நுண்வரலாற்றின் குரல்

குமரிமாவட்டத்தில் உண்மையில் இலக்கியவாசகர்கள் மிகமிகக் குறைவு. இங்குள்ள பொதுப்போக்கு மதமான கிறிஸ்தவம் வாசிப்பை பாவம் என சொல்லிக்கொடுப்பது. வாசிக்கும் கிறிஸ்தவர்கள் அரிதினும் அரிது, அவர்களும் ரகசியமாகவே வாசிக்கவேண்டும். வேளாளர்கள் தேங்கிப்போய் பழமையில் வாழ்பவர்கள்.

ஆயினும் இங்கே இலக்கியம் தொடர்ச்சியாக எழுதப்படுவதற்குக் காரணம் பொதுமனநிலையில் இருந்து விலகி ஒருவகையான அறிவியக்கம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது என்பதுதான்.அது குமரிமாவட்டத்திற்கே உரிய அறிவியக்கம். இருபதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் இங்கே மாதந்தோறும் வெளியாகின்றன. எல்லாமே உள்ளூர் இதழ்கள். குறிப்பிடத்தக்க ஐம்பது நூல்களாவது ஓர் ஆண்டில் வெளியாகின்றன. உள்ளூர் அரசியல், உள்ளூர் வரலாறு, உள்ளூர் இலக்கியம்.

தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இத்தகைய ஓர் அறிவுச்செயல்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அறிவியக்கம் இலக்கியத்திற்கு அடிப்படைச் செய்திகளை அள்ளித்தந்து கொண்டே இருக்கிறது. அ.கா.பெருமாள் ஒருவரே ஒர் இலக்கியவாதிக்கு வாழ்நாள் முழுக்க எழுதுவதற்குண்டான மூலக்கதைகளை அளித்துவிடுவார். அத்தகைய பலர் உள்ளனர்.

அத்தகையவர்களில் ஒருவர் ஜோ.தமிழ்ச்செல்வன். திருத்தமிழ்த்தேவனார் என்ற பெயரிலும் எழுதுகிறார். வழக்கறிஞர், ஆனால் எழுத்தே முதற்தொழில். சிறிய ஆய்வுநூல்களை எழுதுபவர். கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர், ஆனால் கிறிஸ்தவம் மீது விமர்சனம் கொண்டவர். அனேகமாக எல்லாவற்றின்மீதும் விமர்சனம் கொண்டவர் எனலாம்.

மிகத்தீவிரமாக பலமாதங்கள் உழைத்து எழுதப்படும் ஆய்வுநூல்கள் அவருடையவை. சிறியவை, எப்போதுமே சுவாரசியமானவை.குமரி மாவட்டத்திற்கு வெளியே அவர் அறியப்பட்டதில்லை.ஒருவேளை வெளியே இருப்பவர்களுக்கு அவருடைய தலைப்புக்கள் மேல் ஆர்வம் குறைவாக எழலாம். ஆனால் இரு காரணங்களுக்காக அவருடைய நூல்கள் முக்கியமானவை.

முக்கியமாக இன்று மைக்ரோ ஹிஸ்டரி என்னும் நுண்வரலாறே புதிய அறிவுத்துறை. பொதுப்போக்கு வரலாற்றில் விடப்படும் சிறிய புள்ளிகளை ஆய்வுநோக்கில் நிரப்பிக்கொள்வது அது. சிறியவிஷயங்களின் வரலாறு, பெரியவிஷயங்களில் மறைந்துள்ள வரலாறு. அத்தகைய நுண்வரலாற்று நூல்கள் தமிழகம் முழுக்க அனைத்து நிலங்களைப்பற்றியும் எழுதப்படவேண்டும்.அதற்கு தமிழ் அறிவுச்சூழலில் மிகச்சிறந்த முன்னுதாரணம் அவருடைய நூல்கள்.

இரண்டாவதாக, அவருடைய நூல்கள் அளிக்கும் புதியபார்வை நாம் வரலாற்றை, அரசியலை அணுகும் கோணத்தை மாற்றியமைக்கக்கூடியது. எந்த நிலப்பகுதியைச் சேர்ந்தவரானாலும் அவருடைய நிலத்தை பார்க்கும் பார்வையை அவை மாற்றிவிடக்கூடும். புனைவுபோல சுவாரசியமான வாசிப்பை அளிப்பவை. நம் அரசியலின் சாதியத்தை நோக்கி நேரடியாகப் பேசுபவை அவை.

ஜோ.தமிழ்ச்செல்வனின் நூல்களுக்கு இரண்டுவகை உதாரணங்களாக இரண்டு நூல்களைச் சொல்லலாம். ‘குமரி காங்கிரஸின் தந்தை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி’ என்னும் நூல் மீனவசமூகத்தில் பிறந்து காங்கிரஸின் முகமாக எழுந்த பெருந்தலைவர் ஒருவரைப் பற்றியது. அவர் பின்னாளில் முற்றாகவே மறக்கப்பட்டார். நான் அவருடைய பெயரையே ஜோ.தமிழ்ச்செல்வனின் நூல் வழியாகத்தான் அறிந்தேன்.

மாபெரும் தலித் இனத்தலைவர்கள் இங்கே உருவான இடைநிலைச்சாதிச் சொல்லாடலால் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டதற்கு நிகராகவே மீனவர் குடித் தலைவர்களும் மறைந்தனர். அவர்களில் ஒருவர் கொட்டில்பாடு துரைசாமி. விரிவான தரவுகளுடன் இந்நூலை ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கிறார். அவர் ஏற்கனவே எழுதிய ’மீனவ முன்னோடி லூர்தம்மாள் சைமன்’ என்னும் நூலின் தொடர்ச்சி இந்நூல்.

ஜோ.தமிழ்செல்வனுக்கே லூர்தம்மாள் சைமன் பற்றி ஆராய்ச்சி செய்யும்போதுதான் கொட்டில்பாடு துரைசாமி பற்றிய தகவல் கிடைக்கிறது, அதற்குமுன் அவரும் அறிந்ததில்லை. ஆனால் இந்நூல் காட்டும் கொட்டில்பாடு துரைசாமி சுதந்திரப்போராட்ட வீரர், திருவிதாங்கூர் காங்கிரஸின் முதன்மைத்தலைவர்களில் ஒருவர், குமரிமாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகளில் பங்காற்றியவர், அன்று மிக மதிக்கப்பட்டிருந்த தலைவர்.

இந்தியச் சுதந்திரத்திற்குப்பின் கொட்டில்பாடு துரைசாமி கவனத்திலிருந்து விலகினார். லூர்தம்மாள் சைமனுக்கும் அவருக்குமான கருத்துமுரண்பாடும் அதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்நூல் புகழ்மொழிகள் ஏதுமில்லாமல் ஆதாரபூர்வமான செய்திகளை மட்டுமே சொல்லி ஒரு வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது.

ஜோ.தமிழ்ச்செல்வனின் ஆய்வுநூல்களுக்கு இன்னொருவகை உதாரணம் ’குளச்சல்போர் கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’. மார்த்தாண்டவர்மா மகாராஜா 1740ல் குளச்சலில் சிறிய டச்சுக் கடற்படை ஒன்றை வென்று ஒரு கப்பலைக்  கைப்பற்றினார். [குளச்சல் போர்] அதன் காப்டனாக இருந்த டி லென்னாய் பின்னர் மகாராஜாவின் நண்பராகி, திருவிதாங்கூரின் தலைமைப் படைத்தளபதியாகி, நவீனத் திருவிதாங்கூரை உருவாக்குவதில் பங்களிப்பாற்றினார்.

இந்தப்போர் நடந்து இருநூற்றைம்பது ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் இப்போரை அதற்குள் வரலாற்றுத்தொன்மம் ஆக மாற்றி ஏகப்பட்ட கதைகளை ஏற்றிவிட்டனர். குமரிமாவட்டத்தில் ஒவ்வொரு சாதியினரும் அப்போரை அவர்கள்தான் செய்தார்கள் என்று கதைகட்டி வரலாற்றை எழுதியிருக்கின்றனர்.இன்றைய சாதிய அரசியலின் தேவைக்கேற்ப சமைக்கப்பட்டவை அவை.

ஜோ.தமிழ்ச்செல்வன் திருத்தமிழ்த்தேவனார் என்ற பெயரில் குளச்சல் போரின் உண்மை பற்றி ’குளச்சல்போர் கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். அதில் அப்போரைப்பற்றி தன் சாதியினர் உட்பட அனைவரும் சொல்லும் பொய்களை ஆதாரபூர்வமாக உடைக்கிறார். அதன்பின் டி.லென்னாயின் உறவினரான மார்க் டி லென்னாய் எழுதிய குளச்சல் போர் என்னும் நூலை மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

மார்க் டி லென்னாய் ஏறத்தாழ குளச்சல்போரின் சமகாலத்தவர். ஆகவே அது ஒரு நேரடி வரலாற்றுப் பதிவு. குளச்சல்போர் பற்றிய எல்லா கதைகளுக்கும் அதுவே பதில். அது அளிக்கும் சித்திரமே வேறு.  அது நாம் அப்போர் பற்றிக் கொண்டிருக்கும் எல்லா கற்பனைத்தாவல்களையும் இல்லாமலாக்கி அப்பட்டமான யதார்த்தத்தில் நிறுத்துகிறது. ஆனால் இத்தகைய ஒரு நூல் இருந்தும்கூட இதுவரைப் பேசிய எவரும் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. இனி கருத்தில்கொள்ளப்போவதுமில்லை.

அறிவுத்தேடலின் தளராத முனைப்பே ஜோ.தமிழ்ச்செல்வனை இயக்குகிறது. குமரிமாவட்டத்தின் வரலாற்றில் அவர் நிகழ்த்திய ஊடுருவல்களால் அவர் முக்கியமான அறிவுப்பங்களிப்பாற்றியவர் என்று கருதுகிறேன்.

குளச்சல் போர்- மார்க் டி லென்னாய்

குளச்சல் போர்- திருத்தமிழ்த்தேவனார்

தொடர்புக்கு. ஜோ தமிழ்ச்செல்வன், தெற்கு பதிப்பகம், 9487187193

தெற்கு எழுத்தாளர் இயக்கம்

முந்தைய கட்டுரைவானோக்கிய வாசல்
அடுத்த கட்டுரைதீற்றல் [சிறுகதை]