அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
உங்கள் நலம் அறிய விருப்பம் சார்.., இன்று தான் சங்க சித்திரங்களை படித்து முடித்தான். நான் ரொம்ப டைம் எடுத்து கொண்ட புத்தகமாக இதை நினைகிறேன். ஒரே வீச்சாக இதை தொடர முடியவில்லை காரணம் ஒவ்வொன்னும் உன்னதமான(இதுல எல்லா உணர்வும் சேர்த்தி) தருணங்களை எடுத்து வைக்கிறது.கவிதைகளின் நெகிழ்வான, துயரமான கணங்களுக்கு ஊடாக நிகராக உங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் என்மேல் சாத்தியது , “நான் இப்படித்தான் தினேஷ் கவிதையை படிப்பது(உணர்வது ) மேலும் நான் எழுத்தாளனை விட நுட்பமான, மேன்மையான வாசகன்” என்ற புரிதலையும் எனக்கு தந்தது. மொழிக்குள் உள்ள தனிமொழி என்ற வாசகத்தை நவீன தமிழ் இலக்கிய அறிமுகத்தில் சொல்லி இருப்பீர்கள் . இந்த புத்தகம் முழுவதுமாக அதை பயன்படுத்தி இருக்கு.ஆசிரியர் மாதிரி சொல்லிக்கிற அனுபவங்கள் எனக்கு பெரிதாக நேர்ந்து விடவில்லை . ஆனால் நிகழும். அப்போது(இப்போதைவிட ) இந்த கவிதைகள் இன்னும் இன்னும் எனக்கும் அர்த்தங்களை sorry உணர்வுகளை தந்த படி இருக்கும் (உங்கள் தமிழ் அய்யாவின் கடல் கவிதை யை போல ) . அந்த கணங்களை எனக்குள் உணர்ந்து பரவசபட , உட்கார்ந்து சுய புரிதலுடன் ஆறுதல் பட உணர இது எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.மேலும் ஒரு தடவை மட்டுமே படித்து உங்களுக்கு கடிதம் எழுதுவது உண்மையிலேயே எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு.so சங்க சித்திரங்களுக்கு மட்டும், அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு என்று ஆரம்பிக்கும் என்னுடைய கடித தொந்தரவுகளை பொறுபீர்களாக
—
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ் நல்லசிவம்
நலம்தானே?
சங்கசித்திரங்கள் ஒரு வகையில் ஓர் எதிர்வினை. நமக்கு சங்க இலக்கியம் பள்ளி கல்லூரிகளில் பாடமாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. கவிதையை மனப்பாடம்செய்வது நினைவில் வைத்திருப்பது என்ற தளத்திலேயே நம் வாசிப்பு இருந்திருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் அது நம்பண்பாட்டின் அடித்தளம்
அதேபோல நம் பண்டிதர்களும் சங்கப்பாடல்களை ஆராய்ச்சிப்பொருளாக மட்டுமே கண்டு வருகிறார்கள். அதையும் தவிர்க்க முடியாதுதான். ஏனென்றால் நம் பண்டைவரலாற்றை சங்கப்பாடல்கள் வழியாகவே உருவகிக்க வேண்டியிருக்கிறது. இந்த இருமைக்குள் சங்கக் கவிதைகளை கவிதைகளாக வாசிப்பதே இல்லாமல் ஆகிவிடுகிறது.
ஆகவே கவிதைகளாக மட்டுமே சங்கப்பாடல்களை வாசிக்கும் ஒரு முறை தான் நான் அறிமுகம் செய்தது. கவிதைகளை நாம் வாழ்வனுபவம் சார்ந்தே படிக்கிறோம். அதேபோல சங்கப்பாடல்களையும் அந்தரங்கமாக வாழ்வனுபவம் சார்ந்து வாசிக்கும் முயற்சியே அந்நூல்
நான் ஆனந்த விகடனில் அதை எழுதியமையால் பரவலாக வாசகர்களைச் சென்றடைந்து அந்நூல் பிரபலம் அடைந்தது
ஜெ
அன்புள்ள ஜெ,
இலக்கிய அறிமுகம் பற்றிச் சொன்னீர்கள். தமிழில் பழந்தமிழ் இலக்கியத்தை விரிவாக அறிமுகம் செய்யும் நூல்கள் இப்போது கிடைப்பவை எவை?
ச.முருகன்
அன்புள்ள முருகன்,
இப்போது கிடைக்கும் நூல்களில் இரு நூல்களை ஒரு வாச்கன் தொடக்க நிலையில் வாசிக்கத்தக்க தொகைநூல்களாகக் குறிப்பிடுவேன். மது.ச.விமலானந்தன் எழுதிய ‘தமிழா இதோ உன் சொத்து’ தலைப்பு மேடைப்பாணியில் இருந்தாலும் ஒரு நல்ல தொகைநூல். மரபின் நல்ல பாடல்கள் இதில் உள்ளன
அதேபோல கொங்குதேர்வாழ்க்கை– பகுதி1 .சிவகுமார் தொகுத்தது . தமிழினி வெலியீடு மிக முக்கியமான ஒரு தொகை நூல். சங்கம் முதல் சிற்றிலக்கிய காலகட்டம் வரையிலான சிறந்த கவிதைகளை அது ஒரே நூலில் தொகுத்தளிக்கிறது.
இரண்டையும் கைவசம் வைத்திருந்து அவ்வப்போது எடுத்துப் படித்துப் பார்க்கலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே இலக்கிய வரலாறுகளைப் படிக்க ஆரம்பிக்கக் கூடாது. ஆய்வுகளை தீண்டவே கூடாது. கவிதைகள் அறிமுகமானபிறகு மெல்ல மெல்ல அவற்றில் ஆர்வம் வரட்டும்
ஜெ
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு
சமீபத்தில் உங்கள் சங்க சித்திரங்கள் படித்தேன். நீண்ட நாட்களுக்குபின் நான் படித்த மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக அது அமைந்தது. இதுபோல் மாறுபட்ட சிந்தனையோடு கூடிய எழுத்துக்கள் தமிழில் அரிது, இது உங்களை புகழ்வதற்காக அல்ல! இதுபோன்று பிறமொழிகளிலேயே படித்தெஇருக்கிறேன்
நன்றி
சாதிக் பாட்ஷா M
அன்புள்ள சாதிக் நன்றி.
மனிதவாழ்க்கையை ஏதாவது ஒருவகையில் கவிதைக்கு அருகே கொண்டுசென்றால் அதற்கு ஒரு தீவிரம் உருவாகிவிடுகிறது.
நீங்கள் தமிங்கிலீஷ் மொழியில் எழுதியிருக்கிறீர்கள். www.suratha.com/reader.htm என்ற பக்கத்தை இறக்கி வைத்து அதில் மேலெ இதையே எழுதி ரோமனைஸ்ட் என்று சொடுக்கினால் இதுவே தமிழில் யூனிகோடில் வந்துவிடும். அனைவருக்கும் அப்படியே மின்னஞ்சல் செய்யலாம்
ஜெ