறது. இதோ உன் கணவன் என்று ஊர்கூடி அவளது கந்தர்வனை காட்டுகிறது. அவள் ஏன் மறுக்கபோகிறாள் ? இதே ஊருக்கு அஞ்சியல்லவா அவள் அச்சம், மடம் நாணம் பூண்டிருந்தது ? அந்த தளையும் அறுந்து விட்டது. எத்தனையோ பெண்களுக்கு கிடைக்காத வரம் இவளுக்கு வாய்த்து விட்டது. இன்னும் உறுதியாக அதை பிடித்துக்கொள்ள சிதையுமேறிவிட்டாள்!
இதே வள்ளியம்மைக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் ? மறுத்து திரும்பியிப்பாள் என்றே தோன்றுகிறது. அப்போதைய அவளது கந்தர்வன், அவள் முலைகுடிக்கும் மழலை.
வலம் இடம் கதையின் அவன் கற்பனையிலான இன்னொன்றை தேர்வு செய்திருக்கவே வேண்டும். இனி இரண்டும் எப்போதும் நிற்குமல்லவா.
இது சிறப்பான காலக்கட்டம் என்று தோன்றுகிறது ஜெ. எழுத எழுத தீராது அற்புதமான கதைகள் தோன்றட்டும்.
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
அன்புள்ள ஜெ
கதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்று உலகம் முழுக்க உருவாகிவரும் இலக்கியத்தில் இருந்து ஒரு டிரெண்ட் உள்ளது. நான் கல்வித்துறையின் ஆய்வுப்பொருளாக எழுதப்படும் இலக்கியங்களைச் சொல்லவில்லை. வேறெந்த காலத்தை விடவும் கல்வித்துறை பொது அறிவுத்துறையிலிருந்து விலவிவிட்டிருக்கும் காலம் இது. இன்று இலக்கியத்தில் இருப்பது பெரிய சலிப்பு. கதையின் சுவாரசியமே இல்லாத ஒரு எழுத்துவகை இலக்கியமாக நிறுவப்பட்டது. 90களின் இறுதியுடன் அது காலாவதியாகிவிட்டது. 2000த்திற்குப்பிறகு அது எங்கும் இல்லை. இன்னும் அந்த டிரெண்ட் தமிழில் வரவில்லை. இந்தக்கதைகள் அதை உருவாக்கினால் நல்லது. நேரடியான அழகான கதைகள். கதையை நீ சொல்லு, மிச்சமெல்லாம் நான் உருவாக்கிக்கறேன் என்றுதான் வாசகனாக நான் எழுத்தாளனிடம் சொல்வேன். வேறு எல்லாமே சின்ன விஷயங்கள். கல்வித்துறை நிபுணர்கள் உருவாக்குவார்கள். செய்தியாளர்கள் உருவாக்குவார்கள். எழுத்தாளனிடம் மிஞ்சியிருப்பது, வேறு எவரும் செய்யமுடியாதது, கதை சொல்வது மட்டும்தான்
ராமச்சந்திரன்