படையல்,தீற்றல்- கடிதங்கள்

படையல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பேதம் ஓங்கி ரத்தமும் நிணமுமாக வழியும் காலகட்டத்தில் எல்லாமே ஒண்ணுதான் என்று அமர்ந்திருக்கும் ஒரு பண்டாரக்கூட்டம். சூஃபி, சிவனடியார், பண்டாரம், மஸ்தான். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அரசியல் என்ன ஆன்மிகம் என்ன என்று காட்டிவிடுகிறது இந்தக்கதை. யோசித்துப்பார்த்தால் இது 17 ஆம் நூற்றாண்டுக் கதையே அல்ல. இன்றைக்கும் உள்ள கதை இதுதானே? வெளியே நடந்துகொண்டிருப்பது அந்த ரத்தப்போர் அல்லவா? உள்ளே சாராம்சமாக அத்தனை பேதங்களையும் கடந்த ஒருமையை முன்வைக்கும் ஞானம் நிறைந்திருக்கிறது.

இந்த விசித்திரமான தேசத்தின் சித்திரமே இந்தக்கதையில் உள்ளது. ஒருபக்கம் தீ. இன்னொருபக்கம் அதை அணைக்கும் குளிர்ந்த நீர். வெளியே அந்த கொடுமைகளை வாசிக்கையில் ரத்தம் கொதிக்கிறது. கூடவே ‘ஆறுமுக புருசனென்றால் அடுக்குமோடி எம்மகளே- ஏய்அடுக்குமோடி எம்மகளே?’ என்று கைதட்டிக்கொண்டு ஆடிப்பாடவும் தோன்றுகிறது.

சத்யன் முருகவேல்

அன்புள்ள ஜெ

படையல் கதையை வாசிக்க வாசிக்க மனம் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தது. அந்தப்போர்ச்சூழலில் ரத்தச்சோறையே படையலாக ஏற்றுக்கொண்டு பண்டாரங்கள் மெய்ஞானத்தை முன்வைக்கிறார்கள். ‘எல்லாம் ஒண்ணுதான்’ என்ற ஞானம்.

திருவண்ணாமலையில் எரிவதுதான் சிதம்பரத்தில் வானமாக இருக்கிறது என்கிறார் பண்டாரம். பிஸ்மில்லாஹ் சொல்லி அதை ஆமோதிக்கிறார் சூஃபி மெய்ஞானி. வெளியே ரத்தமழையாக கொட்டுவதுதான் உள்ளே பிரசாதமாக வருகிறது

தீயும் வானமும் ஒன்றுதான். வானத்திலே தீ இருக்கிறது என்று கிறிஸ்துவம் சொல்கிறது. வானத்திலிருந்துதான் மழையும் வருகிறது.

ஜான் ஆசீர்

தீற்றல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தீற்றல் கதை ஒரு சொந்த அனுபவத்தை நினைவூட்டியது. இது ஒரு இருபதாண்டுகளுக்கு முந்தைய சங்கதி. அன்று ஒரு பெரிய காதல் இருந்தது. வெறிகொண்ட காதல். வேறெந்த நினைப்பும் இல்லாமல் ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்த காதல் அது. அப்படிப்பட்ட காதலெல்லாம் இன்றைக்கு இருக்க முடியாது. சின்ன ஊர். ஆகவே பார்ப்பது பேசுவதெல்லாம் மிக அபூர்வம். ஆகவேதான் அந்தக்காதல் அத்தனை தீவிரமாக இருந்தது. என்னைவிட ஒருவயது மூத்தவள்.

ஒருமுறை தனியாக ஆற்றங்கரையில் பார்த்ததும் சட்டென்று கையை பிடித்துவிட்டேன். நகத்தால் என் கையை கீறிவிட்டு சிரித்துவிட்டு ஓடிவிட்டாள். கையை கீறியது ஒரு கணம்தன. அப்படி ஈசியாக கீறிவிட்டள். ஆனால் அந்த காயம் ஆர ஒருவாரமாகியது. அந்த தீற்றலின் எரிச்சல் ஒரு இனிய ஞாபகமாக இருந்துகொண்டே இருந்தது. அதை ஒரு அற்புதமான இனிமையாக வைத்திருந்தேன்

இன்றைக்கு அந்த வடுவெல்லாம் இல்லை. ஆனால் ஞாபகத்தில் அந்தத்தீற்றல் இருக்கிறது

 

என்

 

அன்புள்ள ஜெ

காதல், அதிலும் இளமைக்காதல் என்பது ஒரு தீற்றல்தான். விரைவாக அலட்சியமாகப் போடப்படும் ஒரு தீற்றல். ஒரு கணம்தான் அது. அந்தக்கதையில் வரும் வரி. மிகமென்மையானது, ஆனால் மிகக்கூர்மையானது. அதை மெல்லிய குருவி ஒன்றின் இறகுபோல என்கிறீர்கள். அவ்வளவுதான். அன்புள்ள ஜெ, அதைப்பற்றி அவ்வளவுதான் சொல்லமுடியும். சாவு, பயங்கரவசீகரம் எல்லாம் தேவையில்லை. அந்த தீற்றல் என்ற சொல்லே போதும்

 

சாந்தகுமார்

கொதி,வலம் இடம்- கடிதங்கள்

தீற்றல்,வலம் இடம்- கடிதங்கள்

படையல்- கடிதங்கள்

படையல் கடிதங்கள்

முந்தைய கட்டுரைகொதி,வலம் இடம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுமிழிகள், கூர் – கடிதங்கள்