படையல்,தீற்றல் -கடிதங்கள்

படையல் [சிறுகதை]

அன்புநிறை ஜெ,

இந்தக் கதையின் மூலவராய் எறும்பு பாவா அமர்ந்திருக்க,  சம்பவங்கள், மனிதர்கள் அவர் முன்னிலைக்கு வந்து படையலாகின்றன. எனவே அவரது பார்வையில்,
‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்று பாவா விடையளிக்கும் கேள்விகளை மட்டும் கோர்த்து வாசிக்கலாம்.

ஏன் பாவா இப்ப ராத்திரியில்லா?” என்று கேட்கிறார் ஆனைப்பிள்ளை சாமி. ஆமென்பது போல ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்கிறார் பாவா. அது கதையிலே வருவது போல மழையிருட்டு மட்டுமல்லாது கோல்கொண்ட மன்னவன் குடிகெட்டு போனதால் வரும் இருள்.

அடுத்தது ஆனைப்பிள்ளை சாமியின் பாடலுக்கு ஒரு முறை ஆமோதிக்கிறார். அப்பாடல் – இருட்டுக்கு இருட்டான ஒளி, மருட்டுக்கு மருந்தான நோய், கருத்துக்கு கருத்தான கருமை, கருணைக்கும்-கரவுக்கும் காரணம், சொல்லிச் சொல்லிக் கண்ட சொல் – சொல்லாமல் விட்டுவிட்ட சித்தம், எண்ணிச் சேர்த்த எண்ணம் – எண்ணாத வெளியான ஏகாம்பரம்.  இருமைகளுக்கு இடையே ஆடும் ஊசலை இடையில் தாங்கும் வெளி. அதற்கு ஓர் துதி.

புகைமேலே மலக்குகளும் ஜின்னுகளும் ஹூறிகளும் உண்டு என்பதற்கு ஒரு வாழ்த்து. நன்மை-தீமை எனும் இருமைகளை கணக்கிடும் மலக்குகள், நன்மை – தீமை இரண்டையும் செய்யும் ஜின்கள் என அந்த வரிக்கு ஒரு வாழ்த்து.

ரத்தம்தோய்ந்த அரிசியை சமைக்கலாமா என முதல் முறை கேட்கும்போதே “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்கிறார் எறும்பு பாவா. அவருக்கு விடை தெரியும்.

அதன் பிறகு அந்தக் காவலர்கள் பேரைக் கேட்டு, நவாபை விடப் பெரியவரோ எனறெல்லாம் அடித்து வருத்தும் போதும், ரத்தம் சிந்தும் போதும், அவருக்கு எல்லாம் ஒன்றுதான் எனும்போதும் அவர் வாயில் வரும் இதே நாமம். இருக்கேரா செத்துட்டீரா என்று அடித்தவன் கேட்கவும் அதே பதில்.ஆனைப்பிள்ளைச் சாமி
பாடலாமா என்பதற்கு ஆமோதிப்பாய் ஒருமுறை.

அங்கு சித்ம்பரத்துக்கு செல்லும் சிவனடியார் சிவாயநம என்று வணங்க அதன் எதிரொலியாய் ஒருமுறை. அவர் ஒருவனை வெட்டிக்கொன்றார் எனும் செய்திக்கு ஒருமுறை.

“அண்ணாமலையிலே எரியுறதுதான் சிதம்பரத்திலே ஆகாசமாட்டு இருக்குது. எல்லாம் ஒண்ணுதான், என்ன சொல்லுறீரு” என்றதற்கு விறகில் நெரிபடும் தீயும் பாவாவும் ஆமென்கிறார்கள். வந்தவாசியில் வெட்டப்பட்டதும், அண்ணாமலையில் அரியப்பட்டதும், காளஹஸ்தியில் சிந்தியதும், பாவா தலையில் அடிபட்டு தெறித்ததும் எல்லாம் ஒன்றுதான்.

அனைத்தும் ஒரே ரத்தம். குலதெய்வம் கோவிலில் பலிரத்தம் கலந்த படையலை விண்நோக்கி எரிவார்கள்.  ரத்தம் கலந்த படையலை தெய்வங்களுக்குப் படைக்கலாம் எனில் அவர்களும் உண்ணலாம். உண்ணும் முடிவை எடுக்கிறார்கள். அதற்கும் சொல்கிறார் – “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”

இறுதியாய் அமைவதற்கு சென்று கொண்டிருக்கும் சிவனடியார் சொல்கிறார்:
“கேள்விக்குமேல் கேள்வியா இருந்ததெல்லாம் போயாச்சு. எல்லா கேள்விக்குமான ஒற்றைப் பதிலா ஒண்ணு வந்து சேந்தாச்சு. இனி சொல்லடங்கணும். இடம் அமையணும்”

எல்லாக் கேள்விக்கும் ஒற்றைப் பதில் வருவது வரைதானே பேச்சு. அங்கு சென்று ஏற்கனவே அமைந்துவிட்டவர் பாவா. சென்று கொண்டிருப்பவர்கள் சிலர். சாட்சியாக சிலர். ஏதும் அறியாமல் சிலர். அனைத்துமே படையல்தான்.

இடையில் நவாப்புகளும், மராட்டியர்களும், பாளையக்காரரும், கும்பினிக்காரரும் ஆடும் ஆட்டங்களும், இடையே பதறும் மக்கள்பூச்சிகளும், அத்தனை வரலாறு ஒருபுறமும் காய்ச்சிய கஞ்சியை சலனமின்றி வருத்திய வழிப்போக்கருக்குத் தந்துவிட்டு குறவள்ளி மீது பாடல் பாடி பசியை விரட்டும் ஆண்டிகள் கூட்டமும் ஒருங்கே என்றுமிருக்கும் மண். முருகனை ராவுத்தன் எனப்பாடிய அருணகிரியாரும் திருவண்ணாமலையோடு வந்துவிட்டார்.  அருமையான படையல்.

 

மிக்க அன்புடன்,

சுபா

 

அன்புள்ள ஜெ

எறும்பு பாவா போன்ற ஒரு கதாபாத்திரம் தமிழ்ப்புனைகதையுலகில் எழுதப்படுவது மிக அபூர்வமானது. அதை எழுத நம் நவீன இலக்கியத்தால் பெரும்பாலும் முடிவதில்லை.ஏனென்றால் நவீன இலக்கியத்திலுள்ள தத்துவப்பார்வை அவ்வளவு வறுமையானது. மனிதனின் காமம் வன்முறை ஆகியவற்றைப்பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை மட்டுமே நவீன இலக்கியத்திலே இருக்கிறது. சரித்திரம், மதம், ஆன்மிகம் போன்றவற்றை அது தவிர்த்துவிடுவது என்பது அக்கறை இல்லாமல் அல்ல. அவற்றை ஆராயும் தத்துவ உபகரணங்கள் நவீன இலக்கியத்தில் இல்லை. அவற்றில்கூட ஏற்கனவே அவர்கள் சமகாலத்தில் எழுதிய காமம் வன்முறை ஆகியவற்றைத்தான் அவர்கள் எழுதுவார்கள். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார். அதற்கு முன் ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார்.

ஆனால் இங்கே எறும்பு பாவாக்கள் எல்லா பக்கமும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். நம் கண்ணுக்குத்தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களை எழுதாதவரை நாம் இலக்கியமே எழுதவில்லை என்றுதான் பொருள்.

என், மகாராஜன்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சிறுகதையின் கிளாசிக் வடிவத்தில் அமைந்த கந்தர்வன் கதைக்குப்பின்னால் தீற்றல் கதையை வாசிப்பது ஒரு விந்தையான அனுபவமாகவே இருந்தது. அது கதையே அல்ல. ஒரு உரையாடல், அதில் சில குறிப்புகள். ஒரு புறவயமான அன்றாட அனுபவம். ஒரு கதையின் நினைவு. ஒரு பழைய நினைவு. அவ்வளவுதான். கதையே முடிந்துவிட்டது. ஆனால் இந்த மூன்று அடுக்குகள் வழியாக ஒரு விரைவான தீற்றல். வாழ்க்கையின் ஒரு அழியாத தருணம்

எஸ்.முரளிதரன்

 

அன்புள்ள ஜெ

தீற்றல் கதையின் சில விஷயங்கள் அற்புதமானவை. இதெல்லாம் உங்களுக்கு எவராவது சொல்கிறார்களா என்ன? நிறைய கடிதங்கள் வருகின்றன. அதிலிருந்து தெரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இருபதாண்டுகளுக்கு முன்பு இதேபோல ஒரு மீனாட்சி கல்யாணம். நான் அன்றுதான் அன்று நான் காதல்கொண்டிருந்த பெண்ணிடம் பேசினேன். நாலைந்து வார்த்தைகள்தான். அவள் உடை நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். மூக்கைச் சுளித்து பழிப்புகாட்டி சிரித்துக்கொண்டு போனாள்.

நான் பைத்தியம்போல கோயிலில் நின்றிருந்தேன். ஆள்கூட்டம் வடிந்துகொண்டிருந்தபோது திடீரென்று நாதஸ்வரமும் தவிலும் கேட்டது. மீனாட்சி சப்பரத்தில் வந்தாள். அன்றைக்கு அப்படியே மெய்சிலிர்த்து அழுதுவிட்டேன்

அந்த நாளை அப்படியே இந்தக்கதையில் திரும்ப அனுபவித்தேன்.

 

எம்

முந்தைய கட்டுரை‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைஎண்ணும்பொழுது, குமிழிகள்- கடிதங்கள்