தீற்றல் ,படையல்- கடிதங்கள்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தீற்றல் ஓர் இளமைப்பருவ நினைவாக தெரிகிறது. நீட்டி கண்மை இடுவது என்பது இப்போதுகூட குழந்தைகளுக்குச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்றை கதையில் சேர்க்கவில்லை. அன்றெல்லாம் பெண்கள் தலைகுனிந்துதான் நடப்பார்கள். தெருக்களில் கூட்டம்கூட்டமாகப் பெண்கள் தலையை கவிழ்த்து மண்ணைப்பார்த்துக்கொண்டு நடக்கும் காட்சிகள் எழுபதுகளில் சாதாரணம்.

அ.முத்துலிங்கம் கூட ஒரு கதையில் ஐரோப்பாவிலிருந்து வந்த ஒரு சின்னக்குழந்தை இந்த அக்காக்கள் எல்லாம் எதை தேடுகிறார்கள் என்று கேட்டதாகவும் அவர்கள் தொலைத்துவிட்ட பணத்தை தரையில் தேடிக்கொண்டே செல்வதாகவும் எழுதியிருந்தார். குனிந்து செல்பவர்கள் ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். ஓரவிழிப்பார்வை, கடைக்கண் பார்வை எல்லாம் மறைந்துவிட்டது.

‘லஜ்ஜாவதியே உந்தன் கள்ளக்கடைக்கண்ணாலே’ என்று ஒரு பாட்டுவந்தது. ஆனால் என்ன ஆச்சரியமென்றால் அது பாப் வகை பாட்டு. அரைகுறை ஆடையுடன் நடனமாடும் இளைஞர்கள் பாடும் பாட்டு அது. அந்த மறைந்த காலத்தைப் பற்றிய பகடி அது

கண்மையும் வாலிட்டு எழுதிய கண்ணும் எல்லாம் அந்த சிறைப்பறவைகளின் உலகில் உள்ள விஷயங்கள்

சந்திரகுமார். என்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

மனதில் அழியாதிருக்கும் ஒரு கணத்தின்  இப்படியான தீற்றலை வாசித்த அனைவரும் இன்று ஒருமுறை எடுத்துப்பார்த்திருப்பார்கள். நானும் எடுத்து பார்த்துக்கொண்டேன். ஆம் அது ஒரு கணத்தின் தீற்றல்தான், மீன் நீரீல் துள்ளுவதைப்போல ஒரே ஒரு பரவசக்கணம்தானென்றாலும் மனதில் அழியாசித்திரமாக இருந்துவிடுகின்றது.காடு கிரியும் நீலியும் ஒரு கணம் மனதில் வந்து போனர்கள் வாசிக்கையில்

அக்காலத்தில் சென்னையில் படித்துக்கொண்டிருந்த  என் அத்தையொருத்தியை   அவரின்   இஸ்லாமியரான ஆசிரியர் காதல் திருமணம் செய்துகொண்டிருந்ததால், அந்த செளகத் அலி மாமாவினால் அதிகம் ஹிந்தி திரைப்படங்கள் பார்ப்போம்

பல படங்களில்  ஷர்மிளாதாகூர் பெரும்பாலும் கண்களில் இரட்டை வாலெழுதியிருப்பார் நீளமும் அகலமுமான அவரின் கண்களை அந்தெ மையெழுதுதல் இன்னும் அழகாக்கி, கூராக்கி, துலக்கிக் காட்டும். ஷர்மிளாவே இரண்டு பெரிய கண்கள் மட்டும்தானென்று தோன்றும்.. மனதை கண்ணாடி போல் காட்டும் அவரின் கண்கள் முன்கூட்டியே பேசிவிடும் அவர் அடுத்து சொல்லப்போவதை.

இன்றும்  சில இளம்பெண்கள் கண்ணெழுதிக்கொள்ளுகிறார்கள், குறிப்பாக இஸ்லாமியப்பெண்கள். வகுப்பறைக்கு வெளியிலும், பேருந்திலும் கூட என்னால் புர்காவுக்குள் இருப்பது பாத்திமாவா, பர்வீனா, பிர்தெளஸா என்று அவர்களின் சிறு கருங்குருவிகளைப் போலிருக்கும் மையெழுதிய கண்களிலிருந்தே கண்டுகொள்ள முடியும். முகத்தை மறைத்திருப்பதனாலோ என்னவோ அவர்கள் தங்கள் அடையாளங்களை கண்களிலேயே கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அழியாக்கணமொன்றின் சிறு தீற்றல் மட்டும் மனதில் எஞ்சி இருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் கதை இது.

கடந்த கல்வியாண்டின் ஒரு பருவம் முழுவதும் வீட்டிலிருந்து பணிசெய்ததால் அதற்கும் சேர்த்து இரட்டைப்பணிசெய்யும் இந்தப் பருவமும், கடும் கோடையில் தேர்தல் பயிற்சி வகுப்புக்களுமாக சோர்வூட்டும் இந்நாட்களில் உங்களின் தினசரிக்கதைகள் அளிக்கும் உளஎழுச்சியையும் ஆசுவாசத்தையும் எப்படி எழுதியும் தெரிவித்து விடமுடியாது. நன்றி

அன்புடன்

லோகமாதேவி

படையல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மிஸ்டிசிசம் என்ற வார்த்தையைப் பற்றி என் வகுப்பில் சொல்லிக்கொண்டிருந்தேன். மிஸ்டிக் மிஸ்டிசிசம் என சொல்லப்படும் வார்த்தைகளெல்லாமே மேலோட்டமானவை. அந்த ஒற்றை வார்த்தையில் ஆன்மிகத்தேடல் முழுக்கவே கொச்சைப்படுத்தப்பட்டு விடுகிறது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் வெளியே நின்று ஒருவன் போட்ட பெயர் அது.

மிஸ்டிசிசம் என்று சொல்லப்படும் செயல்பாடுகளில் கடுமையான நோன்பு கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொள்வது இடம்பெறுகிறது. தன்னை மறந்து களியாட்டமிடுவதும் இடம்பெறுகிறது. இரண்டும் ஒன்றல்ல. சிவக்களி எய்தி என்றுதான் சொல்லப்படுகிறது. ஞானக்கூத்து என்றுதான் இந்தியா மிஸ்டிசிசத்தைச் சொல்கிறது.

துன்பங்கள் இல்லாத நிலை அல்ல. துன்பங்கள் உண்டு. அதைக் கடந்த நிலை. அதற்கு எறும்புபாவா சரியான உதாரணம், அடிவாங்குகிறார். பிஸ்மில்லா சொல்லி நடனமாடவும் ஆணையிடுகிறார். மாறாத களிப்பு நிலைதான் இந்தியாவின் மிஸ்டிசிசம். அதைச் சொல்லும் கதை இது

சாந்தகுமார்

அன்புள்ள ஜெ

நான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். மீண்டும் நீங்கள் தொடர்ச்சியாக எழுதப்போவதைப்பற்றி பேச்சுவந்தது. ஏன் இவ்வளவு எழுதுகிறார் என்று கேட்டார்கள் நண்பர்கள். இன்றைக்கு எழுதுவது எளிது, வாசிக்கத்தான் ஆளில்லை என்று சொன்னார்கள். சென்ற நூறு கதைகளிலேயே முப்பது நாற்பது கதைகளைத்தான் பெரும்பாலானவர்கள் வாசித்திருப்பார்கள் என்று சொன்னார்கள்

நான் சொன்னேன், ஒருத்தருமே வாசிக்கவில்லை என்றால்கூட அவர் எழுதுவார். அவருக்கு வாசகர்களே முக்கியமில்லை. அவருக்கு இந்த எழுத்து ஒரு களியாட்டம் ஒரு கொண்டாட்டம். எழுதி எழுதி அதில் திளைக்கிறார். அவருடைய சொந்தப் பயணம் அது. வாசிக்கவில்லை என்றாலும் அவருக்கு ஒன்றுமில்லை. இந்த அளவுக்குதரமான கொண்டாட்டமான எழுத்து முழுக்க இலவசமாக வாசகர்களுக்கு அளிக்கப்படுகிறது. அள்ளி வீசிவிட்டு அவர் போய்க்கொண்டே இருக்கிறார். யார் பொறுக்கிக்கொண்டால் என்ன யார் காலால் தள்ளி விட்டாலென்ன அவருக்கு பொருட்டே கிடையாது என்றேன்.

இன்று படையல் வாசிக்கும்போது அதுதான் தோன்றியது. அதில் ஆனைப்பிள்ளைச் சாமி பாடி ஆடுவதைப் பார்த்தேன். அதைப்போல நீங்களும் இந்தக்கதையால் களியாட்டமிடுகிறீர்கள். அந்த பண்டாரப்பாட்டை எழுதும்போது எத்தனை கொண்டாட்ட மனநிலையில் இருந்திருப்பீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். அதை கதைவாசிப்பவர்களும் மற்ற இலக்கியவாசகர்களும் புரிந்துகொள்ளமுடியுமா என்ன? அந்த மண்டபத்தில் எவருமே இல்லை என்றாலும் பண்டாரங்கள் பாடுவார்கள். ரத்தம் சிந்தினாலும் பாடுவார்கள் பட்டினியிலும் பாடுவதே அவர்களின் இயல்பு

ஜெயராமன்

முந்தைய கட்டுரைமலைபூத்தபோது [சிறுகதை]
அடுத்த கட்டுரைகொதி,வலம் இடம்- கடிதங்கள்