கந்தர்வன், யட்சன் கடிதங்கள்.

கந்தர்வன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கந்தர்வன் யட்சன் இருகதைகளிலும் ஆண்கள்தான் கதாநாயகர்கள். ஆனால் கதை வள்ளியம்மை என்ற உடனுறைமங்கையைப் பற்றியது. அவள் எப்படி கந்தர்வனையும் யட்சனையும் அப்படி ஆக்குகிறாள் என்பதுதான் கதை.

இந்த கோபுரத்திலிருந்து பாயும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்துள்ளது. நம் கோயில்களைச் சுற்றி பிரம்மஹத்தி போல நீத்தார் தெய்வமாக ஆன சிறுதெய்வங்கள் நிறையவே உள்ளன. நான் நெல்லையில் பயணம்செய்யும்போது பலர் இப்படி மாடசாமியாக மாறிவிட்டதை கேட்டிருக்கிறேன். சென்ற ஐம்பதாண்டுகளில்கூட பலர் மாடனாகியிருக்கிறார்கள். ஹைகோர்ட் மாடன் என்றுகூட ஒரு சாமி உண்டு. அவர் வக்கீலாக இருந்தார்.

ஊருக்காக செத்தவன் மாடனாகி வழிபடப்படுகிறான். சித்தர்கள் சமாதியாகி வழிபடப்படுகிறார்கள். அருங்கொலையுண்டவர்களும் சதிதேவிகளும் வழிபடப்படுகிறார்கள். இந்த தொன்மங்களை எல்லாம் கலந்து வரலாற்றுடன் இணைத்து எழுதப்பட்ட கதை

 

ஜெயவேல் கிருஷ்ணசாமி

அன்புள்ள ஆசிரியருக்கு,

கந்தர்வன் சிறுகதை அணஞ்சிக்கும் கள்ளன் தங்கனுக்குமான ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் மிக முக்கியமானவை. இரு ஆளுமைகளுக்கு நடுவே நிற்கும் ஒரு சாதாரண ஆண் இருவரையும் துலா தட்டில் வைத்தால் கிடைக்கும் சமநிலையை அறிதல் என்பது பெண்ணை அறிவதற்கான வழிமுறையாக கூட இருக்கலாம். ஒருபக்கம் அன்றாடத்தை தாண்டிய adventure. மறுபக்கம் எடையற்ற அன்றாடம். துள்ளலும் அமைதியும்.  இருவரும் பெண்களால் விரும்பப்படுகிறவர்கள். மிக மிக ரகசியமாக அல்லது வெளிப்படையான ரகசியமாக (open secret). இருவரும் ஒன்றின் இரு எல்லைகள். கள்ளத்தனமும் கள்ளமின்மையும் சந்திக்கும் புள்ளி தான் பெண்களா? இருவரிடமும் பெண் அடைவது சுதந்திரத்தை என்று அந்த துலா முள் காட்டக்கூடும்.

உண்மையில் தங்கனை காட்டிலும் அணஞ்சியையே ஆண்கள் மிக வெறுக்கக்கூடும். ஏனெனில் தங்கன்கள் எல்லோடரிமும் சிறிதளவிலேனும் உண்டு. ஆனால் அணஞ்சியை அடைய எல்லாவற்றையும் துறக்க வேண்டுமல்லவா. கள்ளமின்மையின் முன் கள்ளம் ஓர் எல்லைக்கு மேல் முன்னகர முடியாதல்லவா. காராய்மைக்காரர்களின் கள்ளத்தனத்தை தூய்மையால் மட்டுமே கடந்து செல்லும் அணஞ்சியை அசைப்பது எந்த கள்ளனுக்கும் கடினம் தானில்லையா. அதனால் தான் தங்கனை மாடன் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. ஆனால் அணஞ்சி மாடனாகவே மாற முடிகிறது.

உண்மையில் கந்தர்வன் கதை முடியுமிடத்தில் தான் தொடங்குகிறது. அங்கே உடன் கட்டை ஏறும் வள்ளியம்மை கதையை துவக்கி வைக்கிறாள். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் கதையை போலவே. ஆனால் கந்தர்வன் கதையின் கதைப்பின்புலம் ஒரு நாவலுக்கானது. மிக விரிவான வாசிப்பை கோருவது.

அன்புடன்,

பிரேம் குமார் ராஜா

யட்சன் [சிறுகதை]

வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

அந்த முருகேசனின் பாதாள அரிசி பதுக்கி விற்கும் அறை மனுஷன் வாழும்போதே யட்சன் ஆக வாழ்ந்தான் என்பதற்கான ஒரு குறியீடு. அதேபோல பணங்குடி ஊருக்குள் அவன் அரிசி கடையில் சுவற்றில் பொன்னை பதுக்கி வைத்திருந்தது புராணத்தில் வருகின்ற குபேரன் போன்ற யட்சர்களின் இயல்பு. கரப்பான்பூச்சி பாபா என்பதுகூட மண்ணுக்குக் கீழே சாக்கடை பொந்துகளில் வாழும் இயல்பைக் காட்டுகிறது. அவன் பிச்சைக்காரனாக அலைந்த போதும் கந்தல் மூட்டையில் பொன்னைத்தான் யட்சனை போல் மறைத்து வைத்து இருந்திருக்கிறான்.

இரண்டு ஆண்கள் ஒருவன் சாதாரணமாக வாழும்போதே உன்னத வாழ்வு கைக்கொண்டு கந்தர்வன் போல் இலகுவாக இருந்திருக்கிறான் இன்னொருவன் கீழ்மை குணங்களோடு இரண்டுவிதமான முகங்களை காட்டி யட்சனாக வாழ்ந்திருக்கிறான்.

யட்சன் போன்ற ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்ந்தபோதும் ஒரு நல்ல மனுஷியாக வாழ்ந்ததால் சட்டென்று கந்தர்வ நிலைக்கு உயர்ந்து எறிமாடன் உடனுறை அம்மையாகிறாள் ஒருத்தி.

முருகேசனுக்கு இரண்டு முகம் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. வள்ளியம்மையை மற்றும் உறவுக்கு வரும் எல்லா வேசிகளையும் வைது தீர்க்கும் ஒரு கீழ்மை முகம், வள்ளியம்மையை போற்றும் தொழுது ஏத்தும் ஒரு மேன்மை முகம். அச்சு அசல் யட்சன் போன்ற குணம்.

ஏதோ ஒரு வகையில் வள்ளியம்மை மீதான தீராக்காதலினாலேயே முருகப்பனும் இயக்கன் சாமி ஆகி அந்தக் கோயிலுக்குள் தனக்கும் ஒரு இடத்தை பிடித்து விடுகிறான்.

நாட்டிலே அனஞ்ச பெருமாள் மற்றும் வள்ளியம்மை போன்ற கந்தர்வர்களுக்குத்தான் பஞ்சம் மத்தபடி இங்கே முருகேசன் போன்ற யட்சர்களே எல்லோரும். என்ன செய்வது ஏதோ ஒரு வகையில் தங்களின் நல்ல முகத்தை காட்டி யட்சர்களும் கோபுரங்களிலும் கோயில்களிலும் இடம்பிடித்து விடுகிறார்கள். ஒருவகையில் மனிதர்களுக்கு கந்தர்வர்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாக யட்சர்களும் யட்சிகளும் தேவையாகத்தான் உள்ளார்கள்.

ஆ ஊ‌ ன்னா எடுத்ததற்கெல்லாம் ஒரு கோயில் கட்ட வேண்டியது. ஆஹா ஓஹோ அப்படின்னு கொண்டாட வேண்டியது. அப்புறம் கோஷ்டி பூசல் குலம் கோத்திரம் பூசல் ஜாதி சண்டை ஜாத்திரை சண்டை அப்படின்னு அடிச்சுக்க வேண்டியது. அப்புறம் கட்டின கோயில அதுல இருக்கும் கடவுளை அம்போன்னு விட்டுட்டு பெரிய பூட்டா மாட்ட வேண்டியது. வேற புதுசு புதுசா கோயில் கட்ட வேண்டியது இதைத் தான் காலங்காலமாக பண்ணிக்கிட்டு இருக்கோம்.

இந்த நல்லா வச்சு வாங்கி இருக்கீங்க ஜெ. பராமரிக்கப்படாமல் ஒரு தீபம் கூட ஏற்ற படாமல் இருண்டு கிடக்கும் உன்னத கலை படைப்புகளான ஆயிரக்கணக்கான கோயில்கள். பேருக்காகவும் புகழுக்காகவும் தினம் தினம் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் கான்கிரீட் கோயில்கள்…. வேதனை தான்.

கந்தர்வன் யட்சன் இரண்டு கதையும் சேர்த்து ஒரு குறுநாவல் வாசித்த இனிய அனுபவம் தந்தீர்கள்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

அன்பு ஜெ,

உங்கள் புனைவுக் களியாட்டு சிறுகதைகளின் வரலாற்றுப் புனைவுகளில் கேரள மார்த்தாண்ட வர்மாவைப் பற்றிச் சொல்கையில் வேறெங்கோ இருந்து ஓர் நிலத்தை அதன் மக்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இன்று நீங்கள் மங்கம்மாளின் பேரனான விஜயரங்க சொக்கநாதநாயக்கரைப் பற்றிச் சொல்லும் போது எங்கள் நிலத்தின் வழி தொடரும் ஒரு வரலாற்றுப் புனைவாக, காலத்தின் வழியே ஒரு குறுக்குசால் ஓட்டி அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மதுரை எனும் மூதூர் தென்னகத்திலிருக்கும் பெரும்பான்மையான இடங்களின் மூலம் என்று தான் சொல்ல வேண்டும். மதுரையை திருநெல்வேலியோடு இணைக்கும் ஒரு இணைப்பை நான் நெல்லைப் பயணத்தின் போது பார்த்தேன். மதுரையிலிருந்து திருவில்லிபுத்தூருக்கு வரும் வழியில் சீரான இடைவேளையில் மண்டபங்கள் இருப்பதைக் காணலாம். அங்கு ஒவ்வொரு மணடபத்திலும் ஒரு பெரிய மணி இருந்ததாகவும், ஆண்டாள் கோவில் பூசை முடிந்ததும் இங்கிருந்து ஒரு மணி அடிக்கப்பட்டு அது மதுரையிலிருக்கும் மன்னனைச் சென்றடையும் போது அவன் தெற்கு நோக்கி ரெங்கமன்னாரையும், ஆண்டாளையும் வழிபடும் ஒரு கதையைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட மண்டபங்களின் முடிவு ராஜபாளையத்திற்குப் பிறகான தென்காசிப் பயணப்பாதையில் இல்லை. ஆனால் நெல்லைப் பயணப்பாதையில் அதே போன்ற மண்டபங்களை அதே சீரான இடைவேளையில் கண்டேன். இப்படி நீங்கள் இணைத்த மதுரை, சீவில்லிபுத்தூர் (இந்த வார்த்தையைப் பார்த்ததும் மகிழ்ந்தேன் ஏனெனில் இங்குள்ள மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றோ திருவில்லிபுத்தூர் என்றோ சொல்வதில்லை. சீவில்லிபுத்தூர், சீலுத்தூர் என்று தான் கூறுவர்), திண்ணவேலி, ஆரல்வாய்மொழி, திருக்கணங்குடியை இணைக்கும் ஒரு பாதையின் வழியான கதையை மேலும் நன்றாக தொடர்புபடுத்திக் கொள்ளமுடிந்தது. விஜரங்கசொக்கநாதரின் பாதையின் புனைவை பதினெட்டம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் சென்று கண்டேன். அவரைப் பற்றிய உங்களின் சித்தரிப்புகள் மிக நுணுக்கமாக இருந்து புனைவை ஏற்றிக் கொள்ள ஏதுவாக இருந்தது.

பின்னும் அணைஞ்சன் என்ற பண்டாரம் ஒரு குலத்துக்கான எறிமாடன்சாமியான கதையை சொல்லியிருந்தீர்கள். ஊருக்கே முதலாமனாக ஆவதற்கு ஒரு கொடுப்பனை வேண்டும் தான். ஆனால் அது பெரும்பாலும் வீரம் செறிந்த கதையாகவே நாட்டுப்புறப்பாடலில் கேட்டிருக்கிறோம். கந்தர்வனாக யட்சனாக மாறுபவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வு மட்டும் ஏன் சாமானியர்களைப் போலில்லை என்று நினைத்தேன். தோற்றத்தில் வசீகரமானவர்களாக, பெண்களால் காதல் செய்யப்படுபவர்களாக, ஆண்கள் பொறாமைப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். திடீரென இறந்த அவனின் அப்பா எண்ணைச் செட்டியைப் போலவே திடீரென அரிசிச்செட்டி என்ற வேடமிட்டு இறந்துபோய் செட்டி குலத்தின் குலசாமியாய் மாறிய அணைஞ்சனை ஆச்சரியமாகவே பார்த்தேன். அவனைப் பற்றிய சித்திரத்தை ஒரு புடிபடாதவனாக காண்பிக்கும்போதே சொல்லப்படாத ஒன்றை வாசகர் ஏற்றிக் கொள்ள ஏதுவாயிருந்தது. மரயக்குட்டிப்பிள்ளை அவனிடம் கோபுரத்திலிருந்து கீழே குதிப்பதற்கான தேவையை சரியான கோர்வையோடு சொல்லும்போது அவன் சொன்ன ஒவ்வொரு “ஆம்” –ம் அவன் எறிமாடன்சாமியாக மாறப்போவதற்கான முடிவுகளை நோக்கிய ஆம் –ஆக பார்த்தேன்.

முருகப்பனைப் பற்றியும் அவனின் புது மனைவியைப் பற்றிய சித்திரத்தையும் கந்தர்வன் சிறுகதையிலேயே கொடுத்திருந்தாலும், கந்தர்வன் யட்சனாக நிறைவு கொள்வதற்கான யட்சியின் சித்திரத்தை அளித்திருந்தீர்கள். வள்ளியம்மை முதல் கதையில் காணிக்கும்போதே “இவ கொஞ்சம் அடங்காத எனம்; படிச்ச கள்ளி” என்ற சித்திரத்தைக் கொண்டு இரண்டாம் கதையில் அவள் முருகப்பனிடம் கன்னத்தில் அடிவாங்கும் இடத்தில் இரவு நாவலில் நீங்கள் சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது.”ஒரு சாதரணமான ஆண் திருமணமாகி ஆறு மாதத்திற்குள் பெண்ணின் மென்மையான தோற்றத்திற்குள் இருக்கும் உலோகத்தைக் காண்பான். குரூரம், பிடிவாதம், கூர்மை. அவன் பூரணமாக அவளிடம் தோற்பான். அனேகமாக அப்போது தான் அவன் முதல்முறையாக அடிப்பான். பெண்களை அடிக்கும் ஆண்கள் பரிதாபமாக பெண்களிடம் தோற்றுக் கொண்டே இருப்பவர்கள்தான். எங்கோ ஒரு புள்ளியில் அந்த உண்மையுடன் அவன் சமரசம் செய்து கொள்ள ஆரம்பிக்கிறான். தோல்வியை ஒத்துக் கொள்கிறான். ஆனாலும் அவ்வபோது உக்கிரமான கழிவிரக்கமாக ஆங்காரமாக ஆணிலிருந்து அந்த தோல்வியின் தாபம் வந்து கொண்டுதான் இருக்கிறது” –இரவு நாவல். இப்படியான ஒரு சாதரண ஆணாக முருகப்பனும் அவனால் எதிர்கொள்ள முடியாத ஒரு யட்சியாகவுமே வள்ளியம்மையைப் பார்க்கிறேன். ஏதோ ஓர் தருணத்தில் யட்சனாக அவள் அணைஞ்சனைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு. பிணம் தன் கணவனில்லை என்று தெரிந்தும் தான் விரும்பிய ஒரு யட்சனை பற்றிக் கொண்டு காலத்திற்கும் எறிமாடனின் உடன் நின்ற நங்கையாக தன்னை மாற்றிக் கொள்ளும் தீவிரமான யட்சி தான்அவள். இப்படி தீவிரமாக புனைவை எற்றிக் கொண்டு வந்த என்னை “ஏன் இப்ப இவ்ளோ சீரியஸா ஆகுற” என்று கூறி யட்சன் கதையில் மிக நகைச்சுவையாக முடித்துவிட்டீர்கள். கதையின் எல்லா அம்சங்களையும் மறந்துபோய் வெறுமே சிரித்துக் கொண்டிருந்தேன் ஜெ.

ஒரு எறிமாடன்சாமி, உடன்நின்றநங்கை, இயக்கன் சாமி ஆகியவர்களின் சிலைகளின் மேல் இத்துனை நகைச்சுவையான புனைவை ஏற்றியிருக்கிறீர்கள். சிரித்துக் கொண்டே தான் படித்து முடித்தேன். மக்களின் அறியாமையை புனைவின் மூலம் பகடி செய்து தெறிக்க விட்டிருக்கிறீர்கள். குறிப்பாக உங்கள் வசவுகளும் சொலவடைகளும் தான் சிறப்பான சம்பவங்கள். ”நாயர் சத்தியமும் நாய்மூத்திரமும்”; “செட்டி அடிச்சும் தவளை கடிச்சும் செத்தவன் உண்டாவே” என்ற வரியை படித்துவிட்டு கண்களில் நீர் வரும்வரை சிரித்தேன். நீங்கள் அதை உபயோகித்திருந்த இடமும் ஒரு காரணம். இந்த இரு கதையையும் நான் என்ன சொல்வது!!! வரலாற்று புனைவாக ஆரம்பித்து, ஏதோ முதலாமன் கதை போல ஒரு தீவிரமான ஒன்று என விரைப்போடு படித்துக் கொண்டிருந்தபோது சிறந்த சிரிப்பு மூட்டும் நகைச்சுவைக் கதையாக முடித்து வைத்துவிட்டீர்கள். இறுதியில் அந்த இயக்கன் சாமி கல்லாக மாறியும் கூட அந்த வசவுச் சொற்களோடே வெறித்துப் பார்ப்பதுபோல் இருந்தது. நகைச்சுவையான கதை. மிக்க நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா.

 

முந்தைய கட்டுரைகொதி,குமிழிகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆமென்பது,ஏழாம்கடல் – கடிதங்கள்