குமிழிகள், கூர்- கடிதங்கள்

 

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

குமிழிகள் கதை விவாதங்களை உருவாக்குவதைக் காண்கிறேன். அவற்றை வெறும் ஒழுக்கவியல் விவாதங்களாக என்னால் காணமுடியவில்லை. அவற்றில் அடிப்படைக் கேள்வி ஒன்று உள்ளது. ஒரு கதை அந்த அடிப்படைக் கேள்வியை சென்று தொடும்போது மட்டும்தான் இத்தனை விவாதங்கள் உருவாகின்றன. அந்த கேள்வியை சரியாக காட்டும் உருவகம் தேவை. அந்த வகையான உருவகம்தான் மார்பகங்கள். என்றுமே மனிதகுலத்துக்கு அது ஒரு அடிப்படையான உருவகமாக இருந்துள்ளன.

சங்க இலக்கியங்களில் பார்த்தால் பெண்ணின் அடையாளமாகவே முலைகள் உள்ளன. இளம்பெண்ணை ஏந்திளமுலை என்று சொல்கிறார்கள். முதியபெண்ணை பொல்லா வறுமுலை என்கிறார்கள். முலை பாலியல் அடையாளமாக மட்டும் இல்லை. பெண்ணடையாளமாகவும் உள்ளது. இந்தியச்சிற்பங்களும் முலைகளின் மேல் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றன

ஒர் உறுப்பு இத்தகைய குறியீடாக மாறியிருக்கும்போது அதைப்பற்றிய ஒரு பேச்சு என்பது மிகப்பெரிய கேள்விகளைக் எழுப்புவதாக ஆகிவிட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விஷயத்தைப் பேசி முடியாது என்றே நினைக்கிறேன்.

குமிழிகள் கதையில் எழும் கேள்விகள் இரண்டுதான். முலை என்பதற்கான தேவை இரண்டு. குழந்தைக்குப் பாலூட்டுவது. காமத்திற்கான தூண்டுதல். இரண்டுமே சாத்தியமில்லை என்றான பின் அது வெறும் அடையாளமாக ஆனால் அது என்னவாக பொருள்படுகிறது. பாலூட்டவும் முடியாது, தொடவும் முடியாது. பெண்ணுக்கான ஓர் அடையாள அறிவிப்பாக மட்டும் அது ஆகிவிடுமா என்ன?

கார்த்திக்

அன்புள்ள ஜெயமோகன்

தங்களின் தளத்தில் படித்த குமிழிகள் சிறுகதை தொடர்பில் என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

யதார்த்தத்திற்கும்,நவீனத்திற்கும் இடையே உள்ள போராட்டம் தான் கதை.

சாமிநாதன் உலகோடு ஒட்டி வாழ விரும்புவனாக உள்ளான். ஆணும் பெண்ணும் உடம்பாலேதான் உரையாடிக்க முடியும்.அந்த தொடர்பு ரொம்ப டீப்பானது.அதற்கு பல லட்சம் ஆண்டு பரிணாம வரலாறு உள்ளது என்கிறான்.

அதற்கு லிலி அதிலே ஒரு சுரண்டல் இருக்கு. அடிமைத்தனம் இருக்கு. அது வேண்டாம் என்கிறாள்.வேறு வகை  உரையாடல் நடக்கலாமேன்னு சொல்றேன் என்கிறாள்.

குழந் தைத்தனமான மூக்கை ஐரோப்பிய மூக்காக மாற்றம் செய்து கொள்வது மற்றும் செஸ்ட் டெவலப்மெண்ட்  செய்து கொள்வது தொடர்பான விவாதங்களில் அவன் மனது முற்றிலும் காம ம் நோக்கியே சிந்திக்கிறது.

ஆண் ஆதிக்க மனதுக்கு நிகராக பெண் ஆதிக்க மனது இருந்தால் தான் பெண்மை வெல்ல முடியும். அதையே லி லி செய்கிறாள்.   அவள் பெண்ணிற்கே உரிய உரிமைகளை இரு விவாதங்களின் போதும் பின்வருமாறு ஸ்தாபிதம் செய்கிறாள்.

உடம்பு மாறிட்டு இருக்கு.முகம் மாறிட்டு இருக்கு. அதுக்கேத்தாப்ல உன்னோட டேஸ்டும் மாறித்தான் ஆகனும்.

எக்ஸ்பிரசன்னா செக்ஸ் மட்டும் இல்லை. அழகு, திறமை,பலம், இளமை அனைத்தும் தான் என்கிறாள்.

அவள் தன் வேலையைச் செய்து முடிக்க இளமை,துடிப்பு மற்றும் ஹெல்த் முக்கியம் என்கிறாள்.

மேல்வர்க்கத்திலும், மத்திய தர மேல்வர்க்கத்திலும் தற்போது இது சாத்தியம் தான்.  காலம் செல்லச்செல்ல அனைத்து  மக்கள் வர்க்கத்திலும் சாத்தியம் ஆகும் வாய்ப்புகளே அதிகம்.

பாரதிராஜாவின் 16 வயதினிலே வந்த பிறகு தான் பல கிராமங்கள் நகர நாகரிகத்திற்கு பழகின.

தற்போது  இணையம் அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இனிவரும் காலங்கள் சில பழமைகளைப் பாதுகாக்க தான் போராட வேண்டி வருமே தவிர இது போன்ற செயல்களில் அனைவரும் தங்களை எளிதாக தகவமைத்துக் கொள்வது சாத்தியமே.

நன்றி

மு.மாணிக்கம் ,

நற்சாந்துபட்டி

புதுக்கோட்டை.

கூர் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கூர்.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

என்பது குறள். எனவே குழந்தைதனமாக இறாய் ஊக்கமுள்ளதுவே என்கிறார் வள்ளுவர்.

நீ என்றோ தாக்கபடலாம் என்பது மட்டுமல்ல. இங்கு உன் கூரால் நீ குத்தமுடியாது வெறுளவும் சில உண்டு என்றும் இக்கதையை வாசிக்கலாம் போல.

நன்றி
பிரதீப் கென்னடி.

அன்புள்ள ஜெ

கூர் போன்ற கதையைப் புரிந்துகொள்வதில் நமக்கு பலவகையான சிக்கல்கள் உள்ளன. இந்த உலகத்தை நாம் இன்னும் அணுக்கமாக தெரிந்துகொள்ளவில்லை. உண்மையில் இங்கே கேஸ்கள் எழுதப்படுவது மிகமிக இயந்திரத்தனமாகத்தான். உண்மையான சிக்கல்களை கோர்ட்டுக்கு கொண்டுவரவே முடியாது. நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது. ஆகவே காலாகாலமாக எப்படி கேஸ் எழுதப்படுமோ அப்படி, அதே வார்த்தைகளிலேயே கேஸை மீண்டும் எழுதுவது வழக்கம். அதுதான் பப்ளிக் பிராசிக்யூட்டருக்கு எளியது. அவர் நன்றாகக் கேசை நடத்தமுடியும். ஆகவே நீதிமன்றத்தில் ஒரு புதியவிஷயம் பேசப்படுவது மிக அபூர்வம்.

ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் புதியபுதிய செய்திகள் வந்துகொண்டே இருக்கும். ஏராளமான புதிய செய்திகள் வரும். அந்தச் சிறுவனைப்போன்ற ஒருவனை நானே கண்டிருக்கிறேன். அவனுடைய வன்மத்தையும் கண்டிருக்கிறேன். மனிதர்கள் குப்பைக்கூடையில் தூக்கி போடப்படுகிறார்கள் என்பது உண்மை. பைபிளில் அந்த மனிதர்களுக்கான வாசகம் உள்ளது. வேறெந்த மதமும் குப்பைக்கூடைகளில் உள்ள மனிதர்களுக்காகப் பேசவில்லை.

அந்தச் சின்னப்பையன் ஆரீஸ் ஏன் அதைச் செய்கிறான். அவனுக்கு அவனைக் கைவிட்ட சமூகம் மீது வன்மம் உள்ளது. அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு அவர்கள் எவர் என்றும் தெரியாது. கொலைசெய்ய வாய்ப்பு வரும்போது அதைச் செய்கிறான். அன்புதான் அவனுக்கு கோபம் வரச்செய்கிறது. பிச்சைக்காரர்கள் நிறையப் பிச்சைபோடுபவர்களை வெறுப்பார்கள் என்பதை கண்டிருக்கிறேன். ஞானப்பன் தன் பேரனிடம் அன்பாகப் பேசுவதைக்கண்டு ஆரீஸ் அவனைக் கொல்கிறான். அவனிடமே ஞானப்பன் அன்பாகப்பேசியிருந்தாலும் கொன்றிருப்பான். மக்கா என்று அழைத்ததுமே அந்தப் பிள்ளைகளுக்கு வரும் கோபம் அதைத்தான் காட்டுகிறது

டேவிட் தேவாசீர்வாதம்

 

குமிழிகள், கடிதங்கள்

குமிழிகள் -கடிதம் 

குமிழிகள்- கடிதங்கள்

குமிழிகள்,கடிதங்கள்

குமிழிகள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஆமென்பது… [சிறுகதை]
அடுத்த கட்டுரைகந்தர்வன்,யட்சன் – கடிதங்கள்