படையல், தீற்றல் – கடிதங்கள்

படையல் சிறுகதை

அன்புள்ள ஜெ

படையல் கதையின் மையம் என்பது அந்தச் சிவனடியார் ரத்தத்தின் வழியாக மறுபடி பிறந்து எழுந்தது. ரத்தம் வழியாகச் சென்று அண்ணாமலையானை கண்டது. அதுவரை தீயாகத் தெரிந்த லிங்கம் வானமாக மாறியது. ஆனால் அங்கே அந்த கல்மண்டபத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே அப்படி ஆகிவிட்டவர்கள். அவர்களுக்கு மறுபிறப்பு நடந்துவிட்டது. ஆகவேதான் யானைகள் போரிடும் காட்டுக்குள் அவர்கள் அன்றில்கள்போலப் பறந்தலைகிறார்கள். அவர்களிடம் இருப்பது சிரிப்பு மட்டும்தான்.

அந்த புரிதல்தான் ஆனையப்ப சாமியை அந்த ரத்தச் சோற்றை தின்போம் என்று சொல்லவைக்கிறது. அவர்கள் அந்தச் சிவனடியாருக்குத்தான் ரத்தச் சோற்றை ஊட்டுகிறார்கள். என்ன ஒரு கதை. நவாப்பால் கொல்லப்பட்டவர்களின் ரத்தம் கலந்த சோற்றை மராட்டியரால் கொல்லப்பட்டவர்களின் வழியாக மீண்டவருக்கு ஊட்டுகிறார்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி அதை வாழ்த்துகிறார் எறும்பு பாவா

இந்த மண்ணிலிருந்த ஒருமைப்பாவனையை, அதை நிலைநிறுதிய சூஃபிகளையும் சாமிகளையும் ஒரே பார்வையில் ஒரே இடத்தில் காட்டிய கதை. ஒரு உச்சகட்ட புனைவு என்று சொல்லமுடியும்

கே.ரவிக்குமார்

அன்புள்ள ஜெ

நலம்தானே? சங்ககாலம் முதலே நமக்கு தெய்வங்களுக்கு குருதிச்சோறு கொடுக்கும் வழக்கம் உண்டு. நெல்லைமாவட்டத்தில் நாங்கள் படப்புச்சோறு என்போம். சோறு பொங்கி அதன்மேல் அறுத்த பலியின் பச்சை ரத்தத்தை விட்டு குழைத்து ஒன்பது உருண்டைகளாக ஆக்கி எட்டுதிசைக்கும் வானத்துக்கும் வீசி படையலிடுவார்கள். சுடலைமாடன் இசக்கி முதலிய தெய்வங்களுக்குரிய பலி அது. அதை முருகனுக்கு வேலன் வெறியாட்டில் செய்ததாக சங்கப்பாட்டிலே பார்க்கிறோம். அந்தச்சடங்குதான் இங்கே நடைபெறுகிறது. அந்தப்பலியை தனக்காக ஏற்றுக்கொள்கிறார் எறும்புபவா. சிவனடியாரும் ஏற்றுக்கொள்ள வைக்கிறார்.அவர்கள் அனைவரும் தெய்வங்கள்போல மனித துக்கங்களுக்கு அப்பால் நின்றிருக்கிறார்கள்

என். காளிமுத்து

தீற்றல் சிறுகதை

அன்புள்ள ஜெ

தீற்றல் ஒரு சிறிய கீறல்போன்ற கதை. மையிடுவது என்பது தமிழகத்தில் எத்தனை ஆயிரமாண்டுகளாக இருக்கிறது. மையுண்டகண்கள், மைவிழி என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் மை பற்றி ஒரு கதை இப்போதுதான் எழுதப்படுகிறது.மையிட்ட கண்களுக்கு பெரிய அளவிலான ஒரு எக்ஸ்பிரஷன் உண்டு. கண்களை பார்ப்பதற்காக மட்டுமல்லாமல் பார்ப்பதற்காக தயாரித்துக்கொள்வது. கண் ஒரு கம்யூனிகேஷன் கருவியாக ஆகிவிடுவது. ஆச்சரியம்தான். நடனக்கலைஞர்கள்போல நம் பெண்கள் கண்களை ஆக்கியிருந்தார்கள். பெண்களுக்கு கல்வி வந்து பொருளாதார விடுதலை வந்து சமூகத்தில் ஓர் இடம் வந்ததுமே அந்த மையிடும் தேவையும் இல்லாமலாகிவிட்டது

எஸ்.ரவிச்சந்திரன்

அன்புள்ள ஜெ

தீற்றல் கதையை வாசிக்கும்வரை நான் பெண்களின் மையிடும் பழக்கத்தில் இவ்வளவுபெரிய மாறுதல் வந்திருப்பதை கவனிக்கவில்லை. உண்மையில் பெண்களின் உடல்களை மூடிமூடி வைத்திருந்த காலகட்டத்தில் கண்கள் அவ்வளவு எக்ஸ்பிரஸிவாக இருந்தன என்று நினைக்கிறேன். இப்போது உடலை மூடுவது குறைவு, கண்கள் மையிடுவது இல்லை. உலகம் முழுக்கவே அதிகமாக கண்களுக்கு மையிடுவது புர்க்கா போடும் பழக்கமுள்ள அரேபியநாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது.

எழுபதுகளில் பாப் ஸ்டார்கள் கூட பெரிதாக கண்வரைந்திருக்கிறார்கள். எலிசபெத் டெய்லர் படங்களில் அந்தம்மா வாலிட்டு கண் எழுதியிருக்கிறார்கள். அந்த வழக்கம் ஒரு பழைய ஞாபகமாக ஆகிவிட்டது. இன்றைக்கு அதைப்போல பெரிய கண்கள் பரதநாட்டியத்தில் மட்டும்தான் உள்ளன என்பது உண்மைதான்.

அந்த கண்களின் ஓர் அசைவு அவனை பித்தாக்கி அழவைக்கும் இடம் ஆழமானது. அந்த நெகிழ்ச்சி என்னைப்போன்ற அறுபதுவயதுக்காரர்களுக்குத்தான் புரியும்

ஆர்,மாதவன்

முந்தைய கட்டுரைகந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்