கூர் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
கூர் என்னும் கதை சட்டென்று இதுவரை வந்த கதைகளின் சுவையையே மாற்றிவிட்டது. முற்றிலும் வேறொருவகையான கதை. அந்தக்கதையின் சித்திரம் மிக எளிதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அதன் வீச்சு கூர்ந்து வாசித்தால்தான் தெரியவரும். அந்தப்பையன்கள் குழந்தைக்குற்றவாளிகள். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக சமூகம், அரசு, அமைப்பு எல்லாவற்றின்மேலும் கடுமையான கசப்பு இருக்கிறது.
அதேசமயம் அச்சமே இல்லை. போலீஸ் ஸ்டேஷனில்கூட அஞ்சவே இல்லை. எதைப்பற்றியும் அவர்கள் அஞ்சுவதற்கு ஏதுமில்லை. இப்போதிருப்பதைவிட மோசமாக ஒரு வாழ்க்கை அவர்களுக்கு அமையமுடியாது. அவர்களுக்கு வலி பயமில்லை. அவமானம் இல்லை. அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அச்சமே இல்லை. பெரிய பார்ட்டி என்றால் கொலைக்கு இரண்டாயிரம் ரூபாய் கேட்டிருக்கலாம் என்று சொல்லும் அளவுக்குத்தான் அவர்களின் மனமும் உலகப்புரிதலும் உள்ளது.
அவர்களின் அந்த கசப்பு முழுக்க அப்பா என்ற அடையாளம் மீது உள்ளது. உலகிலுள்ள அத்தனை ஆண்களும் தன் அம்மாவை புணர்ந்தவர்கள், காசுதராமல் சாகவிட்டவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அந்தப்பையன் கொல்வதற்கான தூண்டுதல் எங்கிருந்து வரும் என்று நானும் வாசித்துக்கொண்டே இருந்தேன். நான் நினைத்தேன், அந்தப்பையனுக்கு ஞானப்பனுடனான ஏதாவது ஒரு உறவு திருப்புமுனையாக வரும் என்று [ இங்கே கதைகள் அப்படித்தானே எழுதப்படுகின்றன?]
ஆனால் வந்த திருப்பம் திகைப்பை அளிப்பது. மிகநுட்பமான புள்ளி அது. பேரக்குழந்தையை கொஞ்சுவது, அன்பு கனிவு அதுதான் அவனை கொலைகாரனாக்குகிறது. அது அவனுக்கு மறுக்கப்பட்டது. அவனைத்தவிர அத்தனைபேரும் அனுபவிக்கும் சுகம் அது. அவன் ஏன் கொன்றான் என்று அவனுக்கே தெரியாது. ஆனால் அவனுக்குள் ஓர் ஆத்மா இருந்து தேம்பிக்கொண்டிருக்கிறது. அந்த ஆத்மாவின் கண்ணீர் இருக்கும் கதை இது
ராஜசேகர்
அன்புள்ள ஜெ
கூர். இக்கதையில் வரும் இளைஞர்கள் இயல்பிலேயே கலககாரர்கள். ஓர் சித்தாந்தமாகவோ அக நாடகமாகவோ இல்லை இயல்பிலேயே இவர்கள் Rebels. உலகின் பெரும்பான்மை நகரங்களில் இவர்களை பார்க்கலாம். பொது சமூகத்தின் இயல்பான வாழ்வும் சூழலும் வாய்க்க பெறாதவர்கள்.
என் இருப்பை கொண்டு உன்னை எரிச்சல் அடைய செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியும் அடிக்க முடியுமா அடி ஆனால் என் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் வராது. இது தான் இவர்களின் மனநிலை.
இவர்கள் உள்ளூர எதிர்பார்ப்பது தாய்மையை, தங்களுக்காக பிறர் படும் இரக்கத்தை. அந்த எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவடையாது என்பதன் விளைவாக வெறுப்பு நிறைந்தவர்கள். அதைதான் எதிர்பாகிறோமா என்றுகூட அவர்களுக்கு தெரியாது. மரண தீர்ப்புக்கு பின் உடைக்கப்படும் நிப்பின் கூரும் இவர்களுக்கு தாய்மையாக இரக்கமாகவே பொருள்படும்.
உடல் முழுக்க, ஒழுங்கின் மீதும் வாழ்வின் மீதும் கசப்பு நிறைந்தவர்கள். மறுக்கபட்ட தாய் அன்பால், தனக்கென கவலைப்பட இங்கு யாருமில்லை என்பதால் கட்டட்றவர்களாக அச்சமற்றவர்களாக ஆக விளைபவர்கள். துப்பாக்கி குண்டு தன்னை சுட முடியாது என்ற அளவுக்கு தரக புத்தி அற்று உண்சியால் மட்டும் ஆனவர்கள். ஒருவனில் தர்க அறிவு கல்வியால் வாழ்க்கை அனுபவத்தால் வருவது, உணர்ச்சிகள் குழந்தையில் போடப்பட்ட விதைகள்.
ஆரீஸ் மென்மைகளை எல்லாம் குத்தி பொக்க வேண்டும் என்று நினைப்பவன். மாடுகளை போல் மென்மையானது அல்ல பன்றி, மூர்கத்தை தன் தற்காப்பாக கொண்டது. ஆரிஸும் அதும் ஒன்றே.
தாய் மூர்க்கமான குழந்தையிடம் கனிவாக இருக்கிறாள். கனிந்தவனிடம் மூர்க்கமாக இருக்கிறாள். அவள் எதையோ சமன் செய்ய முயல்கிறாள். குழந்தைகளுக்கான இலக்காக முன்மாதிரியாக தந்தை இருக்குறார். மனதில் அந்த சமனின்மை இலக்கின்மை கொண்டவர்களின் கதை இது.
ஞானப்பனின் முதல் மூன்று தொலைபேசி உரையாடல்களிலும் ஆரீஸ் அவரில் தன்னையே காண்கிறான். ஞானப்பன் தன்னை போன்ற ஒருவர் என்கிற, தனக்கு முன்னோடி என்கிற உணர்வு அவனுக்கு வருகிறதே ஒழிய கோபமில்லை. நாலாவது நாள் ஃபோனில் அவர் யாருடனோ அன்பாக பேசுகிறார், கொஞ்சுகிறார். தனக்கு மறுக்கப்பட்ட ஒன்று அவரிடம் தான் எதிர்பார்க்கும் ஒன்று யாருக்கோ போகிறது. அப்பொழுது மூழ்கிறது வெறி.
இக்கதை கிருஸ்துவ பின்னணியில் இருப்பதற்கு முக்கியமான அர்தம் உண்டு. ஒன்று கதைசூழலின் சமூக பொருளியல் பின்னணி. இரண்டு, பிற மதங்களில் சில கிளைகளாக மட்டும் அன்பின் வழி இருந்தாலும், கிருஸ்துவம் அன்பையும் இரக்கத்தையும் அடிப்படை சாராமாக கொண்டது. மதர் தெரசாவும் தாஸ்தேவஸ்கியும் அங்கிருந்து வந்தவர்கள்.
உண்மையில் ‘நான்’ என்னும் கதைசொல்லி கேஸ்சை வலுவாக ஆக்கும் இடைவெளிக்காக, வயது முதிர்ந்தவனை குற்றவாளியாக்க இவ்வளவு விசாரிக்கவில்லை. ஆரீஸை காக்கவே அவர் அதை செய்கிறார். ஒருவகையில் எபனேசரை குற்றவாளியாக்கி அவர் அளிப்பதும் எபனேசருக்கு மீட்பையே. எபனேசரும் மூன்னால் ஆரீசாகவே இருந்திருக்க முடியும்.
தனிமையில் தன் இருக்கதை தளர்திக்கொண்டு ஆரீஸுடன் பேசும், அப்பான்னு கூட வச்சுகோ என்று சொல்லும் கதைசொல்லி தன்னுடைய அன்பை பொதுவில் அப்படி வெளிகாட்டவதில்லை. அது அவருடைய தற்காப்பு.
ஆரீஸ் எத்தனை அழகான பெயர். அதற்கு எத்தனை அழகான பொருள்.
கூர். கானும் அனைத்திலும் தாய் யை தேடுபவனின் கதை. கூடவே மறுபுறமிருந்து அவனிடம் உள்ள குழந்தையை கண்டவர்களின் கதை.
நன்றி
பிரதீப் கென்னடி
குமிழிகள் [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் சார்,
குமிழிகள் கதை பல வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதிய கூந்தல் கதையை நினைவுறுத்தியது. மிஸ்ஸிஸ் நீலாவுக்கு இருந்த அளவுக்கு மன அழுத்தம் லிலாவுக்கு இருப்பதாக தெரியவில்லை, அது பெண்களின் குறிப்பாக படித்த பெண்களின் வாழ்க்கையில் தனெக்கென முடிவெடுக்கும் சுதந்திரம் கூடுதலாக வந்துள்ளதின் நல்ல அறிகுறியாகவே நான் காண்கிறேன்.
சாம் லிலாவின் இந்த தேர்வுக்கு ஒரு ஒப்பீனியன் வைத்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது.கணவனின் சிகையலங்காரத்தில் மனைவிக்கு ஒரு கருத்து இருப்பதை போல. ஆனால் முடிவு முற்றிலுமாக லீலாவுடையதே. இன்று அமெரிக்காவில் கரு கலைப்பு சட்டத்திற்காக போராடும் பெண்களின் வாதம் கூட, எனது கருப்பை, என் உடல் மீது ஆடவருக்கோ, சமூகத்திற்கோ, மதத்திற்கோ வேலி போட அதிகாரம் இல்லையென்பதே. ஆகவே யாருக்கு உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே கருதுகிறேன்.
ஆர்வமூட்டும் ஒரு சிந்தனை, லிலா இந்த மாற்றங்கள் மூலம் மேலும் மேலும் தனது வேர்களினின்றும் விலகிச் செல்கிறாள். அதுவே வளர்ச்சிக்கு வழி என்றும் நினைக்கிறாள். அது வெறும் தாழ்வுணர்ச்சியா அல்லது பல்லின பண்பாட்டில் உலகியல் வெற்றி பெற அதுவே இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் வழியா என்று சிந்திக்க வைக்கிறது. இந்த கதை.
அன்புடன்
கிருஷ்ணன் ரவிக்குமார்.
அன்புள்ள ஜெ
குமிழிகள் கதை ஒரு விவாதத்தை உருவாக்கியது. அதில் ஒரு எதிர்காலப்பிரச்சினை உள்ளது என்பது ஒரு கோணம். ஆனால் அதைவிட முக்கியமானது அதில் என்றைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஒரு சிக்கல் உள்ளது என்பது. ஆணுக்கு பெண்ணின் உடல்மேல் என்ன உரிமை என்ற கேள்வி அந்தக்கதையில் உள்ளது. பெண்ணின் வாழ்க்கைமேல் உரிமை இல்லை, பெண்ணின் குழந்தைமேல் உரிமை இல்லை என்று வந்து வந்து பெண்ணின் உடல்மேலும் உரிமை இல்லை என்று நாகரீகம் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் ஆணின் இருத்தலே பெண்ணின் உடல்வழியாகத்தான். அவனுடைய காமம் அங்கேதான். அது எந்த எல்லைவரை? பெண்ணுக்கு ஆணிடமிருந்து சுதந்திரம் அளவற்றதா, எல்லையுள்ளதா? அதுதான் அந்தக்கதையிலுள்ள கேள்வி. ஆதமின் விலா எலும்பே பெண் என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல. பெண்ணில்லாமல் ஆண் இல்லை. பெண் அதை மறுக்கமுடியாட் ஆணிம
கெவின்