ஏழாம் கடல்- கடிதங்கள்

ஏழாம்கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஏழாம்கடல் கதையை பெரிதாக விளக்கவேண்டாம் என்றும் விளக்க விளக்க அது மண்ணுக்கு இறங்கிவிடும் என்றும் தோன்றுகிறது. ஏழாம் கடலில் இருக்கிறது முத்தும் விஷமும். அதை மாதாகூட அறியமுடியாது. ஆனால் அதுதான் அத்தனை உறவுகளையும் தீர்மானிக்கிறது. புரிந்துகொள்ளவே முடியாது உறவுகளின் நஞ்சும் அமுதமும். ஒப்புக்கொடுப்பதை தவிர வேறுவழியே இல்லை

ஆர். ஸ்ரீனிவாஸ்

ஆசிரியருக்கு வணக்கம்,

 

ஏழாம் கடல் வாசித்தேன். இணையம் இருப்பதால் கதைகளை தினமும் வாசித்துவிடுகிறேன். நட்பு அப்படிதானே ஜாதி,மதம் எதுவும் பார்ப்பதில்லை.எனது நண்பன் ஜெகனை 1995 ஆம் ஆண்டு பட்டிவீரன் பட்டி என் சி சி முகாமில் சந்தித்தேன்.இருபத்தியைந்து ஆண்டுகள் கடந்து இப்போது அண்ணன் தம்பியாக இருக்கிறோம்.

 

பல வருடங்கள் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் அவர் வீட்டில் தான் கொண்டாடியிருக்கிறோம்.மாலையில் நாகேர்கோயிலில் இருந்து ரயிலில் ஏறினால் நள்ளிரவு போய் இறங்கும் போது ரயில் நிலையத்தில் காத்திருந்து எங்களை அழைத்துக்கொண்டு மத்திய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு மணிக்கு மார்வாடி கடையில் சூடாக பாதாம் பால்  வாங்கித்தருவார்.அப்போது ஆரம்பிக்கும் எங்கள் உரையாடல் இரவுகள் உறக்கமின்றி மீண்டும் ரயிலேறும் வரை.இவ்வளவு அணுக்கம் ஆனபின்பும் நான் அவருடன் மட்டும் இன்று வரை வா,போ என பேசியதே இல்லை.அவரும் ஷாகுல் வாங்க போங்க என்று தான்.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நண்பனின் திருமணதிற்கு என் குடும்பத்தினர் பதினாறுபேர் ரயிலில் சென்று இறங்கினர்.திருச்சி வயலூர் முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண  நிகழ்ச்சியில் எங்கள் வீட்டு பெண்கள் அனைவரும் தலையை மறைக்கும் இஸ்லாமிய ஆடையுடன் கோயிலுக்குள் அமர்ந்து கலந்துகொண்டனர்.

 

கடந்த ஆண்டு அதே வயலூர் முருகன் கோயிலில் அவரது தம்பியின் திருமணத்தில் கலந்துகொண்டபோது அவர் சொன்னார் நமது நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என.எனது மகன் சல்மானும்,அவரது மகன் ஆதித்யாவும் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு .

 

ஏழாம் கடல் வாசிக்கையில் பிள்ளைவாளும்,வியாக்கப்பனுமாய் மட்டுமே இருந்தேன்.நண்பனின் அம்மா சுத்த சைவம், அவர்கள் என் வீட்டிற்கு வந்தால் தோசை சுட தனியாக ஒரு தோசைக்கல் வாங்கி வைத்திருக்கிறாள் சுனிதா .

 

“முட்ட ஊத்துன கல்லுல்ல,தோசை சுட்டா அம்மாக்கு பிடிக்கதுல்லா” என்பாள் சுனிதா .

 

கதையின் ஆழமான வரிகளில் ஒன்று

 

// “ஆனா ஒண்ணு உண்டு. எனக்க கடலிலே பிள்ளைவாளுக்காக ஒரு முத்து உண்டு… ஒரு அருமுத்து, ஆணிப்பொன் மணிமுத்து. அதை நான் எடுக்கல்லை. ஆனா எனக்கு தெரியும். அப்டி ஒரு முத்து அங்க ஆழத்திலே காத்து இருக்குன்னுட்டு. நான் சிப்பி கொண்டுபோயி குடுக்கிறப்ப அதை திறக்காம குடுக்குறது அதனாலேதான். பிள்ளைவாள் அந்தக் கறிய திங்கிறப்ப அவருக்க வாயிலே ஒருநாள் அது தட்டுபடும்… கையிலே எடுத்து பாப்பாரு. முத்துன்னு தெரிஞ்சிரும். லே, தாயோளி இது உனக்க முத்தில்லாடேன்னு சொல்லுவாரு. என்னென்னமோ மனசிலே நினைச்சுக்கிட்டேன். என்னென்னமோ சொப்பனம் கண்டேன். மாதாகிட்ட அப்டி நடக்கணும்னு நேந்துகிட்டேன்… .//

 

வியாகப்பன் வேண்டிய முத்து பிள்ளைவாளுக்கு கிடைத்தது.

 

“அவருக்கு மேல பேச ஆள் வேணுமுன்னு பெரியவர அப்பா கூட்டிட்டு போய்ட்டார்னு அம்மா சொன்னாள்” என சரவணன் சொன்னது எனக்கு கேட்டது .

 

எனது சகோதரியுடன் பள்ளியில் படித்த மீனவ தோழிகளுடன் இப்போதும் அவளது நட்பு தொடர்கிறது.அவ்வப்போது மீன்களும் வீட்டிற்கு கொடுத்து விடுவார்கள் .எனது சகோதரி உடல் நலமில்லாமல் இருந்தபோது மாதாவிடம் வேண்டி குடும்பத்துடன் மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தியவள் ஒருத்தியும் உண்டு.

 

 

ஷாகுல் ஹமீது .

 

அன்புள்ள ஜெ,

 

உறவின் ஆழங்களை வெளியில் இருந்து புரிந்து கொள்வது என்பது எப்பொழுதும் முடியாது என்றே தோன்றுகிறது. அந்த அளவில் சம்மந்தப்பட்ட இருவருக்குமே பெரும்பாலான நேரங்களில் அவர்களின் ஆழம் தெரிவதில்லை என்றே நினைக்கிறேன். அதுவும் நட்ப்பை போன்ற உறவு வேறு அனைத்தையும் விட நுண்ணியதும், அந்தரங்கமும் ஆனது. அந்த உறவில் மனிதன் வேறு ஒருவனாக இருக்கிறான் என்றே தோன்றுகிறது. தன் சமூக அடையாளங்கள், தன் மேல் ஏற்றி வைக்கப்படும் அத்தனை அடுக்குகளையும் களைந்த ஒருவனாக இருக்கிறான். எப்போதும் கண்டிப்புடன் இருக்கும் அப்பா தன் நண்பனிடம் வேறொரு பரிமாணத்தில் இருக்கிறார். தன் தோழிகளை பற்றி பேசும் அம்மா ஒரு குழந்தைக்கான கண்களை கொண்டு விடுகிறாள். ஒட்டு மொத்தத்தில் இது ஒரு அற்புதமான உணர்வு என்றே நினைக்கிறேன்.

 

ஏழாம்கடல் கதையும் அதை போன்ற உணர்வை உரசி சென்றது. நான்காம் வகுப்பு வரையிலான ஒரு இணைவு இறப்பின் கரங்களை பற்றிக்கொள்வது வரை வரும் என்பது ஒரு பெரும் தரிசனம். அவர்கள் பற்றிய ஒரு பின் கதை ஒரு பளிச்சிடும் நினைவுகளுக்கு உரியது. எங்கோ பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஆரம்ப பள்ளி நட்பு, அவர்கள் தங்களுக்கு என்று தனித்தனி பாதைகளில் பயணிக்க தொடங்கினாலும், குடும்பம், தொழில் என்று வேறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் எங்கோ ஆழத்தில் அவர்கள் ஒரு நான்காம் வகுப்பின் சேர்தலை கனவு கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. அதற்கான ஒரு தூதுவனாக வந்து சேர்கிறது அந்த சிப்பி. முத்தை கொண்டு வந்த சிப்பியும் நச்சை கொண்டு வந்த சிப்பியும் ஒன்றே. எங்கோ அந்த பரிசுத்த ஆவி மட்டுமே அறிந்த அந்த ஏழாம் கடலில் அவர்கள் இணைந்திருப்பார்கள்.

 

அன்புடன்,

நரேந்திரன்.

 

அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம்.

ஏழாம்கடல் சிறுகதையில், //நான் பைக்கை எடுத்து கடுப்புடன் உதைத்து கிளப்பி சாலையில் ஏறி விரைந்தேன். சீரான வேகம் என்னுடைய எரிச்சலையும் பதற்றத்தையும் குறைத்தது.// என் காதுகிழிய கம்யூனிசம் பேசிக்கொண்டே வாட்ச்மேன் சம்பளத்தை குறைக்க பரிந்துரைத்த நண்பர்களை கண்டு நான் எண்ணக்கொதிப்புடன் இருந்த நாட்களில், காத்திருந்து அரசுப்பேருந்துகளில் மட்டுமே சென்றேன். சீரான வேகத்தில் ஒரு ஆறுதல் இருக்கத்தான் செய்தது.

(தீற்றல் சிறுகதையை தொடர்ந்து வந்ததாலோ என்னவோ) ஏழாம்கடல் சிறுகதை ஒரு காதல் கதையின் உருவகமென்றே தோன்றியது.

 

வை. பாலகுமார்

 

 

முந்தைய கட்டுரைஇனிய போர்வீரன்
அடுத்த கட்டுரைகொதி,வலம் இடம்- கடிதங்கள்