கதைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

உங்கள் கதைத்தொடரை படித்துக்கொண்டிருக்கிறேன். இரவில் ஒருமுறை படித்துவிட்டுப் படுக்கிறேன். காலையில் எழுந்ததும் இன்னொருமுறை. அதன்பின் கடிதங்களைப் படிக்கையில் அந்த வரிகளைப் புரட்டிப்பார்க்கிறேன். சிலசமயம் கதைகளையே மீண்டும் படிக்கிறேன். நான் அப்படி நிறையதடவை படித்த கதை படையல். அதிலும் அதிலுள்ள அந்தப் பண்டாரப்பாட்டுக்கள். ஞானம் கூடவே சாமி பற்றிய பகடி. இந்தக் கதைநடக்கும் காலத்தில்தான் இத்தகைய பாடல்கள் நிறையவே வந்தன. குணங்குடியார் பாடல்கள் மாதிரி.

”எண்ணி எண்ணி சேர்த்த எண்ணமே அல்லவோ?- நான்

எண்ணாத வெளியான ஏகாம்பரம் அல்லவோ?”

என்ற வரி ஓர் உச்சமாக வருகிறது என்றால் அதற்கு மறுபக்கமாக

”ஆறுமுக புருசனென்றால் அடுக்குமோடி எம்மகளே

ஆறுமுகத்தால் வேவுபாத்தால்  எம்மகளே- நீ

அடுத்தமனை பாக்க ஏழுமுகம் வேணுமேடி! ”

என்ற நையாண்டி. அது இரண்டும்தான் பண்டாரப்பாட்டின் இயல்புகள். அவற்றைப் படிப்பதற்காகவே மீண்டும் மீண்டும் அந்த கதைக்குள் சென்றேன்

ஆனால் இவ்வளவு எழுதப்படுகிறது. ஒரு சாதாரண சினிமா வெளிவந்தால் நம் அறிவுஜீவிகள் எவ்வளவு எழுதிக்குவிக்கிறார்கள் என்று பார்க்கிறேன். ஏதோ அறிவியக்கம் செய்வதுபோல பாவலா செய்கிறார்கள். ஒருவர்கூட ஒன்றும் எழுதவில்லை. நான் கொஞ்சம் வாசிப்பவர்கள் என நினைப்பவர்களேகூட திரும்பத்திரும்ப தேர்தல், கூட்டணி அமைப்பது என்று ஒன்றையே மாசக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இந்தச் சூழல் உங்களுக்கு ஏமாற்றமாக இல்லையா?

கே.ஜெயக்குமார்

அன்புள்ள ஜெயக்குமார்

இங்கே படிப்பவர்கள் மிகக்குறைவு. எதையாவது படிப்பவர்களிலேயே ஒரு சதவீதம்பேர்தான் என் கதைகளைப் படிக்க முடியும். அவர்கள் படிக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அதற்குமேல் எதிர்பார்ப்பதில்லை. மற்றவர்கள் படித்தாலும் வம்புதான். அவர்களுக்கு ஏற்கனவே என்ன தெரியுமோ அதையே இங்கும் வந்து பேசி மற்றவர்கள் கதைகளை அணுகமுடியாமலாக்கிவிடுவார்கள்.

என் கதைகளை நீங்கள் பார்க்கலாம். அவற்றிலுள்ள அடிப்படையான தேடல்களும் கண்டடைதல்களும் இங்குள்ள இலக்கியவாதிகளின் எளிமையான காமம்- அரசியல் சார்ந்த உலகுக்குள் நிற்பவை அல்ல. அவை வரலாறு, தத்துவம் ஆன்மிகம் என விரிந்துசெல்பவை. அவை இங்குள்ள இலக்கியவாதிகளுக்குரியவை அல்ல. அவர்கள் இத்தளத்தில் முன்னரும் ஒன்றும் வாசித்து எழுதியவர்கள் அல்ல. ஆகவே அவர்களால் இக்கதைகளை உரியமுறையில் அணுகமுடியாது. அதற்கான அறிவுக்கருவிகள் அவர்களிடமில்லை.

சிலர் வாசிக்கிறார்கள்,விவாதிக்கிறார்கள், அவர்களே எனக்கு முக்கியமானவர்கள். இது ஓர் அந்தரங்கமான உரையாடல்தான்.

ஜெ

அன்புள்ள ஜெ,

இந்த புதிய கதைத் தொடரின் கதைகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். பலகதைகளை இரண்டுமுறை வாசித்திருக்கிறேன். எனக்கு முக்கியமானதாகப் படுவது இக்கதைகளிலுள்ள தீவிரமும் அதேசமயம் சுவாரசியமும்தான். இலக்கியமென்றாலே சுவாரசியமில்லாத வரண்ட யதார்த்தமோ சிக்கலாம மொழியில் சொல்லப்படும் சாதாரணமான எண்ணங்களோதான் என்றுதான் தமிழ்ச்சூழலில் தென்படுகிறது.

நான் அடிக்கடி சொல்வதுண்டு. இங்கே நண்பர்குழுவிலேகூடச் சொன்னேன். கதை என்பது எவ்வளவு சுவாரசியமான விஷயம். உலகத்திலேயே சுவாரசியமான விஷயம். அதை இப்படி கொடுமையான ஒரு பயிற்சியாக எப்படி ஆக்கிவைத்திருக்கிறார்கள் என்று. இன்னொரு பக்கம் ஆழமில்லாத சல்லித்தனமான பேச்சாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். நமக்கு இன்றைக்குத் தேவை சுவாரசியமும் ஆழமும் கொண்ட கதைகள். அந்தவகையில் ஐடியலான கதை கந்தர்வன்தான் என நினைக்கிறேன்.

நீங்கள் எழுதும் இந்தக்கதைகள் கதைசொல்லல் வழியாக மிகச்சாதாரணமான வாசகர்களிடம் கூடச் சென்று சேர்ந்து அழுத்தமான பாதிப்பை உருவாக்குவதைக் காணமுடிகிறது. இன்றைக்குத் தமிழில் நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய இலக்கியச்செயல்பாடு இது. இதை வாசிக்கும் ஒரு தலைமுறையே உருவாகி வந்துகொண்டிருக்கிறது என நினைக்கிறேன்

செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்குமார்

கதை என்பது தொடர்ச்சியான கண்டடைதல்களால் ஆனது. கற்பனைப்பயணங்களால் நிகழ்த்தப்படுவது. இந்த இரண்டு இலக்கணங்களும்தான் முக்கியமானவை. மற்ற இலக்கியக்கொள்கைகள் எல்லாமே அந்தந்த காலகட்டத்திற்குரியவை.

ஜெ

முந்தைய கட்டுரைதீற்றல்,படையல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிருந்து,கூர்- கடிதங்கள்