படையல்- கடிதங்கள்

படையல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

படையல் பல கதைகளை செறிவாக ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கிய கதை. ஒருவாசிப்பிலோ ஒரு கடிதத்திலோ அதைச் சுருக்கிவிடமுடியாது என நினைக்கிறேன். அத்தனை கதைகளையும் இணைக்கும் ஓர் அம்சம் உண்டு. ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!”என்ற மந்திரம். அதை எறும்பு பாவா சொல்லுமிடங்கள் வழியாக கதையை கோத்துக்கொள்கிறேன்

”அண்ணாமலையிலே எரியுறதுதான் சிதம்பரத்திலே ஆகாசமாட்டு இருக்குது. எல்லாம் ஒண்ணுதான், என்ன சொல்லுறீரு?” என்று சிவனடியார் கேட்கும்போதுதான் பாவா கடைசிக்கு முந்தைய இடத்தில் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”என்று சொல்கிறார். அவர் எல்லாவற்றையும் ஆமோதிக்கிறார். ஆம் என அவர் ஆணையிட்டுச் சொல்லும் இடம் அதுதான். எல்லாம் ஒன்றுதான். கடைசியாக அந்த ரத்தச்சோற்றை உண்போம், அது படையல் என்கிறார்.

மெய்சிலிர்க்கவைக்கும் இடம் அது. நவீனச் சிறுகதையில் மிக அரிதாகவே இத்தகைய ஓர் இடம் வந்திருக்கிறது. ஜெயகாந்தனின் விழுதுகள் ஞாபகம் வந்தது.

எஸ்.ராமச்சந்திரன்

 

அன்பிற்குரிய  ஜெயமோகன்,

எல்லாத்தையும் படைத்தவனுக்கு படையல் இடுவதற்கு மனுஷனுக்கு என்னதான் இருக்கிறது வேற வழியில்லாமல் தன்னையே முழுசா படைக்கிறான்.

கதை முழுக்க எத்தனை எத்தனை படையல்கள். வந்தவாசி பள்ளிவாசலில் 178 படையல், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தின் உள்ளே 750 படையல், காளாஸ்தி அருகே சிவன் கோயிலிலே சிவன் அவன் தலை மீது ஏறி நின்றதால் அவனுக்கே படையல். இது எல்லாம் மற்றவர்கள் படையலாக்கியது ஆனால் உன்னத படையல் என்பது ஏதோ ஒரு வகையில் தன்னையே படையலாக்கிய எரும்பு பாவா மற்றும் சிவயோகியுடையது. அதற்கும் மேலாக திருவின் விளையாடலிலே பாவப்பட்டவர்களின் இரத்தம் தோய்ந்த பிச்சை அரிசிக்கஞ்சி அந்த ஞானிகளுக்கே படையலாய். ஆஹா வெகு அருமை.

எத்தனை இருட்டும் எத்தனை மழையும் இருந்தால் என்ன காய்ந்த விறகு அளக்க முடியா அனல் அண்ணலுக்கு

எப்போதும் உகந்தது தானே. இறைத் தேடுதல் உள்ளவன் காயக்காய எரி படுவதற்காக அவன் கருணை என்னும் பாயால் சுருட்டி பாதுகாப்பாக அந்த மிகப்பெரியவனின் ஜோதி முன் கொண்டுவரப்பட்டு படையல் ஆகி  இறையால் உண்டு முடிக்கத்தானே படுகிறான்.

//சாம்பிராணிவச்ச பஞ்சு… சமைஞ்சபுள்ள சிரிக்கிறாப்பிலே பத்திக்கிடும்//

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக எப்போதோ நீங்கள் திருவண்ணாமலையில் சில காலம் பக்கிரியாக சுற்றித் திரிந்த பொழுது வாழ்ந்த மண்டபங்களை, எதிர்கொண்ட துறவிகளின், உறவாடிய சாதுக்களின் பாவனைகளை, பேசு முறைகளை, இயல்புகளை மிக அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.

பிச்சைக்காரனுக்கு உணவு எப்பொழுது கிடைக்குமென்று தெரியாது பேய்க்கு பிணம் எப்போது விழுமென்று தெரியாது. கிடைக்கும்போது உண்பவன் பிச்சைக்காரன். பிணம் விழுந்தால் பேய்க்கு உணவு.  நீங்கள் சொல்லும் ஆண்டிப்பண்டாரங்களின் அடிப்படை கணக்கு சரியாகவே உள்ளது.

முன்னைக்கும் இப்போதைக்கும் வித்தியாசம் என்றால், எல்லா மண்டபங்களையும் கம்பித் தடுப்பும் கேட்டும் கதவும் போட்டு, உள்ளே ஒரு சிலை வைத்து கோயிலாக்கி, உண்டி வைத்து அர்ச்சகரை போட்டு, காசாக்க புது வழி கண்டுபிடித்து விட்டதுதான். மலையடிவார காட்டுக்குள் போகின்ற பாதையையும் ஆடு மாடுகளை தவிர்க்க காட்டிலாக்கா வேலி போட்டு மூடி விட்டது. விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பொதுப்பணித்துறை எல்லா குளத்துக்கும் கம்பி கட்டி பூட்டு போட்டு விட்டது. கிரிவலப் பாதை நடைமேடை சிமெண்ட் பெஞ்ச்சுகள்தான் இப்போது சாதுக்களின் இரவு நேர உறைவிடங்கள்.

ஆனாலும் என்ன இப்போதும் இந்தத் திருவண்ணாமலை 2000 சாதுக்களுக்கும்மேல் புகலிடம் தான். நாளுக்குப் பத்து புதிதாக கூடும், பழையது ஒரு பத்து குறையும். மாசத்துக்கு பத் தேனும் ஒரேயடியாக விடுபட்டு கிரிவலப் பாதையில் எமலிங்கத்துக்கு எதிராக உள்ள சாது மயானத்தில் ஒன்றின் மீது ஒன்றாக ஒரேயடியாக தூங்கப் போய் விடும். எல்லாவற்றிற்கும் சாதுக்களுக்கும் தனித்தனியாக சமாதி வைக்க ஆரம்பித்து ஆசிரமம் கட்ட ஆரம்பித்தால் இந்த ஊரென்ன எந்த ஊரும் பத்தாது. வானத்து பறவையின் வழித் தடத்தையும் கடல் மீனின் நீச்சல் தடத்தையும் காண முடியாதது போலவே இந்த சாதுக்களின் வரவும் இருப்பும் வாழ்வும் மரணமும் எச்சமும் மிச்சமும் இன்றி.

இருட்டாச்சுன்னா ராத்திரிதான்.

எல்லாம் ஒரே இருட்டுதான்… அம்மையிருட்டுக்கு ஆயிரம் குட்டி இருட்டு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் கூட கொஞ்சம் இருட்டும் பொந்துகளும் இங்கே இருக்கத்தான் செய்கிறது.

ஆமாம் “எப்பவுமே இருந்திட்டிருக்கானுக பிச்சைக்காரனுக” என்ன செய்வது, என்றைக்குமான மெய்யியல் தேடல்களும் வாழ்க்கை பிரச்சனைகளும் இன்றைக்கும் கூட உள்ளன தானே!

கதைப் போக்கில் ஞானப்பித்துப் பாடல் ஒன்று அருவி போல் தானே வந்து விழுந்திருக்கிறது.  நல்ல பாடல். மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். வெகு நிச்சயம் பயன்படும்.

//இருட்டுக்கு இருட்டான ஒளியே அல்லவோ? என்-

மருட்டுக்கு மருந்தான நோயே அல்லவோ?

கருத்துக்கு கருத்தான கருமையே அல்லவோ? இக்-

கருணைக்கும் கரவுக்கும் காரணமே அல்லவோ?”

சொல்லிச் சொல்லி கண்ட சொல்லல்லவோ?- நான்

சொல்லாமல் விட்டுவிட்ட சித்தமே அல்லவோ?

எண்ணி எண்ணி சேர்த்த எண்ணமே அல்லவோ?- நான்

எண்ணாத வெளியான ஏகாம்பரம் அல்லவோ?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்லவோ?//

அனைத்திற்கும் மேலாக எல்லாம் துறந்தவனின் பயமற்ற தன்மை குறித்து நீங்கள் எழுதிய புதுக்குறள்

“ஆனை பொருதும் அருங்காட்டில் அஞ்சுவதுண்டோ அன்றில்கள்” உச்சம்.

இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது உங்களின் இந்த புதுக்குறள்

“கோல்கொண்ட மன்னவன் குடிகெட்டு போனால் மால்கொண்டு இருளுமே மாநிலம் தானுமே”

திருவண்ணாமலைக்கு கிழக்காக செல்லும் சாலையில் செஞ்சிக்கும் திண்டிவனத்துக்கும் இடையே கல் மண்டபங்கள் நிறையவே உள்ளன. வந்தவாசி வழியாக வரும் ஆற்காடு திருச்சி சாலை வெட்டிக் கொள்ளும் ஒரு குறுக்கு சந்திப்பாக செஞ்சி தாண்டி வருகின்ற ஒரு ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஒரு மண்டபம் இன்றைக்கும் உள்ளது. வடஆர்க்காடும் விழுப்புரமும் பெருவாரியாக இஸ்லாமிய அன்பர்கள் வசிக்கும் மாவட்டங்கள். இந்த இடங்கள் குறித்த உங்கள் நிலக்காட்சி வருணனைகள் அற்புதம்.

திருவண்ணாமலை கோயில் உட் குளங்கள் நிறைந்த பிறகு நீர் வெளியேறி கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள தெப்பக்குளத்திற்கு செல்வதற்கான நீர்வழி சுரங்கப்பாதைகள் இன்றளவும் உபயோகத்தில் உள்ளன. இரமண மகரிஷி காலத்திலே கூட அடி அண்ணாமலை ஆலய கர்ப்ப கிரகத்துக்குள் இருந்த ஒரு குகை பாதை மூடப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. மேலும் நவாப் விட்டுச்சென்ற ஒரு பீரங்கி வடக்கு மாடவீதியில் பலகாலம் இருந்ததாக கூறுகிறார்கள். கோயில் மதில் சுவரில் ஆங்காங்கே பீரங்கி வெடித்த தடமும் இருந்ததாம். இவற்றையெல்லாம் வரலாற்றோடு இணைத்து நீங்கள் கதைக் களம் அமைத்த விதம் அருமை.

மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு, என் மதம் என்று தொண்டை கிழிய கத்துகின்ற வெறியர்கள் எல்லாம் வெறும் வெற்று சுயநல வாதிகள். இங்கும் அங்கும் நிறைந்திருக்கின்ற சுயலாப விஷக்கிருமிகளே திட்டமிட்டு வேற்றுமையை துவேஷத்தை வளர்ப்பவர்கள். மதத்தின் பெயரால் என்றுமே மக்களை ஞானியர்கள் பிரித்துப் பார்த்ததே இல்லை அப்படி பார்ப்பவன் ஞானியும் இல்லை.

இந்து அத்வைத ஞானமும் இஸ்லாமிய சூபி ஞானமும் கலந்து குழைந்து தழைத்த மண் இது. திருப்பதி திருமலை வெங்கடாஜலபதிக்கு துணையாக துலுக்க நாச்சியாரை உட்காரவைத்து அலர்மேலு நங்கையை அடிவாரத்தில் திருச்சானூரில் அமரவைத்து அழகு பார்த்த சமரச பூமி. நாகூர் தர்காவும் வேளாங்கண்ணி மேரியும் இங்கு எல்லோருக்கும் சொந்தம்.

அண்ணாமலையார் கோயிலில் இன்றைக்கும் இந்து முஸ்லிம் கிருத்துவன் என எந்த மதத்தானும், வெள்ளை மாநிறம் கருப்பு அட்டக் கருப்பு என எந்த வண்ணத்தான் வேண்டுமானாலும் சென்று வழிபடலாம். மிக மிக முக்கியமாக ஆதிலிங்கம், முதல் சிவவடிவம் எனக் கருதப்படுகின்ற அண்ணாமலையை வலம் வருகின்ற எல்லோரையும் நோக்கினால் நமக்கே புரியும் மதங்கள் கடந்து எளிய மனிதர்கள் இன்றைக்கும் கூட எதைத்தேடி எதை நோக்கிப் போகிறார்கள் என்று. கார்த்திகை மாத பத்து நாள் அண்ணாமலையார் பிரம்மோற்சவ தீப திருவிழாவில் சுத்தத்தோடு விரதமிருந்து தினம் கிரிவலம் வந்து தேரில் வடம் பிடிக்கின்ற அன்னதானம் அளிக்கின்ற எத்தனையோ இங்கு வாழும் இஸ்லாமிய கிருத்துவ அன்பர்களை நான் அறிவேன்.

டெல்லி அஜ்மீர் ஷெரிப் தர்காவும், ஷீரடி துவாரகா மாயி மசூதியும் எல்லா மக்களும் சென்று வழிபடுகின்ற தம்மை மறந்து அந்த பேராற்றலை வேண்டி நிற்கின்ற பொது திருத்தலங்கள் தானே.

கங்கோத்ரியில் இருந்து கேதாரும் பத்ரியும் மலையிடை ஒற்றையடிப் பாதைகளின் வழியாக நான் நடைபயணம் மேற்கொண்ட பொழுது எனக்கு தடித்த ரொட்டியும், படி படியென பாலும் தயிரும் மோரும் தந்து பசியாற்றியவர்கள் உத்திரப்பிரதேசத்தில் இருந்தும் ஹரியானாவில் இருந்தும் தங்கள் எருமைகளையும் ஆடுகளையும் கோடைகாலத்தில் மலைகளின் மீது மேய்க்க கூடாரம் இட்டு இருந்த குஜ்ஜர் இன இஸ்லாமிய தாய் உள்ளங்களே. பாபா என அழைத்து மிக மரியாதையோடு உள்ளன்போடு அவர்கள் நடந்து கொள்கின்ற விதத்தை என்னவென்று சொல்வது. எளிய மக்கள் மதம் கடந்து மிக எளிய மானுட உண்மைகளால், அன்பால், அறங்களால் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் சில நூற்றாண்டுகளில் நுண்கணிதச் சமன்பாடுகளும்(Algorithms) செயற்கை நுண்ணறிவும்(Artificial Intelligence) ஆழ்மனம் மற்றும் உள்ளுணர்வு குறித்த ஆராய்ச்சிகளும் மிகப்பெரிய தாக்கத்தை மனித சமூகத்தின் மீது அதன் சிந்தனைகளின் மீது ஏற்படுத்தக்கூடும். அந்தக் காலகட்டத்தில் மானுடப் பேரறமே அடித்தளமாகக் கொண்ட ஒட்டுமொத்த அற விழுமியங்கள் புதிய யுகத்திற்கான ஒரு மெய்யியல் வழிமுறையாக அனைவர்க்குமானதாக திரண்டு வரக்கூடும். என்றைக்கு மான கேள்விகளுக்கு ஒரு பொதுவான தொகுக்கப்பட்ட பார்வைகள் வழிமுறைகள் முன் வைக்கப்படலாம். அதுவரையில் உலகெங்கும் ஒற்றைத்துவ மற்றும் அடிப்படை மத வாதிகள் எளிய மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி தங்கள் சுயநல அரிப்பை தீர்த்துக் கொள்ள எதையாவது எப்படியாவது சொல்லிச் சொல்லி தீமைகளை விதைத்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் ஒட்டுமொத்த சமூகத்தையும் தங்கள் சொரி குச்சிகள் ஆக்கிக் கொண்டிருப்பார்கள். அதுவரை எளியவர்களின் ரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும்.

என்ன செய்வது,

ரத்தம் சிந்தாத, ரத்தம் கேட்காத, ரத்தம் குடிக்காத சாமி என ஒன்று எங்கேனும் இருக்கிறதா என்ன?. உசுரு கொடுத்த சாமிக்கு மசிரு கொடுக்கிறதோட நின்றுகொள்கிறான் லௌகிக  பக்தன். உயிர் கொடுத்த இறைவனுக்காக தன்னையே படைக்கிறான் மேம்பட்டவன். சாமியின் பெயரால் பல உயிர்களை எடுக்கிறான் மதம் பிடித்த கீழ் மனிதன்.

எல்லாம் கடந்த ஞானிகளுக்கு பாவப்பட்டவர்களுக்காக ரத்தம் சிந்துவது மட்டுமா வழக்கம்?, இல்லையே! அந்தப் பாவப்பட்ட வர்கள் தங்கள் ரத்தம்  தோய்த்து பிச்சையளித்த படையலை உண்டு அவர்களை இரட்சிப்பதும்தானே பழக்கம்… காலம் காலமாக இது இப்படித்தானே நடந்து வருகிறது….

ஆண்டவனுக்கு மட்டுமல்ல அவனில் ஒன்றி அதுவாகி நிற்கின்ற ஒழிவில் ஒடுங்கியவனுக்கும் அவனுக்குப் போலவே பாவப்பட்டவர்களின் ரத்தச் சோறு தான் படையல்.

அந்த வலியுல்லாஹ் சாஹேப். திகம்பரன் ஆகவோ, அம்மணத்தாண்டியாகவோ, கோவன சாமியாகவொ, மொட்டை பிக்குவாகவோ அல்லது சிலுவை அணிந்த புனிதராகவோ, காவி கட்டினாலும் அல்லது பச்சை குல்லாவும் சால்வையும் போட்டாலும், அல்லது வெண் தாடியுடன் வெள்ளை முழுதங்கியும் போட்டாலும் அவன் தலைமேலே முகில்மேவும் ஆகாசமாக்கும் என்று எப்போதும் உணர்ந்தவன் தானே.

அந்த அடையாளம் கடந்த சிவயோக எரும்பு பாவாக்களுக்கு ஆணாகிப் பெண்ணாகி ஆணிலியுமாகி பிதா வாகி மாறியாத்தாவாகி மேரிமாதா வாகி அர்தனாரியுமாகி பரிசுதனாகி பிள்ளையாகி வேல்கொண்டு வெண்பரி ஊரும் ராவுத்தனல்லோ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அண்ணாமலையிலே அடிமுடி தொட முடியாமல் எரியுறதுதான் சிதம்பரத்திலே ஆகாசமாட்டு மிகப் பெரிதாய் விரிந்து அல்லாஹ் வாக  கிடக்குது. அதுவே மக்கா மதினாவிலே வாட்டிகனிலே சிலருக்கு உணர்வுக்காட்சியாய் அடையாளப்படுகிறது. இருப்பதெல்லாம் ஒண்ணுதான். அவனே பிதாவான ஈசனான பெருமாளான பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நாங்கள் துறவிகள் எங்களுக்குள் வேடிக்கையாக சொல்லிக் கொள்வதுண்டு, ஒவ்வொரு விருப்பம் வெளிப்படும் வாக்கியங்களுக்கு பின்பாகவும் “இன்ஷா அருணாச்சலா” என்று. ஏதேனும் விருப்பங்கள் எவர் மூலமேனும் நிறைவேறினால் சட்டென மனதில் வரும் “மாஷா அருணாச்சலா” புரிந்தவன் புண்ணியவான்! ஆமென்.

எல்லா மதங்களின் ஊடு புகுந்து அவற்றிலுள்ள நல்லவைகளை எல்லாம் தொகுத்து அற விவாதங்களாக உன்னத விழுமியங்களாக இலக்கியத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி ஞான விவாதக்களம் சமைத்து மிகப்பெரிய தொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கான ஆகப்பெரிய தேவையும் சேவையும் இதுவே.

உங்கள அற விவாதங்களால், நெஞ்சத்து ஆழம் தொடும் கதைகளால், மானுடம் செழிக்கட்டும். ஓங்கட்டும் மானுட அறம். எங்கும் அமைதி நிலவி எல்லா உள்ளங்களிலும் அன்பு வளரட்டும்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ

படையல் கதையில் வரும் பண்டாரப்பாட்டுக்கள் அற்புதமாக இருந்தன. அதிலுள்ள நாட்டுப்புறத்தன்மையும் பகடியும் ஞானமும். அந்தப்பாட்டுகளின் முழுவடிவம் கிடைக்குமா? எங்கே கிடைத்தவை அவை?

ராஜசேகர்

அன்புள்ள ராஜசேகர்

என் கதைகளில் வரும் பழமொழிகள், பாடல்கள், கவிதைகள் எல்லாமே என்புனைவுதான். வெண்முரசில் வரும் சங்கப்பாடல் வரை. முழுமையாகவேண்டும் என்றால் தொடர்ந்து எழுதத்தான் வேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைகுமிழிகள் -கடிதம்
அடுத்த கட்டுரைகற்கோயிலும் சொற்கோயிலும்