கற்கோயிலும் சொற்கோயிலும்

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

நம் சூழலில் மிகப்பெரிய அறிவுப்பணிகள் கண்டுகொள்ளப்படாமல் போவது எப்போதும் நிகழ்கிறது. மிகச்சிறிய பணிகள் முரசோசையுடன் முன்வந்து நிற்பதும் சாதாரணம். சிறியபணிகளைச் செய்தவர்கள் அப்பணிகளை முன்வைப்பதிலேயே எஞ்சிய பெரும் உழைப்பைச் செலவழிப்பார்கள். பெரும்பணிகளைச் செய்தவர்கள் அடுத்த பெரும்பணிக்குச் சென்றுவிடுவார்கள்.

அத்துடன் பெரும்பணிகள் சாமானியர்களுக்கு ஒரு திகைப்பையும் பதற்றத்தையும் அளிக்கின்றன. அவை சாமானியரை மேலும் சாமானியர்களாக காட்டுகின்றன. அவை இல்லை என நினைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை சொன்னார். ”ஒரு சாமானியர் ஒருவரை பாராட்டுகிறார் என்றால் அது அருஞ்செயல் செய்தமைக்காக இருக்காது, தானும் செய்யத்தக்க செயலொன்றைச் செய்தால் மட்டுமே அவர் பாராட்டுவார். அவர் ஈட்டியதை தானும் அடையமுடியும் என்னும் நம்பிக்கை அவருக்கு இருக்கவேண்டும்”

ஆகவே பெரும்பணிகளை நாம் சமகாலத்தில் தவறவிட்டுவிடுகிறோம். அப்பெரும்பணி செய்தவர் காலத்தின் பகுதியாக ஆனபின், அவர் நம் அருகே நின்று நம்மை சிறியவராக ஆக்குவதில்லை என்று ஆனபின், கொண்டாடுகிறோம். சமகாலத்தில் கொண்டாடப்படாதவர் என்று அவரைச் சொல்லிச் சொல்லி மாய்கிறோம்.

தமிழில் சென்ற கால்நூற்றாண்டில் செய்யப்பட்ட மாபெரும் அறிவுப்பணி என்பது குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய இராஜராஜேஸ்ச்சரம் என்னும் ஆய்வுநூல். 2010ல் வெளிவந்த இப்பெருநூலின் நான்காம் பதிப்பு 2020ல் வெளிவந்துள்ளது. இந்நூலைப்பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். இப்போது புதியபதிப்பைக் கண்டதும் மீண்டும் எழுதத் தோன்றியது

தஞ்சைப்பேராலயத்தை மூன்று கோணங்களில் ஆராயும் நூல் இது. சோழமன்னன் ராஜராஜனின் வரலாற்றின் சின்னமாகவும், தமிழ்வரலாற்றின் மாபெரும் ஆவணத்தொகுதியாகவும் இந்நூல் அவ்வாலயத்தை ஆராய்கிறது. தமிழ்ப்பண்பாட்டின், சைவப்பண்பாட்டின் ஒரு மையமாக தஞ்சைப்பேராலயத்தை ஆராய்கிறது. தமிழ் ஆலய- சிற்பக்கலையின் வெற்றிச்சின்னமாக, முன்னுதாரணமாக ஆராய்கிறது

இம்மூன்று தளங்களிலும் மிக விரிவான தரவுகளுடன் ஏராளமான அரிய புகைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல்.தஞ்சை நகரையும் ராஜராஜனையும் விரிவாக அறிமுகம் செய்தபடி தொடங்கும் இந்நூல் ராஜராஜன் கட்டிய கற்றளியின் அமைப்பையும் அதன் கட்டுமானக்கலையையும் விவரிக்கிறது. ஆலயத்தின் பிரபஞ்ச தத்துவம், ஸ்ரீவிமானமே சதசிவலிங்கமாக திகழும் அதன் நுட்பம், அத பஞ்சபூத அமைப்பு அதன் விண்தொடு விமானத்தின் சிறப்பு என விரிவாக விளக்கிச் செல்கிறது

ஆலயத்தின் சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், சித்திரகூடங்களின் ஓவியங்கள், அங்கே நிகழ்ந்த கலைப்பெருக்கம், ஆலயம் பற்றிய கல்வெட்டுச்சான்றுகள், அந்த ஆலயத்துடன் இணைந்த வரலாற்றுச் செய்திகள், ஆலயத்திருவிழாக்களின் செய்திகள் என முழுமையான ஒரு தொகுப்புநூலாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு சிற்பத்திற்கும், ஓவியத்திற்கும் தனித்தனியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ள இந்நூல் ‘வாசிப்பதற்கானது’ அல்ல. அகராதிகளைப் போல நூலகங்களில் இருக்கவேண்டியது. தோன்றும்போதெல்லாம் எடுத்து பார்க்கப்படவேண்டியது. இத்தகைய நூல்களை வேறெங்காவது சிறு குறிப்பு தட்டுபட்டால்கூட உடனே எடுத்துப் பார்ப்பது ஒரு நல்ல அறிவுப்பயிற்சி.

குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் தேவார மாண்பும் ஓதுவார் மரபும் 2021ல் வெளிவந்துள்ள இன்னொரு பெருநூல். இராஜராஜேச்சரம் போலவே இதுவும் ஒரு மாபெரும் ஆய்வுத்தொகை. தேவாரம் சைவ மரபுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்த நூல். அது ஒர் அறிவுநூல் என்பதைக் கடந்து இசைநூலும் மந்திரநூலுமாக சைவத்தால் கருதப்படுகிறது. செவியிலும் கருத்திலும் தேவாரத்தை நிலைநிறுத்தும்பொருட்டு ஓதுவார் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு ஆயிரமாண்டுகளாக நீடிக்கிறது

குடவாயில் பாலசுப்ரமணியத்தின் இந்நூல் தேவாரம் ஆக்கிய மூவரின் வரலாறு, அவர்களின் பதிகங்களின் இயல்பை அறிமுகம் செய்துகொண்டு தொடங்குகிறது. தேவாரம் என்னும் பெயர் உருவாகி வந்தமை, தேவாரம் பற்றி சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் உள்ள செய்திகள், வரலாற்றில் ஓதுவார்களைப் பற்றி இருக்கும் குறிப்புகள், என விரிகிறது

கல்வெட்டுகள் காட்டும் தேவார மூவர் வழிபாடு, தேவார மூவர் பெயரில் அமைந்த திருமடங்கள், தேவரா மூவர் திருவிழாக்கள், திருமுறைகண்ட புராணம் பற்றிய ஆய்வு, கலைப்படைப்புக்களில் தேவாரம் இடம்பெற்றுள்ள வகை என ஆய்வு விரிந்துசெல்கிறது.

பொதுவாக ஒரு நூலின் தகவல்செம்மையையோ கருத்துநிலையையோ அறிய அதன் ‘நரம்பு’ ஒன்றை தொட்டுப்பார்க்கும் வழக்கம் எனக்குண்டு. அவ்வகையில் நான் ஆர்வம்கொண்டுள்ள கொடுங்கோளூர், திருவஞ்சைக்குளம் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன்.

கொடுங்கோளூர் [இன்றைய கொடுங்கல்லூர்] திருவஞ்சைக்குளம் என்னும் சைவப்பேராலயமே அன்றைய வஞ்சி நகரின் மையம். அங்கே வந்த ஆரூரார் முடிப்பது கங்கையும் திங்களும் என்னும் பதிகம் இணையம் உட்பட எல்லாத் தொகுதிகளிலும் பொது என்னும் பகுப்பில் இடம்பெறுவது வழக்கம். அது திருவஞ்சைக்குளத்தில் பாடப்பட்டது.

அதேபோல வஞ்சியில் [கொடுங்கோளூரில்] சேரமான் மாக்கோதையின் அரண்மனையில் இருக்கையில் ஆரூரார் பாடிய ‘பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை’ என்னும் பதிகம் ஆரூரான் சொல்லப்பட்டிருப்பதனால் ஆரூரில் பாடப்பட்டவை என்று தவறாகக் குறிப்பிடப்படுவதுண்டு.அவையிரண்டுமே இந்நூலில் சரியான ஆய்வுத்தரவுகளுடன் அளிக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் இப்பாடல்கள் வஞ்சியில் பாடப்பட்டவை என்பதை ஒரு பெருமிதமாகச் சொல்வதுண்டு. ஆனால் தமிழ் நூல்களில் அவ்வாறு காணப்படுவதில்லை. ஆகவே அதை மட்டும் பார்த்தபோது நிறைவடைந்தேன்.

ராஜராஜன் கட்டியது கற்கோயில். சைவக்குரவர் அமைத்தது சொற்கோயில் .இரண்டு கோயில்களையும் பற்றிய இந்நூல்களும் தனிநபர்ப்பணி என்று பார்க்கையில் அவற்றுடன் ஒப்பிடத்தக்க சிறப்புடையவை. சைவர்களுக்கு அவர்களின் மெய்யறிவின் கருவி எனவும் தமிழ்ப்பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆய்வுக்குரிய பெருந்தொகை என்றும் கருதத்தக்கவை இந்நூல்கள். நம் காலத்தில் நிகழ்ந்துள்ள பெருஞ்செயல்கள் இவை

தேவார மாண்பும் ஓதுவார் மரபும்- அன்னம் பிரசுரம்

ராஜராஜேச்சரம் – அன்னம் பிரசுரம்

முந்தைய கட்டுரைபடையல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏழாம்கடல் [சிறுகதை]