அன்புள்ள ஜெ.,
‘கந்தர்வன்’ உங்களுடைய பல சாதனைக் கதைகளைப் போன்றே, ஒரு குறுநாவல் அளவுக்கே நீண்டிருந்தாலும்,கச்சிதமான, வெகு சுவாரசியமான ஒரு கதை. மொழ மொழவென தொப்பை குலுங்கும் முருகப்பன், வாழைக்குருத்தாய் வள்ளியம்மை, கோயில் காளையாய் அணஞ்சபெருமாள் என்று தெளிவான ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறீர்கள். நோயாளிச் சிறுவனைப் போன்ற மன்னர், அவரைச் சுற்றிய சாதீய வட்டங்கள், அதிகார அடுக்கு வரிசைகள், சமூகத்தில் பெண்களின் மீதான ஒடுக்குமுறை என்று காலயந்திரத்தில் ஏற்றி பதினேழாம் நூற்றாண்டு நாஞ்சில் நாட்டில் கொண்டுபோய் இறக்கி விடுகிறீர்கள். கதையின் மைய நிகழ்வுக்கான பின்புலத்தை விளக்கவே வெகுநேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் அந்த அளவு விரிவாகச் சொல்லவில்லையென்றால் பின்பாதி இவ்வளவு ருசித்திருக்கவும் ருசித்திருக்காது. ‘இந்தா முக்குக் கடைல போயி வாழைப்பழம் வாங்கிட்டு வாலே’ என்பது போல அணஞ்சபெருமாளின் உயிரைக் கேட்டு அனுமதியும் வாங்கி விடுகிறார் மாராயக்குட்டிபிள்ளை.தேவர்களை மிதித்து கோபுரத்தின் மேலேறும் போதே நம் மனதில் கந்தர்வனாய் அமர்ந்து கொள்கிறான் அணஞ்சபெருமாள் . அதிலிருந்து உச்சக்காட்சி வரை உங்களுடைய ராஜாங்கம்தான்.
அதுவும் மூன்று உச்சக்காட்சிகள். முதல் உச்சக்காட்சி அணஞ்சபெருமாள் கோபுரத்தின் உச்சியில் தோன்றுவது. இரண்டாவது வள்ளியம்மையின் வருகை. மூன்றாவது சிதையேற்றம். ‘பெண்ணடிகள் மானமா சீவிக்க வழியில்லையா?’ என்பது முருகப்பனின் பராதி மட்டும்தானா? அணஞ்சபெருமாள் உண்மையிலேயே வள்ளியம்மையை அணஞ்சபெருமாள்தானா? அவன் வாழ்வில் ஒரு வள்ளியம்மைதானா? சிதையை நோக்கி வள்ளியம்மையைச் செலுத்தியது எது, அணஞ்சபெருமாளின் மீதான காதலா? முருகப்பன் மீதான வன்மமா? என்று விரித்தெடுக்க பல சாத்தியங்கள். இதில் வள்ளியம்மையின் பார்வையில் இன்னொரு வெகு சுவாரசியமான கதைக்கு இடமிருக்கிறது.
வரலாற்றில் நிலைபெறும் யோகம் செத்தவன் சாதிக்குக் கிடைக்காமல் வேறு சாதிக்குக்கிடைப்பது, அந்த நிலைப்பேறை சொந்தம் கொண்டாடும் உள்சாதிப் பூசல்கள், ஊர்ப் பூசல்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளச் சுதந்திரம் அபாரம். கரையாளர்களிடையே நடக்கும் சம்பாஷணைகள் நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியானவை. ‘அனாதையைப் பலிகுடுக்குததாவே ஆதிசிவனுக்க வளி’ ஒரு சோறு பதம். ஏனோ நாஞ்சில் நாடனின் முகம் நினைவில் வந்தது. ரசித்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்தக் கதையிலும் இதன் தொடர்ச்சியான ‘யட்ச’னிலும் இடம்பெறும் செட்டியார்கள் குறித்த பழமொழிகள் படிக்கும்போதே தெரிந்தது உங்கள் சொந்தச் சரக்கு என்று. இருந்தாலும் மறுநாள் அரசு நூலகம் சென்றபோது அங்கிருந்த கி.வா.ஜ வின் ‘தமிழ்நாட்டுப் பழமொழிகள்’ தொகுப்பில் இதில் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தேன். செட்டியார்கள் குறித்த ஐம்பது பழமொழிகள் நூலில் இருந்தன. இதில் ஒன்று கூட இல்லை.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெ
கந்தர்வன் கதையில் அத்தனை பிள்ளைமார்கள் ஏன் வருகிறார்கள், அவர்களுடைய அன்றாடச் சதிகளும், சில்லறைப்பூசல்களும் எதற்காக என்று நான் கதையை வாசித்தபோது யோசித்தேன். கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சட்டென்று தோன்றியது கதையே அதுதானே? அன்றாடத்தில் திளைக்கும் மிகச்சிறிய மனிதர்களுக்குமேல் எழுந்து நின்றிருக்கும் கந்தர்வனைப் பற்றியதுதானே அந்தக்கதை. அந்தச் சிறியமனிதர்களுக்குமேல் கோபுரத்தில் எழுந்து நிற்பதுபோல நின்றிருக்கிறான் கந்தர்வன்
எஸ்.ரமேஷ்
கந்தர்வன் கதையை பற்றி எழுதியபோது உண்மையான முருகப்பனின் நிலை என்னவாக இருக்கும், அவன் இவற்றையெல்லாம் எப்படி கடந்திருப்பான் என்பதை கேள்வியாக ஓரிரு வரிகள் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கதைக்குள் இல்லாத கதையை வாசிக்கிறோமோ என்று நினைத்து விட்டுவிட்டேன்.
கந்தர்வன், யட்சன் ஆகிய இரு கதைகளிலும் சாதி குளங்களின் பிரத்தியேக மனநிலைகள், பிளவுகள் தாழ்வுணர்ச்சிகள், திறமைகள், பூசல்கள் அதன் அழகியலோடு வெளிப்படுகிறது. ஒருபுறம் மக்கள் தங்களின் நலனுக்காக தனித்தவர்களை பலி கொடுக்கிறார்கள். அப்படி செய்ததன் குற்றவுணர்வினால் மக்கள் பழிக்கு பயந்து அவர்களை தெய்வமும் ஆக்கி சரணடைந்துவிடுகிறார்கள். காலம் கடந்து குற்றவுணர்வு நீங்கிய பின் தெய்வங்களை இலகுவாக்கிக் கொண்டு தங்கள் நலனுக்காக மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சித்தன் சிதையில் வந்த ஆடகபொண் முருகையா பதுகிய பொண்னை திருடிய பங்காளி பழிபாவத்திற்கு பயந்து எரியில் கொண்டு வந்து போட்ட பொண்ணாகவுமிருக்கலாம்.
கந்தர்வனும் யட்சனும் இரு எதிர் எதிர் துருவங்களின் கதை. தன்னில் தான் மகிழ்ந்திருக்கும் தெய்வம் ஒன்றும். வெளியே பிறவற்றில் தன் மகிழ்வை தேடும் தெய்வம் இன்னொன்றும். நவீன மொழியில் சொல்வதென்றால் இருவேறு வாழ்கை நோக்கு கொண்ட கலைஞர்கள்.
முருகையா முதலிலிருந்து காமத்தில், தன் அழகில் தாழ்வுணர்ச்சி கொண்டவனாக, நிச்சியமின்மை பற்றிய அச்சம் கொண்டவனாக சித்தரிக்கபடுகிறான். அந்த அக குறையை கடக்கவே அவன் பெண்பித்தனாகிறான், செல்வம் சேர்க்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அவன் இயல்பில் போகி, செல்வத்தை தேடுபவன், தன்னிடமிருந்து எதையும் இழக்க விரும்பாதவன். காலம் காலமாக வரலாறு நெடுகிலும் அவன் இழந்தபடி இருப்பதாலும் அவனிடமிருந்து பரித்துகொள்ளபடுவதாலும் முருகையாவுக்கு அது ரத்ததில் ஊரிய இயல்பாக இருக்கலாம்.
நாடு முழுவதும் இருவேறு நிலங்களில் இருவேறு இயல்புடன் பலியிடபட்ட நாட்டார் தெய்வங்கள் இனைந்து கந்தர்வர்களாகவும் யட்சர்களாகவும் ஒரு பொது தொன்மமானார்களா.
இறுதியில் பிச்சைகார பாபாவாகி தன்னை யட்சன் என்று அழைத்துக்கொள்ளும் முருகையா களிமாடனுக்கும் உடனுரை நங்கைக்கும் வசை அபிஷேகம் செய்கிறான். கோபுர அடுக்குகளில், அழுது அடங்கும் போது புரியும் எதிர்தரப்பின் நியாயத்துக்கு பின்னும் கந்தர்வர்களோடு சமர்புரிந்தபடி அமர்ந்திருக்கிறார்களா யட்சர்கள்.
கந்தர்வன் கதையில் அணஞ்சபெருமாள் ஒன்றிலிருந்து அடுத்த அடுத்த தெய்வமாவதுபோல் இக்கதையிலும் முருகையா ஒரே இயல்பு கொண்ட ஒரு தெய்வதிலிருந்து அடுத்த தெய்வமாகியபடி இருக்கிறான்.
நான் இந்திய மத வரலாற்றையும் தொன்மவியலையும் சமூக வராலாற்றையும் முழுவதுமாக படித்து அறிந்தவனில்லை. அது அனைத்தும் ஆகி நிற்க்கும் இக்கதைகளை முன்னிட்டு புரிந்துகொள்ள வாசித்தவைதான்.
யட்சர்கள் இந்து பொளத்த சமண மதங்களின் தெய்வங்கள், இறை உருவகங்கள். எதிர் மனநிலை கொண்டவர்கள், போகதின் மீது செல்வத்தின் மீது அளவில்லா ஆசை கொண்டவர்கள், கட்டுக்கடங்காதவர்கள். செல்வங்களின் தெய்வமாகி குபேரனும் யட்சர்களுள் ஒருவராக சொல்லப்படுகின்றான். ஒருவிதத்தில் யட்சர்கள் குழந்தை மனம் படைத்தவர்கள்.
இயக்கன் ஆரியர்களை எதிர்க்கும் சாமியாக சொல்லப்படுகிறது. நான் பார்த்தவரை காலம் காலமாக நீளும் சமர் இது என்று தெரிகிறது.
முருகன் எதிர்ப்பது முருகனைதான். அது யாருக்கும் தெரிவதில்லை.
அதாவது பழைய முருகன், தன் இடத்தை எடுத்து கொண்டதற்காக புது முருகனை எதிர்க்கிறான். மற்றது வலியது என்பதற்காக தன்னைவிட்டு பிரிந்த பெண்னை தன்னுடையவளான வள்ளியையும் எதிர்கிறான். ஆனால் இரண்டு முருகனுக்கும் கந்தர்வர்ளாக யட்சர்களாக அவர்களின் இடம் கோபுரத்தில் கொடுக்கபட்டுள்ளது. மூவரும் நாட்டார் தெய்வங்காளாக வழிபடபடுகிறார்கள். இதுதான் இந்திய சமூகத்தின் அடிப்படை வரலாறு தெய்வங்களின் வரலாறு என்று இக்கதைகளை புரிந்துக் கொள்ளலாமா.
இரண்டு கதைகளிலும் ரத்ததாளும் பழியாலும் சமராளும் தெய்வங்களாலும் ஆன இடியாப்பம் ஒற்றை பிரித்து மீண்டும் இடியாப்பம் ஆக்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் மூளையை நினைத்தால்தான் வியப்பாக இருக்கிறது.
நன்றி
பிரதீப் கென்னடி.
அன்புள்ள ஜெ,
யக்ஷன் கதையின் சித்தரை சித்தரா போகியா பித்தரா என்று கொள்வது கடினம். அனால் இரண்டு மர்மங்கள். ஒன்று அத்தனைபெரிய பொன்குவியலை கையிலேயே வைத்திருக்கிறார். இரண்டு, செத்தவன் தானே என்று நினைக்க ஆரம்பித்துவிடுகிறார். உண்மை கலங்கிவிடுகிறது. பொய்யும் கலங்கிவிடுகிறது. ஆகவே அதற்கு அப்பாலுள்ள ஒன்று அவருக்கு சிக்குகிறது
மகாதேவன்