தீற்றல், படையல் -கடிதங்கள்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கொஞ்சம் வயதாகி நனவிடை தோய்தல் ஆரம்பிக்கும்போது ஒரு பெரிய மர்மம் மனதிலே வரும். நாம் அடைந்த அந்த அனுபவங்கள் எல்லாம் எங்கே போகின்றன? அவை நமக்கு எவ்வளவு பெரியவை. எவ்வளவு அழுகை, கண்ணீர், எவ்வளவு கோபதாபங்கள். அதெல்லாம் எங்கே? அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால் மிகச்சாதாரணமாக இருக்கின்றன. ஆனால் அவை நமக்கு நடக்கும்போது நமக்கே உரியவையாக இருந்தன. இன்னொன்று அதைப்போல இல்லை என்று தோன்றியது.

அந்தந்த காலகட்டத்தில் நாம் அடைந்த உணர்ச்சிகளை எண்ணிப்பார்க்கையில்தான் நாம் எவ்வ்ளவு சின்னவர்கள் என்று தெரிகிறது. வெறுமொரு தீற்றல். ஒரு காலத்தீற்றல். அவ்வளவுதான். அது நாம் இல்லாவிட்டாலும் இருக்கும் என்று நினைத்துக்கொள்ளலாம்

கதையில் வருவதுபோல 19 வயதில் நான் அழுதியிருக்கிறேன். 64 வயதில் அதை நினைத்துச் சிரிக்கிறேன். இரண்டும் ஒன்றுதான்.

என்.ஆர்.ராமகிருஷ்ணன்

 

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

என் தாய் தந்தையர் ஒருவகையில் காதலும் கலந்து பெற்றோர் ஒப்புதலோடு உற்றாரும் போற்ற திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரே தெருவில் அருகருகே அமைந்த வீடு. எனது தாயார் அந்தக்கால சரோஜாதேவி. என் தாயாரின் கண்களும் பெரிதாக மிக அழகானவை. அவருடைய இளவயது போட்டோவில் மை தீட்டி(தீற்றி!) பார்ப்பதற்கு சரோஜாதேவிக்கு மேல் ஒருபடி அழகாகவே இருப்பார். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு என் தாய் தந்தையர் தான் நினைவுக்கு வந்தார்கள். நான் குழந்தையாக இருந்த பொழுது என் தாயார் தன் கண்களுக்கு மை தீட்டி நான் பார்த்ததே இல்லை அல்லது அப்படி ஒரு நினைவு எனக்கில்லை.அப்பாவை கை பிடித்த பிறகு அவசியமில்லை என விட்டு விட்டாரோ என்னவோ. ஆனால் என் தாயார் திருமணத்திற்கு முன்பாக அழகாக மை தீற்றி எடுத்துக் கொண்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் எங்கள் வீட்டில் இப்பொழுதும் இருக்கக்கூடும்.

எனது மாமாக்கள் என்னிடம் பலமுறை உங்கம்மா அந்தக்கால சரோஜாதேவியாக்கும் என்று பலமுறை கேலியாக சொல்வார்கள். அப்பாவை ஏதாவது நோண்டிக் கேட்டால் ஒரு மென் மின் புன்னகையோடு அந்தக் கணத்தை கடத்தி விடுவார்.

ன் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் மற்றும் பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை தேங்கி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே போன்ற பாடல்கள் ரேடியோவில் ஒலிக்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் ஒரு அற்புத திரைமறைவு நாடகம் எங்கள் இல்லத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதை எண்ணி சிரிக்கிறேன். என் பெற்றோரின் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் அந்த தீற்றல் இன்றைக்கும் ஒரு அழியாச் சித்திரமாகத்தானே பிரபஞ்ச கானம் இசைத்துக் கொண்டிருக்கும்.

பின்னாடி திரும்பிப் பார்த்தால் எத்தனையோ மின்னலடிக்கும் தீற்றல் கணங்கள் யார் வாழ்வில்தான் இல்லை. என் வீட்டுத் தோட்டத்தில் எத்தனையோ ரோஜாக்கள் எதைப் பரிப்பது என்பதிலே தான் எனது போராட்டம் என  கவிதை எழுதி, மைவிழி குவளைக் கண்களில் மையல் தேடி, காதல் பித்தெடுத்து அலைந்த இளமைப் பின்புலம் எவருக்கும் இருக்கும்.

மகளிர் தினத்தில் தீற்றல் என வந்த தீற்றல் கதை. மௌனியின் கதைகளைப் படித்து பித்துப் பிடித்த இளவயது நாட்கள் நினைவுக்கு வந்தன. நெஞ்சத்து ஆழத்து மின்னல் நினைவுகளை மயிலிறகாய் மீட்டிய கதை தந்தமைக்கு நன்றிகள் ஜெ.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

படையல் [சிறுகதை]

ஜெ

பிடரியில் பலமான அடி ஒன்றைத் தந்து, சீக்கிரமே தலையைத் தைவரல் செய்யவும் கூடிய உங்கள் சிறுகதைகளில் ஒன்று படையல். இந்த உணவு செரிக்குமா என்ற கேள்வி, எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கக்கூடிய கேள்வி, இதை இது உண்டு செரித்திடுமா?

இது எதையும் உண்டு செரிக்கும், ஏனெனில் இதன் உடலின் ஒரு அங்கம் தான் இது, இரண்டும் வேறல்ல என்று சொல்லி முடியும் கதை. தேடல்மிகுந்த, ஒவ்வருவருக்கும் ஒரு விடையையும் பின்னர் வினாக்களையும் தரக்கூடிய கதைகளுக்கு களம் அமைவது அரிதுதான். இரு நிகர்விசைகொண்ட ஆறுகள் கலப்பது போலத்தான் இந்தக் கதையின்  நிகழ்தளமும், அதன் மெய்மையும்  ஆக்ரோஷமாக கலக்கின்றன. இந்த அறிதல்களை எனக்கு எளிதாக்கித் தந்த வெண்முரசை இன்னும் இறுகப் பற்றிக்கொள்கிறேன்.  அது இன்னும் பல இரும்புக் கடலைகளை என்னை உண்ணச் செய்யக்கூடும்.

அன்பும் நன்றியும்,
தாமரைக்கண்ணன்
புதுச்சேரி

 

அன்புள்ள ஜெ

 

படையல் கதையைக் கடந்துசெல்வது கடினம். அது என்னென்னவோ செய்கிறது. அதிலுள்ள எல்லாமே உச்சமாக உள்ளன. கொடுமைகளும் உச்சம். அந்தப் பக்கிரிகளின் களியாட்டும் உச்சம். ஒரு அபத்தநாடகம் போல இருக்கிறது அது. ஒரு அற்புதமான நாடகமாக நடித்துவிடமுடியும் இதை. இந்தக்கதையை எவராவது நாடகவடிவமாக ஆக்கவேண்டும்

இன்றைய காலகட்டத்தின் கதை. இன்று அவநம்பிக்கைகளும் காழ்ப்புகளும் கசப்புகளும் பெருகிக்கிடக்கும் காலகட்டத்தில் நமக்கு இருந்த ஆழமான குளிர்ந்த நீர்ச்சுனையை சுட்டிக்காட்டும் கதை. அந்த சுனை இன்னும் வற்றாமலிருக்கிறது என்று நினைக்க ஆசைப்படுகிறேன்

பாலா

முந்தைய கட்டுரைகுமிழிகள், கூர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆமென்பது, விருந்து – கடிதங்கள்