குமிழிகள் -கடிதம்

ஜெ,

குமிழிகள் [சிறுகதை]

குமிழி கதைக்கு வந்த கடிதங்களை https://www.jeyamohan.in/144278/ கண்டேன். நல்ல வாசிப்புகள் என்றாலும் கடிதங்கள் அனைத்திலும் தோற்றத்தை முன் வைப்பது சம காலத்தின் சிக்கல் என்பதான எதிர்மறை வாசிப்பு இருந்தது. கதை அவ்வாறு ஒற்றைப்படையாக இல்லை.

பதினெட்டாம் நூற்றாண்டில் விக்டோரிய மரபு வண்டிடையையும் மணிச்சாடி இடையையும் அழகியலாகக் கொண்ட போது corset பயன்படுத்தி இடையை இறுக்கி மார்பை ஏற்றிக்காட்டிக்கொள்வது வழக்கமானது, அது தங்கள் உடலுக்கு தீங்கிழைத்தது என்று உணர்ந்தாலும் கூட அது பிரயோகத்திலிருந்தது. சுவரை இழந்து சித்திரத்தை அடைய முயல்தல்தான் அது.

இன்னமும் பின்னால் போனால் கிரேக்க கால அழகியலுக்கும், அதற்கு பின் சென்றால் வீனஸ் ஆஃப் வில்லண்டோர்ஃப் வரையிலும் போகலாம். இந்தியக் கலையில் பெண்களுக்கு உடுக்கை இடையும் ஆண்களுக்கு எருது முகம் போன்ற மார்பு அமைப்பும்.

இலட்சிய அழகியல்களை அடைய தங்கள் உடலை மாற்றிக் கொள்வது என்பது மானுடத்தின் தொடர் கனவு. இதை செய்வது ஆண்களின் ரசனைக்காக பெண்களை மாற்றி அமைப்பது என்ற பெண்ணியவாதிகளின் குரலை எதிர் கொள்ள நுகர்வு கலாச்சாரம் உருவாக்கிய மாற்று, ஆடைகளின் வழி நாம் நம்மை வெளிப்படுத்துகிறோம் என்ற கருதுகோள்.

இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை ஆடை என்பது அதிகார அடுக்கையும், செல்வப் பிண்ணனியையும் வெளிப்படுத்துவது மட்டுமே. சாமானியர்களுக்கு அதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. 1930 களில் ஆடை என்பது பயன்பாடு சார்ந்தது இல்லை, உங்களின் ஆளுமையை வெளிப்படுத்துவது என்ற கருதுகோள் உருவாக்கப்பட்டது. நாம் நம்மை புனைந்து கொள்வது பிறருக்காக இல்லை தன்னை வெளிப்படுத்தவே என்ற லிலியின் வாதம் இவ்வாறு உருவானதுதான். ஃப்ராய்டிய கொள்கையை பயன்படுத்தி எட்வர்ட் பெர்னேஸ் நுகர்வுக் கலாச்சாரத்திற்காக உருவாக்கிய கருதுகோள் இது. புகைப்பிடிப்பது நவீன பெண்ணுக்கான அடையாளம் என்பதைப் போன்றது. “குடும்ப விளக்கு” ஒரு படிமம் என்றால் சிகரெட்டும் ஒரு படிமம்தானே.

இந்த கருதுகோள் செயற்கையாக உருவாக்கிக் கொள்ளப்பட்டதுதான் எனினும் இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. நாமே ஒருவரின் ஆடைகளைக் கொண்டு அவரை பொருத்திக் கொள்வது போன்ற தவிர்க்க இயலாத இடத்திற்கு வந்து விட்டோம் என்பதும் உண்மை. ஏனெனில் சடங்குகள் நவீனமானதாக இருந்தாலும் அவற்றின் குறியீடுகளால் நாம் ஆழ்மனத்தில் சீண்டப்பட்டு எதிர்வினையாற்றுகிறோம். ஆகவே லிலி சொல்வதும் சரியே.

இந்த அடிப்படையில் கதையின் மையம் என நான் கருதுவது மானுடத்திற்கு எப்போதும் இருக்கும் இரு எல்லைகள். இலட்சிய அழகியல் அதை நோக்கிய இருப்பின் விழைவு. சென்றடைய ஒரு இலக்கும் இருப்பதற்கான அர்த்தமும். இதன் இரு முனைகள்தான் சாமும் லிலியும். சாம் சொல்வது, தான் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறே வெளிப்படுத்த வேண்டும் என்பது. லிலி சொல்வது நாம் எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறோமோ அதுவாக ஆகிறோம் என்பது.

சாம் சொல்வதைப் போல மார்புகள் உரையாடலுக்கு அற்றவையானால் உரையாடலே இல்லாமலாகாது. வேறொரு வழியை அவை கண்டு கொள்ளும். முகத்திற்கு பவுடர் போடத் துவங்கிய காலத்திலும் இதுவே விவாதிக்கப்பட்டிருக்கும். இப்பொழுதுமே அவன் அந்த க்ளாஸில் ஒயின் சாப்பிடுவது அதையே சுட்டுகிறது [ஒயின் க்ளாஸின் வர்ணனைகள் மார்பை ஒத்ததாக இருப்பது.] உலகையே புரக்கும் அன்னையின் முலை எப்படி உண்ணப்படாததாக இருக்க முடியும்? உலகே உண்டாலும் உண்டு தீராதது அது என்பதால்தான். உண்ணப்படாத முலை அல்ல. உண்டு தீராத முலை. அது இந்த புடவி பேரழகே. அதைத்தான் இத்தனை ஆயிரம் வருடங்களாக சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கண்ணாடிக் கோப்பைகளாகவும் சிலிக்கான் ஜெல்களாகவும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது மானுடம்.

அடைய முடியாமைக்கும் அடையும் ஏக்கத்திற்கும் நடுவேயான மானுட அல்லலே இந்தக் கதை. ஓவ்வொன்றையும் நாம் உருவாக்கும் தோறும் நம் ஏக்கம் குறையும் என எண்ணுகிறோம் அது அதிகரிக்கவே செய்கிறது. அது ஒரு existential exigency. இந்த வரிசைக் கதைகள் அனைத்துமே இந்த இரு எல்லைகளையும் negotiate செய்யும் சரடைக் கொண்டிருக்கின்றன. அடைய விரும்பும் ஒன்றிற்கும் அடையமுடியாமைக்கும் நடுவேயான மின்னற்பொழுதேயான தூரத்தை. அதை கடக்கும் வழிகளை.  விஷனை விட்டு பார்த்தாலும் களனிலேயெ கூட எங்கிருந்து எங்கு வரை போக முடியும் என்பது பொறாமையைத் தருகிறது.

ஏ.வி.மணிகண்டன்

குமிழிகள்- கடிதங்கள்-3

குமிழிகள்,கடிதங்கள்-2

குமிழிகள்- கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைகொதி,வலம் இடம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபடையல்- கடிதங்கள்